Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, August 15, 2015

உயர்ந்த உறவுகள்


almighty-arrahim.blogspotcom
உறவுகளை பற்றி அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அறிவுரைகள்
அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான செயல்: -


அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களின் இல்லத்தைச் சுட்டிக் காட்டியவாறு அபூ அம்ர் அஷ்ஷைபானீ (ரஹ்), ‘(இதோ!) இந்த வீட்டுக்காரர் (பின்வருமாறு) எனக்குத் தெரிவித்தார்கள்’ என்று கூறினார்கள்: நான் நபி (ஸல்) அவர்களிடம் ‘கண்ணியமும் மகத்துவமும் வாய்ந்த அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான செயல் (அமல்) எது?’ என்று கேட்டேன். அவர்கள் தொழுகையை அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றுவது’ என்றார்கள். ‘பிறகு எது?’ என்று கேட்டேன். ‘தாய் தந்தையருக்கு நன்மை செய்வது’ என்றார்கள். (நான் தொடர்ந்து) ‘பிறகு எது?’ என்றேன். அவர்கள், ‘இறைவழியில் அறப்போரிடுதல்’ என்று பதிலளித்தார்கள். இவற்றை (மட்டுமே) என்னிடம் நபி (ஸல்) அவர்கள் தெரிவித்தார்கள். இன்னும் அதிகமாக (இது குறித்து) நான் அவர்களிடம் கேட்டிருந்தால் எனக்கு இன்னும் நிறைய பதிலளித்திருப்பார்கள். வலீத் இப்னு அய்ஸார் (ரஹ்),புகாரி.5970

தாயின் மகிமை: -

இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் அருகதையானவர் யார்?’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘உன் தாய்’ என்றார்கள். அவர், ‘பிறகு யார்?’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘உன் தாய்’ என்றார்கள். அவர், ‘பிறகு யார்?’ என்றார். ‘உன் தாய்’ என்றார்கள். அவர், ‘பிறகு யார்?’ என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘பிறகு, உன் தந்தை’என்றார்கள்.அபூ ஹுரைரா (ரலி),புகாரி.5971

தம் தாய் தந்தையர் ஏசப்பட தாமே காரணம்?
‘ஒருவர் தம் தாய் தந்தையரை சபிப்பது பெரும் பாவங்களில் உள்ளதாகும்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ‘இறைத்தூதர் அவர்களே! ஒருவர் தம் தாய் தந்தையரை எவ்வாறு சபிப்பார்?’ என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், ‘ஒருவர் இன்னொருவரின் தந்தையை ஏசுவார். உடனே (பதிலுக்கு) அவர் இவருடைய தந்தையையும் தாயையும் ஏசுவார் (ஆக, தம் தாய் தந்தையர் ஏசப்பட இவரே காரணமாகிறார்)’ என்றார்கள்.அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) புகாரி.5973

அல்லாஹ் தடை செய்ததும் வெறுப்பதும்!

“அன்னையரைப் புண்படுத்தவது, (அடுத்தவருக்குத் தரவேண்டியதைத்) தர மறுப்பது, (அடுத்தவருக்கு உரியதைத்) தருமாறு கேட்பது, பெண் சிசுக்களை உயிருடன் புதைப்பது ஆகியவற்றை அல்லாஹ் தடை செய்துள்ளான். மேலும், (தேவையின்றி) அதிகமாகப் பேசுவது, அதிகமாகக் (கேள்வி, அல்லது யாசகம்) கேட்பது, செல்வத்தை வீணாக்குவது ஆகியவற்றை அல்லாஹ் வெறுத்துள்ளான்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். முஃகீரா இப்னு ஷுஅபா (ரலி), புகாரி.5975

பெரும் பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்கள்: -

(ஒருமுறை) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘பெரும் பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?’ என்று மூன்று முறை கேட்டார்கள். நாங்கள், ‘ஆம், இறைத்தூதர் அவர்களே! (அறிவியுங்கள்)’ என்று கூறினோம். நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வுக்கு இணை வைப்பதும், பெற்றோரைப் புண்படுத்துவதும்’ என்று சொல்லிவிட்டு சாய்ந்து கொண்டிருந்த அவர்கள் எழுந்து அமர்ந்து, ‘அறிந்து கொள்ளுங்கள்: பொய் பேசுவதும் பொய் சாட்சியமும் (மிகப் பெரும் பாவம்தான்); பொய் பேசுவதும் பொய் சாட்சியமும் (மிகப் பெரும் பாவம்தான்)’ என்று கூறினார்கள். இதை அவர்கள் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டேயிருந்தார்கள். (இதைக் கண்ட) நான் ‘அவர்கள் நிறுத்திக்கொள்ளக் கூடாதா?’ என்றேன். அபூ பக்ரா நுஃபைஉ இப்னு ஹாரிஸ் (ரலி), புகாரி.5976

இணைவைக்கும் பெற்றோரையும் ஆதரிக்க வேண்டும்: -

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் என் தாயார் ஆசையாக என்னிடம் வந்தார். (அப்போது அவர் இணைவைப்பவராக இருந்தார்.) நான் நபி (ஸல்) அவர்களிடம் ‘(என் தாயார் வந்துள்ளார்.) அவருடன் உறவைப் பேணிக்கொள்ளட்டுமா?’ என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘ஆம்’ என்று கூறினார்கள். ‘எனவே, அஸ்மாவின் தாயர் தொடர்பாக, ‘மார்க்க (விஷய)த்தில் உங்களிடம் போரிடாமலும், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமலும் இருந்தார்களே அவர்களுக்கு நீங்கள் நன்மை செய்வதையும், அல்லாஹ் தடுக்கவில்லை. நிச்சயமாக அல்லாஹ் நீதி செலுத்துவோரை நேசிக்கிறான்’ எனும் (திருக்குர்ஆன் 60:8 வது) வசனத்தை அல்லாஹ் அருளினான்’ என (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் இப்னு உயைனா (ரஹ்) கூறினார்.அஸ்மா பின்த் அபீ பக்ர் (ரலி),புகாரி.5978,5979

உறவை முறிப்பவன் சுவனம் புகமாட்டான்: -

“உறவை முறித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழையமாட்டான்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.ஜுபைர் இப்னு முத்யிம் (ரலி),  புகாரி.5984

வாழ்வாதாரம் பெருக வேண்டுமா? ஆயுள் நீட்டிக்கபபட வேண்டுமா?

“தம் வாழ்வாதாரம் (ரிஸ்க்) விசாலமாக்கப்படுவதும் வாழ்நாள் நீட்டிக்கப்படுவதும் யாருக்கு மகிழ்ச்சி அளிக்குமோ அவர் தம் உறவைப் பேணி வாழட்டும்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அபூ ஹுரைரா (ரலி), புகாரி.5985

உறவை முறித்தால்?

உறவு (இறையருளின்) ஒரு கிளையாகும். எனவே, ‘அதனுடன் ஒட்டி வாழ்வோருடன் நானும் உறவு பாராட்டுவேன். அதை முறித்துக் கொள்கிறவரை நானும் முறித்துக் கொள்வேன்’ (என்று உறவைப் படைத்தபோது இறைவன் சொன்னான்). என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆயிஷா (ரலி),புகாரி.5989

அன்பு காட்டாதவர் அன்பு காட்டப்படமாட்டார்: -

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (தம் பேரரான) ஹஸன் இப்னு அலீயை முத்தமிட்டார்கள். அப்போது அவர்கள் அருகில் அமர்ந்துகொண்டிருந்த அக்ரஉ இப்னு ஹாபிஸ் அத்தமீமீ (ரலி), ‘எனக்குப் பத்துக் குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரைக் கூட நான் முத்தமிட்டதில்லை’ என்றார். அவரை ஏறெடுத்துப் பார்த்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘அன்பு காட்டாதவர் அன்பு காட்டப்படமாட்டார்’ என்று கூறினார்கள். அபூ ஹுரைரா (ரலி), புகாரி.5997

அல்லாஹ் அடியார்கள் மீது வைத்துள்ள அன்பு: -

(ஹவாஸின் குலத்தைச் சேர்ந்த) கைதிகள் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர்களிடையே இருந்த ஒரு பெண்ணின் மார்பில் பால் சுரந்தது. அவள் பாலூட்டுவதற்காக(த் தன் குழந்தையைத் தேடினாள்). குழந்தை கிடைக்கவில்லை. எனவே), கைதிகளில் எந்தக் குழந்தையைக் கண்டாலும், அதை (வாரி) எடுத்து(ப் பாலூட்டினாள். தன் குழந்தை கிடைத்தவுடன் அதை எடுத்து)த் தன் வயிற்றோடு அணைத்துப் பாலூட்டலானாள். அப்போது ‘எங்களிடம் நபி (ஸல்) அவர்கள், ‘இந்தப் பெண் தன் குழந்தையை தீயில் எறிவாளா? சொல்லுங்கள்!’ என்றார்கள். நாங்கள், ‘இல்லை, எந்நிலையிலும் அவளால் எறிய முடியாது’ என்று சொன்னோம். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , ‘இந்தக் குழந்தையின் மீது இவளுக்குள்ள அன்பைவிட அல்லாஹ் தன் அடியார்களின் மீது மிகவும் அன்பு வைத்துள்ளான்’ என்று கூறினார்கள்.உமர் இப்னு கத்தாப் (ரலி),புகாரி.5999

பாவங்களிலேயே மிகப் பெரியது எது?


நான், ‘இறைத்தூதர் அவர்களே! பாவங்களிலேயே மிகப் பெரியது எது?’ என்று கேட்டேன். ‘உன்னைப் படைத்த, இறைவனுக்கே நீ இணைகற்பிப்பது ஆகும்’ என்று பதிலளித்தார்கள். ‘பிறகு எது?’ என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘உன் குழந்தை உன்னுடன் (அமர்ந்து உன் உணவைப் பங்குபோட்டு) உண்ணும் என அஞ்சி அதை நீயே கொலை செய்வது’ என்று கூறினார்கள். நான், ‘பிறகு எது?’ என்றேன். ‘உன் அண்டை வீட்டுக்காரனின் மனைவியுடன் நீ விபசாரம் புரிவது’ என்றார்கள். நபி (ஸல்) அவர்களின் இக்கூற்றை மெய்ப்பிக்கும் வகையில், ‘அவர்கள் அல்லாஹ்வுடன் வேறெந்தத் தெய்வத்தையும் அழைக்கமாட்டார்கள்’ என்று தொடங்கும் (திருக்குர்ஆன் 25:68 வது) வசனத்தை அல்லாஹ் அருளினான்.அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி),புகாரி.4477

அநாதைகளை ஆதரிப்போரின் உன்னத நிலை!

‘நானும் அநாதையின் காப்பாளரும் சொர்க்கத்தில் இப்படி இருப்போம்’ என்று கூறியபடி நபி (ஸல்) அவர்கள் தங்களின் சுட்டு விரலாலும் நபி (ஸல்) விரலாலும் (சற்றே இடைவெளிவிட்ட) சைகை செய்தார்கள்.ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி) புகாரி 5304

கைம்பெண்ணுக்காகவும் ஏழைக்காகவும் பாடுபடுபவரின் உன்னத நிலை!

கணவனை இழந்த கைம்பெண்ணுக்காகவும் ஏழைக்காகவும் பாடுபடுகிறவர் ‘இறைவழியில் அறப்போர் புரிபவரைப் போன்றவராவார்’ அல்லது ‘இரவில் நின்று வணங்கி பகலில் நோன்பு நோற்பவர் போன்றவராவார். என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.ஸஃப்வான் இப்னு சுலைம் (ரஹ்) புகாரி 6006

கருணை காட்டாதவர் கருணை காட்டப்படமாட்டார்: -

(படைப்பினங்களின் மீது) கருணை காட்டாதவர் (படைத்தவனால்) கருணை காட்டப்படமாட்டார். என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.ஜரீர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) புகாரி 6013

அண்டை வீட்டாரைப் பேணுவதின் முக்கியத்துவம்: -

“அண்டை வீட்டார் குறித்து என்னிடம் (வானவர்) ஜிப்ரீல் அறிவுறுத்திக்கொண்டேயிருந்தார். எந்த அளவிற்கென்றால், (எங்கே) அண்டை வீட்டாரை எனக்கு வாரிசாக்கி விடுவாரோ என்று கூட நான் எண்ணினேன்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.ஆயிஷா ரலிபுகாரி6014

அண்டை வீட்டாரை துண்புறுத்துபவன் இறை நம்பிக்கையாளரேயல்ல!

‘அல்லாஹ்வீன் மீதாணையாக! அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன். அல்லாஹ்வின் மீதாணையாக! அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன். அல்லாஹ்வின் மீதாணையாக அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன்’ என்று (மூன்று முறை) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘அவன் யார்? இறைத்தூதர் அவர்களே!’ என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘எவனுடைய நாசவேலைகளிலிருந்து அவனுடைய அண்டை வீட்டார் பாதுகாப்பு உணர்வைப் பெறவில்லையோ அவன்தான்’ என்று பதிலளித்தார்கள் அபூ ஷுரைஹ் (ரலி),புகாரி 6014

அண்டை வீட்டாரின் அன்பளிப்பை அற்பமாக கருதாதே!

‘முஸ்லிம் பெண்களே! (உங்களில்) எந்தப் பெண்ணும் தன் அண்டை வீட்டுக்காரிக்கு ஓர் ஆட்டின் கால் குளம்பை (அன்பளிப்பாக) அளித்தாலும் அதை அற்பமாகக் கருத வேண்டாம்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறுவார்கள்.அபூ ஹுரைரா (ரலி), புகாரி.2566

நான், ‘இறைத்தூதர் அவர்களே! எனக்கு இரண்டு அண்டை வீட்டார் உள்ளனர். அவர்களில் யாருக்கு நான் அன்பளிப்புச் செய்வது?’ என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘இருவரில் யாருடைய வீட்டு வாசல் உனக்கு நெருக்கமாக இருக்கிறதோ அவருக்கு’ என்று பதிலளித்தார்கள்.ஆயிஷா (ரலி),புகாரி 2259

நல்லதைப் பேசு! அல்லது வாய் மூடி இரு!

“அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தரவேண்டாம். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தாளியைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய் மூடி இருக்கட்டும்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள.அபூ ஹுரைரா (ரலி) புகாரி6475

No comments:

Post a Comment