Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, October 23, 2014

தெலா கிணறு... தமிழர்களின் பாரம்பரிய நுட்பம்...!கிணறுகளில் பலவகை உண்டு. அவற்றில் பழமையானதுதான் ’தெலா கிணறு’. தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி, ஆத்தூர், அடைக்கலாபுரம், குலசேகரன்பட்டினம் என சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் தெலா கிணறுதான் வழக்கத்தில் இருக்கு. கிணறுகளில் கப்பி அல்லது கயிறை போட்டு தண்ணீரை இறைப்பார்கள். ஆனால், தெலா கிணத்துல் கயிறு, கப்பிக்குப் பதிலாக நீளமான கம்பியில் வாளி கட்டப்பட்டிருக்கும், எதிர் முனையில் பெரிய தடியில் முப்பது கிலோ எடையுள்ள கல்லைக் கட்டி வைத்திருப்பார்கள்.தன்ணீர் இறைக்கும் போது கம்பியைப் பிடித்து இழுத்து கிணற்றுக்குள்ளே விட வேண்டும். கிணற்றில் மூழ்கி வாளியில் தண்ணீர் நிரம்பியதும் லேசா கம்பியை மேலே தூக்கினால் போதும். எதிர் முனையில் இருக்கும் கல்லோட எடை வாளியை உடனே மேலே கொண்டு வந்துவிடும். சுமார் 3000 வருடங்களுக்கு முன்பு இருந்த ஆதிச்சநல்லூர் நாகரீக காலக்கட்டத்திலும் கூட இந்த தெலா கிணற்று நீர் இறைப்பு முறை பயன்படுத்தப்பட்டதாக ஆய்வுகள் கூறுகின்றன.


ஆறுமுகநேரியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் வழியிலுள்ள தெலா கிணற்றில் தண்ணீர் இறைத்துக் குளித்துக் கொண்டிருந்த சுந்தரம் தாத்தாவிடம் பேசினோம், "எனக்கு அறுபத்தைந்து வயசாகுது. எனக்கு விவரம் தெரிஞ்ச நாளில இருந்து இந்த தெலா கிணத்துலதான் தண்ணீர் இறைக்கிறோம். இந்தக் கிணத்தடியிலயே துணி துவைச்சிக் குளிச்சுட்டு இருக்கோம். ஏத்த இறக்கமா தண்ணீர் இறைக்கிறதுக்கு பேருதான் தெலா. இந்த கிணத்துல தண்ணி இறைக்குறதே ஒரு உடற்பயிற்சி மாதிரிதான். ஆனா, இப்போ வீட்டுக்குவீடு போர் போட்டும், நல்ல தண்ணீரை மோட்டர் மூலமா தண்ணீரை சின்டெக்ஸ் டேங்கில் ஏத்தி  ’சவர்’ல நனைஞ்சு குளிக்கிறாங்க. என்னதான் டெக்னாலஜி வளர்ந்தாலும் இந்த தெலா குளியலே தனி சுகம்தான். எங்க தாத்தா, பாட்டி காலம் தொட்டு கால, காலமா இந்த தெலா கிணறு இந்த பகுதியில உபயோகத்துல இருக்கு" என்றார்.

தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்து பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குப் பாதையாத்திரையாக நடந்து வரும் பக்தர்கள் கோயிலுக்கு செல்லும் இடமெல்லாம் ஆங்காங்கே இருக்குற இந்த கிணறுகளில் தண்ணீர் இறைத்து குளித்துவிட்டுத்தான் போகிறார்கள். மணப்பாடு சவேரியார் ஆலயம், குலசேகரன்பட்டினம் மற்றும் காயல்பட்டினம் தர்கா ஆகிய சுற்றுலாத்தலங்களுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளும் இந்த பழமையான கிணறுகளை ஆச்சர்யத்துடன் பார்த்து கிணற்றருகில் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்கின்றனர்.

அந்தக்காலத்தில் ஒரு வீட்டில் கிணறும், பால்மாடும் இருந்தால் அவர்தான் பணக்காரராம் அந்த ஊரில். தெலா கிணறு உண்மையிலேயே ஒரு வரலாற்று பொக்கிஷம்தான்.

4 comments:

 1. ஓம்
  நெல்லை மாவட்டம் முக்கூடல் சொக்கலால் உயர்நிலைப்பள்ளியிம் மேற்கு ஓரம் ஒரு வட்டகிணறும் அதில் விட்டம் போல் அமைத்த கற்றூண் படியும் அதில் இறங்கி தெலா இழுத்து இறைக்கும் தறி வாத்தியார் இரண்டு கண்களும் பார்வையற்றவர். அவர் வேகமாக படியில் குதித்து இறங்குவதும் லாவகமாக தெலா கோலை இழுத்து வாளியை நீரில் சரித்து முகர்ந்து ஒரே வீச்சில் மேலே தூக்கி சட்டென வாளியின் விளிம்பை பற்றிப் பிடிப்பதை அனைவரும் ஆச்சரியமாக பார்ப்போம்.
  தறி அடித்து நெசவு செய்யும் போது ஆயிரக்கணக்கான் இழைகளில் அறுந்துவிட்ட ஒரு நூல் இழையை கையினால் தடவியே கண்டுவிடுவார்.

  தெலா இழுக்க மறுமுனையில் கனமான கற்களைக் கட்டுவதை விட மூவர் ஒருங்கிணைந்து வேகமாக் நீர் இறைக்கும் முறையும் ஒன்று உண்டு. . கயினால் கிணற்று நீரை நோக்கி வாளியை இழுப்பதற்குப் பதிலாக ஒருவர் வாளியைக் கொண்ட கோலைப் பிடித்துக்கொண்டு கிணற்றுப் படியில் நின்றிருக்க , இருவர் அந்த தெலா சட்டத்தின் மேல் ஏறி நின்றுகொண்டு முன்னும் பின்னும் நடக்க சிரமமின்றி வேகமாக நீர் இறைக்கப்படும்.
  அதைப் போன்றே கபிலை (கமலை)ஏற்றம் , இருவர் நின்றுகொண்டு பாட்டுப் பாடிக்கொண்டே இறைக்கும்( இறைபெட்டி) ஆகியவை உற்சாகமான இலகு எந்திரங்கள்.
  அன்புடப்ன் வெ.சுப்பிரமணியன் ஓம்

  ReplyDelete
 2. நல்ல தகவல். நன்றி ஐயா

  ReplyDelete