Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, May 16, 2012

சுய தொழில்கள்-29 பிளாஸ்டிக் பூக்கள்!

சுய தொழில்கள்-29
பிழைப்புக்கு வழி சொன்ன பிளாஸ்டிக் பூக்கள்!
காலேஜ் படிப்பு படிச்சவங்களே வேலைக்கு அலையற இந்தக் காலத்துல, பத்தாவது படிச்ச நமக்கெல்லாம் என்ன பொழப்பு கிடைக்கப் போகுதுனு திக்குத் தெரியாம இருந்தவதான் நானும். இப்போ... இந்த பிளாஸ்டிக் பூ மாலை பிஸினஸால மாசம் 20 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கற வெற்றிகரமான தொழில் முனைவோர் ஆகியிருக்கேன்ங்கிறது, ஆச்சர்யம்... ஆனாலும், உண்மை!

கண்களைப் பறிக்கும் அழகழகான வண்ண பிளாஸ்டிக் பூ மாலைகளைக் கோத்தபடியே நம்மிடம் பேசும் சென்னை, பழவந்தாங்கல், சங்கீதாவுக்கு முகமெல்லாம் பெருமிதம்! பொதுவிதிப்படி, கஷ்டங்கள்தான் சங்கீதாவின் தொழில் முயற்சிகளுக்கும் தூண்டுகோல்.
''எங்கப்பா ஆட்டோ டிரைவர். ரெண்டு பொண்ணு, ஒரு பையன்னு மூணு புள்ளைங்க எங்க வீட்டுல. நான் சின்ன வயசுல நல்லா படிப்பேன், துறுதுறுனு இருப்பேன். ஆனா, குடும்ப வறுமைக்கு நடுவுல என் திறமை எல்லாம் புதைஞ்சு போச்சு. பத்தாவதோட படிப்பும் நின்னு போச்சு. திடீர்னு அப்பா இறந்துட, நாங்க அநாதரவாயிட்டோம். துக்கத்துக்கு வந்திருந்தவங்க எல்லாம், 'மூணு புள்ளைங்கள எப்படிக் கரையேத்தப் போறே?’னு அம்மாவை கேட்க... அவங்க பயந்தே போனாங்க. ஆனாலும், தைரியத்தை இழக்காம... கூலிவேலை செய்து குடும்பத்தைக் காப்பாத்தின அம்மா, மூத்த பொண்ணான எனக்கு 18 வயசுலயே கல்யாணத்தை முடிச்சு... ஒரு கடமையை நிறைவேத்திட்ட நிம்மதியை அடைஞ்சாங்க.
என் கணவர், பெயின்ட்டிங் கான்ட்ராக்டரா இருந்தாரு. ஒரு பொண்ணு, ஒரு பையன்னு ரெண்டு குழந்தைகள் பிறந்தாங்க. வறுமையும் வாழ்க்கையுமா நாட்கள் ஓடிட்டு இருந்துச்சு. 'பிறந்த வீடு, புகுந்த வீடுனு கஷ்டங்களோட போராடியே வாழ்றது பழகிடுச்சு நமக்கு. ஆனா, நம்ம குழந்தைகளும் அந்தப் போராட்டத்தைத் தொடரணுமா?'னு எனக்கு ரொம்ப வேதனையா இருக்கும். 'நாலு பேரை போல நல்லா வந்துட மாட்டோமா?'னு மனசு கெடந்து தவிக்கும். அப்படி வழி தெரியாம உழன்றுட்டு இருந்தப்போதான் என் அம்மாவே எனக்கு திசைகாட்டி ஆனாங்க!''
- தன் வாழ்க்கையில் நிகழ்ந்த அந்த திருப்பத்தைத் தொடர்ந்தார் சங்கீதா...
''எங்கம்மா உறுப்பினரா இருந்த மகளிர் சுயஉதவிக் குழுவுல பிளாஸ்டிக் பூ மாலை செய்றதுக்கான ஒரு நாள் பயிற்சி கொடுத்தாங்களாம். அதைக் கத்துக்கிட்டு வந்த அம்மா, 'எனக்கு இதைத் தொழிலா செய்ற வயசும், ஆர்வமும் இல்லை. ஆனா, உனக்குதான் கை வேலைப் பாடுகள்ல எல்லாம் ஆர்வம் அதிகமாச்சே! நீ இந்த பிளாஸ்டிக் பூமாலையைச் செய்யக் கத்துக்கிட்டா... நிச்சயமா கையில நாலு காசு பார்க்கலாம்’னு அதைச் சொல்லிக் கொடுத்தாங்க. ரெண்டு நாள்லயே லாகவமா கத்துக்கிட்டதோட, அதுல என்னோட கற்பனைத் திறனையும் கலந்து, விதவிதமான மாலைகள் செய்ய ஆரம்பிச்சேன்'' என்ற சங்கீதா, இந்தத் தொழிலின் அடிப்படைகளைப் பகிர்ந்தார்.
