Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, December 26, 2013

மீட்டும் யாழினிது…



மீட்டும்     யாழினிது…


குழலினிது யாழினிது என்பார் தம் மக்கள் மழலைச் சொல் கேளாதார்’ என்று ஒரு குறள் உண்டு. யாழின் இசை இனியது அதைவிட இனிது மழலைச் சொல் என்று யாழின் பெருமையையும் கூறுவர். யாழ் என்பது பண்டைய இசைக்கருவிகளில் மிகச் சிறப்பு வாய்ந்தது ஆகும். யாழ் என்பதற்கு நரம்புகளால் ஆக்கப்பட்டது அல்லது கட்டப்பட்டது என்பது பொருள். பொதுவாக இசையைத் தோற்றுவிக்கும் கருவிளைத் தோற்கருவி, துளைக்கருவி, நரம்புக் கருவி, மிடற்றுக் கருவி என்று வகைப்படுத்துவர்.
இவற்றில் நரம்புக் கருவியாகிய யாழே, தமிழர் வாசித்த முதல் இசைச் கருவியாகும். நரம்புக்கருவி
களின் வளர்ச்சிக்குக் காரணமான பண்டைய கருவி யாழ். இது யாளி என்று பண்டைக்கால மிருகத்தின் தலையைப் போல் செய்யப்பட்டிருந்ததால் யாழ் என்ற பெயர் பெற்றது. இக்கருவி முற்றிலுமாக மறைந்து அதன் பரிணாமமாக வளர்ந்த வீணை இன்று நரம்பிசைக் கருவிகளில் முதன்மையிடம் வகிக்கிறது.
குறிஞ்சி நிலத்தில் பயன்பாட்டில் இருந்த கருவிகளில் ஒன்று வில். வில்லில் முறுக்கேற்றிக் கட்டப்பெற்ற நாணிலிருந்து அம்பு செல்லும்பொழுது தோன்றிய இசையே யாழின் உருவாக்கத்திற்கு மூலமாக இருந்திருக்க வேண்டும். இந்த வில்லே வில் யாழாக மலர்ந்தது. யாழ் குறிஞ்சி நிலத்தில் தோன்றியது என்பதே பொருத்தமுடையதாகும். ஏனெனில் குறிஞ்சி நிலத்தில் தான் வேட்டைத் தொழில் மிகுதியாக நடைபெற்றது. இந்த வில்யாழ் மனிதனின் முயற்சி
யால், உழைப்பால் பல்வகை யாழாக மலர்ந்தது.
யாழின் வடிவத்தை கோவில்களில் உள்ள சிற்பங்களிலிருந்தும், ஓவியங்களிலிருந்தும் அறிய முடிகிறது. சங்க இலக்கியங்களான புறநானூறு, கலித்தொகை, பரிபாடல் மற்றும் ஆற்றுப்படை நூல்களிலும், திருக்குறளிலும் சிலப்பதிகாரம், பெருங்கதை, சீவகசிந்தாமணி முதலிய காப்பியங்களிலும் பக்தி இலக்கியங்களிலும் யாழ் பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளன. மேலும் யாழின் வகைகளைப் பேரியாழ், சீறியாழ், மகரயாழ், சகோடயாழ் என்று அறிய முடிகிறதே ஒழிய அதன் வடிவினை அறிய முடியவில்லை.
வில்லின் அடியாகத் தோன்றிய வில்யாழ் முதலில் குறிஞ்சி நிலத்தில் தோன்றியது என்றாலும் நாளடைவில் முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற நான்கு நிலங்களுக்கும் உரியதாக அமைந்தது. யாழினை இசைப்பதற்கென்றே ‘பாணர்’ என்ற குழு இருந்ததை இலக்கியங்கள் வாயிலாக அறியலாம். யாழ் மீட்டுவதையே தொழிலாக உடையவர்கள் என்றாலும் அவர்கள் யாழ்ப்பாணர், இசைப்பாணர், மண்டைப்பாணர் என்று மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டனர்.
அதில் யாழ்ப்பாணர், இசைக்கும் யாழின் அடிப்படையில் பெரும்பாணர், சிறுபாணர் என்று வகை படுத்தப்பட்டனர். யாழ் இசைக்கலைஞர்களான பாணர்கள் பெயரிலேயே இரண்டு சங்கநூல்கள் தோன்றியுள்ளதில் இருந்து யாழ் மற்றும் பாணர்களின் மதிப்பை அறியமுடிகிறது. அந்நூல்களில், மன்னர்கள் பாணர்களைப் போற்றியும், புரந்தும் வந்துள்ளமையைக் காட்டுகின்றன. யாழ் பாடிக் கொண்டே இசைக்கும் கருவியாக இருந்துள்ளது. சாதாரண மக்களிடம் புழக்கத்தில் இருந்த யாழ் ஒரு காலக் கட்டத்தில் தெய்வத்தன்மை பெற்று வணக்கத்திற்கு உரியதாக மாறியது.
