Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, December 26, 2013

ரத்த சரித்திரத்தில் பேரரசி ரசியா சுல்தானா..!


ரசியாவைப் பற்றித் தெரிந்து கொள்ள கொஞ்சம் பின்னோக்கி போய்த்தான் ஆகவேண்டும். அது 13ம் நூற்றாண்டு. கி.பி. 1200 வாக்கில் முகம்மது பின் கோரி இந்தியப் பேரரசை ஆட்டுவித்தபின் இந்த தேசத்தை தம் நம்பிக்கைக்குறிய அடிமையான குத்புதீன் ஐபெக் என்பவரிடம் ஒப்படைத்தார். அவருக்கு அடுத்து வந்த இல்துமிஷ் தன் பங்குக்கு நன்றாகவே ஆட்சி செய்தாலும். அவருக்கு திறமையான மகன்கள் இருந்தும் இல்லாமல் இருந்தனர். அந்தக் குறையைத் தீர்ப்பதற்காகவே இருந்தார் இல்துமிஷின் மகள் ரசியா பேகம்.
அரசனுக்கு உண்டான அனைத்து தகுதிகளும் பெற்றிருந்தார் ரசியா. நிர்வாகத் திறமையும், வீரமும் ஒருங்கே அமையப் பெற்ற ரசியாவைத்தான் ராணியாக நியமிக்க முடிவெடுத்திருந்தார் இல்துமிஷ். அச்சமயத்தில் இவரது தந்தை ராஜபுத்திரர்களுக்கெதிராக படையெடுத்துச் சென்றார். தான் திரும்பி வர கால தாமதம் ஆகலாம் என கருதிய அவர் தனக்கு பதிலாக தனது மகள் ரஸியா பேகத்தை ஆட்சி அதிகாரத்தில் நியமித்தார். இல்துமிஷ் திரும்பி வர சுமார் ஆறு ஆண்டுகள் ஆனது. அக்காலக் கட்டத்தில் ரஸியா பேகம் நன்முறையில் விவேகத்துடனும் ஆட்சிப் புரிந்தார்.
தனது தந்தை திரும்பி வந்ததும் ரஸியா ஆட்சியை தந்தையிடமே ஒப்படைத்தார். கி.பி.1236 ஆம் ஆண்டு இல்துமிஷ் மரணமடைந்தார். ஏற் கெனவே அவர் தனது வாரிசாக ரஸியா பேகத்தையே முடிவு செய்திருந்தார். ஆனால் ‘பெண்ணானவள் மண்ணாள்வதா’ என்ற கோட்பாடு கொண்ட பழமைவாதிகள் ஒன்றிணைந்து ரசியாவின் ஒன்று விட்ட சகோதரன் ருக்னுதீன் பெரோஸ் என்பவரை அரசராக்கினர். மதுவும், மாதுவும் மதியை மயக்க ருக்னுவின் தாயார் ஷா துர்க்கான் மறைமுக ஆட்சி நடத்தினார். ‘ம்’ என்றால் வனவாசம், ஏன் என்றால் சிறைவாசம் என்ற ரீதியில் சர்வாதிகாரியாக ஆட்டம் போட்டார் துர்க்கான். பொறுத்துப் பார்த்த மக்கள் புரட்சி செய்யத் தொடங்கினர்.
இதை எதிர்பார்த்துக் காத்திருந்த ரசியா தடாலடியாக உள்ளே புகுந்து ஆட்சி, அதிகாரத்தைக் கைப்பற்றினார். ருக்னுதீன் பெயரில் நடந்த ஆட்சிக் காலம் வெறும் ஆறே மாதங்கள். ரசியாவின் ஆட்சி என்னவோ அமைதியாகத்தான் போய்க் கொண்டிருந்தது. அப்போது தான் திடீரென டில்லியிலிருந்து 150 மைல் தொலைவில் சர்ஹிந்த் என்ற பகுதியை ஆண்டு வந்த இக்தியாருதின் அல்துனியா என்ற அரசனோடு சதியாலோசனை செய்து ரஸியாவின் ஆட்சியை கவிழ்க்க திட்டம் போட்டது அந்தக் குள்ளநரி கூட்டம்.
இதை அறிந்ததும், அவன் இங்கு வருவதற்குள் நாமே அங்கு போய் அவனை ஒரு கை பார்ப்போம் என்று படையுடன் புறப்பட்டாள் ரசியா சுல்தான் (சுல்தான் என்பது ஆண்பால், சுல்தானா என்பதுதான் பெண்பால். நான் ஒரு ஆணுக்கு வீரத்திலும் விவேகத்திலும் எந்த விதத்திலும் குறைந்தவள் இல்லை – என்னை சுல்தான் என்றே அழையுங்கள் என்று எல்லோருக்கும் ஆணையிட்டு இருந்தாள் ரசியா பேகம்.)
வீரம் விவேகம் இருந்தாலும் விதி ரசியாவிற்கு எதிராகவே வேலை செய்தது. உடன் வந்த படை தளபதிகள் பலர் பாதி வழியில் காலை வாரிவிட, துரோகத்தின் வலியைத் தாங்கிக் கொண்டு, நம்பிக்கை கொண்டிருந்த மிச்சம் மீதி வீரர்களோடும் வீரத்தோடும் போருக்கு போனாள். ரசியாவின் வாள் சுழற்றலில் அல்துனியாவின் படை சிதறியது. படை நடத்திய விதமும், நகர்த்திய வியூகமும் அல்துனியாவை அதிசயிக்க வைத்தது. அதற்கும் மேலாக ரசியாவின் அழகும், அறிவும் சாதுர்யமான பேச்சும் அல்துனியாவை கிறங்கடித்தது. செய்ய இருந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு ரசியாவையே மணம் முடித்தார் அல்துனியா. தவறான தகவல் கொடுத்த கயவர்களை ஒரு கை பாப்போம் என்று கணவனும், மனைவியும் கரம் கோர்த்துக்கொண்டு, மீண்டும் டில்லி புறப்பட்டனர். விதி என்னும் அரக்கன் கடைசி முறையாக அவர்கள் இருவரையும் பார்த்து சிரித்தான். ரசியாவின் உடன் இருந்த வீரர்கள் (முக்கியமாக மெய்க்கப்பாளர்கள்) இந்தப் பெண் மறுபடியும் டில்லி வந்தால் பெண்ணாட்சி நிலைத்து விடும் என்று, அவர்கள் இரவு உறங்கும் நேரம் பார்த்து கூடாரத்திற்குள் புகுந்து அரசி பேகம் ரசியாவையும், அல்துனியாவையும் தாக்கினர்.
ஒருவர், இருவர் என்றால் சமாளித்து விடலாம். துரோகத்தின் துணை கொண்டு வந்ததோ பெரும் கூட்டம். ஒரு கட்டத்தில் சமாளிக்க முடியாமல் போராடிப் போராடித் களைத்துப் போன அரசியையும், அவரது கணவரையும் வெட்டி வீசியது அந்தக் கும்பல். இந்தியாவை சீரும் சிறப்புமாக ஆட்சி செய்து கொண்டிருந்த பேரரசி ரசியாவின் ஆட்சியும் அத்துடன் முடிவுக்கு வந்தது.

No comments:

Post a Comment