Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, April 22, 2015

பயனுள்ள வீட்டுக்குறிப்புக்கள் ! மின்சாரம்… பெட்ரோல்… கேஸ்… சூப்பர் 100 டிப்ஸ்!


மிக்ஸி, கிரைண்டர், டி.வி., ஃப்ரிட்ஜ், வாஷிங்மெஷின், ஏ.சி. என ஏகப்பட்ட எலெக்ட்ரானிக் பொருட்களை வீட்டுத் தேவைக்காக வாங்கிக் குவிக்கும்போது, அவற்றை இயக்கும் கரன்ட்டுக்கு எவ்வளவு செலவாகும் என்பதை பெரும்பாலானவர்கள் இங்கு யோசிப்பதில்லை. ஆனால், கரன்ட் ‘பில்’லை பார்த்த பின்புதான், ‘ஐயோ’ என அலறல் போடுவார்கள். இதே கதைதான்… டூ-வீலர், ஃபோர் வீலர், சமையல் கேஸ் என தினம் தினம் எரிபொருளுக்காக நாம் செலவழிக்கும் தொகையும். இதெல்லாம் மாதக் கடைசியில் பட்ஜெட்டில் பற்றாக்குறையை ஏற்படுத்தி பயமுறுத்தும்போது ‘பக் பக்’ என்றிருக்கும்!



பணத்தை மிச்சப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் மட்டுமல்ல… அதை தண்ணீராகச் செலவழிக்கக் கூடிய அளவுக்கு தாராளமாக வசதியுள்ளவர்களும்கூட எரிபொருள் சிக்கனத்தைக் கடைபிடிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

ஆம்… பூமியை கபளீகரம் செய்வதற்கு தயாராகிக் கொண்டிருக்கும் சுற்றுச்சூழல் கேடுகளுக்கு அடிப்படையே… தாறுமாறான எரிபொருள் பயன்பாடுதான்.

எரிபொருளை எப்படி முறையாகப் பயன்படுத்தி, எரிசக்தியை சிக்கனப்படுத்தி, பட்ஜெட்டைக் குறைத்து, வீட்டையும் – நாட்டையும் காப்பாற்றுவது என்பதைச் சொல்கிறது இந்தப் புத்தகம்.

படித்துப் பார்த்தால், வழக்கம்போல பொக்கிஷமாக பத்திரப்படுத்தி விடுவீர்கள்!

லைட்ஸ் ஆஃப்… பில் சேஃப்!

வீட்டில் எரியும் மின்விளக்குகள் நல்ல வெளிச்சத்தைத் தரும்; அழகைத் தரும். ஆனால், அதற்கான கட்டணம்..? செலவாகிற எரிசக்தி..? அவற்றை எப்படி சிக்கனமாகப் புழங்குவது..? இப்படித்தான்…

1. நீங்கள் எங்கு வேலை செய்கிறீர்களோ அங்கு மட்டும் விளக்கு எரிந்தால் போதுமே?! கிச்சனில் வேலை செய்யும்போது ஹாலில் எதற்கு இரண்டு விளக்குகள்? குறிப்பாக, படிக்கும்போது அந்த டேபிளில் மட்டும் விளக்கு எரிந்தால் போதும். அந்த மாதிரி ‘டேபிள் லேம்ப்ஸ்’தான் மார்கெட்டில் வகைவகையாகக் கிடைக்கிறதே… வாங்கிப் பயன்படுத்தினால் காசும் மிச்சம்; கரன்ட்டும் மிச்சம்.

2. டியூப் லைட், குண்டு பல்பு போன்றவற்றில் தூசு படிந்திருந்தால், அவை குறைந்த அளவு வெளிச்சத்தையே கொடுக்கும். அந்த விளக்குகளை அவ்வப்போது துடைத்து சுத்தம் செய்வது நல்லது.

3. இப்போது பல வீடுகளில் கச்சிதமான ‘சி.எஃப்.எல்’ (CFL-compact Fluorescent Lamp) விளக்குகள் ஒளிர்கின்றன. காரணம், ’60 வாட்ஸ் குண்டு பல்பு’ கொடுக்கும் அதே அளவு ஒளியை, ’15 வாட்ஸ் சி.எஃப்.எல். பல்பு’ மூலமே பெற்றுவிட முடியும். அப்போ நாமும் ‘சி.எஃப்.எல்’-க்கு மாறிடுவோமா..!

4. மஞ்சளாக எரியும் மெர்க்குரி, சோடியம் பல்புகளுக்குப் பதிலாக, அதிக ஒளியைத் தரும் ‘ஹாலைடு’ பல்புகளை (Halide Lamp) பயன்படுத்தினால் அதிக வெளிச்சம் கிடைப்பதோடு, எரிபொருள் செலவும் குறையும்.

5. டியூப் லைட்டுக்கு வழக்கமான ‘அலுமினிய சோக்’ பயன்படுத்துவதைவிட (Aluminium Choke) ‘மின்னணு சோக்’ (Electronic Choke) பயன்படுத்தினால் மின் செலவு குறையும். ஸ்டார்ட்டர் என்று தனியாக ஒரு உபகரணத்தையும் உபயோகிக்கத் தேவையிருக்காது.

6. வீட்டுக்குள் டிஸ்டம்பர், பெயின்ட் அடிக்கும்போது அதிக அடர்த்தியில்லாத லைட் கலரில் அடித்தால்தான் வெளிச்சம் அதிகமாகக் கிடைக்கும். மிக அடர்த்தியான நிறங்கள் ஒளியை உறிஞ்சி கொள்ளும் தன்மையுடையன என்பதால், ஒன்றுக்கு இரண்டு விளக்குகள் பயன்படுத்த வேண்டியதாகிவிடும்.

7. ‘இன்ஃப்ரா ரெட் லேம்ப்ஸ்’, ‘மோஷன் சென்சார்ஸ்’, ‘ஆட்டோமேடிக் டைமர்ஸ்’ என ஒளியின் அளவினை முறைப்படுத்திடும் மின்னமைப்புகள் (டிம்மர்ஸ்) மற்றும் சோலார் செல் மூலமாக தானே இயங்குகிற மின் கருவிகள் வழக்கத்துக்கு வந்துள்ளன. அவற்றைஎல்லாம் பயன்படுத்தினால், தேவையானபோது தானாகவே ‘ஆன்’ ஆகி, தேவையில்லாதபோது ‘ஆஃப்’ ஆகிவிடும். மின்சக்தியும் பெருமளவில் மிச்சமாகும்.

பக்குவமாகப் பயன்படுத்துங்கள் ஃப்ரிட்ஜை!

