Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, July 28, 2015

கலாமின் கடைசி 5 மணிநேரங்கள்!

'Funny guy! Are you doing well? ' - அப்துல் கலாமின் கடைசி 5 மணிநேரங்கள்!

"நாங்கள் இருவரும் பேசி 8 மணிநேரங்களுக்கு மேல் ஆகிறது. தூக்கம் வரவில்லை. அவருடனான நினைவுகள் கண்ணீராய் வருகிறது. ஜூலை 27. மதியம் 12 மணிக்கு கவுகாத்தி விமானத்தில் அமர்ந்தோம். அவர் 1A இருக்கையில் அமர, நான் 1C இருக்கையில் அமர்ந்திருந்தேன். அவர் கருப்பு வண்ண ‘கலாம் சூட்’-ஐ அணிந்திருந்தார். ‘அருமையான கலர்!’ என்றேன். 
 
2.5 மணிநேரப் பயணம். எனக்கு டர்புலென்ஸ் ஆகாது. ஆனால், கலாமுக்கு அது ஒரு பிரச்னையே இல்லை. ஒவ்வொரு முறை டர்புலென்ஸ் காரணமாக விமானம் ஆட்டம் காணும்போது, நான் பயத்தில் அமர்ந்திருக்க, ஜன்னலை மூடிவிட்டு, 'இப்போது பயம்  போயிருக்குமே! என்பார்.  
கவுகாத்தியில் இருந்து ஷில்லாங்கில் உள்ள இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டுக்கு 2.5 மணிநேரம் காரில் பயணம். மொத்தமான 5 மணிநேரப் பயணத்தில் நாங்கள் நிறைய பேசினோம், விவாதித்தோம். இதுவரை நூற்றுக்கணக்கான முறை அவருடன் பயணித்திருக்கிறேன். ஒவ்வொரு முறையுமே விஷேசமான அனுபவமாகவே இருக்கும்.   
இந்தக் கடைசி பயணத்தில் இருந்து 3 முக்கிய சம்பவங்களை இங்கு பகிர்ந்துகொள்கிறேன்...  
முதலாவதாக, பஞ்சாபில் நடந்த தீவிரவாதத் தாக்குதலைப் பற்றி மிகவும் கவலையுடன் இருந்தார் டாக்டர் கலாம். அப்பாவி உயிர்கள் பலியானது அவருக்கு பெரும் வேதனையை அளித்திருக்கிறது. ஷில்லாங் ஐஐஎம்மில் அவர் பேசவேண்டிய தலைப்பு ‘Creating a Livable Planet Earth’. இதனுடன் பஞ்சாப் சம்பவத்தை இணைத்து என்னுடன் பேசினார். ‘பொல்யூஷனைவிட மனிதர்களின் வேலைகள்தான் இந்த உலகுக்கு பெரிய அச்சுறுத்தல்’ என்றார்.  
'வன்முறை, மாசு, மனிதர்களின் பொறுப்பில்லாத நடவடிக்கைகள்  போன்றவை தொடர்ந்தால் நாம் உலகைவிட்டு வேறு எங்காவது சென்றுவிட வேண்டியதுதான்...' என்ற ரீதியில் பேசிக்கொண்டிருந்தோம். ‘இப்படியே போனால் 30 வருடங்கள்தான். இளைஞர்களாகிய நீங்கள்தான் ஏதாவது செய்யவேண்டும். இது உங்களுடைய எதிர்கால உலகம் இல்லையா?’ என்றார் கலாம்.   
இரண்டாவது. கடந்த 2 நாட்களாகவே பாராளுமன்றத்தின் நடவடிக்கைகள் குறித்து கலாம் கவலையாக இருந்தார். ‘நான் குடியரசுத் தலைவராக இருந்தபோது 2  முறை ஆட்சிகள் மாறியது.  பதவியில் இல்லாதபோதும் கவனித்துக்கொண்டேதான் இருக்கிறேன். பாராளுமன்றம் செயலிழந்துதான் இருக்கிறது. இது சரியல்ல. வளர்ச்சிக்கான அரசியல்தான் பாராளுமன்றத்தில் நடைபெற வேண்டும். இதற்கான வழியை நான் கண்டுபிடிக்கவேண்டும்’ என்றார். 
