Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, July 10, 2012

நாமும் சூரியஒளிக்கு மாறலாம்

 


இன்றைய நிலையில் தமிழ்நாட்டில் கல்பாக்கம் அணுமின் நிலையம், நெய்வேலி நிலக்கரி மின்நிலையம், எண்ணூர் அனல்மின் நிலையம் மற்றும் மேட்டூர் அணை மின் நிலையம், நரிமணம் இயற்கை எரிவாயு நிலையம் போன்றவற்றின் மூலம் மின்சாரம் கிடைக்கிறது.
தனியார் காற்றாலை மூலமும் மத்திய தொகுப்பிலிருந்தும் மின்சாரம் கிடைக்கிறது. இங்கிருந்தெல்லாம் கிடைக்கும் மின்சாரம் போக, இன்னும் நமக்கு 3,600 மெகாவாட் அளவுக்கு மின்சாரத் தேவை இருக்கிறது. இந்த அளவு மின்சாரத் தேவை எப்படி வந்தது என ஆய்வு செய்தால் மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்திருப்பதுதான் முதல் காரணமாக இருக்கிறது. சுமார் 4 கோடி மக்கள் நகர்ப்புறங்களில் வாழ்கின்றனர்.
பெரும்பாலான வீடுகளில் மின்சாதனங்கள் உற்பத்தியும் பலமடங்கு அதிகரித்துள்ளது. மாவு அரைக்கும் இயந்திரம், மிக்ஸி போன்றவற்றுடன் துணி துவைப்பது முதல் சமையல் வரை அனைத்து வீட்டுத்தேவைகளுக்கும் மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது.
இதுபோதாதென்று வீடுகள்தோறும் இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டியும் வழங்கப்பட்டுவிட்டது. தற்போது மிக்ஸி, மின்விசிறி, மாவு அரைக்கும் இயந்திரம் வழங்கப்பட்டு வருகின்றன.
ஏன் இன்றைக்கு சொந்த வீடுகளில் வசிப்போரில் 20 சதவிகிதத்துக்கு மேற்பட்டோர் குளிர்சாதன வசதிகளுடன் இருப்பதாகக் கூறப்படுகிறது. சமையல் எரிவாயு பிரச்னை தலைதூக்குவதால், சமையலுக்கு பலர் மின்சார அடுப்புகளை நாடுகின்ற நிலையும் இருக்கிறது.
இப்படி எதற்கெடுத்தாலும் மக்கள் சாதாரணமாக மின்சாரத்தைப் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். தற்போது கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பட்டாலும், முதல் ஓராண்டுக்கு 500 மெகாவாட் மட்டுமே கிடைக்கும், 2 அல்லது 3 ஆண்டுகள் கழித்து 1000 மெகாவாட் அளவுக்கு மின்சாரம் கிடைக்கும் என கூறப்படுகிறது. ஆனால், இந்த மின்சாரத்தை மட்டுமே வைத்து தமிழ்நாட்டின் தேவையை பூர்த்தி செய்ய முடியுமா?
மேலும் பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டங்கள் செயல்பாட்டுக்கு வரும்போது, மேலும் மின்தேவை அதிகரிக்கத்தான் செய்யும். இப்படி இனி வரும்காலங்களின் மின் தேவை பல மடங்கு அதிகரித்துக் கொண்டே போகத்தான் செய்யும்.
எனவே, மின்தேவையை பூர்த்தி செய்ய இந்தத் திட்டங்கள் ஒருபுறம் இருந்தாலும், காற்றாலை, சூரியஒளி மின்சக்திகள் மூலமே நிரந்தரத் தீர்வு காணமுடியும் என்கின்றனர் ஆய்வர்கள்.
பெரிய அளவிலான திட்டங்கள் தவிர்த்து காற்றாலை திட்டத்தை அனைத்து மக்கள் மத்தியிலும் கொண்டு செல்ல இயலாது. அதேசமயம் சூரியஒளி மின்சார உற்பத்தி ஒன்றே தமிழக மக்களின் தேவையை முழுமையாக பூர்த்தி செய்யும் என்கின்றனர் வல்லுநர்கள்.