ஃப்ரிட்ஜ் – நம் வீட்டு ஊட்டி பெட்டி! ஞாயிறு அரைத்த மாவு, நேற்று அரைத்த சட்னி, சாம்பார், பால், காய்கறிகள், பழங்கள் என சகல பொருட்களையும் கதவு திறந்து வாங்கி, சீக்கிரம் கெட்டுப் போகாமல் பாதுகாத்து, குளிர்ச்சியாகவும் பத்திரமாகவும் வைத்திருக்கும் கிச்சன் தோழி. குளிர்பதனப்பெட்டி எனும் அந்த ஃப்ரிட்ஜை எப்படி வாங்குவது, அதன் பயன்பாட்டில் எரிசக்தியை எப்படி சிக்கனப்படுத்துவது..? இதோ…

8. ஃப்ரிட்ஜ் வாங்குவது என முடிவு செய்துவிட்டால், அதிக எரிசக்தி செயல்திறன் கொண்ட வகைகளைத் தேர்ந்தெடுங்கள்.

9. எந்த சைஸ் ஃப்ரிட்ஜ் சிறந்தது..? பொதுவாக சிறிய சைஸ் ஃப்ரிட்ஜ்களுக்கான எரிசக்தி தேவைப்பாடு, பெரிய சைஸ் ஃப்ரிட்ஜ்களுக்குத் தேவைப் படுவதைவிட குறைவாகவே இருக்கும்.

10. ‘அவங்க வீட்டுல பெரிய ஃப்ரிட்ஜ் வச்சுருக்காங்களே..?’ என்று மனசு சமாதானமாகாதவர்கள், இதைப் படியுங்கள். ஒரு பெரிய சைஸ் ஃப்ரிட்ஜின் மின்சக்தி தேவைப்பாடு, அதே அளவு வசதி கொண்ட இரண்டு சிறிய சைஸ் ஃப்ரிட்ஜின் மின்சக்தி தேவைப்பாட்டைவிட அதிகமாகவே இருக்கும்!

11. ஃப்ரிட்ஜின் ‘உறைய வைக்கும் அறை’ (Freezer) மேலே அல்லது கீழே இருந்தால் தேவைப்படும் மின்சக்தி தேவைப்பாட்டைவிட, பக்கவாட்டில் இருந்தால் 12 சதவிகிதம் குறைவாகத் தேவைப்படும். ஃப்ரிட்ஜ் வாங்கும்போது இதையெல்லாம் கண்டிப்பாக கவனியுங்கள்.

12. கதவிலேயே குளிர்ந்த நீர், ஐஸ்கட்டிகளைப் பெறும் வசதியோடு கூடிய ஃப்ரிட்ஜ்களும் உண்டு. ஆனால், இவை அதிக அளவில் எரிசக்தியை பயன்படுத்துபவைகளாகவே இருக்கும். அதுமட்டுமல்ல… அதன் விலை மற்றும் பராமரிப்பு செலவும் மிக அதிகம்.

13. எரிசக்தி சிக்கனத்துக்கான நட்சத்திர குறியீடுகள், தற்போது வழக்கத்தில் உள்ளன. குறிப்பிட்ட சாதனத்தின் ஆற்றல், அதன் செயல்திறன் மற்றும் ஆற்றல் செலவு உள்ளிட்ட விஷயங்களை வைத்து இத்தகைய குறியீடுகள் வழங்கப்படுகின்றன.

14. நீங்கள் வாங்கப்போகும் ஃப்ரிட்ஜின் மேல் சிவப்பு வண்ணத்தால் ஆன நட்சத்திரக் குறியீடுகள் அதிகம் இருந்தால், உங்கள் சாய்ஸ் இஸ் குட். அதிக நட்சத்திரம் இருந்தால்… அது அதிக சேமிக்கும் திறன் கொண்டது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

15. விலை குறைவாகக் கிடைக்கிறது என்பதற்காக பழைய, திறன் குறைந்த ஃப்ரிட்ஜ்களை வாங்குவதைவிட, புதிதாக வாங்குவதுதான் புத்திசாலித்தனம். காரணம், பழைய ஃப்ரிட்ஜை இயக்க அதிக மின்சாரம் தேவைப்படும், அது மின் கட்ட ணத்தை அதிகப்படுத்தும்தானே?!

இந்தக் கூறுகளையெல்லாம் ஆராய்ந்து ஃப்ரிட்ஜை வாங்கியாகி விட்டது. அதில் எப்படி மின்சக்தியை சேமிப்பது..? இதோ…

16. ஃப்ரிட்ஜை வீட்டில் வைக்கும்போது, சுவரில் இருந்து குறைந்தது 30 செ.மீ. தூரம் தள்ளிவைத்தால்தான், அது வெப்பக்காற்றை வெளியிட வசதியாக இருக்கும்.

17. வெப்பத்தை அதிகமாக வெளியிடும் ஏ.சி. அயர்ன் பாக்ஸ் போன்றவற்றுக்கு அருகில் ஃப்ரிட்ஜை வைக்கக் கூடாது. காரணம், அதன் பாதிப்பால் இது அதிக அளவு மின்சக்தியை இழுக்கும்.

18. சமையல் அறையில் கேஸ் அடுப்புக்கு அருகிலும் ஃப்ரிட்ஜை வைப்பது கூடாது. இது, அதிக மின்சாரத்தை உள்ளிழுக்கும் என் பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

19. ஃப்ரிட்ஜுக்குள் அதிகமான பொருட்களை வைக்கும்போது, அந்தப் பொருட்களிடையே போதிய காற்றோட்டம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். அப்போது தான் அவை சம அளவில் குளிர்ச்சி உடையதாக இருக்கும்.

20. ஃப்ரிட்ஜுக்குள் இருந்து எந்தப் பொருளை வெளியே எடுக்க வேண்டும் என முடிவு செய்த பின்பு, கதவைத் திறப்பது நல்லது. ‘கத்திரிக்காயை எடுத்திட்டேன், தக்காளி வேணுமா, வேண்டாமா..? அது சமையல் கட்டுலேயே இருக்குதா…’ என யோசித்துக்கொண்டே கதவைத் திறந்து வைத்துக்கொண்டிருந்தால், குளிர்க் காற்று வெளியேறி, அதே குளிர்நிலை மீண்டும் கிடைப்பதற்கு கூடுதல் மின்சாரம் தேவைப்படும்தானே? இதைத் தவிர்க்கலாமே!

21. மிகவும் சூடான மற்றும் வெதுவெதுப்பான உணவுப் பொருட்களை அறையின் வெப்பநிலைக்கு கொண்டு வந்து அவற்றை நன்கு மூடி ஃப்ரிட்ஜ் உள்ளே வைக்க வேண்டும். அவ்வாறு செய்யப்படுவதன் மூலம் மின்சக்தி குறைந்த அளவு பயன்படுத்தப்படுவதோடு அந்தப் பொருள் குளிரூட்டப்படும் நேரமும் குறைகிறது.

