Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, December 18, 2014

மும்பை துறைமுகத்தில் அமெரிக்க கறிக்கோழி 'லெக்பீஸ்':

மலிவு விலையில் இறக்குமதியா என உற்பத்தியாளர்கள் அதிர்ச்சி

இந்தியாவில் கறிக்கோழி இறக்குமதிக்கான தடையை, உலக வர்த்தக அமைப்பு ரத்து செய்ததை அடுத்து, மும்பை துறைமுகத்துக்கு, அமெரிக்க கறிக்கோழி, 'லெக்பீஸ்' கன்டெய்னரில் வந்து உள்ளது.

பறவை காய்ச்சல்:
கறிக்கோழி உற்பத்தி யில், அமெரிக்கா முதல் இடம், சீனா இரண்டாம் இடம், பிரேசில், மூன்றாமிடம், ஐரோப்பிய நாடுகள் நான்காமிடம், இந்தியா ஐந்தாமிடம் என்ற வரிசையில் உள்ளன. உள்நாட்டு தேவைக்குப்பின், ஏற்றுமதிக்கு, மதிப்புகூட்டிய பொருளாக அனுப்பப்படுகிறது. இந்தியாவில் கறிக்கோழி உற்பத்தி, உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்வதுடன், ஏற்றுமதியும் செய்யப்படுகிறது. இதனால், கறிக்கோழி இறக்குமதி தேவையற்றது. கடந்த, 2007ல், அமெரிக்காவில் பரவிய பறவை காய்ச்சலால், அங்குள்ள கறிக்கோழிக்கு, இந்தியா தடை விதித்தது. இதை எதிர்த்து, உலக வர்த்தக அமைப்பிடம், அமெரிக்கா முறையீடு செய்தது. உலக வர்த்தக ஒப்பந்தப்படி, இந்தியா சொல்லும் காரணங்கள், வலுவானதாக இல்லை என, கடந்த அக்டோபரில், கறிக்கோழி இறக்குமதி தடையை, உலக வர்த்தக அமைப்பு ரத்து செய்து உத்தரவிட்டது. இது, அமெரிக்காவுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்திஉள்ளது. ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள், முழு கறிக்கோழியை மட்டுமே இறக்குமதி செய்ய அனுமதிக்கின்றன. கோழியின் தொடை கால்பகுதி (லெக்பீஸ்) மட்டும், இறக்குமதி செய்வதை ஏற்க மறுத்துள்ளன. அதேபோன்ற நிலையை, இந்தியாவும் எடுக்க வேண்டும் என, கறிக்கோழி உற்பத்தியாளர்கள், அரசிடம் கோரிக்கை வைத்தனர். அமெரிக்க கறிக்கோழி சந்தையில், 'லெக்பீஸ்' என்பது குப்பையாக கருதப்படுவதால், அவற்றை மதிப்புகூட்டிய பொருளாக மாற்றி, அடிமாட்டு விலைக்கு, ஏழை நாடுகளில் சந்தைப்படுத்துகின்றனர். அதற்காக, இறக்குமதி வரி மற்றும் கட்டுப்பாடுகளை தளர்த்த, வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நாமக்கல் முட்டை மற்றும் கறிக்கோழி உற்பத்தியாளர் சரவணன் கூறியதாவது: உலக வர்த்தக அமைப்பு, இந்தியாவின் கறிக்கோழி இறக்குமதி தடைக்கு எதிராக உத்தரவிட்டதால், அமெரிக்க கறிக்கோழி இறக்குமதி செய்யப்படும் என, எதிர்பார்க்கப்பட்டது. அதன் படி, மும்பை துறைமுகத்துக்கு, அமெரிக்க கறிக்கோழி கன்டெய்னரில் வந்துள்ளது. அவை, முழு அளவிலான கறிக்கோழியா அல்லது, 'லெக்பீஸ்' கறியா என்பது தெரியவில்லை. இதுதொடர்பாக, புனே மையத்தை தொடர்பு கொண்டு வருகிறோம். இந்திய கறிக்கோழி உற்பத்தியாளரின் நலன் கருதி, அமெரிக்க கறிக்கோழி அல்லது லெக்பீஸ் இறக்குமதியை தடை செய்ய வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
கறிக்கோழி உற்பத்தியாளர்கள் கூறியதாவது:
கடந்த, 15 ஆண்டுக்கு முன், அமெரிக்க கறிக்கோழிகளில், கழிவாக கருதப்படும், 'லெக்பீஸ்' இந்திய சந்தைக்கு இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டது. அப்போது, கறிக்கோழி உற்பத்தியாளர் மற்றும் விவசாய சங்கங்கள் எதிர்ப்பால், திட்டம் கைவிடப்பட்டது.
கடுமையாக பாதிப்பு:
தற்போது, அமெரிக்க கறிக்கோழியின், 'லெக் பீஸ்' இறக்குமதி விதிமுறைகள் தளர்த்தப்பட்டு, இந்திய சந்தைக்கு வந்துள்ள தாக தகவல் வருகிறது. இது உண்மையானால், கறிக்கோழி உற்பத்தி பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும். உள்நாட்டு உற்பத்தியை, சந்தைப்படுத்துவதில் ஏகப்பட்ட பிரச்னை கள் உள்ள நிலையில், மலிவு விலையில் கிடைக்கிறது என்பதால், 'லெக்பீஸ்' மட்டும் இறக்குமதி செய்வது கண்டிக்கத்தக்கது. மத்திய அரசு, உடனடி ஆக இதில் தலையிட வேண்டும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
 -

No comments:

Post a Comment