Pages

Wednesday, October 30, 2013

நாளைய இந்தியா-3 ஆங்கிலேயர்கள் ஆட்சியின் இரண்டாவது பாகம்


இந்தியாவுக்கு வியாபாரிகளாக வந்த வெள்ளையர்கள், இந்தியாவின் மீது ஆதிக்கம் செலுத்தி அதைத் தங்களின் பெருமதிப்பு வாய்ந்த காலனியாக ஆக்கிக்கொண்டனர். இந்தியா, ஆங்கிலேய ராஜாங்கத்தின் மகுடத்தில் ஒரு மாணிக்கமாக இருந்தது. 1857ல் இங்கிலாந்து ராணியே இந்தியாவின் அரசியாகவும் இருந்தார்.
இந்தியா ஒரு அயல்நாட்டு அரசாங்கத்தால் ஆளப்பட்டது. இயல்பாகவே, அப்படிப்பட்ட அரசாங்கத்தின் நோக்கம், அதனையும் அதன் தாய்நாட்டையும் வளப்படுத்திக் கொள்வதே. இது முழுதும் புரிந்துகொள்ளக் கூடியதே. ஏனெனில், காலனி ஆதிக்க அரசாங்கங்கள் காலனிகளின் நலனுக்காக ஆட்சி புரியவில்லை. அவர்கள் தங்கள் சொந்த நலனுக்காக, காலனி நாடுகளின் பொருளாதாரத்தைச் சுரண்டி, அங்குள்ள வளங்களை கிடைக்கும்வரை எடுத்துக் கொள்வதை நோக்கமாகக் கொண்டிருந்தனர்.

ஒரு விஷயத்தைக் கூறுபோட்டு எடுத்துக் கொள்ளவும், சுரண்டிக் கொள்ளவும் முதலில் அந்த விஷயத்தை உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும். ஆங்கிலேய அரசாங்கம் இந்தியாவில் நிறுவிய அனைத்து அமைப்புகளும், நாட்டின் அனைத்து அம்சங்களையும் அவர்களின் கட்டுக்குள் கொண்டு வருவதாக அமைக்கப்பட்டு இருந்தது. எதைச் செய்வதானாலும் ஆங்கிலேய அரசிடம் அனுமதி பெறவேண்டிய நிலை இந்தியர்களுக்கு இருந்து.
சட்டங்களின் தன்மை:

சட்டங்கள் குடிமக்களைத் தட்டி வைத்து அவர்களுக்கு உரிய இடம் என்ன என்பதைக் கற்பிக்கும் விதமாகவே அமைக்கப்பட்டன. எல்லா விதமான அதிகாரங்களும் ஆட்சியாளர்கள் கையில் மட்டுமே இருந்தன. சட்டங்களும், விதிமுறைகளும் மக்களுக்கு கேடாகவும், அரசாங்கத்துக்கு ஏதுவாகவும் இருந்தன. ஒரு அன்னிய ஆதிக்க அரசாங்கத்திடம் இதற்குமேல் நாம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்?
1945ல் இரண்டாம் உலகப் போரின் முடிவில் ஆங்கிலேயப் பேரரசின் ஆதிக்கம் இறங்குமுகம் கண்டது. போர் அதன் மீது பெரும் சுமையை ஏற்படுத்தியது. மேலும், காலனி ஆதிக்கமுறை வழக்கொழிய ஆரம்பித்தது. தவிரவும், இந்தியாவில் இருந்து நூறாண்டுகளுக்கும் மேலாக வளம் சுரண்டப்பட்டு, மேலும் சுரண்டுவதற்கு ஒன்றும் இல்லை என்ற நிலையும் ஏற்பட்டது. இனியும் உட்கார்ந்து சுரண்டுவது அவர்களுக்கு அவ்வளவு லாபகரமானதாக இருக்கவில்லை.
தவிர, இந்தியர்கள் சுதந்திரத்துக்காக வெகு காலமாக மன்றாடி வந்தனர். எப்படியோ, ஆங்கிலேயர்கள் வெளியேறும் நேரம் வந்தது. எனவே கட்டடத்தின் சாவியை கைமாற்றிக் கொடுத்துவிட்டு, எதுவும் நடக்காதது போல் அவர்கள் சட்டென்று வெளியேறினர்.
ஆங்கிலேயர்கள் பெரும் எதிர்ப்பின்றி வெளியேறினர். பெரிய அளவில் எந்த விதமான ரத்தப் புரட்சியும் நடக்கவில்லை. அவர்கள் இந்தியர்களைக் கட்டுப்படுத்த ஏற்படுத்திய அமைப்புகள் தகர்த்தெறியப்படவில்லை. அவை எப்போதும் போல் அப்படியே இருந்தன. இந்தியப் பொருளாதாரத்தை கையகப்படுத்திச் சுரண்டுவதற்கு அவர்கள் உருவாக்கிய அமைப்புகள் அப்படியே பழுதின்றி செயல்படும் முறையில் இருந்தன. பெரும்பாலான சட்டங்களும் ஆங்கிலேயர்கள் உருவாக்கியதே. எனவே, முன்பு இருந்ததைப் போல் அவை இப்போதும் மக்களுக்கு எதிராகவும், ஆட்சியாளர்களுக்குச் சாதகமாகவும் இருந்தன. உண்மையில் சுதந்தரத்துக்குப் பிறகு மாறியது ஆட்சியாளர்களின் தோல் நிறம்தானே தவிர வேறில்லை. வெள்ளைப் பெருமான்கள் இருந்த அரியணையில் நம்முடைய பெருமான்கள் சென்று அமர்ந்தனர்.
மேலோட்டமான ஒப்பனை:

சுதந்திரத்துக்குப் பின்னர் நடந்த மாற்றங்கள் மேலோட்டமான ஒப்பனையே. கட்டட முகப்பில் இருந்த பெயர்ப் பலகைகள் மாறின. ஆனால் கட்டடத்துக்குள் இருந்த விஷயங்கள் மாறவில்லை. அமைப்புகளின் பெயர்கள் மாறின, உதாரணத்துக்கு, ‘இந்தியன் சிவில் சர்வீஸ்’ என்பது ‘இந்தியன் அட்மினிஸ்ட்ரேடிவ் சர்வீஸ்’ ஆனது. ஒரு விளையாட்டின் விதிமுறைகளை மாற்றாமல், விளையாட்டு வீரர்களை மட்டும் மாற்றினால், அந்த விளையாட்டின் நோக்கம் பழையபடியேதான் இருக்கும். அதுபோல், இந்தியர்கள் சென்று அமர்ந்த இந்த அமைப்புகளின் நோக்கங்கள் பழையபடியே இருந்தன. அரசாங்கத்தின் நோக்கமும் பழையபடியே அமைந்தது; அதாவது பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தி, அதைச் சுரண்டுவது என்பதுதான் அந்த நோக்கம்.
எனவே 1947ல் ‘ஆங்கிலேய ஆதிக்கத்தின் இரண்டாம் பாகம் ஆரம்பம் ஆனது. ஏனெனில் சட்டங்கள் வெகுசிறிய மாற்றங்கள் தவிர்த்து பழைய சட்டங்களாகவே இருந்தன.
சட்டங்கள் அனைத்தும் சாதகமாக இருக்கும்போது ஆட்சிபுரிவது ஆட்சியாளர்களுக்கு அமோகமானது. அந்தக் காரணத்தினாலேயே ஆங்கிலேயர்கள் வெளியேறியப் பின்னர் ஆட்சிக்கு வந்தவர்கள், தங்களுக்கு சாதகமான அந்த அமைப்பை மாற்றுவதில் எந்த மதிப்பும் இருப்பதாகக் கருதவில்லை. அவர்கள் அதிகாரத்தில் இருந்தபடி, பழைய சட்டதிட்டங்களை வைத்துக்கொண்டு, நாட்டின் பொருளாதாரத்தை தங்கள் ஆதாயத்திற்கு பயன்படுத்திக் கொண்டனர்.
வேறுபாடு ஏதுமில்லை

