Pages

Thursday, November 26, 2015

‎மழை‬ வருகிறது, ஏந்திக் கொள்ள மடி இருக்கிறதா?


ஒவ்வொரு ஆண்டும் தண்ணீருக்காக அண்டை மாநிலங்களோடு சண்டை போட்டுக் கொண்டிருக்கும் தமிழகம் தான், தற்போது தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. 
 
தமிழகத்தைப் பொறுத்தவரை இங்கேயே உருவாகி, இங்கேயே நடைபயிலும் நதிகள் மிகவும் குறைவு.
இந்நிலையில் வான் மழையை ஏந்திக் கொள்ள வாட்டர் டேங்குகளை தயார் நிலையில் வைத்திருக்கிறோமா?
முப்பதாண்டுகளுக்கு முன்னாள் 38,000 என்ற எண்ணிக்கையில் இருந்த தமிழகத்து ஏரிகள், மக்கள் தொகைப் பெருக்கத்திற்கு ஏற்ப 48 ஆயிரமாக உயர்ந்திருக்க வேண்டும். ஆனால் 18 ஆயிரத்திற்கும் கீழிறங்கி பரிதாபமாகக் காட்சியளிக்கிறது.
புதிய பேருந்து நிலையங்கள், நீதிமன்றங்கள், வணிக வளாகங்கள், குடியிருப்புகள், கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்கள் என கடந்த 20 ஆண்டுகளுக்கு இடையில் நடைபெற்ற வளர்ச்சிப் பணிகள் அனைத்தும் ஏரி, குளங்களின் அழிவில்தான் அமைக்கப்பட்டிருக்கின்றன.
அதன் விளைவு ஆற்றையும் குளத்தையும் அலங்கரிக்க வேண்டிய மழை நீர், வீடுகளை ஆக்கிரமித்து வீட்டாரை வெளியே துரத்தியிருக்கிறது. அலுவலகங்களைப் பூட்டிவிட்டு மக்களை அடுப்படிக்குள் அடக்கம் செய்திருக்கிறது.
உயிருடன் இருப்போரை உலுக்கும் வகையில் இறப்பு எண்ணிக்கையை ஏற்றியிருக்கிறது. இப்படி பல ஏற்றங்களை(?) இந்த மாமழை செய்து கொண்டிருக்கிறது.
 
மழை நீரைத் தாங்கும் வகையில் உள்கட்டமைப்புகளை உருவாக்காமல் இறந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குவதும், இடமின்றி தவிப்போரை மண்டபங்களில் வைப்பதும் மட்டுமே அரசின் அலுவல் என்றிருந்தால் ஆண்டாண்டுக்கு இந்த ஓலமும் ஒப்பாரியும் உயருமே தவிர, குறையப் போவதில்லை.
ஒரு நாளில் பெய்துவிட்ட 12 செ.மீ மழைக்கே தமிழகம் தள்ளாடுகிறது.
அண்டை மாநிலமான கேரளாவில் ஆண்டு முழுவதும் மழை பெய்கிறது. அவர்கள் எப்படி தாங்கிக் கொள்கிறார்கள்?
கற்க வேண்டும் என்ற மனமிருந்தால் பார்க்கும் அனைத்துமே பாடம்தான்.
மதுக்கடைகளைத் திறக்கவும், அதனை எதிர்ப்பவர்களை மடக்கவும் தமிழக அரசு காட்டும் அக்கறையை ஆறு குளங்களை அகலப்படுத்தவும், அதனை ஆக்கிரமிப்பவர்களை ஒடுக்கவும் காட்டியிருக்கிறதா?
மழை நீர் சேகரிப்பு எனும் மகத்தான திட்டத்தைத் துவக்கிய அதிமுக அப்போது சென்ற அதே வேகத்தில் இப்போதும் பயணிக்கிறதா? அவர்களுக்கென்ன வெள்ளமோ, வறட்சியோ எதுவானாலும் ஒரு செய்தி.
வெள்ளத்தால் வீடிழக்கும் தமிழகத்தில் வறட்சியால் வாழ்வைத் தொலைப்பது கொடுமையிலும் கொடுமையல்லவா?
கடந்த மாதம் வரை தண்ணீரின்றி நாற்றுகள் கருகிய கடலூர் மாவட்டத்தில் மூன்றே நாளில் 7.5 டி.எம்.சி தண்ணீர் கடலில் கலந்து வீணாகியுள்ளது.
வெண்ணெய்யை வீட்டில் வைத்துவிட்டு நெய்யைத் தேடி வீதிக்கு வரும் வீணர்களாகி விட்டோம் நாம்.
இவற்றை எதிர்கொள்ள புதிதாக நாம் எந்தப் புரட்சியும் செய்யத் தேவையில்லை. நமது முன்னோர்களின் பாரம்பர்யத்தைப் பாதுகாத்துப் பயன்படுத்தினால் போதுமானது.
ஏரிகள், குளங்கள், வரத்துக் கால்வாய், வடி கால்வாய், பாசன வாய்க்கால், கலுங்கு, மடை, மறுகால் ஓடை என வான்மழையை வரவேற்க அவர்கள் செய்து வைத்த ஏற்பாடுகள் ஏராளம்.
மண்வெட்டியும் கடப்பாறையும் கொண்டு அவர்கள் பட்ட கஷ்டத்தை புல்டோசரும், பொக்லைனும் கொண்டு இல்லாமல் ஆக்கிக் கொண்டிருக்கிறோம்.
உண்மையைச் சொன்னால் நமது முன்னோர்கள் வெட்டிய குளங்களும் குட்டைகளும் அவர்களுக்கானது அல்ல. எதிர்காலத் தலைமுறையாகிய நமக்காகத்தான். ஏனெனில் அவர்கள் வெட்டிய நீர்த் தேக்கங்களில் ஐம்பதில் ஒரு பங்கைக்கூட அன்று அவர்கள் பயன்படுத்தியிருக்க மாட்டார்கள்.
சென்னை, போரூர் ஏரியின் பரப்பளவு மட்டும் 800 ஏக்கர். அரசாங்கப் பதிவின்படி சென்னையில் மட்டும் காணாமல் போன ஏரிகளின் எண்ணிக்கை 36. கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னாள்கூட இவற்றை முழுமையாகப் பயன்படுத்தும் மக்கள் தொகை இருந்திருக்க வாய்ப்பில்லை. எப்போதோ பிறக்கப் போகும் சந்ததிகளுக்காக சேர்த்து வைத்த முன்னோர்கள் எங்கே? சக மனிதனின் தாகத்தில் கூட இலாபம் பார்க்கத் துடிக்கும் நாம் எங்கே?
சிந்தித்தால் மட்டும் போதாது. உடனே செயல்படுவோம்.
The Holy Qur’aan states:
"வானத்திலிருந்து அளவோடு தண்ணீரை இறக்கினோம். அதைப் பூமியில் தங்க வைத்தோம். அதைப் போக்கி விடுவதற்கும் நாம் ஆற்றலுடையவர்கள்."
(திருக்குர்ஆன் 23 : 18)
Engr Sulthan

No comments:

Post a Comment