22. ஃப்ரிட்ஜ் கதவின் காப்பு முத்திரைகள் (Seals) தூய்மையானதாகவும் இறுக்கமானதாகவும் இருக்க வேண்டும். இதை எவ்வாறு உறுதி செய்வது? ஒரு காகிதத் துண்டினை கதவின் இடுக்கினில் வைத்தால் அது கீழே விழாதிருக்க வேண்டும். மாறாக, அந்தக் காகிதத் துண்டு கீழே வழுக்கி விழுந்தால்… குளிர்பதனப் பெட்டியின் கதவின் காப்பு முத்திரைகள் உடனடியாக மாற்றப்பட வேண்டும்.

23. ஃப்ரிட்ஜில் உள்ள கன்டென்சர் காயில் மீது அதிகளவு தூசு படிந்தால், அது இயங்குவது கடினமாகும். அதிகக் கடினமான மோட்டாரை இயக்க மின்சக்தி அதிக அளவில் தேவைப்படும். இதைத் தவிர்க்க, கன்டென்சர் காயிலுக்கு நல்ல காற்றோட்டம் கிடைக்கும் வகையில் அவ்வப்போது சுத்தம் செய்தால்… நோ பிராப்ளம்.

24. ஃப்ரிட்ஜின் ஃபிரீஸருக்குள் ஐஸ் படியாமல், அப்படி படிந்தவற்றை அவ்வப்போது நீக்கிவிட் டால் மின்சாரம் அதிக அளவு செலவாகாது.

25. ஃப்ரீஸரில் படிந்த ஐஸ் பார்களை நீக்க கரண்டி, கத்தி போன்றவற்றை சிலர் உபயோகிப் பார்கள். இது ஃப்ரீஸரைச் சேதப்படுத்தி, பயன்படாமல் செய்துவிடும். எப்போதும் அதற்கென உள்ள ‘டீஃப்ராஸ்ட்’ பட்டனையே உபயோகியுங்கள்.

26. ஐஸ்கிரீம், ஐஸ் கட்டி தேவைப்படும் நேரங்களில் மட்டும் ஃப்ரிட்ஜினை அதிகளவு குளிர்நிலையில் வைத்திருக்க வேண்டும். அவை தேவையில்லாத போது, குறைந்த அல்லது நடுத்தர குளிர்நிலையில் வைத்திருப்பது சிக்கன நடவடிக்கைக்கு கைகொடுக்கும்.

ஏர்கண்டிஷனர் ஏற்பாடுகள்!

இன்று வீடு, அலுவலகம், ஹோட்டல், சினிமா தியேட்டர் என எல்லா இடங்களிலும் ஏர்கண்டிஷனர் எனப்படும் ஏ.சி. பயன்படுகிறது. ஆடம்பரமான பொருள் என்பதைத் தாண்டி அவசியமான பொருள் என்றாகி விட்டது இந்த ஏ.சி. ஆனால், அதற்காக செலவிடும் தொகைதான் அதிகம். அதன் உபயோகத்தில் எப்படி மின் செலவைக் கட்டுப்படுத்தி, பணத்தை மிச்சப்படுத்துவது..?

27. சுட்டெரிக்கும் கோடைக்காலம் தவிர்த்து, மற்ற சீஸன்களில் சீலிங் ஃபேன், டேபிள் ஃபேன்களையே பயன்படுத்தலாம். காரணம், இவற்றை பயன்படுத்தினால் ஒரு மணி நேரத்துக்கு முப்பது பைசா மட்டுமே செலவாகும். இதுவே ஏ.சி-யை பயன்படுத்தினால்… ஒரு மணி நேரத்துக்கு ரூபாய்களில் செலவாகும்!

28. ஏ.சி. இருக்கும் அறையில் குறைந்த அளவு சூரிய ஒளி உள்ளே செல்லுமாறு பார்த்துக் கொண்டால் ‘குளுகுளு’ மெயின்டெயின் ஆகும். மின்சாரமும் அதிகம் செலவாகாது.

29. உலகத்துக்கே இயற்கைதானே எஜமான்! வீட்டின் ஜன்னல் மற்றும் சுவர்களின் மீது நிழல் படும்படி மரங்களை வளர்த்தால், ‘ஏ.சி’-க்கான மின்சாரத்தில் நாற்பது சதவிகிதத்தை சேமிக்கலாம் என்று நிரூபணம் செய்திருக்கின்றன ஆய்வுகள். அப்புறம் என்ன… மரம் நடுங்கள்; வளம் பெறுங்கள்.

30. ஏ.சி. வசதி செய்யப்பட்ட அறையின் மேற்கூரை வெப்பத்தை உள்ளே கடத்தும் வகையில் இருக்கக் கூடாது. அப்படியிருந்தால், குளிர்ச்சியை வெளியே கடத்தாத வண்ணங்களை அங்கு தீட்டுவது சிறந்தது.

31. ஏ.சி. பொருத்தப்பட்டுள்ள அறையின் மேற்கூரையின் கீழே செயற்கை சீலிங் (ஃபால்ஸ் சீலிங்) அமைக்கப்படுவதால், மேற்கூரையிலிருந்து வெளிப்படும் வெப்பக்கதிர் வீச்சு குறையும்; குளிரூட்டப்படும் அறையின் பரப்பளவும் குறைவதால், குறைந்த மின்சாரத்தில் ‘ஜில்ஜில்’ என இருக்கும்.

32. ஏ.சி-யிலிருந்து வரும் குளிர்க்காற்று கீழ்நோக்கி வீசும் தன்மையுடையதால், தரையிலிருந்து இரண்டு அல்லது மூன்று மீட்டர் உயரத்துக்கு மேல் ஏ.சி-யை பொருத்துவதுதான் சரியான முறை. ‘நாங்க கீழ வச்சுட்டோமே.. என்ன பண்றது’ என்பவர்கள், அதன் ஸ்விங் மோட் (Swing Mode), எப்போதுமே மேல் நோக்கியதாக இருக்குமாறு அமைத்து விட்டால், பிரச்னை தீர்ந்து விடும்.

33. ஸ்பிலிட் ஏ.சி-யின் கம்ப்ரஸரை (compressor) எப்படி வைப்பது..? எங்கு வைப்பது..? – இதுதான் நிறைய பேருக்கு வரும் சந்தேகம். ஏ.சி. பொருத்தப்படும் அறைக்கு வெளியே குளிர்ச்சியான, நிழல்பாங்கான இடமாக பார்த்து வைத்தால், சூரிய ஒளிபட்டு வெப்பமாவது தடுக்கப்படும்.

34. ஸ்பிலிட் ஏ.சி-யின் பழைய கம்ப்ரஸர்களை ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு தடவை மாற்றுவது நல்லது. அதற்கு மேலும் பழைய கம்ப்ரஸரை பயன்படுத்தாமல், புதிய கம்ப்ரஸர்களை அமைத்து செயல்திறனை அதிகரித்தால்… மின்செலவு குறையும்.

