Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, November 24, 2014

ஒய்யாரக் கொண்டையாம்; தாழம்பூவாம் பாகம் 4

ஜெயலலிதா சொன்ன அடுக்கடுக்கான பொய்களை எல்லாம் ஆதாரத்தோடு நீதிபதி குன்ஹா அவர்கள் தனது தீர்ப்பில் நிரூபித்திருக்கிறார்.
நீதிபதி குன்ஹா கடந்த 27ஆம் தேதி வெளியிட்ட தீர்ப்பில் உள்ள முக்கியமான கருத்துகளைத் தொகுத்து கடந்த மூன்று தொடர் கடிதங்களில் நான் தெரிவித்திருப்பதை நீ படித்திருப்பாய். 
தொடர்ந்து நீதிபதி குன்ஹா அவர்கள் மேலும் தனது  தீர்ப்பில், 
"ஜெயா பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தைப் பொறுத்தவரை சசிகலாவுக்கு ஜெயலலிதா பவர் கொடுத்து விட்டார். 
அதனால், அந்த நிறுவனத் தில் நடந்த எதுவும் ஜெயலலிதாவுக்குத் தெரியாது’ என்ற தற்காப்பு வாதத்தை ஜெயலலிதாவின் வழக்கறிஞர் முன்வைத்தார்.
 இந்த வாதத்தை ஏற்க முடியாது. ஏனென்றால், ஜெயலலிதா சசிகலாவுக்கு ‘பவர் ஆஃப் அட்டர்னி’ கொடுத்திருந்தாலும் இல்லை என்றாலும், ஜெயா பப்ளிகேஷன்ஸில் ஜெய லலிதாவும் சசிகலாவும் சமமான அதிகாரம் படைத்த பங்குதாரர்கள் என்பது மாற்ற முடியாதது.
 ஜெயலலிதா சசிகலாவுக்குக் கொடுத்த பவர் என்பது, சசிகலா சுதந்திரமாக ஜெயா பப்ளிகேஷன்ஸில் நிர்வாகத்தைக் கவனித்துக் கொள்ளவும், அதன்மூலமாக தான் மறைமுக மான உரிமையாளராக இருப்பதற் காகவுமே. 
அதாவது தன்னுடைய ஏஜென்டாக சசிகலாவை அவர் நியமித்து உள்ளார். ஆனால், அந்த நிறுவனத்தின் மூலம் நடைபெற்ற பணப் பரிமாற்றங்கள் உள்ளிட்ட அனைத்தும் ஜெய லலிதாவின் ஒப்புதலுக்குப் பிறகே நடைபெற் றுள்ளன. அதற்கான ஆதாரங்களை அரசுத்தரப்பு கொடுத்துள்ளது. ஜெயா பப்ளிகேஷன்ஸில் நடைபெற்ற பரிவர்த்தனைகள் அனைத்தையும் ஜெயலலிதாவுக்குத் தெரியாமல் சசிகலாவோ அல்லது சசிகலாவின் பங்கு இல்லாமல் ஜெய லலிதாவோ செய்யவில்லை. 
அந்த நிறுவனத் துக்கு வந்த பணம், அந்த நிறுவனத்தில் இருந்து வேறு வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்ட பணம் என அனைத்தும் இருவருக்கும் தெரிந்தே நடந்துள்ளது."

"தன்னுடைய வீட்டில் வசித்த சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் இதுபோன்ற வேலைகளில் ஈடுபட்டது தனக்குத் தெரியாது என்று ஜெயலலிதா சொல்வதை ஏற்கவே முடியாது. ஒரு மாநிலத்தின் முதலமைச்சர், தன்னுடைய வீட்டில் இருக்கும் தன்னுடைய சகாக்களின் நடவடிக்கை பற்றி எதுவும் தெரியாது என்று சொன்னால் அதை எப்படி ஏற்க முடியும்? அதுபோல அந்த மூன்று பேரும் தன்னுடைய வீட்டில் வசிக்கவே இல்லை என்பதை ஜெய லலிதாவினால் மறுக்கவும் முடியாது. 

வாக்காளர் பட்டியலில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு 36, போயஸ் கார்டன் முகவரிதான் இருக்கிறது. மேலும் ஜெயலலிதாவிடம் நடத்திய விசாரணையில், சசிகலாவும் இளவரசியும் என்ன காரணத் துக்காக அங்கு வசிக்கிறார்கள் என்று கேட்கப்பட்டபோது, அதற்கு பதில் சொல்ல விரும்ப வில்லை என்று ஜெயலலிதா பதில் அளித்துள்ளாரே தவிர, அவர்கள் தன்னுடன் வசிக்கவே இல்லை என்று கூறவில்லை. 
மேலும், சசிகலாவும் இளவரசியும் ஜெயலலிதாவுக்கு ரத்த பந்தமோ அல்லது வேறு வகையில் சொந்தமோ இல்லாதபோது அவர்கள் ஏன் தன்னுடன் வசிக்கிறார்கள் என்பதை ஜெயலலிதாவால் தெளிவுபடுத்த முடியவில்லை."

