
'அம்மா’வின் நிரந்தர விடுதலைக்காக 'அம்மன்’ கோயில்களில் அ.தி.மு.க-வினர் தவம்கிடப்பது நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. சென்னை மெரினா கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீபவானி பெரிய பாளையத்தம்மன் கோயிலில் 108 பால்குடங்கள் எடுத்து பாலாபிஷேகம் நடக்கிறது. மயிலாப்பூர் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் சிறப்பு யாகம் நடக்கிறது. பர்கூர் ஒன்றியம் சார்பில் அருள்மிகு காளியம்மன் கோயிலில் சிறப்பு பிரார்த்தனை நடக்கிறது. ராஜபாளையத்தை அடுத்துள்ள முகவூர் அருள்மிகு மாரியம்மன் கோயிலில் வழிபாடு தொடர்கிறது. இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் 1,008 தேங்காய் உடைத்து அபிஷேகம். போளூர்குப்பம் கிராமத்தில் ஸ்ரீமகா மாரியம்மன் கோயிலில் 108 மூலிகைப் பொருட்களை வைத்து, யாகசாலை அமைத்து, மகாசண்டி ஹோமம் நடத்துகின்றனர். ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் கோயில், புதுக்கோட்டை அருள்மிகு பிரதாம்பாள் கோயில்... என எங்கு திரும்பினாலும் ஜெயலலிதாவின் விடுதலைக்காகவும், அவர் மீண்டும் முதலமைச்சர் நாற்காலியில் உட்கார வேண்டும் என்பதற்காகவும் வேண்டுதல்கள்... பால்குடங்கள்... பன்னீர்க் காவடிகள்!