Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, September 7, 2015

சென்னைக்கு மிக அருகில்... ஒரு சந்தை

சென்னை விமான நிலையம் எதிரிலுள்ள திரிசூலம் ரயில் நிலையம் அருகில் தொடங்கி, மலை அடிவாரத் தில் ரயிலோசையுடன் மரங்கள் சூழ பல்லாவரம் வரை நீண்டிருக்கிறது பல்லாவரம் சந்தை. 


வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மட்டுமே இயங்கும் என்பதால், வெள்ளிக்கிழமை சந்தை என்றும் கூறுகிறார்கள். சென்னையில் சந்தை என்பதே ஆச்சர்யமளிக்கும் விஷயம். இதில் ஐந்து ரூபாய் காய்கறி கூருகளில் தொடங்கி பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தொலைக்காட்சிப் பெட்டிகள் வரை இங்கு கிடைப்பது ஆச்சர்யத்தின் உச்சிக்கு நம்மை அழைத்துச்செல்கிறது. 
சந்தைக்கு வரும் பார்வையாளர்களை வரவேற்கும் விதமாக முதலில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது பசுமை நிறைந்த பூச்செடிகள்தான். எந்த கடைக்குச் செல்லலாம் என யோசித்துக் கொண்டிருக்கையில்,  “வாங்க தம்பி...!" என வாஞ்சையான குரல் வந்தது ஒரு கடையிலிருந்து. 

"இது காஷ்மீர் ரோஜா. ஒரு செடி முப்பது ரூபா. இது பிரிட்டிஷ் குயின். பூனாவுல இருந்து வருது. எழுவது ரூபாய்க்கு வாங்கி எம்பது ரூபாய்க்கு விக்கிறோம்" என்று ஆர்வமாய் பூக்களை அறிமுகப்படுத்தினார் அறிவழகன் என்ற அந்த கடைக்காரர். ரோஜா, நாகலிங்க பூ, ஓசூரிலிருந்து இறக்குமதி செய்யப்படும் செம்பருத்தி, ஆந்திராவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 'ஹைப்ரிட்' வகை செம்பருத்தி என பூக்களை பற்றியே விளக்கிக்கொண்டிருந்த அறிவழகன், திடீரென மரக்கன்றுகளின் பக்கம் தாவினார். 

வாழை, தென்னை, ஆரஞ்சு, கொய்யா, ‘வாட்டர் ஆப்பிள்’ எனப்படும் பச்சை நிற ஆப்பிள் ஆகிய மரக்கன்று களை பற்றி அவர் விளக்க, பட்டென்று போட்டுடைத்தோம்.
"அண்ணே... நாங்க எதுவும் வாங்க வர்ல...!" என்று. கோபம் வராமல் நாம் சொன்னவற்றை கேட்டுக்கொண்டு சுருதி குறையாமல் பேச்சை தொடர்ந்தார் அறிவழகன். 

அவரிடமிருந்த வீடு மற்றும் பூங்காக்களை அலங்கரிக்க பயன்படும் ஸ்டார் லைட் மரக்கன்றும் கவர்ந்திழுத்தது. வியாபாரத்தின் நடுவே அறிவழகன், அருகில் நிழற்செடிகளை விற்பனை செய்துகொண்டிருந்த செந்தில் என்பவரிடம் அறிமுகப்படுத்தினார்.
“நிழற்செடிகள்ல பாத்தீங்கன்னா வேப்பமரம், சரக்கொன்றை, மகிளம், மனோரஞ்சிதம் ன்னு எங்ககிட்ட நிறைய இருக்கு. பழச்செடிகள்ல சாத்துக்குடி, சப்போட்டா, கொய்யா, சிவப்பு கொய்யா, மாதுளை, கமலா ஆரஞ்சுன்னு வீட்ல வளர்க்கிற செடிகள மட்டும் நாங்க விக்கிறோம்” என்றார் அவர்.

அவரது நண்பர் சுரேஷ், இந்த செடிகளை வளர்க்கும் முறையினை விவரித்தார் நம்மிடம். “வீட்டுக்குள்ள வளர்க்கிறதா இருந்தா, பிளாஸ்டிக் தொட்டிகள்ல வளர்க்கலாம். மாடியில வளர்க்க மண் தொட்டிதான் கரெக்டான சாய்ஸ். தினமும் தண்ணி ஊத்தி, சூரிய ஒளி படுறா மாதிரி வெச்சா, செடி நல்லா வளரும்” என்றவர், இவற்றில் சிலவற்றைத் தவிர மற்ற செடிகள், வீடுகளில் வளர்த்து, பராமரிக்கப்பட்டு சந்தைக்கு விற்பனைக்காக கொண்டுவரப்பட்டதாக கூறினார். 

“இந்த செடிகளை முதல் பதினைந்து நாளுக்கு கூண்டுக்குள்ள சூரிய ஒளி படாம வச்சிருப்பாங்க. அதுக்கப்புறம் கவர்ல வச்சி ஒரு மாசம் வரை தண்ணீர் ஊற்றி பராமரிப்பாங்க. இதை சிறுதொழிலாகவும் இப்போது பல பேர் செய்யுறாங்க” என்றார்.
செடிகளைத் தவிர விதைகள், உரம், தொட்டிகள் என மாடித்தோட்டத்திற்கு தேவையான அனைத்தும் இந்த சந்தையில் காண முடிந்தது. தக்காளி, வெண்டக்காய், கத்திரிக்காய், மிளகாய், குடை மிளகாய், பாவக்காய், புடலங்காய், பூசணிக்காய், வெள்ளரிக்காய் சிறுகீரை என வீட்டுக்கு தேவையான எல்லா காய்கறி விதைகளும் இருந்தன. 

வீடுகளில் செடி வளர்ப்பதால் வரும் பயன்களை பட்டியலிட்டார் செடி வியாபாரி சுரேஷ். “வீட்ல செடி வளர்க்குறதுனால நாம சுவாசிக்க சுத்தமான ஆக்ஸிஜன் கிடைக்குது. ஆனா அதையும் தாண்டி ஒவ்வொரு தடவையும் இந்த செடிகள பாக்குறதுனால நம்மளோட மனசு அமைதியாகுது, ஒருவித மகிழ்ச்சி கிடைக்குது.” என்றார்.
வியாபாரம் எப்படி இருக்கிறது? என்றோம் அவரிடம். “ இந்த சந்தையில செடிகளை வாங்க பல்லாவரத்தில இருந்து மட்டுமில்லாம தி.நகர், அடையார், பாரீஸ்  ( நம்ம பிராட்வேதான்) னு சென்னையின் பல இடங்களிலிருந்தும் மக்கள் வராங்க” என்றவர், தன்னுடைய துபாய் வாடிக்கையாளரை பற்றியும் உற்சாகமான குரலில் கூறினார். “ஒவ்வொரு தடவையும் துபாயில இருந்து வரும்போதும் சந்தைக்கு வந்து என் கடையில் செடிகளை வாங்கிட்டு போவார் ” என்றார்.

விதைகள், செடிகள், மரக்கன்றுகள் என பசுமையாக காட்சியளிக்கும் சந்தையில் பலவகையான காய்கறிகளும் மிகக்குறைந்த விலையில் கிடைக்கிறது. குளிர்பதனப்பெட்டிகளில் அடைக்கப்பட்ட பழங்களையும், காய்கறிகளையும் வாங்கி பழக்கப்பட்ட நம்மவர்களுக்கு பல்லாவரம் சந்தை நிச்சயம் ஒரு புதுவித அனுபவம்தான்.

No comments:

Post a Comment