35. ஏ.சி-யின் மின் செலவை ஈஸியாகக் குறைத்திட வேண்டுமா..? எப்போதுமே… 25 டிகிரி சென்டிகிரேடு அளவிலேயே ஏ.சி-யின் ‘தெர்மோஸ்டாட்’ இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். அதற்கு கீழே குறையக் குறைய… மின்செலவு அதிகரிக்கும். போர்வைதான் இருக்கிறதே என்று 18 என்ற அளவிலேயே பயன்படுத்தினால்… பர்ஸ் கரையத்தான் செய்யும்!

36. ஏ.சி-யையும் ஃபேனையும் ஒருசேர பயன்படுத்துவது நல்லதல்ல. அது தூக்கத்தையே குலைக்கும். குறிப்பிட்ட நேரத்துக்கு ஏ.சி-யை ஓடவிட்ட பிறகு, அதை ஆஃப் செய்துவிட்டு, ஃபேனை ஓடவிடலாம். ஃபேன் குறைந்த மின்சாரத்தை எடுத்துக்கொள்ளும் என்பதால் மின் சிக்கனம் சாத்தியமாகிறது. அறை ஏற்கெனவே குளிர்ந்திருப்பதால், குளுமைக்கும் குறைவிருக்காது.

37. ஏ.சி. மெஷினானது, ஓர் அறையை 30 நிமிடங்களுக்குள் குளிர்ச்சியாக்கிவிடும். எனவே, நேரக்கட்டுப்பாட்டுக் கருவியை (Timer) பயன்படுத்துவதன் மூலம் மின்சாரத்தை சேமிக்கலாம்.

38. ஏ.சி. வசதி செய்யப்பட்ட அறைகளில் குளிர் வெளியே செல்லாதவாறு கதவுகள் இடைவெளியில்லாமல் மூடப்பட்டிருந்தால், அதுவும் மின் சிக்கனத்துக்கு வழி வகுக்கும்.

39. ஏ.சி-யின் ‘ஃபில்டர்’, மாதம்தோறும் தவறாமல் சுத்தம் செய்யப்பட வேண்டும். இல்லாவிட்டால், அதில் அழுக்குப் படிந்து காற்றோட்டத்தைக் குறைத்து, ஏ.சி. மெஷினை விரைவில் பழுதாக்கி விடும். சுத்தமான ‘ஃபில்டர்’, விரைவாக குளிர்வதற்கு உதவுவதன் மூலம், மின்சக்தி இழப்பினை தடுத்து, உங்கள் பர்ஸைக் காப்பாற்றும்.

40. ரிப்பேர் ஆகும் நிலையில் உள்ள ஏ.சி-யை இயக்கினால், அது குறைந்த அளவு குளிர்ச்சியைத்தான் தரும்; தொடர்ந்து இயக்கினால், உடனே பழுதாகி புதிய ஏ.சி. வாங்கும் செலவை உண்டாக்கும். ‘ஏதாவது கோளாறு…’ என்று தெரிந்தால், உடனடியாக அதை சரி செய்வதுதான் சாமர்த்தியம்.

41. ஏ.சி-க்கு அருகிலேயே போட்டோ காப்பி மெஷின் (ஜெராக்ஸ் மெஷின்), ஸ்டெபிலைஸர், யு.பி.எஸ். போன்ற வெப்பத்தை வெளியிடும் கருவிகளை வைக்காமல், தூரத்தில் வைப்பது இரு கருவிகளுக்கும் நல்லது.

42. மின் அடுப்பு, காபி தயாரிக்கும் கருவி, வாட்டர் கூலர், ஃப்ரிட்ஜ், அயர்ன்பாக்ஸ் போன்ற வெப்பத்தை வெளியிடும் மின்கருவிகளையும் ஏ.சி. அறைகளில் அறைகளில் பயன்படுத்தாமல் இருப்பது மின் சிக்கனத்துக்கான வழி.

43. ஏ.சி. அறையை விட்டுக் கிளம்பப் போகிறீர்கள் என்பதை முடிவு செய்துவிட்டால், அறையின் குளிர்நிலை கொஞ்ச நேரம் நீடிக்கும் என்பதை மனதில் கொண்டு, அரை மணி நேரத்துக்கு முன்பாகவே ஏ.சி-யை ஆஃப் செய்துவிடலாம்.

வாட்டர் ஹீட்டரில் மின்சாரம் வேஸ்டாக வேண்டாமே..!

குளிர் காலத்திலும், குளிர்ப் பிரதேசங்களிலும் வாட்டர் ஹீட்டர் அத்தியாவசிய மான பொருளாகிவிட்டது. இதற்கும் மின்சாரம் அதிக அளவு தேவைப் படுவதால், அங்கும் மின்சிக்கனம் அவசியம்தானே?! அதற்காக…

44. குளிப்பதற்காக ஹீட்டரை போட்டுவிட்டு, சமையல் செய்து விட்டு வந்து பார்த்தால்… தண்ணீர் அளவுக்கு அதிகமாக சூடாகியிருக்கும். பிறகு, குளிர்ந்த நீரை அதிகமாக கலந்து பயன்படுத்துவோம். இத னால் கணிசமான அளவு மின்சாரம் செலவாகும். அதைத் தடுக்க, குளிக்கும் சூட்டில் தண்ணீர் இருக்கும்போது ஹீட்டரை ஆஃப் செய்துவிட்டால் இரட்டை வேலையும் இல்லை… செலவும் கட்டுப்படுத்தப்படும்.

45. சூடுபடுத்தப்பட்ட நீர் செல்லும் குழாய்களுக்கு, குறிப்பாக குளிர்ந்த பகுதிகளில் செல்லும்போது அவற்றுக்கு தகுந்த வெப்ப பாதுகாப்பு உறை (Insulation sleaves) போட்டு விட்டால், வெப்பம் வேஸ்ட்டாவது தடுக்கப்படும்.

46. மின்சாரத்தால் இயக்கப்படும் வாட்டர் ஹீட்டருக்குப் பதிலாக, சூரியசக்தியால் இயக்கப்படும் வாட்டர் ஹீட்டரை பயன்படுத்தினால்… லாபம்! அது எப்படி..? இரண்டு ‘கிலோ வாட்’ சூரியசக்தி ஹீட்டரை வாங்கினால், அதற்கு விலையாக கொடுத்த தொகையை, மின்சக்தியை மிச்சப்படுத்துவதன் மூலம் நான்கு ஆண்டுகளில் பெற்றுவிடலாம். பராமரிக்கும் செலவும் மிகமிகக் குறைவுதான் எனும்போது இதை பற்றி யோசிக்கலாமே!

