Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday, January 5, 2014

செம்மொழி - கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதை


ஒலிக்கடலில் முதன் முதலாய் 
உதித்து வந்த பேரலையே 
கலைக்கடலை நாவினால் 
கடையவந்த செவியமுதே ! 
பிறந்தநாள் அறியாத 
பேரழகே! பிறமொழிகள் 
இறந்தநாள் காண நிதம்
இளமை பெற்று வந்தவளே
நயந்த மொழிகளிங்கு
நாலாயிரமிருந்தும்
உயர்ந்தவளே! உன்னைப்போல்
உயிமெய்யோடிருப்பவர் யார்?


வல்லினமும் மெல்லினமும்
வளமான இடையினமும்
நல்லினமய் ஒன்று பட்டு
நடக்க வழி செய்தவளே!
உயர்மொழி நீ !
தனிமொழி நீ!
உன்னதமாம் செம்மொழி நீ!
உயிர்மொழி நீ!
மெய்மொழி நீ!
உயர்வைத் தருபவள் நீ!
முதியவளாய் இருந்தாலும்
மோகம் தரும் அழகால்
புதியவளாய் இருப்பவளே
பூவைபோல் மலர்பவளே!
கன்னியென்பார் உனை நீயோ
கனிப்பிள்ளை பல பெற்ற
அன்னை!
இது என்ன அதிசயம் எனக்கேட்டால்
கன்னி அன்னை நீ
அந்தக் கன்னி மரிபோல
அன்னவர்க்கோ ஓர் ஏசு
உனக்கோ பல ஏசு
வைதாலும் தித்திக்கும் மதுரமே!
காலக்கை
கொய்தாலும் மலர்வளத்தில்
குறையாத பூவனமே!
நில்லாத காற்றைப்போல்
நிமிர்கின்ற ஒளியைப்போல்
எல்லார்க்கும் பொதுவாக
இருப்பவளே உன்னை நாம்
உச்சரிக்கும் போதிலே
ஊறுகின்ற வாயதன்
எச்சிலும் தேனாகும்
இதழ்களும் பூவாகும்
பாடையிலே தேவர்களின்
பாடைகள் போனபின்னும்
மக்கள்
பாடையிலே ஆடையிலே
படிப்படியாய் செழித்தவள் நீ!
முப்பதே ஒலிகளுக்குள்
முழுவுலகம் அளப்பவளே!
ஒப்பே இல்லாத
உயர்குறளை பெற்றவளே!
வலஞ்சுழி தேடுகின்ற
வாக்கிய நதியே!
நலஞ்செழித் தோங்குகின்ற
நாணய நா நயமே!
எம்மொழிக்கும் மூத்தவளே!
எம்மொழியாய் வாய்த்தவளே!
செம்மொழியாய் மொழிகளுக்குள்
செம்மாந்திருப்பவளே!
சேய்கள் பிரசவித்த
தாயே! உயர்ந்த மேல்
வாய்கள் பிரசவித்த
வார்த்தை வசந்தமே!
சமண பவுத்தச்
சமயத் துறவிகளும்
தமது மொழி என்று
தாலாட்ட வளர்ந்தவளே!
தேவாரம் தொடுத்தவளே!
திருவாசகத்தேனே!
நாவார ஆழ்வாரின்
நயங்களில் ஆழ்ந்தவளே!
ஏசு மதத்தார்
ஈந்ததொரு கொள்கையினால்
ஏசா மதத்தை
எம் தமிழர்க் களித்தவளே!
மக்கா மதீனாவின்
மக்காத கொள்கையுடன்
நிக்கா முடித்தவளே!
நேயம் வளர்த்தவளே!
மதம் மாற்ற வந்தவரை
மதம் மாற்றி வைத்தவளே!
நிதம் மாற்றம் பெற்றிங்கு
நித்தம் வளர்பவளே!
இமயத்தில் கொடியேற்றி
இறுமாந்திருந்தவளே!
சமயங்கள் அனைத்தையும்
சமமாக மதித்தவளே!
உன்னாலே பிறந்தோம்
உன்னாலே வளர்ந்தோம்
உன்னாலே பெருமை பெற்று
உலகத்தில் வாழ்கின்றோம்
அகம் நீ
புறம் நீ எம்
ஆருயிரும் நீ
எங்கள் முகம் நீ
முகவரி நீ
முடியாத புகழும் நீ

No comments:

Post a Comment