"இந்தக் கேள்விக்கு சசிகலாவும் இளவரசியும் கூட பதில் சொல்லவில்லை. இத்தனைக்கும் அவர்களுக்குத் தனியாகக் குடும்பம் இருக்கிறது. இருவரும் திருமணமானவர்கள். அவர்கள் ஏன் தங்களுடைய குடும்பத்தைப் பிரிந்து ஜெயலலிதாவுடன் இத்தனை ஆண்டுகளாக ஒரே வீட்டில் வாழ வேண்டும்? அதற்கு என்ன காரணம்?
 ஜெயலலிதாவுக்கு வந்த பரிசுப் பொருள்கள், ஜெயலலிதாவின் பெயரைப் பயன்படுத்தித் தவறான வழிகளில் சம்பாதித்த பணம் ஆகியவை அனைத்தும் சசிகலாவின் வழியாகவே வந்துள்ளன. அவற்றை ஜெயலலிதா வீட்டுக்குக் கொண்டு சேர்க்கும் வேலைக்காக இளவரசி பயன்படுத்தப்பட்டுள்ளார்."

"சசிகலாவும் இளவரசியும் நடத்திய நிறுவனங்கள் பற்றித் தனக்கு எதுவும் தெரியாது என்றும் ஜெயலலிதாவால் சொல்ல முடியாது. ஏனென்றால், சசி என்டர்பிரைசஸ் நிறுவனத்துக்கு ஜெயலலிதா ஒரு கோடி ரூபாய் கொடுத்துள்ளார். மேலும், அவர்கள் நிறுவனம் வாங்கிய வங்கிக் கடன்களுக்கு எல்லாம் ஜெயலலிதா தன்னுடைய பெயரில் "ஷ்யூரிட்டி செக்" கொடுத்துள்ளார். 

இதன்மூலம் அவர்கள் அனைவரும் கூட்டாகச் சேர்ந்து, தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை முழுவதுமாக அறிந்தே செய்துள்ளனர். ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரின் பெயர்களில் உள்ள சொத்துகள் எப்படி வந்தன என்பதற்கு இவர்களால் கணக்குச் சொல்ல முடியவில்லை என்பது சரியாக நிரூபிக்கப்பட்டுள்ளது'' என்று நீதிபதி குன்ஹா தனது தீர்ப்பில் விளக்கியுள்ளார்.

வருமானத்துக்கு அதிகமாகச் சேர்த்த சொத்துகள் மட்டுமல்லாமல், வருமானத்துக்கு அதிகமாகச் செய்த செலவுகளும்தான் ஜெயலலிதாவுக்கு இன்று பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. 
பெங்களூரு சொத்துக் குவிப்பு வழக்கில், வருமானத்துக்கு அதிகமாக செய்த செலவு களுக்கு அடிப்படை உதாரணமாகத் திகழ்கிறது ஜெயலலிதாவின் அன்றைய வளர்ப்பு மகன் சுதாகரனின் ஆடம்பரத் திருமண அத்தியாயம்.
ரசீதுகள், வருமான வரி அலுவலகத்தில் தாக்கல் செய்யப்பட்ட கணக்குகள், சாட்சிகள், பொதுப்பணித் துறை அதிகாரிகளின் மதிப்பீடுகள் என சுதாகரனின் ஆடம்பரத் திருமணத்தை ஜெயலலிதா நடத்திய விதத்துக்கு எதிராக ஏராளமான ஆதாரங்களைத் தாக்கல் செய்தது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை. ஆனால், அவற்றை இல்லை என்று மறுப்பதற்கு ஜெயலலிதா தரப்பிடம் எவ்வித ஆதாரமும் இல்லை. அதை நீதிபதி குன்ஹா அவர்கள் தன்னுடைய தீர்ப்பில் விவரித்துள்ள விதத்தைப் பார்க்கலாமா?

"ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கும் நடிகர் சிவாஜி கணேசனின் மகள் (சாந்தி) வழிப் பேத்தி சத்தியலட்சுமிக்கும் ஜூலை 7, 1995 அன்று திருமணம் நடைபெற்றது. அப்போது பந்தல்கள் அமைப்பதற்கு
5 கோடியே 21 லட்சத்து 23 ஆயிரத்து 532 ரூபாயும் உணவு, தண்ணீர், தாம்பூலம் கொடுத்த செலவு 1 கோடியே 14 லட்சத்து 96 ஆயிரத்து 125 ரூபாயும் நான்கு லட்சம் ரூபாய்க்கு வெள்ளித் தட்டுகளும் அழைப்பிதழ்களைத் தபாலில் அனுப்பிய வகையில் 2 லட்சத்து 24 ஆயிரம் ரூபாயும் செலவாகியுள்ளது. இந்தத் திருமணத்துக்காகச் செய்யப்பட்ட அனைத்து செலவுகளும் சாட்சியங்களின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.""

"இந்த வழக்கின் 181-வது சாட்சி தங்கராஜன். பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளரான இவர்தான், சுதாகரன் திருமணச் செலவுகளை மதிப்பிட்டவர். திருமணத்துக்குப் பந்தல் அமைத்த ஆர்க்கிடெக்ட் விஜயசங்கர், ஆர்ட் டைரக்டர் தோட்டா தரணி, கோபிநாத், தோட்டா தரணியின் உதவி யாளர்கள் ரமேஷ், சீனிவாசன், மின்விளக்கு அலங்காரம் செய்த எலெக்ட்ரீசியன் பி.எஸ்.மணி, சையத் முகமத் ஆகியோரைச் சந்தித்து ஆதாரங்களைத் திரட்டி இந்த மதிப்பீட்டைச் செய்துள்ளனர். திருமணம் நடைபெற்ற போது, பொருள்களின் விலை சந்தை மதிப்பில் என்ன இருந்ததோ, அந்த விலையை வைத்தே கணக்கிட்டு உள்ளனர். அதன்படி, சுதாகரன் திருமணச் செலவாக இவர்கள் கணக்கிட்ட தொகை ரூ. 5 கோடியே 91 இலட்சம்"".
வழக்கின் சாட்சிகளை எதிர்த்து வாதிட்ட ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் பி.குமார், "சுதாகரனின் திருமணம் நடைபெற்று இரண்டரை ஆண்டுகள் கழித்து தயாரிக்கப்பட்ட இந்த மதிப்பீடுகள் ஏற்றுக்கொள்ளத் தக்கவை அல்ல. அதை மதிப்பீடு செய்துள்ள சாட்சிகள் சுதாகரனின் திருமணத்தை நேரில் பார்க்காதவர்கள். அங்கு அமைக்கப்பட்டு இருந்த வேலைப்பாடுகள், பந்தல்கள் பற்றி இவர்களுக்கு என்ன புரிதல் இருக்க முடியும்? 
எனவே, இந்தச் சாட்சிகளை ஏற்றுக் கொள்ளக் கூடாது"" என்று வாதிட்டார்.

வழக்குச் சாட்சியாகப் பொதுப்பணித் துறையின் மூத்தப் பொறியாளர் முத்துச்சாமி விசாரிக்கப்பட்டார். இவர், அரசு நிகழ்ச்சிகளில் பந்தல் அமைக்கும் பணிகளை மேற்பார்வை செய்பவர். 

முதலமைச்சர் ஜெயலலிதாவின் உதவிச் செயலாளராக இருந்த ஐ.ஏ.ஏஸ் அதிகாரி ஜவஹர் பாபு, முத்துச்சாமியைத் தொலைபேசியில் அழைத்து, "முதலமைச்சர் வீட்டில் நடைபெற உள்ள திருமணம் குறித்து உங்களிடம் பேச வேண்டும். எனவே, போயஸ் கார்டன் வீட்டுக்கு வாருங்கள்"" என்று கூறி உள்ளார். அதன்படி முத்துச்சாமி மறுநாள் ஜவஹர் பாபுவை சந்தித்து, சசிகலாவிடம் அறிமுகமாகியுள்ளார். இதையடுத்து சசிகலா, அவரிடம் ‘சுதாகரன் திருமணத்துக்கான பந்தல் அமைக்கும் வேலைகளை எல்லாம் நீங்கள் கவனித்துக் கொள்ளுங்கள்’ என்று கூறியுள்ளார். 
முத்துச்சாமியின் சாட்சிப்படி, பந்தல்கள் அமைப்பதற்கு விஜய சங்கர் வரைபடம் தயாரித்துக் கொடுத்துள்ளார்.
"இதையடுத்து எம்.ஆர்.சி நகரில், ஐந்து முக்கிய பந்தல்கள் 70’ ஒ 50’ அளவில் போடப்பட்டு உள்ளன. தூத்துக்குடி ராஜப்ப நாடார் அதை செய்து கொடுத் துள்ளார். தென்னை ஓலைகளால் வேயப்பட்ட பந்தல்கள் 60’ ஒ 450’ என்ற அளவில் எட்டு அமைக்கப்பட்டு உள்ளன

