சைக்கிள் பெடலை சுற்றினால் இயங்கும் ஜூஸ் கருவியை சென்னை விஐடி பல்கலைக்கழக மாணவர்கள் வடிவமைத்துள்ளனர்.
சென்னை விஐடி பல்கலைக்கழக மாணவர்கள் அட்சய், சுபம்தார் திவேதி, சவுரப் வஸ்தவா, கஜேந்திர பத்வா ஆகியோர் சேர்ந்து சைக்கிள் பெடலை இயக்கினால் சுற்றும் ஜூஸ் கருவியை வடிவமைத்துள்ளனர். இதுபற்றி அவர்கள் கூறியதாவது:
எல்லாவற்றுக்கும் நாம் மின்சாரத்தை சார்ந்திருக்க வேண்டியுள்ளது. அதே நேரம், மின்தட்டுப்பாடும் அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில், பல்வேறு வகைகளிலும் ஆற்றல் வீணாகாமல் சேமிக்க வேண்டியது அவசியம்.

சைக்கிள் ஓட்டும்போது 150 வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். பழைய சைக்கிளை வாங்கி அதில் லேசான மாற்றங்கள் செய்துள்ளோம். சைக்கிளை பெடல் செய்தால் ஜூஸ் கருவி சுற்றும் வகையில் ஏற்பாடு செய்திருக்கிறோம். பேராசிரியர் டாக்டர் ஜெயசங்கர் எளசேரி வாரியாரின் கண்காணிப்பில் இதை உருவாக்கியுள்ளோம்.
இதன்மூலம், 5 நிமிடத்தில் அரை அல்லது முக்கால் லிட்டர் ஜூஸ் பிழிய முடியும். பழைய சைக்கிள் வாங்கியது உள்பட இதற்கான மொத்த செலவு ரூ.3.240 மட்டுமே.
மின்சாரம் இல்லாமல் இயங்கக்கூடியது என்பதால், ஜூஸ் உற்பத்திச் செலவு குறையும். இயக்குவதும் எளிது. குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்க விரும்புகிறவர்களுக்கு இந்த கருவி கட்டாயம் பயன்படும்.
இவ்வாறு மாணவர்கள் கூறினர். இதற்கு விரைவில் காப்புரிமை பெறப்போவதாகவும் தெரிவித்தனர்.