Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, November 30, 2013

சிலையாகிவிட்டதா செம்மொழி?

 
அரசுப் பள்ளி ஆசிரியரும் அவருடைய எழுத்தாள நண்பரும் பேசிக் கொண்டிருந்தார்கள். மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் பெற்றோர்கள் மாணவர்களை ஆவேசத்துடன் சேர்த்துவருவதுபற்றி அந்த ஆசிரியர் கவலையை வெளியிட்டார். ஏழாம் வகுப்பு ஆசிரியரான அவரிடம் எழுத்தாள நண்பர், ‘‘எங்கே நிலநடுக்கோட்டுக்கு இங்கிலீஷ்ல என்ன சொல்லு பாக்கலாம்?’’ என்று கேட்டார்.
ஆசிரியருக்குப் பதில் தெரியவில்லை. மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்ப்பது நியாயம்தான் என்பது போன்ற உணர்வுக்கு அவர் வந்ததாகத் தோன்றியது.

இலவச மிக்ஸி, கிரைண்டர் போல…
இந்தக் கல்வி ஆண்டில், போன ஆண்டைப் போல அல்லாமல் சரியான தருணத்தில் பள்ளிக்கூடங்கள் தொடங்கின. அதோடு மட்டுமல்லாமல், கூடுதலாக அரசுப் பள்ளிகளில் ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு ஆங்கில வழிப் பாடத்திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது. குறைந்தது 20 மாணவர்களாவது இதில் சேரும்பட்சத்தில் இந்தக் கல்வியைச் சொல்லித்தருவது என்னும் நடப்பில் அநேகமாக ஊராட்சி ஒன்றியத்துக்கு ஒரு பள்ளி என்னும் அளவில் இப்போதைக்குத் தொடங்கப்பட்டிருக்கிறது.
இதற்கு எதிர்ப்புகளும் முணுமுணுப்பு களும் ஒரு பக்கம் இருந்தாலும், ஒரு விதத்தில் இது சரியானதே என்பது போன்ற தோற்றம் ஏற்படுகிறது. மிக்சி, கிரைண்டர் போன்றவையெல்லாம் அனைவருக்கும் எப்படி இலவசமாகக் கிடைக்கிறதோ, அப்படியே ஏழைப்பட்ட குழந்தைகளுக்கும் ஆங்கில வழிக்கல்வி கிடைக்கப்போகிறது. இல்லாவிட்டால், தகப்பன் சம்பாதித்து இந்தக் குழந்தைகளும் சம்பாதித்தால் மட்டுமே அடுத்த தலைமுறைக்கு ஒருவேளை ஆங்கிலவழிக் கல்வி கிட்டக்கூடும். ஒருசாரர் மட்டும் அனுபவிக்கும் பேற்றை அவர்கள் மட்டும் பெறாமல் போவதென்ன?
இலவசப் பேருந்துப் பயணம், சத்துணவு (இதில் இடம்பெறும் உணவு வகைகளின் பட்டியலைப் படித்துப்பார்க்கும் போன தலைமுறையினர், 30 ஆண்டுகளுக்கு முன்னதாகப் பிறந்ததுகுறித்து வருத்தப்படு வார்கள்), இலவசச் சீருடைகளுடன் படிப்பும் இலவசமாகக் கிடைக்குமென்றால், அது மெச்சத்தக்கதே.
தட்சிணை வைத்தால்தான் வித்தை
