Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday, August 18, 2013

வீட்டு வைத்தியம்என்னதான் நவீன சிகிச்சைகள் வளர்ந்து கொண்டே போனாலும் இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் பலர் பாட்டி வைத்தியத்தை விடாமல் பின்பற்றத் தான் செய்கிறார்கள். பாட்டிகள் தங்கள் அனுபவத்தில் இந்த வைத்திய முறைகளை செய்து பார்த்து பலன் கிடைத்தவுடன் தங்கள் வீட்டில் உள்ள இளைய தலை முறைக்கும் சொல்லிக் கொடுத்தனர். வீட்டில் உள்ள, குறிப்பாக சமையல் அறையில் அஞ்சரை பெட்டியில் இருக்கும், தினமும் சமையலுக்கு உபயோகிக்கும் பொருட்களைக் கொண்டே தங்களுக்கு வரும் சின்ன சின்ன நோய்களுக்கு தீர்வு கண்டனர் நம் பாட்டிகள். அதனால் இந்த சிகிச்சை முறை வீட்டு வைத்தியம் என்றும் சொல்லப்படுகிறது.
சாதாரண ஜலதோஷம், இருமல், சளி போன்றவற்றிற்கு (வேறு தொந்திரவு எதுவும் இல்லாத போது) சித்தரத்தை, மிளகு, சீரகம் முதலியவற்றை நீரில் போட்டு கொதிக்க வைத்து கஷாயம் தயாரித்துக் குடிக்கலாம் என்பதிலிருந்து பலவித வைத்திய முறைகள் வீட்டு வைத்தியத்தில் உண்டு. வயிற்றில் இருக்கும் பூச்சிகள் போக மாதம் ஒரு முறை விளக்கெண்ணெய் சாப்பிட்டால் நல்லது. சின்னக் குழந்தைகளுக்கு கூட தாய்ப் பாலில் சிறிது விளக்கெண்ணெய் சேர்த்து குழைத்துக் கொடுப்பது பாட்டிமார்களின் வழக்கம். வசம்பு ‘பிள்ளை வளர்ப்பான்’ என்றே அழைக்கப்பட்டது. தினமும் வசம்பை கல்லில் உரைத்து குழந்தையின் நாக்கில் தடவினால் குழந்தை ஆரோக்கிய மாக வளரும் என்று நம்பினார்கள்.
ஆனால் தற்போது மருத்துவர்கள் இந்த சிகிச்சை முறைகளை   ஒத்துக்கொள்ளவதில்லை. அந்தக் காலம் போல இப்போது தூய்மையான விளக்கெண்ணெய் கிடைப்பதில்லை. அதனால் சின்னக் குழந்தைகளுக்கு விளக்கெண்ணெய் கொடுப்பதால் தொற்றுநோய் ஏற்படும் என்கிறார்கள். அதுவும் சரிதான்; கலப்படமற்ற பொருட்கள் இப்போது எங்கே கிடைக்கிறது? குழந்தை பிறந்தவுடன் பிரசவமான பெண்ணுக்குக் கொடுக்கும் பிரசவ லேகியம் கூட வேண்டாம் என்கிறார்களே!
இத்தனை இருந்தாலும் பத்திரிகைகளில் பாட்டி வைத்தியம் என்று வந்து கொண்டுதான் இருக்கிறது. ஆங்கில மருந்துகள் ஒத்துக் கொள்ளாத போது, அல்லது பக்க விளைவுகள் அதிகமாகும் போது சிலர் alternative medicine எனப்படும் ஹோமியோபதி, ஆயுர்வேதம், சித்த வைத்தியம், அல்லது இயற்கை வைத்தியம் போன்றவற்றை நாடுகிறார்கள். இவற்றில் ஹோமியோபதி தவிர மற்ற வைத்தியங்களில் பாட்டி மருத்துவத்தைப் போலவே வீட்டில் இருக்கும் பொருட்களை மையமாக வைத்தே மருந்துகள் தயாரிக்கப் படுகின்றன.
இதோ உங்களுக்காக சில வீட்டு வைத்திய குறிப்புகள்:
ஒரு எச்சரிக்கை: இந்த குறிப்புகள் மருத்துவர்களால் ஒப்புக் கொள்ளப்பட்டவை என்று சொல்ல முடியாது. அதிக இரத்த அழுத்தம், இதய நோய், சர்க்கரை நோய் அல்லது வேறு நோய்களுக்கு தொடர்ந்து மருந்து சாப்பிடுபவர்கள் இவற்றை முயற்சி செய்யவேண்டாம்.
அசிடிட்டி நோய்க்கு அரிசி:
