Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, November 27, 2013

இந்தியாவில் இஸ்லாம்-7

பழங்குடியினர் ஆன சமண புத்த மதத்தவர்கள்

வியாபார நோக்குடன் இங்கு அராபியர் வந்தனரே தவிர மதம் பரப்பும் நோக்கத்தோடு வரவில்லை என்பது இஸ்லாம் மார்க்கத்தின் மந்தமான வளர்ச்சியில் இருந்து ஊகிக்க முடிகிறது.

சமண புத்த மதத்தை சார்ந்த பாணர், வேடர், குறவர் போன்ற மக்கள் பெரும் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டனர். ஆரியர்களுடைய கொடுமை தாங்க முடியாமல் உயிருக்காக காடுகளில் தஞ்சம் புகுந்தவர்களுடைய பின் தலைமுறையினரே இன்று காடுகளில் வாழ்ந்து வரும் மழைவாழ் பழங்குடியினர். இவர்கள் இப்போதும் சமண மத முக்கிய கடவுள்களான பார்சுவ நாதரையும், பத்மாவதியையும் வணங்கி வருகின்றனர் என்பதற்கு ‘சிங்கேரி அம்மா’ என்று ஊர்மக்கள் அழைத்து வருகின்ற, வயநாடு காட்டில் உள்ள சிங்கேரி பகவதிக் கோயிலில் நடக்கும் விழாவே ஓர் எடுத்துக் காட்டாகும்.


விழாக் காலங்களில் ஆதிவாசிகள் கூட்டம் கூட்டமாக வந்திருந்து ஆராதிப்பது இந்த தாய் தெய்வத்தையாகும். அவர்களில் பாணர்களுக்கு தாய் கடவுள் மீது மிகவும் விருப்பம், தாயின் புகழ் உரைப்பதில் பரசுராமனை மக்கள் மறந்து போகின்றனர்.

இக்கோயிலில் உள்ள பார்சுவநாதரை ‘பரசுராமனாகவும்’ பத்மாவதியை ‘பகவதியாகவும்’ (பரசுராமனும் பகவதியும் ஹிந்து கடவுள்கள்) மாற்றிவிட்டனர் ஹிந்துக்கள். ஆனால் ஆதிவாசிகள் இப்போதும் சமணக் கடவுள்களாகவே பார்சுவநாதரையும் பத்மாவதியையும் கருதி வழிபட்டு வருகின்றனர் (‘மாத்ருபூமி’ மலையாள வார இதழ் 1989 நவம்பர் 5-11 இதழ்) என்று டாக்டர் நெடுவட்டம் கோபாலகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார். இந்த மலைவாழ் மக்களே தென்னக மண்ணின் மைந்தர்கள்.

சமண புத்த மதங்களின் தளர்ச்சி, ஆரிய மதத்தைத் திணிக்கும் பொருட்டு மக்களிடையே கட்டவிழ்த்து விடப்பட்ட அக்கிரம செயல்களால் பீதி அடைந்த மக்களின் ஆதரவற்ற நிலை, யூத மதத்தை யூதர்கள் பரப்பாமல் மவுனம் சாதித்தல், கிறிஸ்தவ மதம் வேகமாகப் பரவிவரும் சந்தர்ப்பம், இந்த சூழ்நிலை ஏக இறையையும் சமாதானத்தையும் சாந்தியையும், சிலை வணக்கமுறை அல்லாத ஓர் வணக்க முறையையும் போதிக்கும் ஒரு புது மதம் வளர சாதகமாக அமைந்தது. ஒடுக்கப்பட்டவர்களாக இருளில் தப்பிய மக்களுக்கு இஸ்லாத்தின் வருகை பேரொளியாக வழிகாட்டியது.

இஸ்லாம் மேற்கு கடற்கரையில் தோன்றியது நபி(ஸல்) அவர்கள் காலத்திலா? பிற்காலத்திலா?

அராபியர், ரோமானியர், கிரேக்கர் முதலியோர் கி.மு. பத்தாம் நூற்றாண்டிற்கு முன்னிருந்தே இந்தியாவுடன் வர்த்தக தொடர்பு வைத்திருந்தனர். பண்டைய தமிழகத்தில் புகழ்பெற்ற துறைமுகங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்கியது கொடுங்கல்லூர் ஆகும். இது இந்தியாவிலேயே பழமை வாய்ந்த துறைமுகங்களில் ஒன்று இந்தியாவில் நெடிய காலம் ஆட்சி புரிந்து வந்த வெளிநாட்டவர் முதலில் கப்பலில் இறங்கியது இங்கேயாகும்.