''மாலை செய்றதுக்கான பிளாஸ்டிக் பூக்களை... ஃபேன்ஸி ஸ்டோர், பிளாஸ்டிக் பொருட்களுக்கான ஹோல்சேல் கடைகள்னு பல இடத்துலயும் வாங்கலாம். ஒரு கிலோ பிளாஸ்டிக் பூவை, அதன் தரம் மற்றும் டிசைனைப் பொறுத்து, 60 ரூபாயிலிருந்து 350 ரூபாய் வரையிலான விலையில் வாங்கலாம். அதுல 25 சின்ன மாலைகள் அல்லது 10 பெரிய மாலைகள் செஞ்சுடலாம். ஒரு மாலை செய்ய குறைந்தபட்சம் அரை மணி நேரம் ஆகும். சின்ன மாலை ஒண்ணு 100 ரூபாயில இருந்து 500 ரூபாய் வரைக்கும் விலை போகும். அதுவே நிலைக் கதவு, வரவேற்பறைனு தொங்க விடுற பெரிய மாலைனா 2,000 - 2,500 ரூபாய் வரைக்கும் விற்கலாம். இப்போ... லாபத்தை உங்களால கணக்குப் போட முடியுதா?
இதுக்கான மார்க்கெட்டிங்கும் சுலபமானதுதான். தெரு முக்கு ஃபேன்ஸி ஸ்டோர்கள்ல இருந்து... பெரிய டிபார்ட்மென்டல் ஸ்டோர்கள் வரை ஆர்டர் வாங்கலாம். ஹோட்டல்கள், ஆபீஸ்கள், திருமண மண்டபங்கள்னு பெரிய கட்டடங்கள் திறப்பு விழாவில் இருந்து கிரகப்பிரவேசங்கள் வரை களத்துல இறங்கியும் ஆர்டர் வாங்கலாம். நவராத்திரி, தீபாவளி, பொங்கல்னு விசேஷ தினங்களுக்கு முக்கியமான இடங்கள்ல நாமளே நேரடியா ஸ்டால் போடலாம். வாடிக்கையாளர்கள் வட்டம் விரிஞ்சதும்... சொந்தமா கடையேகூட திறக்கலாம்'' என்ற சங்கீதா, இதில் தன் அனுபவத்தைத் தொடர்ந்தார்.
''இந்தத் தொழிலை ஆரம்பிச் சப்போ என் குழந்தைக்கு எட்டு மாசம். பச்சைப் புள்ளையப் பார்த்துக் கிற சிரமங்களோடயும் இந்தத் தொழில்ல முதல் மாசமே 5,000 ரூபாய் லாபம் பார்த்தேன். அடுத் தடுத்த மாதங்கள்லேயும் தொழிலை உற்சாகத் தோடும், உத்வேகத்தோடும் தொடர்ந்தேன். என் பேச்சுத் திறமையால வாடிக்கையாளர்கள் வட்டம் சீக்கிரமே விரிஞ்சது. தொழிலை ஆரம்பிச்ச நாலு வருஷத்துல இப்போ மாசம் 20 ஆயிரம் ரூபாய் லாபம் பார்க்கிற இந்தத் தொழிலுக்கு முதலாளி ஆகியிருக்கேன். என் மாமியார் இந்தத் தொழில்ல எனக்கு உதவியா இருக்காங்க. வீட்டுக்கு வாடகைகூட கொடுக்க முடியாம எத்தனையோ முறை புழுங்கித் தவிச்ச நான், இன்னிக்கு சொந்த வீட்டுக்கு வந்தாச்சு. என் கணவர் இப்போ ரியல் எஸ்டேட் பிஸினஸ் பார்த்துட்டு இருக்கார். என் குழந்தைகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையைக் கொடுத்திருக்கேன். ஒரு துயரமான நிலையில இருந்து வந்த நானே வாழ்க்கையில ஜெயிச்சுருக்கும்போது, மத்த எல்லாருக்கும் இது சாதாரணம்தானே?!''
Engr.Sulthan

No comments:

Post a Comment