உடனே, என்னை ஷில்லாங் ஐஐஎம் மாணவர்களுக்காக, சர்ப்ரைஸாக ஒரு அசைன்மென்ட் கேள்வியைத் தயார் செய்யச் சொன்னார். இந்தக் கேள்வியை தன்னுடைய உரை முடித்தபின்தான் கலாம் மாணவர்களுக்கு சொல்வதாக இருந்தார். நம் பாராளுமன்றம் இன்னும் சிறப்பாக செயல்பட 3 புதுமையான ஐடியாக்களை மாணவர்கள் தரவேண்டும் என்பதே அது. ஆனால், ‘என்னிடமே இதற்கு பதில் இல்லாதபோது, எப்படி மாணவர்களிடம் பதில் கேட்பது?’ என்று வருந்தினார் கலாம். அடுத்த 1 மணிநேரம் இதுகுறித்து நாங்கள் விவாதித்தோம். இந்த ஆரோக்கியமான விவாதத்தை எங்களுடைய அடுத்த புத்தகமான ‘அட்வான்ட்டேஜ் இந்தியா’வில் சேர்க்கலாம் என பேசிக்கொண்டோம்.  
மூன்றாவது. இங்குதான் கலாம்-ன் உண்மையான, அழகான மனதை தெரிந்துகொண்டேன். ஆறேழு கார்கள் கொண்ட அணிவகுப்பில், 2வது காரில் நாங்கள் இருவரும் பயணித்துக்கொண்டிருந்தோம். எங்களுக்கு முன்பு, ஒரு ஜிப்ஸியில் 3 பாதுகாப்பு வீரர்கள் இருந்தார்கள். அதில் ஒருவர் மட்டும் பாதுகாப்புக்காக ஜிப்ஸி மேல் துப்பாக்கியுடன் நின்று கொண்டு வந்தார். ஒருமணிநேரம் இருக்கும். ‘ஏன் அவர் நின்றுகொண்டே இருக்கிறார். சோர்வடைந்துவிடுவாரல்லவா? பார்ப்பதற்கு ஏதோ தண்டனைக்காக நிற்பதுபோல் இருக்கிறது. உடனே அவருக்கு வயர்லெஸ்ஸில் அவரை அமரச் சொல்லி தகவல் அனுப்புங்களேன்’ என்றார் கலாம். பாதுகாப்புக்காக அவர் நிற்கக்கூடும் என்று கலாமை சமாதானப்படுத்தினேன். ஆனால், அவர் கேட்கவில்லை. எனவே, ரேடியோ மூலம் தகவல் அனுப்பினோம். அது வேலையும் செய்யவில்லை. அடுத்த ஒன்றரை மணிநேரப் பயணத்தில் மூன்று முறை அவரை அமரச்சொல்லுமாறு கை சைகை கொடுக்கச் சொல்லி என்னிடம் நினைவூட்டினார். ஆனால், எதுவும் வேலைக்கு ஆகவில்லை. எனவே, ‘நான் அந்த பாதுகாப்பு வீரரை சந்தித்து நன்றி சொல்லவேண்டும்’ என்றார்.
ஷில்லாங் சென்றவுடன் அந்த பாதுகாப்பு வீரரைக் கண்டுபிடித்து கலாமிடம் அழைத்துச் சென்றேன். டாக்டர் கலாம் அந்தப் பாதுகாப்பு வீரரை வரவேற்று வாழ்த்தினார். கைகுலுக்கி ‘thank you buddy’ என்றார். ‘நீ சோர்வாக இருக்கிறாயா? ஏதாவது சாப்பிடு. என்னால் நீ அவ்வளவு நேரம் நிற்க வேண்டியிருந்தது எனக்கு வருத்தமாக இருக்கிறது’ என்றார். கலாம் இப்படிச் சொன்னது அந்த வீரருக்கு ஆச்சரியமாக இருந்தது. வார்த்தைகள் இல்லாமல், ‘சார். உங்களுக்காக இன்னும் 6 மணிநேரம்கூட நிற்பேன்' என்றார். 
