Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, December 20, 2013

முருங்கைக்காயை முறுக்கிப் பார்த்தும், மாங்காயை தட்டிப்பார்த்தும் வாங்கவும்.


கோவைக்காய்: பொரியல் செய்யப் பயன்படுத்தும் கோவைக்காய்களை முழுக்க பச்சை நிறத்தில் இருந்தால் மட்டும் வாங்குங்கள். கோவைக்காயில் ஆங்காங்கே லேசாக சிவப்பு இருந்தால் அது உடனே பழுத்துவிடும். ருசியும் குறைவாகத்தான் இருக்கும்.
முருங்கைக்காய்: முருங்கைக்காயை சற்றே முறுக்கிப் பார்த்து வாங்க வேண்டும். முறுக்கும்போது நன்றாக வளைந்து கொடுத்தால் காய் முற்றவில்லை என்று தெரிந்து கொள்ளலாம்.

காலிஃப்ளவர்: காலிஃப்ளவர் வாங்கும்போது பூக்களுக்கு இடையே இடைவெளி இல்லாமல் அடர்த்தியாக இருப்பதாகப் பார்த்து வாங்க வேண்டும். இதில்தான் காம்புகளும் தடிமனாக இருக்காது.
மாங்காய்: மாங்காயை காதருகே வைத்து தட்டிப் பாருங்கள். தேங்காயில் வருவது போலப் பெரிதாகச் சத்தம் வர வேண்டும். அதில்தான் கொட்டை சிறிதாக இருக்கும்.
சர்க்கரை வள்ளிக் கிழங்கு: சர்க்கரை வள்ளிக் கிழங்கு வாங்கும்போது ஆங்காங்கே அடிபட்டு கறுப்பாகி இருப்பதை தவிர்த்து வாங்குங்கள். இது கசக்கும். உருண்டையான கிழங்குகள்தான் அதிகம் இனிக்கும்.
பூண்டு: பூண்டை வாங்கும்போது பல் பல்லாக வெளியே தெரிவதையே வாங்க வேண்டும்.
அவரை: நாட்டு அவரையைத் தொட்டுப் பார்த்து விதைகள் பெரிதாக இருக்கும் காய்களைத் தவிர்க்கவும். இளசாகப் பார்த்து வாங்கினால்தான் நார் அதிகமாக இருக்காது.
உருளைக் கிழங்கு: இந்தக் கிழங்கு முளை விடாமல் பச்சை, பச்சையாக நரம்பு ஓடாமல் இருக்க வேண்டும். லேசாகக் கீறினாலே தோல் உடனே கையோடு பெயர்ந்து வர வேண்டும்.
சேப்பங்கிழங்கு: முளைவிட்டதுபோல் ஒரு முனை நீண்டிருக்கும் சேப்பங்கிழங்கு சமையலில் சுவை சேர்க்காது. சேப்பங்கிழங்கு வாங்கும்போது உருண்டையாக இருப்பனவற்றைப் பார்த்து வாங்குங்கள்.
கருணைக் கிழங்கு: கருணைக் கிழங்கை முழுசாக வாங்கும்போது பெரிய சைஸில் வாங்குவது நல்லது. வெட்டிய கிழங்கை வாங்கும்போது அதன் உள்பகுதி இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.
பெரிய வெங்காயம்: பெரிய வெங்காயம் வாங்கும்போது அதன் மேல் பகுதியில் இருக்கும் தண்டுப் பகுதி பெரிதாக இல்லாமல் பார்த்து வாங்க வேண்டும்.
பச்சை மிளகாய்: நீளமான பச்சை மிளகாயில் சற்றே காரம் குறைவாக இருக்கும். சற்றே குண்டான பச்சை மிளகாயில் காரம் தூக்கலாக இருக்கும். இதை சமையலில் சேர்க்கும்போது வாசனையும் பிரமாதமாக இருக்கும்.