 • பச்சை அரிசி 8 அல்லது 10 மணிகளை எடுத்துக் கொண்டு தினமும் காலையில் காலை சிற்றுண்டி சாப்பிடுவதற்கு முன் நீருடன் விழுங்கவும்.
 • 21 நாளைக்கு விடாமல் தொடர்ந்து செய்ய மூன்று மாதத்தில் அசிடிட்டி உங்களை விட்டு சொல்லாமல் கொள்ளாமல் ஓடி விடும்.
 • இந்த சிகிச்சை முறையால் உடலில் இருக்கும் ஆசிட் அளவு நாளடைவில் குறைந்து விடும்.
கொலஸ்ட்ரால் குறைய கொட்டைப்பாக்கு
உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் இவற்றுடன் கூட வரும் கொலஸ்ட்ரால் குறைய இதோ ஒரு வீட்டு வைத்தியம்:
 • வாசனை சேர்க்காத கொட்டைப் பாக்கை சிறு சிறு துண்டுகளாக்கி ஒவ்வொரு சாப்பாட்டிற்கு பிறகு 20-40 நிமிடங்கள் வாயில் போட்டு மெல்லவும்.
 • கடிக்க வேண்டாம்; நன்றாக மென்றவுடன் பாக்கை வெளியே துப்பி விடுங்கள்.
 • பாக்கிலிருந்து வரும் ஜூஸ் உமிழ் நீருடன் கலந்து இரத்தத்தின் கொழுப்பை குறைக்கிறது.  இரத்த ஓட்டம் சீராகிறது; இரத்த அழுத்தமும் குறைகிறது.
உயர் இரத்த அழுத்தத்திற்கு மெந்தியம்:
உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க மெந்தியம் மிகச் சிறந்த மருந்தாகக் கருதப் படுகிறது.
 • 8-10 மெந்திய மணிகளை எடுத்துக் கொள்ளவும்;
 • தினமும் காலையில் சிற்றுண்டிக்கு முன் தண்ணீருடன் விழுங்கவும்.
சர்க்கரை நோய்க்கு 2 வைத்திய முறைகள்:
முதல் முறை: black tea எனப்படும் பால் கலக்காத தேனீர்
சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு முதலில் பாதிக்கப் படும் உறுப்பு சிறுநீரகம் தான். இவர்கள் தினமும் காலையில் கறுப்பு தேனீர் குடிக்கலாம்.
 • தேயிலைகளை தண்ணீரில் போட்டுக் கொதிக்க விடவும்.
 • பாலோ, சர்க்கரையோ, எலுமிச்சம் சாரோ சேர்க்காமல் குடிக்கவும்.
 • சிறுநீரகத்தின் செயல் பாட்டை சரி செய்யும் சக்தி இந்தக் கறுப்பு தேனிருக்கு உண்டு.
இரண்டாவது சிகிச்சை:
 • இளம் வெண்டைக்காயை காம்பை நீக்கி விட்டு நீள வாக்கில் அரிந்து கொள்ளவும்.
 • இரவு தண்ணீரில் ஊறப் போடவும்.
 • காலை சிற்றுண்டிக்கு முன் வெண்டைக்காய் ஊறிய தண்ணீரை குடித்து விடவும்.  வெண்டைக்காய் ஊறியதால் தண்ணீர் சிறிது கொழ கொழப்பாக இருக்கும். இந்தக் கொழ கொழுப்பு இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையை கட்டுக்குள் கொண்டு வரும்.
 • ஊறிய வெண்டைக்காயையும் அப்படியே சாப்பிட்டு விடலாம்.
பொதுவான சில வீட்டு வைத்தியங்கள்:
 • நடு இரவில் சில சமயம் வாயுத் தொல்லையினால் வயிற்று வலி வரும். சூடான நீர் சாப்பிடுவது வாயுவை வெளியேற்றுவதுடன், வலியையும் குறைக்கும்.
 • ஜலதோஷம் பிடிக்கும் அறிகுறிகள் தோன்றுகிறதா? தண்ணீரில் ஒரு ஸ்பூன் மிளகு போட்டு கொதிக்க வைத்துக் அவ்வப்போது குடித்து வர ஜலதோஷம் உங்களைப் பிடிக்காமல் பார்த்துக் கொள்ளலாம்.
இந்தக் குறிப்புகளின் பலன்கள் மருத்துவ ஆராய்ச்சி மூலம் நிருபிக்கப் படவில்லை என்றாலும், இவை எந்தவிதமான பக்க விளைவுகளையும் ஏற்படுத்துவதில்லை என்பது நிஜத்திலும் நிஜம்.

No comments:

Post a Comment