Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, December 19, 2014

கேன் தண்ணீரைக் குடிக்கலாமா?

ஆறு, ஏரி, கிணற்று நீரையே குடிநீராகப் பயன்படுத்தி, எந்த உடல் நலக் கோளாறும் இன்றி ஆரோக்கியமாக வாழ்ந்தனர் நம் முன்னோர்கள். ஆனால் இன்றோ, கேன் தண்ணீர்தான் தாகம் தீர்ப்பதற்கான ஒரே வழி என்றாகிவிட்டது. அடுத்த ஊருக்குச் சென்று தண்ணீர் குடித்தால்கூட உடனே தொண்டைக் கட்டிக்கொண்டு, சளி இருமல் தொந்தரவு வந்துவிடுகிறது. 

குடிமக்கள் அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீரை இன்றுவரை அரசால் அளிக்க முடியவில்லை. அரசு அளிக்கும் நீரை குடிநீராகப் பயன்படுத்த நடுத்தர மக்கள் மட்டுமல்ல; ஏழை மக்களும் கூடத் தயங்குகின்றனர். இதனால் சின்னச் சின்ன கடைகளில்கூட தண் ணீர் கேன் விற்பனை ஜோராக நடக்கிறது. 

கேன்களில் அடைக் கப்பட்டு விற்கப்படும் தண்ணீர் உண்மையில் எங்கிருந்து கிடைக்கிறது. எப்படிச் சுத்தப்படுத்தப்படுகிறது. எந்த அளவுக்குப் பாதுகாப்பானது என்பதுபற்றி யாருக்கும் தெரிவதில்லை. பசுமைத் தீர்ப்பாயம் தானாக முன்வந்து இது தொடர்பாக வழக்கு நடத்தியபோதுதான் புற்றீசல்போல ஆயிரக்கணக்கில் கேன் தண்ணீர் நிறுவனங்கள் இருப்பது தெரியவந்தது. என்னதான் புது லேபிள் ஒட்டினாலும், பலர் குழாய் நீரையே பிடித்து கேனில் அடைத்து விற்பனை செய்வதும் நடந்துகொண்டு தான் இருக்கிறது.
உண்மையில், தண்ணீர் எப்படி சுத்தம் செய்யப்படுகிறது? இப்படிப்பட்ட தண்ணீர் பாதுகாப்பானதுதானா என்பதுபற்றி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், தொழில் நுட்ப ஊழியர்கள் மற்றும் மருத்துவர்களிடம் பேசினோம்.
கேன் குடிநீர்பற்றி சுற்றுச்சூழல் ஆர்வலரும், பசுமைத் தாயகம் அமைப்பின் மாநில துணைச் செயலாளருமான எஸ்.கே.சங்கர் கூறுகையில், 'கேன், பாட்டிலில் அடைக்கப்பட்டு விற்கப்படும் தண்ணீரில் பூச்சிக்கொல்லி இருக்கிறது. ஜெர்மனியில் உள்ள ஹைடல்பர்க் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த வில்லியம் ஷோடிக் என்னும் ஆராய்ச்சியாளர், ஐரோப்பிய நாடுகள் மற்றும் கனடாவில் கிடைக்கும் பாட்டில் நீரில் ஆன்டிமோனி என்ற நச்சு கலந்திருப்பதாக கண்டறிந்தார். நீரில் இந்த நச்சு இல்லை. கேன், பெட் பாட்டில் தயாரிக்கப்படும் மூலப் பொருட்களில் இந்த நஞ்சு இருப்பதுதான் தண்ணீர் விஷமாகக் காரணம். என்னதான் தண்ணீரைச் சுத்தப்படுத்தினாலும், பாட்டிலில் அடைக்கும்போது இந்த நச்சு கலந்துவிடுகிறது. நச்சு அதிகரிக்கும்போது சோர்வு, மன அழுத்தம் போன்ற பிரச்னை ஏற்படுகிறது.
இது தவிர, இந்த பாட்டிலில் பிஸ்பினால் ஏ (Bisphenol A) என்ற நச்சு உள்ளது. இது கருவில் உள்ள சிசு முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கிறது. 'இன்றைக்கு பெண் குழந்தைகள் மிக விரைவாக பூப்பெய்துவதற்கு இந்த பிஸ்பினால் ஏ-வும் ஒரு காரணம்’ என்கிறது அமெரிக்க நலவாழ்வு நிறுவனத்தின் அங்கமான
'தேசிய நச்சு இயல் திட்டம்’ என்ற அமைப்பு. மேலும், பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் உள்ளிட்ட வேறு சில பாதிப்புகளையும் இது ஏற்படுத்துகிறது என்றும் அந்த நிறுவனம் எச்சரிக்கிறது.