பொதுவாக, அதிக சம்பளம் பெறுகிற ஒருவரே நல்லாசிரியராக மதிக்கப்பட்டு, அவர்கள் வசம் தம் குழந்தைகளை அவற்றின் பெற்றோர் ஒப்புக்கொடுப்பதே நடந்திருக்க வேண்டும். இருபது, முப்பது ஆயிரங்களில் சம்பளம் பெறுகிற அரசு ஆசிரியர்களையும் அவர்கள் பணிபுரியும் அரசுப் பள்ளிகளையும் நிராகரித்துவிட்டு, ஐந்தாயிரமும் பத்தாயிரமும் சம்பளம் வாங்கும் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களிடம் ‘காசும் கொடுத்து குழந்தைகளை ஒப்படைப்பது’ நடக்கிறதென்றால், இது புரிந்துகொள்ள இயலாத ஜாலம்தான்.
தட்சிணை வைக்கவில்லையானால், வித்தை பலிக்காது என்னும் எண்ணம் வலுவாக ஊன்றிய மண் நம்முடையது. “என் குழந்தையைப் படிக்கவைக்க நீ யாரு?” என அரசாங்கத்தை மக்கள் கேள்வி கேட்பார்கள்போல. அரசுடன் நாம் ஒப்புரவை இழந்துவிட்டோம்.
‘தொழிலாளி’ என்று சொல்லச் சொல்லுங்கள்!
‘தாய்வழிக் கல்வி அறிவூக்கத்துக்குச் சிறந்தது’ என பன்னிப்பன்னிப் பலரும் பேசியதற்குப் பலன் ஏதும் விளையவில்லை. பல நாடுகள், பல கேடுகளை எடுத்துக்காட்டாகப் பேசியும், அரசின் முன் மூடிய காதில் முகாரி பாடிய கதையே ஆயிற்று.
துறைசார் அறிவில் ஓங்கி நிபுணத்துவம் பெற்று வல்லுநர் ஆக வேண்டியதில்லை. ஏதேனும் வேலைகளில் ஒப்பேற்றும் அளவுக்குச் செல்லுநராக இருந்தாலே போதுமானது என்பது முடிவாக இருந்தால், இந்த அளவே போதுமானது.
இதில் தமிழின் நிலைமை என்ன வென்றால் ‘தொழிலாளி’ என்று சரியாக உச்சரிக்காதவர்களுக்கு வேலை இல்லை என்று சொன்னால், அறுபது சதவீதம் தமிழ் ஆசிரியர்கள் வேலை இழந்துவிடுவார்கள்.
அதேபோல தனியார் பள்ளியில் தம் குழந்தைகளைச் சேர்த்தவர்களுக்கு அரசு வேலை இல்லை என்ற முடிவை அரசு எடுத்திருந்தால், 90 சதவீதம் பேர் வேலை இழந்துவிடுவார்கள். மீதி 10 சதவீதம் திருமணம் ஆகாதவர்கள் என வைத்துக்கொள்ளுங்கள்.
அவைகள்
பாடத்திட்டத்தில் இருக்கிற தமிழ், வெளியின் புழங்குதளத்தில் தனது நுட்பத்தை இழந்தே வருகிறது. ‘டெண்டுல்கர் திடீர் ஓய்வு’ என்பது போன்றே எழுதி சதா சர்வகாலமும் பரபரப்பைத் தொற்றவைக்கும் முயற்சி ஒருபக்கம். முத்தமிழ் அறிஞரான கலைஞர் மக்களவை மற்றும் பாராளுமன்ற, சட்டமன்ற அவைகளில் அரசியல் செய்வதால் அவர்கூட ‘அவை’ என எழுத வேண்டியதை ‘அவைகள்’ என எழுதிவிட்டுப்போகட்டும். அவை என்பதே ‘பன்மை’ என மறந்து பலரும் ‘அவைகள்’ என எழுதிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
ஆங்கிலத்தின் தாக்கம்
பெங்களூரில் ‘தந்த, தாயி ஆசீர்வாத்’ என்று எழுதி பல ஆட்டோக்கள் ஓடுவதைப் பார்க்க முடியும். 3 என்ற எண்ணின் விளிம்புகளை வலப்புறத்துக்குத் திருப்பினாற்போன்ற அந்த ‘ர்’ எழுத்தின் பயன்பாடு சிக்கலானது. அநேகமாக, அனைத்து இந்திய மொழிகளும் ஆங்கிலத் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுதான் இருக்கும் என்று தெரிகிறது. செளகரியங்களால் பெறப்பட்ட மந்தபுத்தியால் கல்வியின் ஆழம் நோக்கிய பயணம் மேலோட்டத்திலேயே நின்றுவிடுகிறது.