பீர்க்கங்காய்: பீர்க்கங்காயை அடிப்பகுதி குண்டாக இல்லாமல் காய் முழுவதும் ஒரே சைஸில் இருக்கும்படி பார்த்து வாங்க வேண்டும்.
கத்தரிக்காய்: பெரிய கத்தரிக்காய் வாங்கும்போது தோல் சாஃப்ட்டாக இருக்கிறதா என்று பார்த்து வாங்க வேண்டும். முற்றல் கத்தரிக்காயின் தோல் ரஃப்பாக இருக்கும்.
புடலங்காய்: புடலங்காயைக் கெட்டியாக இருப்ப
தாகத்தான் வாங்க வேண்டும். அதில்தான் விதைப்பகுதி
குறைவாகவும் சதைப் பகுதி அதிகமாகவும் இருக்கும்.
பரங்கிக்காய்: பரங்கிக்காயைப் பொறுத்தவரை உள்ளே இருக்கும் விதைகள் முற்றியதாகப் பார்த்து வாங்குவதுதான் நல்லது.
தக்காளி: நன்றாக சிவந்த தக்காளிகளாகப் பார்த்து வாங்க வேண்டும். ஒரு வாரம் வரை இந்த பெங்களூரு தக்காளி கெடாது என்பதால் நன்கு பழுத்த பழமாகவே பார்த்து வாங்கலாம்.
வாழைத்தண்டு: பொரியலுக்கும் சூப்புக்கும் பயன்படும் வாழைத் தண்டின் அடிப்பகுதியில் நார் அதிகமாக இருக்கும் என்பதால் மேல் பகுதியாகப் பார்த்து வாங்குங்கள். உள்ளிருக்கும் தண்டுப் பகுதி சிறுத்து இருப்பதாக பார்த்து வாங்கினாலே போதும்.
பீன்ஸ்: பீன்ஸில் இரண்டு வகைகள் உள்ளன. பிரெஞ்ச் பீன்ஸில் நார் அதிகமாக இருக்கும்.     
புஷ் பீன்ஸில் நார் இருக்காது. அதிகம் பேர் விரும்புவது புஷ் பீன்ஸ்தான். இதில் தோல் சாஃப்ட்டாக இருப்பதே சுவை அதிகம் தரும்.
முள்ளங்கி: முள்ளங்கியை லேசாகக் கீறிப்பார்த்தால் தோல் மென்மையாக இருக்க வேண்டும். அதுவே இளசு.
வெள்ளரி: வெள்ளரிக்காயின் மேல் நகத்தால் குத்திப் பார்த்தால் நகம் உள்ளே இறங்க வேண்டும். அப்படிப்பட்ட காய்களில்தான் விதைகள் குறைவாக இருக்கும்.
பாகற்காய்: பெரிய பாகற்காயைப் பொறுத்தவரை உருண்டையான ஷேப் காய்களை வாங்குவதைவிட தட்டையான நீண்ட காய்களாகப்ப் பார்த்து வாங்க வேண்டும்.
சௌசௌ: சௌசௌ வாங்கும்போது அதன் வாய் போன்ற பகுதியில் இருக்கும் விரிசல்கள் பெரிதாக இருக்காதபடி பார்த்து வாங்க வேண்டும். விரிசல்கள் அதிகமாக இருந்தால் காய் முற்றலாக இருக்கும் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
வாழைப்பூ: வாழைப்பூவின் மேல் இதழைப் பிரித்தால் பூக்கள் கறுப்படிக்காமல் வெள்ளை நிறத்தில் இருந்தால்தான் அது புத்தம் புதுசாக இருக்கிறது என்று அர்த்தம்.
இஞ்சி: லேசாகக் கீறிப்பார்த்தால் தோல் பெயர்ந்து வருவது மாதிரியே இருக்க வேண்டும். அப்போதுதான் நார்ப்பகுதி குறைவாக இருக்கும். இஞ்சி சமையலில் சேர்க்க நன்றாகவும் இருக்கும்.

No comments:

Post a Comment