Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, October 19, 2013

தகவல்களை கொட்டித்தரப்போகுது நவீன நிழற்குடைகள்


சென்னையில் நிழற்குடை உள்ள பஸ் நிறுத்தங்கள் ரொம்பவே குறைவு. எங்கு அதிகமான பயணிகள் வருகிறார்களோ அங்கு நிழற்குடை இருக்காது. ஆளே இல்லாத நிறுத்தங்களில் அல்லது பஸ்சே நிற்காத நிறுத்தங்களில் பளபளவென நிழற்குடை அமைத்திருப்பார்கள். இதற்கு காரணம் வியாபார நோக்கத்துக்காக மட்டுமே நிழற்குடைகள் அமைக்கப்படுவதுதான்.



தற்போதுள்ள நவீன நிழற்குடைகளில் பிரபல நிறுவனங்களின் விளம்பரங்கள் மட்டுமே ஜொலிக்கிறது. ஸ்பான்சர் செய்யும் நிறுவனம் எந்த நிறுத்தத்தில் தனது விளம்பரத்தை பிரதிபலிக்க விரும்புகிறதோ அங்கு மட்டுமே பளபளவென்ற நிழற்குடைகள் அமைக்கப்படுகின்றன. விலை போகாத நிறுத்தங்களில் மக்கள் வெயிலிலும், மழையிலும் அவதிப்பட்டபடிதான் பஸ்சுக்காக காத்திருக்க வேண்டிய அவல நிலை உள்ளது.

இந்த நிலைமை தலைகீழாக மாறப்போகிறது. முழுக்க முழுக்க மக்கள் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு, நவீன நிழற்குடைகளை அமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக முதற்கட்டமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் 108 நிழற்குடைகள் அமைக்கப்பட உள்ளன. இந்த நிழற்குடைகள் வெறும் நிழல் தரும் குடைகளாக மட்டுமே இருக்காது. விளம்பரங்கள் இருக்காது. அதையும் தாண்டி, மக்களுக்கு தேவையான தகவல்களை கொட்டித்தரும் வகையில் அமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

நவீன நிழற்குடைகளில் பஸ்களின் நேரப்பட்டியல், அந்த பஸ் நிறுத்தத்தில் இருந்து சென்னையின் முக்கிய பகுதிகளுக்கு 2, 3 பஸ் மாறி எப்படி செல்வது, அருகில் என்ன ரயில் நிலையம் இருக்கிறது போன்ற தகவல்கள் இடம் பெற உள்ளன. மேலும், பஸ் நிறுத்தம் உள்ள ஏரியாவின் வரைபடமும் இடம் பெறப்போகிறது. இந்த வரைபடத்தில் எங்கெங்கு பள்ளிகள், மருத்துவமனைகள், கோயில், சர்ச், மசூதி, அரசு அலுவலங்கள் அமைத்திருக்கின்றன என்ற தகவல்கள் இருக்கும்.

பஸ் நிறுத்தம் உள்ள ஏரியாவின் வரலாற்று தகவல்களையும் இடம் பெறச் செய்ய உள்ளனர். இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘சமீபத்தில் சென்னையின் அனைத்து பகுதிகளிலும் அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த நிழற்குடைகளை அகற்றியுள்ளோம். அதனால், பல இடங்களில் நிழற்குடை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. விரைவில் அந்த இடங்களில் நவீன நிழற்குடைகள் அமைக்கப்படும்.

அதே போல பழுதடைந்த நிலையில் உள்ள நிழற்குடைகளும் மாற்றப்படும். ஏரியா வரைபடம், பஸ் நேரம் உள்ளிட்ட அனைத்து தகவல்களுடன் நவீன நிழற்குடைகள் விரைவில் அமைக்கப்பட்டு விடும். இதில், ஆட்டோ கட்டணங்களையும் சேர்க்கலாம் என ஆலோசித்து வருகிறோம். முதற்கட்டமாக எந்தெந்த இடத்தில் நவீன நிழற்குடை அமைக்கலாம் என்பது தொடர்பான சர்வே எடுக்கப்பட்டு வருகிறது. அந்த பணி முடிந்ததும், நவீன நிழற்குடைகள் அமைய உள்ள நிறுத்தங்கள் குறித்து அறிவிக்கப்படும்’ என்றனர்.

No comments:

Post a Comment