. வி.ஐ.பி-களுக்கான உணவுப் பந்தலை 60’ ஒ 200’ என்ற அளவில் மன்னார்குடி ராஜகோபால் என்பவர் அமைத்துக் கொடுத்துள்ளார். சமையலறை பந்தல்கள் 45’ ஒ 1,356’ என்ற அளவில் குமரேசன் நாடார் என்பவர் அமைத்துக் கொடுத்துள்ளார். திருமண மேடை, மணமக்கள் ஏ.சி-கள், அவர்களுக்கான ஓய்வறைகள், கழிப்பறைகள் போன்றவற்றை எத்திராஜ் அமைத்துக் கொடுத்துள்ளார்.
 இதற்கான செலவுகள் அனைத்தும் ஜெயலலிதாவின் குடும்பம் ஏற்றுக் கொண்டதாக கூறி உள்ளார். வி.ஐ.பி-களுக்கான அமரும் இடம், அதில் உள்ள வேலைப்பாடுகள், அவர்களின் உணவறைகள் போன்றவற்றை ஆர்ட் டைரக்டர் கோபிநாத் செய்து கொடுத்துள்ளார். 
தண்ணீர் வசதிக்காக 5 போர்வெல்களை பால்தாசன் என்பவர் அமைத்துக் கொடுத்துள்ளார். அதுபோக, லாரிகள் மூலமாகவும் தண்ணீர் சப்ளை நடந்துள்ளது. சி.எஸ்.சந்திரசேகரன் என்பவர் மின் இணைப்பு கொடுத்துள்ளார். இதற்காக 2-10 கிலோ வாட் ஜெனரேட்டர்களையும் 4 மொபைல் ஜெனரேட்டர் களையும் அவர் பயன்படுத்தி உள்ளார். 
இந்த வேலைகள் நடந்து கொண்டிருந்தபோது, ‘ஜெயலலிதா வும் சசிகலாவும் அவற்றை மேற்பார்வையிட்டனர்’ என்றும் முத்துச்சாமி சாட்சியம் அளித்துள்ளார்.""

மணமகளின் தந்தை நாராயணசாமி இவர்களுக்குக் கொடுத்த தொகை போக மீதித் தொகை அனைத்தையும் ஜெயலலிதா கொடுத்துள்ளார். அதுவும் தன்னுடைய பெயரில் செக் கொடுத்துள்ளார். 

அவை அனைத்தும் வங்கியில் இருந்து பெறப்பட்ட ஆதாரங்களின் மூலம் நிரூபிக்கப்பட்டு உள்ளன. பால்பாபு என்ற வட இந்திய அலங்கார நிபுணருக்கு போயஸ் கார்டனில் இருந்து, 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செக் கொடுக்கப்பட்டு உள்ளது. 
அடையாறு விநாயகர் கோயிலில் இருந்து எம்.ஆர்.சி நகர் வரையிலான பாதையை செப்பனிட்டு இரண்டு பக்கமும் விளக்குகளால் அலங்காரம் செய்த சுப்பிரமணி மற்றும் சாமி ஆகியோருக்கு ஜெயலலிதா தன்னுடைய பெயரில் செக் கொடுத்துள்ளார்.

இப்படி... பந்தல் தொடங்கி, சுதாகரன் திருமணத் தில் நடைபெற்ற அனைத்து வேலைகளையும் மேற்பார்வை பார்த்த பொதுப்பணித் துறையின் மூத்த பொறியாளர் முத்துச்சாமியிடம் விசாரித்துத்தான் பொறியாளர் தங்கராஜ், பந்தலுக்கான செலவு மற்றும் இதர விஷயங்களை மதிப்பிட்டுள்ளார். அதுவும், திருமணம் நடந்த 1995-ம் ஆண்டில் அந்தப் பொருள்கள் சந்தையில் என்ன விலைக்கு விற்றதோ அந்த விலையிலேயே மதிப்பிட்டுள்ளார்.

சுதாகரனின் திருமணம் பற்றி ஜெயலலிதா நேரில் ஆஜராகி சாட்சி சொன்ன போது, அந்தத் திருமணத் திற்காக, தான் எதுவும் செலவழிக்கவில்லை என்றும், வருமான வரித் துறைக்கு அளித்த பதிலிலும் அதனைத் தெளிவுபடுத்தியிருப்பதாகவும் கூறினார். 

