Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, December 17, 2014

லட்சங்களில் சம்பளம் தரும் ஹோட்டல் துறை படிப்புகள்!

வேலை என்பது மனநிறைவுடனும், ஈடுபாட்டை அதிகப்படுத்துவதாகவும் இருக்க வேண்டும்; அதேசமயம், கைநிறைய சம்பளமும் கிடைக்க வேண்டும். இதற்கு எந்தப் படிப்பு படிக்கலாம் என்று கேட்கிறவர்கள் ஹோட்டல் துறை படிப்பை கட்டாயம் ஆராயலாம்.

இன்று இந்தியாவில் ஹோட்டல் துறை சீரான மற்றும் ஸ்திரமான வளர்ச்சி கண்டு வருகிறது. இந்தியாவில்  சுற்றுலா மற்றும் ஹோட்டல்களுக்கு செய்யும் செலவுகள் கடந்த நான்கு ஆண்டு களில் சராசரியாக ஒரு பில்லியன் டாலர் (சுமார் 6,000 கோடி ரூபாய்க்குமேல்)  என்கிற கணக்கில் வளர்ந்து வருகிறது. வெளிநாட்டு பயணிகளின் வருகையும்கூட நான்கு ஆண்டு களில் சராசரியாக வருடத்துக்கு 2.5 லட்சம்  என்கிற கணக்கில் அதிகரித்து வருகிறது. இதனால், ஐ.டி துறைக்கு அடுத்தபடியாக அதிக சம்பளம் கிடைக்கும் ஒரு துறையாக ஹோட்டல் துறை மாறியிருக்கிறது.
ஹோட்டல் துறை வேலை வாய்ப்புக்கான படிப்பை இண்டியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் (IIHM - Indian Institute of Hotel Management) என்கிற நிறுவனம் கற்றுத்தருகிறது. இந்தப் படிப்பைப் பற்றி அறிந்துகொள்ள சென்னையில் உள்ள இந்த கல்வி நிறுவனத்தின் முதல்வர் ராஜமோகனை சந்தித்தோம்.
‘‘கொஞ்சம் வித்தியாசமான படிப்பைப் படித்து, மனதுக்கு மகிழ்ச்சி தரும் வேலையைச் செய்ய நினைக்கும் இளைஞர்கள் ஹோட்டல் வேலை தொடர்பான படிப்புகளை படிக்கலாம். இந்தப் படிப்பினை சொல்லித்தரும் ஐஐஹெச்எம் இந்தியாவில் சென்னை, பெங்களூரு, டெல்லி, கோவா என 21 நகரங்களில் இருக்கிறது.
ஐஐஹெச்எம்-ல் சேர 12-ம் வகுப்பில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தவிர, ஜெஇஇ (Joint Entrance Examination) தேர்விலும் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றால் மட்டுமே இதில் சேர இயலும். இந்தத் தேர்வு 200 மதிப்பெண்களுக்கு மூன்று மணி நேரம் நடைபெறும். இதில் அடிப்படைக் கணிதம், அடிப்படை அறிவியல், பொது அறிவு, ஆங்கிலம், ரீசனிங், ஹோட்டல் துறை சார்ந்த கேள்விகள் போன்றவை கேட்கப்படும்.
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு கன்ஃபெக்‌ஷனரி, உணவுத் தயாரிப்பு, உணவு மற்றும் பானங்கள் சேவை செய்தல், உணவு மற்றும் பானங்கள் தயாரிப்பு, அலுவலக நிர்வாகம் என்று பல கிராஃப்ட்ஸ் மேன்ஷிப் கோர்ஸ்களும் இருக்கின்றன.
எங்கள் நிறுவனத்தில், இளங்கலை பிஎஸ்சி ஹாஸ்பிடாலிட்டி அண்ட் ஹோட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் முதுகலை ஹாஸ்பிடாலிட்டி அண்ட் ஹோட்டல் மேனேஜ்மென்ட் ஆகிய பட்டப்படிப்புகள் பயிற்றுவிக்கப் படுகிறது. முதுகலைப் பட்டம், சென்னையையும் சேர்த்து டெல்லி, லக்னோ, பெங்களூரு ஆகிய நான்கு நகரங்களில் மட்டுமே பயிற்றுவிக்கப்படுகிறது’’ என்று சொன்னார். 
இந்தப் படிப்பில் வட இந்திய உணவு வகைகள், தென் இந்திய உணவு வகைகள், பிராந்திய உணவு வகைகள்,  இத்தாலியன், மெக்ஸிகன், கான்டினென்டல், சீன உணவு வகைகள் என பல நாட்டின் சமையல் கலைகளும் கற்றுத்தரப்படுகிறது. பிஎஸ்சி படிக்கும் மாணவர்கள் தங்கள் முதலாம் ஆண்டிலேயே பொதுவாக (ஜெனரிக்)  படிக்க வேண்டுமா அல்லது ஏதேனும் ஒரு துறையில் கவனம் செலுத்தி படிக்க வேண்டுமா என முடிவு செய்து படிக்கலாம். இந்தப் பிரிவு 4-ம் பருவத்திலிருந்து தொடங்கும். அதுவரை அனைவருக்கும் பொதுவான அடிப்படைக் கணினி உபயோகம், கணிதம், சமையலின் அடிப்படைகள், உணவு மற்றும் பானங்களின் அடிப்படைகள், பரிமாறுதல், ஃப்ரன்ட் ஆபீஸ், மனிதவளம் போன்றவைகள் கற்றுத்தரப்படும்.
பொருளாதார நெருக்கடியின் பாதிப்புகள் இருக்கும் இந்தசமயத்தில் இந்தப் படிப்பைப் படித்தால், நிச்சயமாக வேலை கிடைக்குமா என்று விசாரித்தோம்.
‘‘இந்தப் படிப்பு படித்தவர்களுக்கு ஸ்டார் ஹோட்டல் மற்றும் ஸ்டார் அந்தஸ்து உள்ள ரெஸ்டாரன்ட் களில் வேலை கிடைத்துவிடுகிறது. வேலைக்குச் சேர்ந்த புதிதில் ஆண்டுக்கு ரூ.1.8 லட்சம் தொடங்கி 10 வருடத்துக்குள்  ஆண்டு வருமானம் ரூ.10 லட்சம் தாண்டுகிற அளவுக்கு சம்பளம் கிடைக்கும். வேலையில் நல்ல திறமை இருந்து, பெரிய நிறுவனங்களில் எக்ஸிக்யூட்டிவ் செஃப், கார்ப்பரேட் செஃப் என பதவி பெற்றால் மாதம் ரூ.1.5 - 3 லட்சம்கூட சம்பளம் பெறலாம். அது மட்டுமின்றி, விமானம், கப்பல் துறை, ரயில்வே துறை, இந்திய அயலக அலுவலகம் ஆகிய இடங்களில் வேலை கிடைக்கும். தவிர, சொந்தமாக தொழில் தொடங்கவும் பயிற்சி தரப்படுகிறது’’ என்றனர், இந்தக் கல்லூரியின் பேராசிரியர்கள்.
இந்தப் படிப்பைப் படிக்க  வருடத்துக்குத் தோராயமாக ரூ.80,000 ஆகும் என்றார்கள்.