பின்னர், லெக்சர் அறைக்கு சென்றோம். ‘எப்போதும் மாணவர்களைக் காக்கவைக்ககூடாது!’ என்று அடிக்கடி சொல்வார் கலாம். எனவே, அவருடைய மைக்கை உடனடியாக செட் செய்து கொடுத்து, லெக்சர் குறித்து விளக்கினேன். மைக் செட் செய்யும்போது ‘Funny guy! Are you doing well?” என்றார் கலாம். அவர் ‘Funny guy’ என்று சொன்னால் அதற்கு பல அர்த்தங்கள் உள்ளன. அவர் சொல்லிய விதத்தைப் பொறுத்து அர்த்தங்கள் மாறுபடும். நாம் நன்றாக இயங்கினாலோ, ஏதாவது சொதப்பிவிட்டாலோ என பல தருணங்களுக்கும் இதைச் சொல்வார் கலாம். இல்லாவிட்டால் சும்மா ஜாலிக்காகவும் சொல்வார். அவருடன் இருந்த 6 வருடங்களில் ‘Funny Guy’ என்ற அவருடைய வார்த்தை பிரயோகத்தை நான் முழுவதும் புரிந்துவைத்திருந்தேன். ஆனால், இதுதான் இறுதி முறை என்பது எனக்கு அப்போது புரியவில்லை. 
"Funny guy! Are you doing well?” என்றார் ‘ஆம்’ என்றேன். அவைதான் கலாம் என்னிடம் கூறியகடைசி வார்த்தைகள். 
மேடைப் பேச்சில் 2 நிமிடங்கள் பேசியிருப்பார். ஒரு வாக்கியத்தை  முடித்துவிட்டு, நீண்ட இடைவெளி விட்டார். நான் அவரைப் பார்த்தேன். மேடையில் இருந்து அப்படியே சரிந்தார். 
அவரை தூக்கி நிறுத்தினோம். மருத்துவர் ஓடி வந்தார். எல்லா விதத்திலும் முயற்சித்தோம். அவருடையை கடைசி தருணத்தை மறக்கவே முடியாது. முக்கால்வாசி கண்கள் மூடியிருந்த நிலையில் அவருடைய பார்வை இன்னும் நினைவில் உள்ளது. ஒருகையில் அவர் தலையைப் பிடித்துக்கொண்டிருந்தேன். அவருடைய கை என் விரல்களைப் இறுக்கிப் பிடித்திருந்தன. அவர் முகத்தில் ஒரு பேரமைதி. அவர் கண்களில் இருந்து ஞானம் பிரகாசித்தது. அவர் ஒருவார்த்தை பேசவில்லை. அவர் வலியையும் வெளிக்காட்டவில்லை. அவர் வாழ்க்கையின் அர்த்தம் மட்டுமே எங்களுக்குப் புரிந்தது. 
அடுத்த 5 நிமிடங்களில் அருகில் இருந்த மருத்துவமனைக்கு வந்துசேர்ந்தோம். சில நிமிடங்கள் கழித்து, கலாம் நம்மைவிட்டு பிரிந்துவிட்டார் என்று மருத்துவர்கள் சொன்னார்கள். கடைசி தடவையாக அவர் கால்களைத் தொட்டு வணங்கினேன். என் நண்பர் , என் வாழ்வின் வழிகாட்டி விடைபெற்றுவிட்டார். என் நினைவுகளிலும், அடுத்த பிறப்பிலும் உங்களை மீண்டும் சந்திப்பேன் சார்!
இப்போது என் நினைவுகள் என்னை ஆக்கிரமித்தன.   