ஆங்கில வழியில் சொல்லிக்கொடுக்கச் சிறப்பான அல்லது பிரத்தியேகமான ஆசிரியர்கள் அமையப்பெறாவிட்டால், பழைய கல்வி முறையில் படித்த ஆசிரியர்கள் ‘பரப்பு இழுவிசை, தந்துகிக் கவர்ச்சி, பூரிதக் கரைசல், பதங்கமாதல் போன்ற சொற்றொடர்களை எல்லாம் எப்படி ஆங்கிலத்தில் விளங்கிக்கொண்டு, எப்படிச் சொல்லித் தரப்போகிறார்கள் என்பதை நினைத்தால் பயமாகத்தான் இருக்கிறது. ஏற்கெனவே, எட்டாவது படிப்போர்கூட வாசிப்புத்திறனில், மொழித்திறனில், அறிவுத்திறனில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் தரத்தை எட்டவில்லை என்று ஆய்வுகள் சொல்கின்றனவாம்.
பாட அறிவு, தமிழ் அறிவு, ஆங்கில அறிவு அனைத்திலும் இரண்டுங்கெட்டானாகி மாணவர்கள் ‘சோமாசி’ ஆகிவிடக் கூடாது என்று பயமாக இருக்கிறது.
ஆங்கிலத்தால் கற்பது
ஆங்கிலத்தை மொழியாகக் கற்பது வேறு. ஆங்கில மொழியால் கற்பது வேறு. தமிழால் வரலாறு, அறிவியல், கணிதம் முதலான துறைகளைக் கற்றுத்தர இயலவில்லையென்றால், செலவழிக்கவும் சிலை வைக்கவும்தான் நாம் நமது செம்மொழி அந்தஸ்தைப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறோமா?
ஆசிரியர்கள் என்பவர்கள் கற்பதை நிறுத்தி விட்டவர்கள் என்ற கூற்றைப் பொய்யாக்கி, அவர்களும் மாணவர்களுடன் சேர்ந்து தடவித்தடவி ஆங்கிலத்தையும் தங்களது பாடத்தையும் மேம்படுத்திக்கொள்ள வேண்டியதுதான்.
‘பாட நூல் துணைவன்’ (நோட்ஸ்) விற்கிறவர்கள் வழக்கம்போல உற்சாகமாகி யிருப்பார்கள்.
வள்ளுவர் கோட்டம் முதல் முக்கடலின் அய்யன் சிலையூடான தமிழ் கூறு நல்லுலகில் இடையில் தமிழ்த் தாயையும் வணங்கிவிட்டு, என்னதான் நடக்கிறது என்று பார்த்துக்கொண்டிருக்க வேண்டியதுதான்.
இந்த நிலையில், நமக்கு இரண்டு அச்சங்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. தமிழ்த் தாயை... ‘இருந்த பெரும் தமிழணங்கே!’ என்று பாடவேண்டி வந்துவிடுமோ என்பது ஒன்று. நம் அத்தனை சந்ததியும் மண்ணில் நல்லவண்ணம் அறிவும் ஆங்கிலமும் கற்றுத் துறைபோகி நுண்மான் நுழைபுலம் எய்திவிட்டால், பாவம்! இந்த பிரிட்டிஷ்காரர்கள் நம்முன் ‘மொழிவழிச் சிறுபான்மையினராக ஆகி’அவஸ்தைபடப்போகிறார்கள் என்பதே அடுத்தது.
க. சீ. சிவகுமார், எழுத்தாளர்

No comments:

Post a Comment