‘‘10 வருடத்தில் நல்ல இடத்துக்கு வந்துவிடலாம்!’’
சக்கரவர்த்தி, சென்னை சவேரா ஹோட்டலின் முன்னாள் எக்ஸிக்யூட்டிவ் செஃப்.
“ஹோட்டல் வேலை என்பது விரும்பி செய்வது. மற்றவர்கள் சந்தோஷமாக இருக்கும்போது நாங்கள் வேலை செய்யவேண்டி இருக்கும். வேலையின் நேரம் என்பது ஹோட்டலுக்கு ஹோட்டல் மாறுபடும். ஆனால், எல்லா தனியார் நிறுவனங்களைப்போல இந்தத் துறையிலும் எப்போதும் வேலை இருக்கும்.
வேறு துறைகளைவிட இந்தத் துறையில் வேலை கிடைப்பதும் எளிது. ஒருசில வருடத்தில் வாழ்க்கையில் உயர்வதும் எளிது. ஆனால், நன்றாக உழைக்கத் தெரிந்திருக்க வேண்டும். புதிதாக சில விஷயங்களைப் புகுத்தவும், வாடிக்கையாளருக்கு தகுந்தாற்போல் சேவை செய்யவும் தெரிந்திருந்தால் போதும், 10 வருடத்தில் நல்ல இடத்துக்கு வந்து விடலாம்.’’

No comments:

Post a Comment