தவிக்க விடுகிறதா தண்ணீர் மோட்டார்..?!

வீடுகளிலும், விவசாயத்திலும் அதிகம் பயன்படுத்தப்படுவது தண்ணீரை பூமியிலிருந்து மேலே எடுத்துவரும் ‘வாட்டர் பம்புகள்’தான். இவற்றில் மின்சக்தியை சேமிப்பதும் சிக்கனப்படுத்துவதும் மிக முக்கியமானதல்லவா..! எப்படி..?

47. மோனோ பிளாக் (Mono block) பம்புகள் அதிக செயல் திறன் மிக்கவை என்பதால் முடிந்தவரை அவற்றைத் தேர்ந்தெடுத்து வாங்கிப் பயன்படுத்துவது நல்லது.

48. மோட்டாரிலிருந்து வாட்டர் டேங்க்குக்கு தண்ணீர் செல்லக்கூடிய குழாய்களில் கவனம் வையுங்கள். குறைந்த வளைவுகளுடன் கூடிய பி.வி.சி. பைப்புகள் என்றால், தண்ணீர் சுலபமாக மேலே ஏறும். மின்சாரமும் சிக்கனமாகும்.

49. தண்ணீர் எவ்வளவு தேவைப்படுமோ… அந்தளவுக்கு மோட்டரை இயக்கினால், மின்சாரம், தண்ணீர் எல்லாமே மிச்சமாகும். ஓவர்ஹெட் டேங்க்கிலிருந்து வழிந்தோடிக் கொண்டே இருந்தால், விரயமாவது தண்ணீர் மட்டுமல்ல… மின்சாரமும்தான்!

50. பம்ப் பொருத்தும்போது, தகுந்த நிபுணர்களின் பரிந்துரையின்படி நீரை உறிஞ்சும் இடத்திலும், வெளியேற்றும் இடத்திலும் பொருத்தப்படும் குழாயின் ‘விட்ட’ அளவுகளை (Suction and delivery pipe diametre) சரியாகத் தெரிந்து பொருத்தினால், அதன் செயல்திறன் அதிகமாகும்; மின்சாரச் செலவும் குறையும்.

கம்ப்யூட்டரும் கரன்ட்டும்!

கணினி இல்லாத தினசரி வாழ்க்கை, குறையான வாழ்க்கை என்றாகிவிட்டது. இதன் பயன்பாடுகள் எல்லா இடங்களிலும் நிறைந்திருப்பதால், கணினி இயக்கத்தில் மிச்சப்படுத்தப்படும் மின்சாரம் மிகப் பெரிய அளவிலானது. எப்படி மிச்சப்படுத்துவது..?

51. கணினியில் காலையிலிருந்து மாலை வரை வேலை செய்தாகிவிட்டது. அடுத்து ஒரு மணிநேரம் கழித்துத்தான் அதில் வேலை செய்யப் போகிறோம் என்றால், அந்த நேரத்தில் அதனை ஆஃப் செய்து வைத்திருப்பதால் மின்சாரம் மிச்சமாகும்.

52. ‘இல்லை இல்லை… நாங்கள் 24 மணி நேரமும் கம்ப்யூட்டரும் கையுமாகத்தான் இருப்போம்’ என்றால், அது புத்திசாலித்தனமல்ல. காரணம், ஒரு கணினியை இயக்கினால், அது ஒரு பெரிய சைஸ் ஃப்ரிட்ஜைவிட அதிக மின்சக்தியினை செலவழிக்கிறது என்பதை மறக்க வேண்டாம்.

53. ‘லஞ்ச் முடிச்சுட்டு வர்ற வரைக்கும் மானிட்டர் ‘ஆன்’ல இருக்கட்டும்…’ என்றால், வேண்டாம் ப்ளீஸ். ஏனெனில், கணினி பயன்படுத்துவதற்கு செலவிடப்படும் மின்சக்தியில் பாதி அளவினை மானிடர் செலவழிக்கும். எனவே, கீப் மானிடர் ஸ்லீப்.

54. தேவைப்படும்போது கீ-போர்டில் இருக்கும் ஸ்லீப் பட்டனை பயன்படுத்தினால், மானிட்டர் மற்றும் சி.பி.யு. இரண்டின் பயன்பாடும் நிறுத்தப்பட்டு, நாற்பது சதவிகிதம் மின்செலவை மிச்சப்படுத்த உதவி புரியும் என்கின்றனர் இதன் எக்ஸ்பர்ட்டுகள்.

55. ‘ஸ்க்ரீன் சேவர்’ எனப்படும் ஆப்ஷனை உபயோகிப்பது என்பது உசிதமல்ல. அது, கணினியின் திரைக்கு வெறும் அழகு கூட்டத்தான். சொல்லப் போனால், அதுவும்கூட மின்சார செலவை அதிகபடுத்தவே செய்யும்.

சிலிண்டரை சிக்கனமாகப் புழங்க..!

‘எப்படி பார்த்துப் பார்த்து செலவு செய்தாலும், கேஸ் 30 நாளைக்கு மேல வரமாட்டேங்குது…’ என்று புலம்புவர்கள், ‘இதையெல்லாம் செய்கிறீர்களா…’ என பரிசோதித்துப் பாருங்களேன்…

56. அடுப்பைப் பற்றவைக்கும் முன், சமைக்க வேண்டிய பொருட்களைத் நறுக்கி, கழுவி தயார் நிலையில் வைத்திருந்தால், சமையல் நேரமும் எரிபொருளும் இரு மடங்கு மிச்சமாகும்.

57. சீக்கிரமாகச் சமைக்க வேண்டுமா..? அதிக ஆழம் மற்றும் அதிக அகலம் இல்லாத பாத்திரங்களைப் பயன்படுத்திப் பாருங்கள். எப்போதையும்விட கூடுதல் நாட்கள் வரும் கேஸ் பயன்பாடு.

58. சாம்பார் கொதிக்க ஆரம்பித்ததும், அடுப்பை மிதமாக எரிய வைத்தால்… கேஸ் மிச்சமாகும். இந்த யுக்தி சாம்பாருக்கு மட்டுமல்ல… மொத்த சமையலுக்கும்தான்!

59. முடிந்தவரை எல்லாவற்றையும் பிரஷர் குக்கரிலேயே சமைத்துவிட்டால்… நேரம், கேஸ் இரண்டுமே மிச்சம்.

60. குறிப்பிட்ட நேரத்தில் மொத்தக் குடும்பமும் உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டால், உணவை அடிக்கடி சூடுபடுத்துவதை தவிர்த்து, எரிபொருளை சேமித்திடலாம்.

61. பெரிய பர்னரை பயன்படுத்துவதற்குப் பதிலாக, முடிந்தவரை சிறிய பர்னரைப் பயன்படுத்தினால்… சமையல் எரிவாயு அதிகளவு செலவாகாது.