தமிழகத்தைப் போன்ற கந்தகபூமியில் அபரிமிதமான மின்தேவையைப் பூர்த்தி செய்வதற்கு சூரியஒளியைத் தவிர மாற்றுவழி கிடையாது என்பது விஞ்ஞானிகளின் வாதம். இன்றைக்கு அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் எல்லாம் சூரியஒளி மின்சார உற்பத்திக்கு மாறி வருகின்றன. இந்த மின்சக்தியைப் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்த சக்தியைப் பெறுவதற்கு அந்த நாடுகளின் அரசுகளும் அதிக கவனம் செலுத்துகின்றன.
கறுப்பர் இனமக்கள் வாழும் கென்யாவில் சூரியஒளி மின்சாரத்தை மக்கள் 2009-ம் ஆண்டு முதல் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். அதிலும் மகளிர் தொழில்முனைவோர் மேம்பாட்டுக் கழகம் என்ற அமைப்பின் மூலம் சூரியஒளி விளக்குகள் உற்பத்தி செய்யப்பட்டு, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
பிரேசில் தெற்குப் பகுதியில் கடலோரங்களில் மீனவர்கள் எரிவாயு விளக்குகளைப் பயன்படுத்தி வந்தனர். தற்போது அந்த விளக்குகளுக்குப் பதிலாக சூரியஒளி விளக்குகளை அமைத்து வருகின்றனர். இதன்மூலம் அந்த நாட்டில் ஆண்டுக்கு 45 ஆயிரம் டன் எரிவாயு சேமிக்கப்பட்டு மற்ற உபயோகத்துக்குப் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. அதிலும் எரிவாயுவைவிட குறைந்த செலவில் சூரிய சக்தி கிடைக்கிறதாம். இந்த வகையில், ஒவ்வொரு மீனவக்குடும்பமும் ஆண்டுக்கு 2 ஆயிரம் டாலர் வரை சேமிப்பதாகவும் கூறப்படுகிறது.
அர்ஜென்டினாவில் சூரியஒளியை மக்கள் பெருமளவில் பயன்படுத்துகின்றனர். இதை அரசும் ஊக்குவித்து வருகிறது. அங்குள்ள 10 வீடுகளில் 5-ல் சூரியஒளி பயன்படுத்துவதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது.
இப்படி பல நாடுகளிலும் இயற்கையாகக் கிடைக்கும் சூரியஒளி மின்சக்தியைப் பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டிவருகின்றனர். பொதுமக்களுக்குத் தேவையான மின்சாரமும் தாராளமாகக் கிடைக்கிறது.
தமிழ்நாட்டின் இன்றைய நிலை மட்டுமன்றி, எதிர்காலத் தேவையைக் கருத்தில்கொண்டு தேர்தலின்போது முதல்வர் அறிவித்த சூரியஒளி மின்சார உற்பத்தியில் அரசு தீவிரம் காட்டினால், தமிழகத்துக்கு நல்ல விடிவு கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.
ஏற்கெனவே தமிழ்நாட்டில் சூரியஒளி மின் உற்பத்தியில் சில தனியார் நிறுவனங்கள் கூடங்களை அமைத்து வருகின்றன. கடைகளில் சூரியஒளி விளக்குகள், சமையல் அடுப்புகள் போன்றவை விற்பனைக்கு வரத் தொடங்கியுள்ளன.
வீடுகளில் சூரியஒளி மின்சாரம் தயாரித்துப் பயன்படுத்த மிகக் குறைந்த செலவே ஆகும் என வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்த வகை மின்சாரம் தயாரிக்க மானியத்துடன் கூடிய சூரியஒளி தயாரிப்பு மின்சாதனங்களை அரசு வழங்க முன்வரலாம். இந்தத் திட்டத்துக்கான சாதனங்களை வழங்க ஜெர்மன் போன்ற நாடுகள் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
எனவே, தமிழக அரசும், மின்உற்பத்திக்கு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துவது ஒருபுறம் இருக்கட்டும், வீடுகளில் சூரியஒளி மின் உற்பத்திக்கான திட்டத்தை ஊக்குவிப்பதன் மூலம் எதிர்கால சந்ததியினர் நிம்மதியாக வாழ வழி கிடைக்கும். தொழில்வளமும் பெருகும் என்பதில் ஐயமில்லை.
நன்றி:தினமணி
Engr.Sulthan

2 comments: