Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, September 2, 2015

சென்னையில் ஓர் சிறுதானிய உணவகம்!

லகமயமாக்கலுக்கு பின் தமிழக மக்களை மெல்ல கட்டிப்போட்டது மேற்கத்திய உணவுகளின் சுவை. இதுவே பொழுதுபோக்கு அரங்குகளிலும், தொழில்நுட்ப நிறுவனங்களிலும் அவர்கள் கொடி கட்டி பறக்க உதவுகிறது. நாவிற்கு சுவையளிக்கும் இந்த உணவுகள் உடலிற்கு நோயளிக்க தவறுவதில்லை. ஆக, நம் உடலை பாதுகாத்தே ஆக வேண்டிய கட்டாயத்துடன்தான் நாம் வாழ்கிறோம்.
இப்படி ஒரு சூழலில், உடலிற்கு ஆரோக்கியமான உணவை சுவையுடன் அளித்தால், யார்தான் வேண்டாம் என்பார்கள்?

கடந்த ஓராண்டாக, கூட்டம் அலைமோதும் “ப்ரேம்ஸ் கிராம போஜனம்” உணவகத்தின் சிறப்பு இதுதான். சென்னை, அடையார், கஸ்தூரிபாய் நகரிலுள்ள சர்தார் பட்டேல் சாலையிலுள்ளது இந்த உணவகம். பார்க்க கிராமத்து வீடு போலவே தோற்றமளிக்கும் இந்த உணவகத்தில் பரிமாறப்படும் உணவு வகைகள் எதிலும் சிறிதளவு அரிசி கூட சேர்க்கப்படுவதில்லை.
இங்கு வருவோர் பலர் முதலில் ஆர்டர் செய்வது தட்டு இட்லியைதான். அளவில் ஊத்தாப்பம் போல் இருக்கும் தட்டு இட்லியில் நிறைந்திருப்பது வரகு மட்டுமே. சாம்பார் மற்றும் சட்னியுடன் பரிமாறப்படும் “பூ” போன்ற தட்டு இட்லி, குழந்தைகளின் தட்டுகளில் கூட இரண்டு நிமிடங்களில் காலியாகி விடுகிறது.
அடுத்தபடியாக அனைவரும் விரும்பி சுவைப்பது வெண்ணை தோசையை. வரகு மற்றும் சாமையில் தயாரிக்கப்படும் வெண்ணை தோசை, அப்படியே வீட்டில் அம்மா சுடும் தோசை போலவே இருக்கிறது. சாமை குழிப்பணியாரம், கவுனி அரிசியில் செய்யப்படும் இடியாப்பம் மற்றும் தேங்காய் பால், கவுனி அரிசியும், வெல்லமும் கலந்த புட்டு, சிகப்பரிசி தோசை, பச்சை பயிரில் செய்யப்படும் ஆந்திரா பெசரட்டு, சாமை மற்றும் இளநீரில் செய்யப்படும் நீர் தோசை, தினை ரவா தோசை, ராகி, சோளம் மற்றும் பச்சை பயிரில் செய்யப்படும் ஊத்தாப்பங்கள் என அனைத்து உணவு வகைகளும் சென்னை மக்களுக்கு புதுமையானதாக இருக்கும். ரொட்டி வகைகளான ராகி ரொட்டி, கம்பு ரொட்டி, சோளம் ரொட்டி, சாமை அக்கி ரொட்டி ஆகியன மதியம், மாலை என இருவேளைகளிலும் கிடைக்கின்றன.

தினை சாம்பார் சாதம், குதிரைவாலி ரசம் சாதம், சாமை தயிர் சாதம் மற்றும் வரகு அரிசியில் செய்யப்படும் வெரைட்டி சாதம் ஆகியன மதிய வேளையில் மட்டும் கிடைக்கின்றன. பருக சுக்கு காபியும், நீர் மோரும் கிடைக்கும். இவை அனைத்தையும் தாண்டி, இங்கு வருபவர்கள் உணவை ருசிக்கும் முன்பாகவே ஆரோக்கியமாக உணர்கிறார்கள் என்றால், அதற்கு காரணம் பச்சை கற்பூரம், துளசி, ஏலக்காய் மற்றும் லவங்கம் சேர்த்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர். இதை பலர் விரும்பிக் குடிப்பதுடன், குடுவைகளில் நிறப்பி வீட்டிற்கும் கொண்டு செல்கின்றனர். 

இந்த உணவகத்தை தொடங்கிய கிருஷ்ணமூர்த்தியை சந்தித்தபோது, வாடிக்கையாளர்களை கவனித்தபடியே பேசத் தொடங்கினார்.
“நான் ஓசூர் பக்கத்துல இருக்கும் தேன்கனிக்கோட்டையில பிறந்தவன். எங்க நிலங்களில் விளைஞ்ச சிறுதானியங்களை சாப்பிட்டே வளர்ந்தேன். முப்பத்திரெண்டு வருஷம் பல உணவு நிறுவனங்கள்ல வேலை செஞ்சேன். அதனால உணவ பத்தி எனக்கு நல்லா தெரியும். சொந்தமா ஒரு உணவகம் திறக்கணுங்குற ஆசை எனக்குள்ள இருந்துச்சு. ஆனா ஏதாவது வித்தியாசமா செய்யணும்னு தோணுச்சு. நம்ம ஊர்ல சைனீஸ், மெக்சிகன், கொரியன், ஜப்பானீஸ்னு பன்னாட்டு உணவகங்கள் இருக்கு. ஆனா ஆரோக்கியமான உணவு கிடைக்கிற உணவகங்கள் இல்ல.

இந்த காலத்துல்ல ஜெயிக்கணும்னா, மக்கள மகிழ்விக்கிற மாதிரி ஏதாவது செய்யணும். இதனாலதான் இந்த மாதிரி ஒரு உணவகத்தை திறந்தோம். வரகு, சாமை, தினை, குதிரைவாலி, கம்பு போன்ற சிறுதானியங்கள மட்டும்தான் உபயோக்கிறோம். அரிசி, மைதா, சர்க்கரை, வனஸ்பதி, செயற்கை நிறங்கள் போன்றவற்றை உபயோகிக்குறதில்ல.
கோதுமை மட்டும் மிகக் குறைந்த அளவு சேர்க்குறோம். மக்களுக்கு தெரியாத சிறுதானியங்கள, மக்கள் தினமும் சாப்புடுற இட்லி, தோசை போன்ற உணவுகள்ல அறிமுகப்படுத்துறோம். ஆனா கொஞ்சம் வித்தியாசமா தட்டு இட்லி, வெண்ணை தோசை, தினை சாம்பார் சாதம், குதிரைவாலில மூலிகைகள் கலந்த ரசம் சாதம் மாதிரி புதுவகை உணவுகளா கொடுக்குறோம். முடிஞ்சவரைக்கும் நாட்டு காய்கறிகளதான் உபயோகிக்கிறோம். கிராமத்துல சமைக்கிற மாதிரி சுவையுடனும், ஆரோக்கியத்துடனும் சமைக்கிறதுதான் எங்களோட நோக்கம். சில உணவு வகைகள மட்டும் மண் பானையில சமைக்கிறோம். போதுமான இட வசதி இருந்துதுனா விறகு அடுப்புலையும் சமைப்போம்.” என்றார்.

பலர் முதன்முறையாக இந்த உணவு வகைகளை ஆச்சரியத்துடன் ருசித்துக்கொண்டிருந்த வேளையில், பல முறை இந்த உணவகத்திற்கு வருகை தந்த ராபினை அறிமுகப்படுத்தினார் கிருஷ்ணமூர்த்தி.
“நான் திருவான்மியூர்ல தங்கி இருக்கேன். அலுவலகத்துல இருந்து வீட்டுக்கு போகுற வழியில இந்த உணவகம் இருக்குறதால அடிக்கடி இங்க சாப்பிட்டு போவேன். இந்த உணவகத்துல சாப்பிட ஆரம்பிச்சதுல இருந்து என உடல் நலத்துல பல மாற்றங்கள உண்ர்ந்தேன். ஒரு வாரம் இந்த உணவு வகைகள சாப்பிட்டு வந்ததுல ஆரோக்கியமா உணர்ந்தது மட்டுமில்லாம, என் எடையும் குறைந்தது. சென்னையில இருக்க உணவகங்கள்ல சாப்பிடறதுனால பல உடல் நல குறைபாடுகள் வரும். இரவு சாப்பிட்டுட்டு, காலையில எழுந்துக்கும் போது சோர்வா உணருவோம். ஆனா இந்த சிறுதானிய உணவுகள் காலையில எழுந்துக்கும் போது நமக்கு ஒரு புத்துணர்ச்சிய தரும்.

விலை கொஞ்சம் கூடுதலா தெரிஞ்சாலும், உடல் நலத்திற்கு இந்த உணவகம் முழு உத்தரவாதம் தரும்” என்றார் ராபின்.
தட்டு இட்லி ஐம்பது ரூபாய்க்கும், தோசை வகைகள் அறுபது முதல் எழுபது ரூபாய்க்கும், ரொட்டி வகைகளும், வெரைட்டி சாத வகைகளும் அறுபது ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன. மதியம் பன்னிரெண்டு மணி முதல் மூன்று மணி வரையும், இரவு ஏழு மணி முதல் பத்து மணி வரையும் இவ்வுணவகம் இயங்குகிறது.
என்ன கிளம்பிட்டீங்களா? 

No comments:

Post a Comment