'நீ இளைஞன். நீ என்னவாக நினைவில் கொள்ளப்பட விரும்புகிறாய்?’  என்று அடிக்கடி என்னைக் கேட்பார். நானும் ஒவ்வொரு முறையும் அவரைக் கவர்வதற்காக வித்தியாசமான பதில்களைக் கண்டுபிடிப்பேன். ஒருநாள் பொறுமையிழந்து அவரிடமே திரும்பக் கேட்டேன்.‘முதலில் நீங்கள் சொல்லுங்கள். எதற்காக மக்கள் உங்களை நினைவில் வைத்திருக்க விரும்புகிறீர்கள்? குடியரசுத் தலைவர், விஞ்ஞானி, எழுத்தாளர், ஏவுகணை நாயகன், இந்தியா 2020….சொல்லுங்கள்!’ என்றேன். 
'ஆசிரியர்’ என்றார் கலாம். 
2 வாரங்களுக்கு முன்பு அவருடைய நண்பர்களைப் பற்றி அவரிடம் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது,’பிள்ளைகள்தான் பெற்றோரைப் பார்த்துக்கொள்ளவேண்டும். சில சமயங்களில் அப்படி நடக்காதது வருத்தமாக இருக்கிறது’. ஒரு சின்ன இடைவெளிக்குப் பின்பு, ‘2 விஷயங்கள் அனைத்து பெரியோர்களுக்கும். எப்போதும் உங்கள் இறுதிப் படுக்கையில் பணத்தை விட்டுச் செல்லாதீர்கள். இது குடும்பத்தின் மகிழ்ச்சியைக் குலைத்துவிடும். இரண்டாவது. வாழ்வின் முடிவில் தான் நினைத்த வேலையைச் செய்துகொண்டே மரணிக்கிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன். நம் கடைசி தருணங்கள் டக்கென்று முடிந்துவிடவேண்டும்'  என்றார். 
இன்று, அவர் விரும்பியதை செய்தபடியே இறுதிப் பயணதை மேற்கொண்டிருக்கிறார். கற்பித்தல். இதற்காகத்தான் தான் நினைவு கொள்ளப்படவேண்டும் என்று விரும்பினார் கலாம். அவருடைய கடைசி தருணத்தில், அவருக்குப் பிடித்தவாறு, மேடையில் கற்பித்துக்கொண்டே மறைந்துவிட்டார் கலாம். ஒரு மகத்தான ஆசிரியராக நம்மை விட்டுப் பிரிந்திருக்கிறார். அவருடைய வங்கிகணக்கில் ஒன்றுமில்லை. நமக்கான வாழ்த்துக்களும், மக்களுக்கான காதலும் மட்டுமே அவர் விட்டுச்சென்ற சொத்துகள். வாழ்க்கையில் வெற்றிபெற்றுவிட்டார் அப்துல் கலாம். 
உங்களுடன் நான் பகிர்ந்துகொண்ட தருணங்கள், உங்களுடைய தன்னடக்கம், எதையும் தெரிந்துகொள்ள விரும்பும் ஆர்வம் இனி எனக்கு தரிசிக்கக் கிடைக்கப் போவதில்லை. வாழ்க்கையின் அர்த்தத்தை வாழ்ந்த விதத்திலும், வார்த்தைகளிலும் நீங்கள் எனக்கு சொல்லிக்கொடுத்தீர்கள். நாம் விமானத்தைப் பிடிக்க விரைந்த தருணங்கள், நம் பயணங்கள், நம் விவாதங்கள் இனி நினைவுகள்தான். எனக்கு கனவுகள் கொடுத்தீர்கள்.  இப்போது நீங்கள் இல்லை. ஆனால், கனவுகளை நனவாக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது! "
உங்கள் மாணவன்,
ஶ்ரீஜன் பால் சிங்  
 கற்றுக்கொள்வோம் கலாம்!
தமிழில் ர. ராஜா ராமமூர்த்தி

No comments:

Post a Comment