: அரசாங்கம் ஏழைமையை முற்றிலுமாக விரட்டுவதற்குத் தன்னால் இயன்றதை செய்துக் கொண்டிருக்கிறது என்றும், பொருளாதார மேம்பாடே அதன் கொள்கை என்றும் அடிக்கடி செய்திகள் சொல்லப்பட்டு வந்தன. ஆனால், துயரம் நிறைந்த விளைவுகளை நாட்டுக்கு ஏற்படுத்தியதில், உள்நோக்கத்தின் அடிப்படையிலும் சரி, குறிக்கோளிலும் சரி, இந்திய அரசாங்கங்கள் ஆங்கிலேய அரசாங்கங்களில் இருந்து பெரிதும் வேறுபட்டு இருக்கவில்லை.
1947ல் ஆரம்பித்து கடந்த நூற்றாண்டின் ஆரம்பம் வரை இந்தியர்கள் பொருளாதார விஷயங்களில் போராடி வந்தனர். ஆழமான ஏழைமை என்பதே நாட்டின் ஒட்டுமொத்த கரு. இருப்பினும், வெற்றிகரமான ஓரக்காட்சிகள் சிலவும் உண்டு. இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில், குறுகிய காலத்துக்கு உலகின் பின் அலுவலக வேலைகளைச் செய்வதில் நாடு முன்னணியில் இருந்தது. அதன் முக்கிய காரணம், நாடுகளுக்கு இடையே நிலவிய தொழிலாளர் கூலி வேற்றுமை. அந்த நிலையும் தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக காலப்போக்கில் முடிவுக்கு வந்தது.
மக்களும் தலைவர்களும்:

இந்தியர்கள் வறுமையிலேயே வாழ்க்கையைத் தொடர்ந்து வந்தனர். ஆனால், மோசமானத் திட்டங்களால் மக்களை ஏழைக்கு உள்ளாக்கிய இந்தியத் தலைவர்களோ நம்பமுடியாத அளவுக்கு செழிப்படைந்தனர். 2010ம் ஆண்டுவாக்கில் அரசியல்வாதிகளும், தொழிலதிபர்களும் சுமார் 75 லட்சம் கோடி அளவுக்கு வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்திருப்பதாக் கணக்கிடப்பட்டது. மொத்தத்தில், நாட்டின் தலைவர்கள் செல்வச் செழிப்பாகவும், நாட்டு மக்கள் அப்படி இல்லாமலும் போனார்கள்.
இது இந்திய அரசாங்கத்தின் நோக்கம் முன்னேற்றம் அல்ல என்பதையே எடுத்துக்காட்டுகிறது. அரசியல்வாதிகளில், சில குறிப்பிடும்படியான விதிவிலக்குகளைத் தவிர, பெரும்பாலானவர்கள் ஊழலின் ஊற்றாக இருந்தனர். சொல்லப் போனால் அரசாங்கத்தில் அங்கம் வகிப்பது இருப்பதிலேயே உயரிய பதவியாக இருந்தது. அது அளவற்ற அதிகாரத்தை அள்ளிக் கொடுப்பதாக இருந்தது.
அளவற்ற அதிகாரம் கொண்டதாக அரசாங்கம் இருந்ததால், ஒரு தொழிலில் வெற்றி என்பது, நீங்கள் எந்த அளவுக்கு சக்தி வாய்ந்த அரசாங்கத்திடம் நெருக்கமாக இருக்கிறீர்கள் என்பதைப் பொருத்தே பெரும்பாலும் அமைந்தது. அரசாங்கத்துக்கும் தொழில்களுக்கும் இடையே ஒரு தவறான தொடர்பு இருந்தது. சொல்லப் போனால், அரசாங்கம் தானே பெரும்பாலான தொழில்களில் ஈடுபட்டும் வந்தது.
பெரும்புலம் வாய்ந்த தொழிலதிபர்கள் சக்தி வாய்ந்தவர்களாக இருந்ததன் துல்லியமான காரணம், அவர்களுக்கு அரசாங்கத்துடன் இருந்த நெருக்கமே. இதைப் புரிந்துகொள்வது சுலபமே. ஏனெனில், அரசாங்கம் தொழில்களின் வசதிவாய்ப்புகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தைத் தன்வசம் வைத்திருந்தது. தொழிலதிபர்கள் அரசியல்வாதிகளை ஆதரிப்பதும், அதன் பிரதிபலனாக அரசியல்வாதிகள் தொழிலதிபர்களை ஆதரிப்பதும் இருவழி பாதை கொண்ட போக்குவரத்தாக இருந்து வந்தது.
கடலளவு மாற்றம்:

ஒரு கட்டத்தில் அரசாங்கத்துக்கும் தனியார் துறைக்கும் இடையே இருந்த உறவு கடளலவு மாற்றம் கண்டது. அந்த உறவு 2015ம் ஆண்டுவாக்கில் மாறத் தொடங்கி சுமாராக 2025ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. ஆம். அரசாங்கம் தொழில்களில் தலையிடுவதையும், தொழில் நிர்வாகங்கள் அரசாங்கத்தில் தலையிடுவதையும் நிறுத்திக் கொண்டன.
அதேசமயம், தொழில் நிறுவனங்களுக்கு அரசாங்கத்தில் தலையிடுவதைத் தவிர வேறு மாற்று வழி இருக்கவில்லை. தொழிற்சாலைகள் அரசாங்கத்தின் ஆதரவை நம்பி இருந்ததால், தொழிலதிபர்கள் தங்களுக்கு ஆதரவாக இருப்பவர்களை அரசாங்கத்தில் இடம்பெறச் செய்துவந்தனர்.
பொருளாதாரத் தடைகள் முழுமையாக நீக்கப்பட்டபோது தொழில்கள் மிகச் சிறந்த வளர்ச்சியை அடைந்தன; அந்த வளர்ச்சி முன்பு போல் அரசாங்கத்தின் அனுசரனையால் ஏற்படாமல், சமுதாயத்துக்கு தொழில் நிறுவனங்கள் உருவாக்கிய மதிப்புக்கூட்டின் காரணமாக ஏற்பட்டது. அரசாங்கத்தின் ஆதரவைப் பெறுவதற்கான முயற்சிகளின் தேவையிலிருந்து விடுபட்டு, தொழில் நிறுவனங்கள் தங்கள் தொழில்களில் முழுவீச்சில் இறங்கின.
மாற்றங்களின் கூட்டு விளைவு:

இந்தியாவின் வெற்றி பெருமளவிலான மாற்றங்களின் கூட்டு விளைவு. மாற்றம் உயர்மட்டத்தில் ஆரம்பிக்கிறது. இந்தியாவின் இன்றைய வெற்றி, அரசாங்கத்தின் குறிக்கோள் அடைந்த மாற்றத்தின் வெளிப்பாடு. அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி சூறையாடுவதாக இருந்த நம்முடைய அரசாங்கம், முன்னேற்றம் சார்ந்த அரசாங்கமாக மாறிப் போனது. அப்படி மாறியபோது, வேறுபட்ட திட்டங்களின் தொகுப்பு பின்பற்றப்பட்டது. அந்தத் திட்டங்கள் அதுவரை பொருளாதாரம் இயங்கிவந்த விதத்தையே மாற்றியது.
இங்கு நாம் ஒரு முக்கியமான விஷயத்தை தெளிவாகக் குறிப்பிட வேண்டும். அரசாங்கம் என்ற வார்த்தையை உபயோகிக்கும்போது, நாம் நினைவில் கொள்ள வேண்டியது, அது உங்களையும் என்னையும் போன்ற மக்களைக் கொண்ட அமைப்பு என்பதே. நம்மையும் அவர்களையும் வேறுபடுத்திக் காட்டுவது அவர்களுக்கு இருக்கும் தனித்துவமான பொறுப்பு. அது பொதுநலத் திட்டங்களை உருவாக்குவது, அவற்றை செயல்படுத்துவது என்ற இரண்டே ஆகும்.

No comments:

Post a Comment