அலெக்சாண்டிரியா (எகிப்து)வுக்கும் முசிரிக்கும் இடையிலான தூரம் 100 நாள் பயண தூரம் என்று ‘ப்ளீனி’(Pliny)என்ற பயணி குறிப்பிட்டுள்ளார். எகிப்தை சார்ந்த ஹிப்பாலஸ் (Hippalus)என்ற மாலுமி கடல் வழியாக முசிரிக்கு சுருக்கமான ஒரு வழியைக் கண்டுபிடித்தார். அத்தோடு பயண தொலைவு 40 நாட்களாக சுருக்கியது. இக்கண்டுபிடிப்பு கி.மு. முதல் நூற்றாண்டு என்றும் கூறி வருகின்றனர். எதுவாக இருப்பினும், அரபு நாடு இந்தியாவுடன் குறிப்பாக மேற்கு கிழக்கு கடற்கரை துறைமுகங்களோடு நெருங்கிய வியாபார தொடர்பு கொண்டிருந்தது. இது எல்லோரும் தெரிந்ததே.

அரேபியாவிலிருந்து பல பொருட்களை இங்கு கொண்டு வந்து விற்கவும். இங்கிருந்து சுக்கு, மிளகு போன்ற பல பொருட்களை வாங்கிச் செல்லவும் செய்தனர். பண்ட மாற்று முறையில் இவ்வியாபாரம் நடந்திருந்ததாக கூறப்படுகிறது. அராபியர்களுடைய கப்பல்கள் வருவதை எதிர்நோக்கியும், அவர்கள் இங்கு வந்து வியாபாரம் செய்வதை விரும்பியும் இங்குள்ள ஆட்சித் தலைவர்கள் பலதரப்பட்ட உதவிகள் செய்து அராபியர்களை துறைமுக நகரங்களில் தங்குமிடமும் அளித்தனர்.

ஆட்சியாளர்களுடைய பேராதரவோடு மேற்கு கடலோர துறைமுகங்களில் தங்கி வந்த அராபியர்களில் சிலர் உள்நாட்டு பெண்களை திருமணம் செய்து இங்கு தங்கியிருக்கும் நாட்களில் அவர்களுடன் வாழ்ந்து வந்தனர். இப்படிப்பட்ட மண வாழ்க்கையில் பிறந்த குழந்தைகளை ‘கலாசிகள்’ என்று அழைத்தனர். பல நூற்றாண்டுகளுக்குப் பின் கலாசிகளின் எண்ணிக்கைப் பெருகியது. இந்த கலாசிகளை இங்குள்ள மக்கள் ‘மகா பிள்ளை’ (பெரிய இடத்து பிள்ளை என்ற பொருளில் இருக்கக்கூடும்) என்று அழைத்தனர். நாளடைவில் மகா பிள்ளை என்ற சொல் மருவி ‘மாப்பிள்ளை’ என்றாகிவிட்டது.

இதுபோன்று கிரேக்கர் ரோமானியர் முதலிய கிறிஸ்தவர்களுக்கு நம்நாட்டுப் பெண்களில் பிறந்த குழந்தைகளையும் ‘மகா பிள்ளை’ என்றே அழைத்தனர். கோட்டயம் சங்ஙளாச்சேரி போன்ற பகுதிகளில் வாழும் கிறிஸ்தவர்கள் ‘மாப்பிள்ளை’ என்றுதான் இப்பவும் அழைக்கப்படுகின்றனர். மலபார் பகுதியில் உள்ள முஸ்லிம்கள் மாப்பிள்ளை என்று அறியப்படுகின்றனர். இருவரையும் அடையாளம் கண்டு கொள்வதற்காக முஸ்லிம்களை, ஜோனை மாப்பிள்ளை என்றும், கிறிஸ்தவர்களை நஜ்ரானி மாப்பிளை என்றும் அழைக்கின்றனர் (Logan).

இந்த அராபிய வர்த்தகர்களுக்கு பிறந்த குழந்தைகளோ அவர்களுடைய தாய் தந்தையரோ யாருமே முஸ்லிம்கள் அல்ல. இந்த கலப்பு சந்ததியினர் பிறந்ததெல்லாம் நபிகள் நாயகம்(ஸல்) காலத்திற்கு முன்னரேயாகும்.

தொடரும்..

No comments:

Post a Comment