62. கேஸ் ஸ்டவ்வில் உள்ள அனைத்து பாகங்களையும், குறிப்பாக பர்னரை சுத்தமாக வைத்திருந்தாலே, பாதியளவு எரிபொருள் மிச்சமாகும்.

63. ஃப்ரிட்ஜிலிருந்து காய்கறி, பால் போன்றவற்றை ஜில்லென்று எடுத்தால், அதை சாதாரண வெப்பநிலைக்கு கொண்டு வந்த பிறகு சமைப்பது எரிபொருளை பெருமளவில் மிச்சப்படுத்தும்.

உங்கள் வீட்டில் விறகு அடுப்பா..?

இயற்கை வளம், மரங்கள் இதெல்லாம் அழிவின் விளிம்பில் இருப்பதால், தென்னை மட்டை, தேங்காய் மூடி என வீணாகக் கூடிய பொருட்கள் தாராளமாக கிடைக்கும் இடத்தில் வசிப்பவர்கள், விறகு அடுப்புகளைப் பயன்படுத்தலாமே! ‘எங்களுக்கும் கேஸ் அடுப்புக்கும் ரொம்ப தூரம். நாங்க எப்பவுமே விறகு அடுப்புதான்’ என்பவர்கள் அந்த விறகையும் எப்படி சிக்கனமாக செலவழிக்கலாம்..?

64. நன்றாக காய வைத்த விறகுகளையே பயன்படுத்துங்கள். காரணம், காயாத விறகுகள் அதிக புகையை வெளிவிடும்; குறைவான வெப்பத்தையே தரும்; நேரமும் வீணாகும்.

65. எரியும் தன்மை இல்லாத மரங்களை விறகாகப் பயன்படுத்துவது நல்லதல்ல. அதிலும், அவற்றின் மேல் மண்ணெண்ணெயை ஊற்றி எரிய வைப்பது தவறு. இதனால், மண்ணெண்ணெய், புகை மண்டலமாக வெளிவரும். இது, உணவின் சுவையைக் கெடுத்து, உண்பவர், சமைப்பவர் இருவரின் ஆரோக்கியத்தையும் கெடுக்கும்.

66. அடுப்பின் புகை வீட்டுக்குள் பரவாதவாறு சரியான புகைப்போக்கி அமைப்பது, வீட்டில் உள்ளவர்களின் உடல்நலத்துக்கு நல்லதல்லவா..!

67. சமைக்கும்போது தேவைக்கு அதிகமாக தீயை எரிக்காதீர்கள். தீ அதிகமாக இருந்தால் உணவு விரைவில் வெப்பமடையும் என்பது உண்மையல்ல. உண்மையில் தீ சமமாகப் பரவி சீராக எரிந்தால்தான் உணவு விரைவில் வெப்பமடையும். அதனால் எரிபொருட்களை சிக்கனமாக உபயோகிப்பதே விரைவில் சமைக்க முடியும்.

68. காட்டாமணி செடி, ஊமத்தம் செடி, சாண வரட்டி போன்றவை சீக்கிரம் எரிந்தாலும், அதிக புகையை வெளியிட்டு உடல் நிலையை பாதிக்கும் என்பதால் இவற்றைத் தவிர்ப்பது நலம்.

69. காட்டாமணி, ஊமத்தம் போன்ற சில விஷ தாவரங்களின் புகை சமைப்பவருக்கும் அதை உண்பவருக்கும் நுரையீரல் புற்றுநோய் போன்ற நோய்களையும் தருபவை. தாவரத்தின் தன்மை தெரியாமல் பயன்படுத்த வேண்டாம்.

70. தவறான எரிபொருட்களை விறகுடன் சேர்த்து எரிப்பதை அறிய முடியாதவர்கள், குளிப்பதற்கான வெந்நீருக்கு மட்டும் விறகடுப்பு பயன்படுத்தலாம்.

மண்ணெண்ணெய் அடுப்பு மனம் போல் எரிய..!

‘கெரோசின்’ எனப்படும் மண்ணெண்ணெய் அடுப்பைப் பயன்படுத்தி சமைப்பவர்கள், எரிபொருளை எப்படி மிச்சப்படுத்துவது..?

71. கெரோசின் பம்ப் ஸ்டவ்களை உபயோகப்படுத்துவோர், அதன் பர்னரை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். முக்கியமாக மண்ணெண்ணெய் வாயுவாக வெளியேறும் துளையை சுத்தமாக பராமரிக்க வேண்டும்.

72. தீயின் நிறம் மஞ்சளாகவோ, பச்சையாகவோ மாறினால்… அடைப்பு இருக்கிறது என்று அர்த்தம். உடனே பர்னரைத் தூய்மை செய்யுங்கள். பர்னர் பழுதானதாகத் தெரியவந்தால் மாற்றி விடுங்கள்.

73. ஸ்டவ்வைப் பற்ற வைக்கும்போது பர்னரை சூடேற்ற குறைவான மண்ணெண்ணெயை எரித்தால் போதும். பர்னர் நிறைய வழியவிட வேண்டாம்.

74. எரிதுளை அடைப்பின்றி இருந்தால்தான் எல்லா பக்கங்களி லும் தீ சம அளவில் பரவும். இதனால் சமையல் நேரம் குறையும். எரிபொருளும் மிச்சப்படும்.

75. மண்ணெண்ணெய் ஊற்றும் டேங்க்கின் உள்ளே தானாகவே துரு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இது பர்னரை அடைக்கக் கூடும். எனவே 3 மாதங்களுக்கு ஒரு முறை டேங்க்கை சுத்தமாகக் கழுவவேண்டும். அதிலிருக்கும் மண்ணெண்ணெயை வெளியில் எடுத்து, வடிகட்டி பயன்படுத்தவேண்டும்.

76. சமைத்து முடித்த பின்பு வெப்பமான இடங்களின் அருகிலோ, எரியும் வேறு அடுப்பின் அருகிலோ கெரோசின் ஸ்டவ்களை வைக்கக் கூடாது. அந்த வெப்பம் டேங்கில் உள்ள மண்ணெண்ணெயைத் தானே எரிதுளை வழியாக வெளியே கசியுமாறு செய்யும். இது தீ விபத்தில்கூட முடியலாம்.

77. வெப்பமான இடத்தில்தான் அடுப்பை வைத்தாக வேண்டும் என்ற சூழலில், டேங்கில் உள்ள காற்று வெளியேறும் திருகாணியைக் கழற்றி வைக்கலாம். இதனால் மண்ணெண்ணெய் கசிவது தடுக்கப்படும்.