ஆனால் ஜெயலலிதா 1996-97ம் ஆண்டு தாக்கல் செய்த வருமான வரி கணக்கில் திருமணச் செலவுகள் என்று குறிப்பிட்டு 25 லட்சத்து 98 ஆயிரத்து 521 ரூபாய் என்றும், ரொக்கமாக 3 லட்சத்து 94 ஆயிரத்து 240 ரூபாய் செலவு செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். 
ஜெயலலிதாவின் ஆடிட்டர் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங் களின்படி, சுதாகரனின் திருமணத்துக்கு ஆன செலவுகளாக அவர்கள் வருமான வரித் துறையின ருக்குத் தாக்கல் செய்த கணக்கில் தெளிவாக 12 இலட்சத்து 50 ரூபாய் பத்திரிகைகள் மற்றும் விளம்பரங்களுக்குச் செலவு செய்ததாகக் குறிப்பிட் டுள்ளனர். 
திருமணத்துக்கான எல்லா செலவு களையும் மணமகள் வீட்டாரே செய்தார்கள் என்றால், பந்தல், விளக்கு அலங்காரம், கார்கள், அழைப்பிதழ் செலவுகளுக்கு ஜெயலலிதா கையெழுத்து போட்டு "செக்" கொடுத்தது ஏன் என்ற இந்தக் கேள்விகளுக்கு ஜெயலலிதா தரப்பால் பதில் சொல்ல முடியவில்லை என்றும் நீதிபதி குன்ஹா தெரிவித்திருக்கிறார். 
அந்தத் திருமணத்திற்கான வேலைகளைச் செய்த பலரும் இந்த வழக்கில் சாட்சியமளித்திருக்கிறார்கள். அனைத்தையும் நான் கூறிக் கொண்டே போக விரும்பவில்லை. 
உடன்பிறப்பே, "ஒய்யாரக் கொண்டையாம்; தாழம்பூவாம்" என்ற தலைப்பினான இந்தக் கடிதத் தொடர் நான்கு நாட்களாக வந்து கொண்டிருக்கிறது. 
பெங்களூரு சிறப்பு நீதிமன்றத் தனி நீதிபதியின் தீர்ப்பு இன்னும் விரிவானது. அந்தத் தீர்ப்பு பற்றி முதலிலே நான் தெரிவித்தவாறு கருத்து தெரிவிக்க விரும்ப வில்லைதான்! 
ஆனால் என்னைக் கருத்துத் தெரிவிக்க தூண்டியவர்கள் ஆளுங்கட்சியினரான அ.தி.மு.க.வினரும்; சில நாளேடுகளும்தான். ஆம், ஜெயலலிதாவுக்கு நிபந்தனை ஜாமீன் உச்ச நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட நாளன்று, ஆளுங் கட்சியின் அதிகாரபூர்வ நாளேட்டில் வந்த விளம்பரங்களின் வாசகங்கள் - ஏதோ தவறாக நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது
 - ஜெயலலிதா மீது பொய் வழக்கு போடப்பட்டு விட்டது என்றெல்லாம் செய்த பிரச்சாரம் காரணமாகத்தான் சில உண்மை களைத் தெளிவுபடுத்த வேண்டும் என்பதற்காகவே இந்த விரிவான தொடர் கடிதம்! 

உதாரணமாக இன்றைய கடிதத்தை மட்டும் எடுத்துக் கொண்டால் கூட, ஜெயா பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தில் நடந்த எதுவும் தனக்குத் தெரியாது என்றும், 
தன்னுடைய வீட்டில் வசித்த சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் இதுபோன்ற வேலைகளில் ஈடுபட்டது தனக்குத் தெரியாது 
என்றும், சசிகலாவும் இளவரசியும் நடத்திய நிறுவனங்கள் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும், 
சுதாகரன் திருமணத் திற்காக தான் எதுவும் செலவழிக்கவில்லை என்றும் 
ஜெயலலிதா சொன்ன அடுக்கடுக்கான பொய்களை எல்லாம் ஆதாரத்தோடு நீதிபதி குன்ஹா அவர்கள் தனது தீர்ப்பில் நிரூபித்திருக்கிறார். 

அவைகளை வெளிப்படுத்த வேண்டுமென்பதைத் தவிர நான் ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல யாரையும் புண்படுத்த வேண்டுமென்பது என்னுடைய நோக்கமல்ல என்பதை மீண்டும் ஒருமுறை தெளிவாக்கிட விரும்புகிறேன்.

                                                                                                                     -கலைஞர் கருணாநிதி .







No comments:

Post a Comment