Pages

Monday, November 18, 2013

என் வீட்டுத் தோட்டத்தில்...


பயணங்களின்போது ரயிலிலோ பஸ்ஸிலோ ஜன்னலோர இருக்கை கிடைத்தால் ஜாக்பாட் அடித்ததுபோல் மனம் குதூகலிப்பது வழக்கம். இந்த குதூகலத்திற்கு முக்கிய காரணம் பச்சைப்பசேல் என்று கண்ணுக்குக் குளிர்ச்சியாக இருக்கும் வயல்வெளிகளைப் பார்த்துக்கொண்டே செல்வதுதான். கிராம வாழ்க்கையை நினைத்து நம் அடிமனம் ஏங்குவது இந்த நேரங்களில்தான்.

நம் வீட்டு மொட்டை மாடியிலேயே இப்படி ஒரு சந்தோஷத்தை நம்மால் விதைக்க முடியுமென்றால் ஆனந்தம்தான்.இது சாத்தியம் என்கிறார் கிருஷ்ணமூர்த்தி.
மணத்தால் மனம் மயக்கும் லாவண்டர் செடி, புதினா, தக்காளி, சாமந்தி, அடுக்கு சங்கு புஷ்பம், தூதுவளை, திருநீற்றுப் பச்சிலை, மயில் மாணிக்கம், மாலையில் மலரும் சந்தனமுல்லை, சிங்கப்பூர் வாழை குரோட்டன்ஸ், பசு மஞ்சள், துளசி, அரசு, வில்வம், சித்தரத்தை, கறிவேப்பிலை, மூங்கில், மைசூரிலிருந்து வந்த லாலிபாப் குரோட்டன்ஸ், கற்பூரவல்லி, பிரண்டை, சம்பங்கிப் பூ, பைனாப்பிள், நீரிழிவுநோய் நீக்கும் அமெரிக்க இன்சுலின் செடி(இதனை இலவசமாகத் தருவதாகச் சொல்கிறார்), சர்க்கரைவள்ளிக் கிழங்கு, பவழமல்லி, நைட் குயின், எலுமிச்சை மற்றும் கொடி எலுமிச்சை, இரட்டை நந்தியாவட்டை, செம்பருத்தி, வல்லாரை, நாவல் மரம், கருந்துளசி, பிரம்மி, முடக்கத்தான், சிவப்பு பசலை மற்றும் பச்சை பசலைக் கீரை, அகத்திக் கீரை, வாஸ்து செடி, தவனம், குப்பைமேனி, கும்பகோணம் வெற்றிலை, மணி பிளாண்ட், குண்டுமல்லி, கற்றாழை, வெள்ளை, மரமல்லி, சிவப்பு அரளி, பீன்ஸ், பாகல் கொடிகள், சடை சடையாகக் காய்த்துத் தொங்கும் முருங்கை உள்ளிட்டவை இவரது வீட்டு மொட்டை மாடியில் இருக்கும் செடி வகைகள்:
லெமன் கிராஸ் வாசனை நம்மைப் பிடித்து இழுக்கிறது. உள்ளூர் பெப்பர்மிண்ட் செடியின் பிரமாதமான வாசனைக்கும் குறைவில்லை. அப்பாடா இத்தனை வகைச் செடிகளா?
இது எப்படி சாத்தியமானது என்று கேட்டபோது, அதன் ரகசியத்தைச் சொன்னார் கிருஷ்ணமூர்த்தி:
‘‘கோக்கோ பீத் என்ற தேங்காய் நாரில் இருந்து உதிரும் தென்னம் பொடி கடைகளில் கிடைக்கும். ஒரு ஸ்லாப் வாங்கி தண்ணீரில் போட்டால் பொத பொதவென்று ஊறிவரும். இதை மண்ணுக்கு பதில் பயன்படுத்தினால் சாஃப்டாக இளகி இருக்கும். இத்துடன் செம்மண், சமையலறை கழிவுகளைக்கொண்டு பதப்படுத்தப்பட்ட உரம், மண்புழு உரம் ஆகியவற்றைக் கலந்து தொட்டியில் இட்டு நட்டால் செடி தளதளவென்று வளரும். டீக்கடைகளில் கிடைக்கும் பயன்படுத்திய டீத்தூளயும் இதனுடன் கலந்து போட்டால் நல்ல உரமாக மாறிவிடும். பழைய பேப்பரை எரித்த சாம்பலை பூச்சிக்கொல்லியாகப் பயன்படுத்தலாம். மாலையில் இந்த மொட்டைமாடித் தோட்டத்தில் உலா வந்தால் ஆரோக்கியம் ஆயிரம் பொன்னைப் போல் கிடைத்துவிடும் என்பதில் சந்தேகமில்லை.’’
அதைவிட வேறு என்ன வேண்டும்?

No comments:

Post a Comment