78. எப்போதாவது மட்டுமே பயன்படுத்தும் ஸ்டவ்களை மண்ணெண்ணெயுடனேயே வைப்பது சரியல்ல. அது தானாகவே ஆவியாகி வீணாகும் என்பதோடு, அந்த ஸ்டவ்வும் விரைவில் பழுதாகும்.

சாண எரிவாயு… சபாஷ்!

‘சாண எரிவாயு’ – இன்று பரவலாக, மாற்று எரிபொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது இது. காற்றுப் புகாத ஒரு தொட்டியை வடிவமைத்து, அதில் சாணத்தை கொட்ட வேண்டும். இந்தச் சாணக் கழிவுகள் நொதித்து, அதிலிருந்து உருவாகும் மீத்தேன் வாயுவை, குழாய் மூலமாக அடுப்பில் இணைத்துப் பயன்படுத்தலாம். இதன் மூலம் சமைக்கலாம்; விளக்கு எரிக்கலாம்; ஜெனரேட்டரையும் இயக்கலாம். அதை எப்படி பயன்படுத்தலாம்… எப்படி மிச்சப்படுத்தலாம்..?

79. கிராமத்தில் இருப்பவர்களுக்கு சாணம் எளிதாகக் கிடைக்கும். நகரத்தில் இருப்பவர்கள் சாணத்துக்கு எங்கு போவது…? இதற்கும் ஒரு தீர்வு வந்துவிட்டது. வீட்டுச் சமையலறையில் கிடைக்கும் கழிவுகளைக் கொண்டே எரிவாயுவை தயாரிக்கலாம் (மேல் விவரங்களுக்கு கன்னியாகுமரி, விவேகானந்தா கேந்திராவின் இயற்கை வள அபிவிருத்தி மையத்தை அணுகலாம்).

80. மொட்டை மாடி, வரண்டா, பால்கனி என கிடைக்கும் இடத்தில் தொட்டியை வைத்து, பழைய சாதம், காய்கறிக் கழிவுகள் என அனைத்தையும் அதில் போடலாம். தினமும் 5 கிலோ கழிவு இருந்தால், நான்கு பேர் உள்ள குடும்பத்துக்கு தினமும் தேவையான சமையல் எரிவாயு கிடைத்துவிடும்.

81. அதிக புளிப்பு உள்ள பொருட்களையும், உப்பையும் இந்தத் தொட்டிக்குள் போடக் கூடாது. அது மீத்தேன் வாயு உற்பத்தியைப் பாதிக்கும்.

82. எல்.பி.ஜி. சிலிண்டர்கூட சில சமயங்களில் வெடித்துவிடும். ஆனால், காய்கறிக் கழிவு எரிவாயு தொட்டி மிகமிக பாதுகாப்பானது என்பதுதான் இதன் சிறப்பம்சம். தைரியமாகக் களத்தில் இறங்கலாம்.

83. வீடுகளில் காய்கறிக் கழிவு எரிவாயு தொட்டி அமைக்க, அடுப்புடன் சேர்த்து மொத்தமாக 20 ஆயிரம் ரூபாய் செலவாகும். ஒரே ஒரு முறை முதலீடு செய்து விட்டால், வாழ்நாள் முழுக்க பயனளிக்கும்.

84. சாண, காய்கறிக் கழிவு எரிவாயு பயன்படுத்துபவர்களுக்கு கேஸ் தட்டுப்பாடு, அதன் விலையேற்றம் பற்றிய கவலையில்லை. இதனால், சுற்றுச்சூழலுக்கும் பாதுகாப்பு. கழிவு மறுசுழற்சியும் எளிதாக நடக்கும்.

85. எரிவாயு கிடைத்த பின், இதிலிருந்து வெளியேறும் கழிவுகளை வீட்டுத் தோட்டத்துக்கும் பூச்செடிகளுக்கும் உரமாகப் பயன்படுத்தலாம். ஒரே கல்லில், இரண்டு மாங்காய். வாய்ப்புள்ளவர்கள், இத்தகைய மாற்று எரிசக்தி குறித்தும் யோசிக்கலாமே!

வாகன எரிபொருள் சிக்கனம் தெரியுமா உங்களுக்கு..?

பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களின் விலை, வீட்டு பட்ஜெட்டை மட்டுமல்ல நாட்டின் பட்ஜெட்டையும் பாதிக்கிறது என்பதை அவ்வப்போது உணர்ந்து கொண்டுதான் இருக்கிறோம். அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த எரிபொருட்களை மிச்சப்படுத்துவது, இந்த கணத்தில் மிக அவசியமானது; அவசரமானது!

86. நீங்கள் கார் ஓட்டினாலும், டூ-வீலர் ஓட்டினாலும்… டயரில் உள்ள காற்றழுத்தம் எப்படி இருக்கிறது என்பதை தகுந்த இடைவெளியில் செக் பண்ணுங்கள். காரணம், டயரின் காற்றழுத்தத்தை மிகச்சரியான அளவில் பராமரித் தாலே பெருமளவில் எரிபொருளை சேமிக்கலாம்.

87. டயர்களில் காற்றின் அழுத்தம், குறிப்பிட்ட அளவிலிருந்து 25% குறைவாக இருந்தால், எரிபொருள் 5-10% வேஸ்டாகும். டயரின் ஆயுள் காலமும் 25% குறையும். முறையாகப் பராமரித்தால், இதைத் தவிர்க்கலாம்!

88. கிளட்சை அழுத்திக் கொண்டே வண்டியை ஓட்டினால், அது உங்கள் ஆசை வண்டியின் தரத்தையும் ஆயுள் காலத்தையும் பாதிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அடிக்கடி புது கிளட்ச் பிளேட் மாற்ற வேண்டி வரும் என்பதால், ஃபாலோ த ரூல்ஸ்.

89. வேகத்துக்குத் தகுந்த கியரில் வாகனத்தைச் செலுத்தா விட்டால், எரிபொருள் 20% அதிகமாக செலவாகும். இதைக் குறைப்பது உங்கள் கைகளில்தானே இருக்கிறது!

90. வாகனங்களில் ‘பைமெட்டாலிக் ஸ்பார்க் பிளக்’கைப் பயன்படுத்துவதன் மூலம் 15% எரி பொருளை சேமிக்கலாம். மேலும், அது வெளியிடும் புகையின் அளவும் குறையும் என்கிறார்கள் நிபுணர்கள். உங்கள் செய்கையால், எரிபொருளோடு சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும்.

91. தேவையற்ற சுமைகள், எரிபொருள் உபயோகத்தை அதிகப் படுத்தும். நகரத்தில் வாகனத்தை ஒட்டும்போது 50 கிலோ வரையி லான எடை குறைப்பே… 2 சதவிகித எரிபொருளை மிச்சப் படுத்தும்.