தமிழர்கள் யாழினின்று எழும் இசைக்கே முதன்மை அளித்தனர். அதனாலேயே ஒரு நரம்பில் தொடங்கி மூன்று, ஐந்து, ஏழு….. என்று ஆயிரம் நரம்புகள் கொண்ட யாழ் உருவாகியது. தொடக்கத்தில் வடிவம் பற்றிய சிந்தனை இல்லையென்றாலும் பின்னர் மகரயாழ், செங்கோடு யாழ் எனப் பல வகையான யாழ்கள் தோன்றின. இவ்வாறாக யாழ் கி.பி.9ஆம் நூற்றாண்டுவரை பலவகையாக வளர்ந்தது. இதற்குப் பிறகு வடிவில் ஓரிரு வேறுபாடுகள் கொண்டு வீணையாக வளர்ச்சி கண்டது. அந்த வீணையே இசையுலகில் இன்றளவும் முதலிடம் வகிக்கிறது.
இலக்கியங்களில் யாழ்
அகநானூறு, புறநானூறு, நற்றிணை, பெரும்பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பரிபாடல், மலைபடுகடாம் முதலிய இலக்கியங்களில் யாழ் வாசிப்பு, பல்வகை யாழ்கள் தொடர்பான குறிப்புகள் பல இருக்கின்றன. சிலப்பதி
காரத்தில் யாழ் வகைகளும், யாழின் உறுப்புகள் பற்றியும், யாழ் நரம்புகளை பரிசோதித்து சுருதி கூட்டிப் பின்னர் யாழை எப்படி இசைப்பது என்பதற்கான இலக்கணங்களும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. சீவக சிந்தாமணியில் காந்தர்வதத்தை என்னும் இசையில் தேர்ந்த பெண்ணுக்கும் சீவகனுக்கும் இடையில் நடக்கும் யாழிசைப் போட்டி பற்றிய பாடல்களில், யாழுக்கு நேரக்கூடிய குற்றங்கள், யாழுடன் சேர்ந்து பாடுவதற்கான இலக்கணம் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன.
திருமுறையாசிரியர்களின் பதிகங்களில் யாழ் இறையாடலுக்குப் பயன்பட்ட இசைக்கருவியெனப் பல இடங்களில் குறிக்கிறார்கள். திருஞான சம்பந்தர் இயற்றிய தேவாரப்பதிகங்களைத் திருநீலகண்ட யாழ்ப்பாணர் அழகாக யாழில் வாசித்திருக்கின்றார். 1947 இல் ஈழத்தவரான சுவாமி விபுலாநந்தர் யாழ் நூல் என்னும் தமது இசைத் தமிழ் நூலில் யாழைப் பற்றி பல விரிவான ஆய்வுகளைத் தொகுத்துள்ளார்.
யாழின் அமைப்பு
மரத்தினால் ஆன யாழ் சின்னம் யாழ் ஒரு மீட்டு வாசிக்கக்கூடிய நரம்புக்கருவியாகத் தெரிகிறது. இதன் இசையொலி பெருக்கி (க்ஷீமீsஷீஸீணீtஷீக்ஷீ) தணக்கு எனும் மரத்தால் செய்யப்பட்டது. இது படகு வடிவமாய் இருக்கும். மேலே தோலால் மூடப்பட்டிருக்கும். இந்தத் தோலுக்குப் போர்வைத்தோல் என்று பெயர். போர்வைத்தோலின் நடுவிலுள்ள மெல்லிய குச்சியின் வழியாக நரம்புகள் கிளம்பி மேலே உள்ள தண்டியுடன் பிணைக்கப்பட்டிருக்கும். சில யாழ்களில் முறுக்காணிகள் இருந்தன. அத்தகைய யாழ்களில் நரம்புகள் தண்டியின் துவாரங்களின் வழியாகச் சென்று முறுக்காணிகளில் சுற்றப்பட்டிருக்கும். சிலவற்றில் நரம்புக்கட்டு அல்லது வார்க்கட்டு தண்டியில் வரிசையாகக் காணப்படும். வார்க்கட்டுகளை மேலும் கீழுமாக நகர்த்தி நரம்புகளைச் சுருதி கூட்டினர்.
சங்க நூல்கள் யாழின் உறுப்புகளாக, பத்தல், வறுவாய், யாப்பு, பச்சை, போர்வை, துரப்பமை, ஆணி, உந்து, நரம்பு, கவைக்கடை, மருப்பு, துவவு, ஆகியவற்றைக் குறிப்பிடுகின்றன. பூவை இரண்டாகப் பிளந்தது போன்ற உட்பக்கம், பாக்கு மரப்பாளையிலுள்ள கண்களைப் போன்ற துளை, இணைத்த வேறுபாடு தெரியாதபடி உருக்கி ஒன்றாய்ச் சேர்த்தது போன்ற போர்வை, நீர் வற்றிய சுனையுள் இருண்டிருப்பது போன்ற உட்பாகம் போன்றவற்றை கொண்டிருக்கும். மேலும் நாவில்லாத வாய்ப்பகுதி பிறைநிலவு போலப் பிளவு பட்ட பகுதி, வளைசேர்ந்த பெண்களின் முன்கையைப் போன்ற வார்க்கட்டு, நீண்ட தண்டு, பொன்னுருக்கிச் செய்தது போன்ற நரம்புகள் கொண்ட யாழ் என்று வர்ணிக்கப்பட்டுள்ளதை வைத்து யாழின் தோற்றத்தை ஓரளவு காண முடிகிறது.
ஆரியர்களின் ஆதிக்கமும் வீணையின் வளர்ச்சியும் தமிழர்களின் இசைக் கருவிகளின் முதன்மையான யாழினை முற்றிலுமாக அழித்துவிட்டன. இந்த நிலையில் நமது இசைக் கருவியான யாழினை இலக்கியங்கள் வாயிலாக மீட்டெடுத்து நினைவு கூர்வது தேவையான ஒன்றதானே!

No comments:

Post a Comment