Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, June 7, 2011

குலசை எங்க மண்!


குலசை எங்க மண்!உயர்ந்து வளர்ந்த பனை மரங்கள்-
உச்சியில் நின்று பார்க்கிறேன்
ஒய்யார சுவனத்துப் பூங்கா இது!
இடி ஒசையாய் அலைகள் இரவெல்லாம் தாலாட்டும்!
"அ" என்ற அகரம் எழுதிப் பழகிய மண் இது.

கரு ஈந்து கல்வி தந்து திரு கொண்ட திரவியம்
தந்த அட்சயப் பாத்திரம் இது.
ஆரம்பக் கல்வியில் அடியெடுத்து நடைப் பழகிய
அசனியா கல்விக் கூடம் உண்டு.
உயிர்க் கல்வியாம் உயர்க் கல்வி தந்த
அக இருள் போக்கும் திருவருள் பள்ளி இங்கு!

என் தமிழ் நாவைச் செதுக்கிய-திரு
நாவுக்கரசர்-தமிழ் தந்தவர்!
கணிதம் எனைக் காதலிக்க தூதுப் புறா-
பிரம்பறியா மகாலிங்க வாத்தியார்.
அன்பான அக்காக்கள்! அடித்து நொறுக்கும்
இந்தி வாத்தியா¡¢ங்கு உண்டு.

நன்றி நவிழும் வேளை இது.
எல்லாம் வல்ல இறைவனுக்கும்
எனை ஈன்ற அன்னைக்கும்
நல் கல்வி தந்த ஆசான் களுக்கும்
நன்றி சொல்லும் வேளை இது.

“எலே மக்கா” என்ற தாரக மந்திரம்
நண்பர்களுடன் எனைக் கட்டிப் போடும்!

மதவாதம் பேசும் பெருசுகளின்
மடத்து திண்ணைகள் இங்கு இல்லை!
மூட நம்பிக்கைகளின் தாய் வீடாம் தர்காக்கள் உண்டு-
மத நல்லிணக்கத்திற்கு மகுடம் சூட்டும் எங்க மண்!
எனக்கொரு தாய் உண்டு வடக்கே! என்
நண்பனுக்கு தாய் வீடு தெற்கே!-எனை தமிழ்-
உலகறியச் செய்த மண்ணே-இன்று நீயும்
உலகெல்லாம் செல்கிறாய் ஐம்பொன்னாய்!!

தவழ்ந்த மண்ணும் தளிர் நடை பயின்ற ஊரும்
மறக்க முடியாத ஒன்று.
தொலைந்த முகவரிகளைத் தேடிடுவோம்
தொடர்புக் கொண்டு மகிழ்ந்திடுவோம்
கருவில் எனைச் சுமந்த தமிழ் மண்ணே-என்
கல்லறைக்கும் ஒரு இடந்தருவாயா தாய் மண்ணே!!

- குலசை.சுல்தான்.

No comments:

Post a Comment