92. ஏ.சி. குளுமையைத் தந்து, உங்கள் பயணத்தை இனிதாக்கும். அதேசமயம், சாதாரண வாகனங் களை விட, ஏ.சி. வாகனங்கள் 20 சதவிகித அளவுக்கு எரிபொருள் செலவை அதிகப்படுத்தும். எனவே, தேவையறிந்து பயன்படுத்தினால், கணிசமான அளவுக்கு எரிபொருளை மிச்சப்படுத்தலாம்.

93. உங்கள் வண்டி, உங்கள் குடும்ப உறுப்பினர் போல அல்லவா..? அதற்கும் சரியான கவனிப்பு வேண்டும். தகுந்த இடைவெளியில், ஆத்தரைஸ்டு சர்வீஸ் சென்டரில் வண்டியை சர்வீஸ் செய்யுங்கள். அது, எரிபொருளைத் தானாக மிச்சப்படுத்தும்.

94. எரிபொருளுடன் பயன் படுத்தப்படும் ஆயில் தரமானதாகவும், பிராண்டட்டாகவும் இருப்பது… வண்டியை நீண்ட நாள், நல்ல கண்டிஷனில் வைத்திருப்பதோடு எரிபொருளை யும் மிச்சப்படுத்தும்.

95. உங்கள் திறமையையும் ஸ்டைலையும் காண்பிக்க, வண்டியை அதிக வேகத்தில் ஓட்டினால், எரிபொருள் அதிகமாக வீணாகும். மிதவேகம், மிக நன்று. அநாவசியமாக அடிக்கடி பிரேக் போடுவதை தவிர்ப்பது வண்டிக்கு, எரிபொருளுக்கு நல்லது.

96. சிக்னலிலோ, வேறு எங்காவதோ இரண்டு நிமிடத்துக்கு மேல் வண்டி நிற்க வேண்டி வந்தால், ஆஃப் செய்து விடுவது அதிபுத்திசாலித்தனம்.

97. வண்டியிலுள்ள எரிபொருள் டேங்க், துரு பிடிக்காமல் சுத்தமாக பராமரிக்கப்பட்டால், எரிபொருள் ஈஸியாக மிச்சமாகும்.

98. எந்த எரிபொருளைப் பயன்படுத்தினாலும், வண்டியை அதிக வேகத்தில் ஓட்டுவது இனிமையான பயணத்துக்கு வழிவகுக்காது.

99. வண்டியின் ஏர் ஃபில்டர் களை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். தூசுகள் நிறைந்த ஏர் ஃபில்டரால் வண்டியின் இயக்கம் பாதிக்கப்படும், அதனால், எரிபொருள் வீணாகும். சுத்தமாக இருப்பது மனிதர்களுக்கும் மட்டுமல்ல, வாகனத்துக்கும் ஆரோக்கிய அவசியம்!

100. சொந்த வாகனத்தில் ஒரு பயணத்தைத் தொடங்கும் முன்பாக, இது அதி அவசியமானதா… வேறு சில வேலைகளையும் சேர்த்து முடிக்க முடியுமா என்றெல்லாம் யோசித்துத் தொடங்குங்கள். சொந்த வாகனத்தில் போகும் அளவுக்கு அவசியமானதல்ல என்றால், பஸ், ரயில் என்று பொதுவாகனங்களைப் பயன்படுத்துங்கள்.

இதைக் கவனிங்க முதல்ல..

ஆசையாக வாங்கி ஓட்டிக் கொண்டிருக்கும் காரில், சொட்டுச் சொட்டாக பெட்ரோல் கசிவதைப் பார்ப்போம். ‘நாளைக்கு சரி செய்து விடலாம்… நாளைக்கு சரி செய்து விடலாம்’ என ஒரு மாதமேகூட ஓடிவிடும். இதனால், வீணாவது பெட்ரோல் மட்டுமல்ல… பணமும்தான்!

1 நிமிடத்துக்கு, வீணாகும்
பெட்ரோல் 2 மில்லி
அப்படியானால்,
ஒரு நாளைக்கு? 2.880 லிட்டர்
ஒரு மாதத்துக்கு… 86.4 லிட்டர்
1 லிட்டர் பெட்ரோலின் விலை ரூ. 51.00
எனில், 86.4 லிட்டருக்கு ரூ. 4406.40

இதைக் கவனிங்க முதல்ல..

ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு வீடு மாற்றி வரும்போது, ஃபேனுக்கான ரெகுலேட்டரை மறந்து விட்டிருப்போம். புது வீடு வந்ததும் அவசரத்தில் ரெகுலேட்டரே இல்லாமல் ஃபேன் ஓடிக்கொண்டிருக்கும். இப்படி ஓடுவதால் எவ்வளவு காசு வீண் தெரியுமோ..?!

ரெகுலேட்டர் இல்லாமல் நாள்

முழுக்க ஒரு ஃபேன் ஓடினால்
வீணாகும் கரன்ட் 1 யூனிட்
மாதத்துக்கு 30 யூனிட்
1 யூனிட் 1 ரூபாய் என்று வைத்துக் கொண்டாலே… மாதம் 30 ரூபாய் வீண்.

இதைக் கவனிங்க முதல்ல..

ஒரு குண்டு பல்பு மாதம் முழுக்க
எரிவதற்கு ஆகும் கரன்ட் செலவு 40 யூனிட்
சி.எஃப்.எல் பல்ப் இதேபோல
எரிந்தால் 10 யூனிட்
மாதம் முழுக்க மிச்சமாகும் தொகை
(ஒரு யூனிட் கரன்ட் 1 ரூபாய் என வைத்துக் கொண்டால்)… 30 ரூபாய்.

இதைக் கவனிங்க முதல்ல..

அயர்ன் பாக்ஸ் பயன்படுத்தும்போது துணிக்கு ஏற்ற வெப்பத்தைக் கொடுக்க வேண்டும். இதற்காக அயன்பாக்ஸில் உள்ள பட்டனை பயன்படுத்தத் தவறினால்… இழப்பு உங்களுக்குத்தான். உதாரணமாக நைலக்ஸ் துணிக்கான வெப்பத்தைப் பயன்படுத்தி காட்டன் டிரெஸ்ஸை அயர்ன் செய்தால், ஒருமுறைக்கு இருமுறையாக தேய்க்க வேண்டியிருக்கும்.
ஒரு நாளைக்கு 5 செட்
டிரெஸ்ஸை இப்படி தேய்த்தால்
வீணாகும் கரன்ட் 1/2 யூனிட்
மாதத்துக்கு 15 யுனிட்
மாதம் முழுக்க வீணாகும் தொகை 15 ரூபாய்.

எரிபொருள் சிக்கனம் உங்கள் பர்ஸூக்கு மட்டும் பாதுகாப்பானது அல்ல, நாட்டின் கஜானாவுக்கும்தான். இதில் சிக்கனம்… தேவை இக்கணம்!

No comments:

Post a Comment