Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, August 28, 2015

இயற்கை விவசாயத்தில் லட்சங்களைக் குவிக்கும் சாஃப்ட்வேர் இன்ஜினீயர்:


விவசாயத்தைக் கைவிட்டு நகர்ப்புறங்களுக்கு குடிபெயரும் இன்றைய சூழலில் சாஃப்ட்வேர் இன்ஜினியர் இப்போது விவசாயத்துக்குத் திரும்பியுள்ளார்.
அதுவும் இயற்கை வேளாண் முறையின் மூலம் லட்சங்களைக் குவிக்கும் லாபகரமான தொழிலாகவும் விவசாயத்தை மாற்றி மற்றவர்களுக்கு முன்னோடியாகத் திகழ்கிறார் மருதமுத்து.
இயற்கை விவசாயத்தைக் கடைப்பிடித்து தென்னை சாகுபடி செய்தால் ஒரு தலைமுறை உட்கார்ந்து சாப்பிடலாம் என்பதை இவர் நிரூபித்துள்ளார். பட்டதாரி ஆசிரியரான தனது மனைவியுடன் கிராமத்தில் விவசாயத்தில் ஈடுபட்டு விவசாயமும் லாபகரமான தொழில்தான் என்பதை நிரூபித்துள்ளார்.
திண்டுக்கல் அருகே தவமடையில் 9 ஏக்கர் நிலத்தை வாங்கி அதில் இயற்கை முறையில் தனது மனைவி வாசுகியுடன் இணைந்து தென்னை, ரோஜா, சம்பங்கி மற்றும் காய்கறிகளை சாகுபடி செய்து வருகிறார்.

தனது அனுபவத்தைப் பற்றி அவர் கூறியது:
“ஒவ்வொருஇளைஞர்களிடம் விவசாயி என்ற உள்ளுணர்வு தூங்கிக் கொண்டிருக்கிறது. அதைத்தட்டி எழுப்பினால் அவன் விவசாயியாகி விடுவான். சென்னையில் சாஃப்ட் வேர்இன்ஜினியராக லட்சக்கணக்கில் சம்பாதித்தாலும், மனைவி, குழந்தைகளுடன் நேரத்தை செலவிட முடியவில்லை.
ஓய்வே இல்லாமல் ஓடிய நகர்ப்புற வாழ்க்கை மீது எனக்கு ஒரு கட்டத்தில் சலிப்பு தட்டியது. இந்தத் தொழிலை விட்டால் அடுத்து விவசாயம்தான் என்னுடைய தேர்வாக இருந்தது. அன்றாடம் விவசாயிகள் தற்கொலைனு வரும் செய்திகள் என்னை மிரட்டின. விவசாயித்தில் கால் அனாகாசு கூட மிஞ்சாதுப்பா என்று பலர் கூறினர்.
இயற்கை விவசாயம் என்றதும்,அதுவெல்லாம் நம்ம நிலத்தில் சாத்தியமில்லைனு பயமுறுத்தினர். விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்றி ஜெயித்துக் காட்ட வேண்டும் என்ற வெறி எனக்குள் இருந்தது. சொந்த ஊரில் 9 ஏக்கர் நிலம் வாங்கினேன். விவசாயம் செய்யத் தொடங்கினேன். படிச்ச படிப்புக்கு ஏற்ற வேலையை பார்க்காமல் விவசாயம் செய்ய வந்துட்டான்னு என்னை ஏளனம் செய்யாதவர்களே கிடையாது.
இன்று அவர்களே என்னிடம், என்ன பயிர் செய்யலாம், என்ன ரகம் பயிரிடலாம் என ஆலோசனை கேட்கின்றனர்.அந்த அளவுக்கு என்னுடைய தோட்டத்தில் இயற்கை முறையில் பயிரிட்ட தென்னை, சம்பங்கி, கால உணவு பயிர்களை ஒவ்வொன்றிலும் கைநிறைய வருமானம்கிடைக்கிறது.
கூலி வேலைக்கு ஆட்களை வைத்துக் கொள்வதில்லை. நானும்,எனது மனைவியுமே நாற்று நடுவோம். தண்ணீர் பாய்ச்சுவோம். அறுவடை செய்வோம். மார்க்கெட்டுக்கு எடுத்துச் செல்வோம். பெருமைக்காக சொல்லவில்லை. என்னை பார்த்து 100 இளைஞர்கள் விவசாயத்திற்கு வரனும்னு நினைச்சேன். இன்று ஒவ்வொரு மாவட்டத்திலும் 20, 30 படித்தவர்கள் விவசாயம்செய்கின்றனர். இது என்னுடைய இயற்கை விவசாயத்திற்கு கிடைத்த வெற்றி என்றார்.
திண்டுக்கல்லில் கடந்த 4 ஆண்டாக மழையே இல்லை. மாவட்டத்தில் 60
சதவீதம்தென்னை மரங்கள் அழிந்துவிட்டன. ஆனால், என்னுடைய தோட்டத்தில் ஒரு தென்னமரம் கூட பட்டுப் போகவில்லை. மொத்தம் 250 தென்னை மரங்கள் வைத்துள்ளேன். ஒரு மரத்தில் சாதாரணமாக 40 காய் கிடைக்கிறது. மாதம் 45 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது. இவ்வளவுக்கும் தண்ணீரே பாய்ச்சுவதில்லை.
மருதமுத்துவின் இயற்கை விவசாய தென்னந்தோப்பு பராமரிப்பு செலவே இல்லை. அதற்குக் காரணம், இயற்கை விவசாயம் முறையில் செய்த நடவுமுறை. 4-க்கு 4 அடி என்ற அளவில் குழி தோண்டி, அதில் கப்பி மணல் கொட்டினேன். மாட்டு சாணம், சிறுநீரை அடி உரமாக போட்டு தென்னை மரக்கன்றுகளை நட்டேன். தென்னை மரம் அதிக தண்ணீரை ஈர்க்கும். கப்பி மணல் போட்டதால் மழைக் காலத்தில் தண்ணீரை ஈர்த்து வைத்துக் கொண்டு 3 முதல் 6 மாதம் வரை மரத்திற்கு தண்ணீர் கொடுக்கிறது.
ஒரு தென்னை மரத்தின் வயது 80 ஆண்டு.
மனிதனின் சராசரி ஆயுள் 60 ஆண்டு.
இயற்கை விவசாயத்தில் தென்னை மரங்களைப் பயிரிட்டால் ஒரு தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடலாம். 60 சென்ட் நிலத்தில் சம்பங்கி பயரிட்டுள்ளேன். இதிலும் ஆண்டுக்கு ரூ. 5.50 லட்சம் வருமானம்கிடைக்கிறது. செலவு போக மாதம் 30 ஆயிரம் லாபம் கிடைக்கிறது.
என்னுடையஅடுத்த இலக்கு ரோஜா. இப்போதுதான் ரோஜாவை இயற்கை விவசாயத்தில் சாகுபடி செய்துள்ளேன். இதிலும் நிச்சயம் ஜெயிப்போம்” என்றார் நம்பிக்கையுடன்.
அவருடைய அனுபவங்கள் பற்றி மேலும் தெரிந்து கொள்ள 09787642613 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.
நன்றி: ஹிந்து

No comments:

Post a Comment