2008-ம் ஆண்டு, சென்னை மாநகராட்சி மேற்கொண்ட ஆய்வில், மனிதக் கழிவில் உள்ள நச்சுக்கள் பாட்டில் குடிநீரில் உள்ளதாக தெரியவந்தது. சென்னையில் விற்கப்படும் கேன் நீரைச் சோதனை செய்ததில் ஈகோலை மற்றும் கோலிபார்ம் கிருமிகள் இருப்பது தெரியவந்தது. இப்படி பாட்டில் மற்றும் கேன் குடிநீரில் ஏராளமான ஆபத்துக்கள் உள்ளன.
சிங்கப்பூர், நியூயார்க், லண்டன் போன்ற நூற்றுக்கணக்கான நகரங்களில் அரசாங்கமே பாதுகாப்பான குடிநீரை குழாய்களில் விநியோகம் செய்கிறது. ஆட்சியாளர் முதல் சாதாரண குடிமக்கள் வரை அனைவரும் அந்த நீரையே பயன்படுத்துகின்றனர். அங்கு எல்லாம் இது சாத்தியமாகும்போது இங்கு மட்டும் ஏன் இது சாத்தியமாகாது?
தமிழகம் தண்ணீர் பற்றாக்குறை மாநிலம். ஆனால், மழைப் பற்றாக்குறை மாநிலம் இல்லை. இதனால்தான் நம் முன்னோர் 39,000-க்கும் மேற்பட்ட ஏரிகளை வெட்டினர். இவற்றைப் பாதுகாக்கவோ, பராமரிக்கவோ அரசும், மக்களும் தவறிவிட்டனர். இதனால்தான் விலைக்கு தண்ணீர் வாங்க வேண்டிய நிலைக்கு
சென்றுள்ளோம். சென்னையில் மட்டும் வருடத்துக்கு சராசரியாக 1200 மி.மீ. மழை பொழிகிறது. நகரின் ஒட்டுமொத்த வருடத் தேவையைவிட அதிகம் இது. ஆனால், இந்த மழை நீரை சேகரிக்கவோ, பாதுகாக்கவோ அரசிடம் உரிய திட்டம் இல்லை. சென்னை மக்கள் மட்டும் ஒரு வருடத்துக்கு ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் தண்ணீருக்குச் செலவிடுகின்றனர். இது ஒவ்வோர் ஆண்டும் 40 சதவிகிதம் என்ற அளவுக்கு அதிகரித்து வருகிறது. இப்படிப்பட்டச் சூழ்நிலையில் அரசு நினைத்தால் 1000 மடங்கு குறைந்த செலவில் பாதுகாப்பானக் குடிநீரை விநியோகிக்க முடியும். இதற்கான தொழில்நுட்பமும், நிதியும் அரசுக்கு பெரிய சிக்கலாக இருக்காது. இதை நிறைவேற்ற ஆள்வோரின் ஆழ்ந்த விருப்பமும், அரசியல் உறுதியும்தான் தேவை' என்றார்.
'கேன் தண்ணீர் பலகட்டப் பரிசோதனைக்குப் பிறகே விற்பனைக்கு அளிக்கப்படுகிறது' என்கிறார் தண்ணீரை பரிசோதிக் கும் மைக்ரோ பயாலஜிஸ்டான ஜெயந்தி. வாட்டர் பிளான்ட்களில் தண்ணீர் சுத்திகரிப்புச் செய்வது பற்றி அவர் கூறுகையில், 'போர் தண்ணீர், கிணற்று நீர், லாரிகளில் கொண்டு வரப்படும் நீர் ஆகியவற்றை சுத்தம் செய்து மக்கள் குடிக்கும் வகையில் மாற்றும் பணியை நாங்கள் செய்கிறோம். இந்தத் தண்ணீரில் டி.டி.எஸ். (Total dissolved solids) என்பது எவ்வளவு என முதலில் கண்டறிய வேண்டும். குடிக்கத் தகுதியானதுதானா என்பதை முடிவுசெய்வது இந்த டி.டி.எஸ்.-தான். டி.டி.எஸ். அளவு அதிகரிக்கும்போது  தண்ணீர் துவர்ப்பாக, உப்பாக இருக்கும். டி.டி.எஸ். எந்த அளவுக்கு உள்ளது என்பதைக் கண்டறிந்தபிறகு, தண்ணீரைச் சுத்தப்படுத்தும் செயல்பாடு தொடங்கும்.
முதலில் கார்பன் பில்ட்டர் என்ற வடிகட்டியில் தண்ணீர் செலுத்தப்படும். இதில் மிதக்கும் தூசுகள் வடிகட் டப்படும். பிறகு சான்ட் பில்ட்டர் எனப்படும் மணல் வடிகட்டியில் நீர் செலுத்தப்படும். இப்போது கலங்கலாக இருந்த நீரானது தெளிவாகும். இதன் பிறகு மைக்ரான் பில்ட்டர் எனப்படும் மிக நுண்ணிய தூசு, கிருமிகளை வடிகட்டும் வடிகட்டியினுள் நீர் செலுத்தப்படும். முதலில் 0.5 மைக்ரான் வடிகட்டியினுள் தண்ணீர் சுத்திகரிக்கப்படும், அதைத் தொடர்ந்து 0.1 மைக்ரான் அளவுள்ள மிகவும் நுண்ணிய வடிகட்டியினுள் செலுத்தி தண்ணீரில் உள்ள எல்லா தூசுக்கள், நுண்ணிய பொருட்கள், கிருமிகள் வடிகட்டி சுத்தப்படுத்தப்படும்.
இதன் பிறகு ரிவர்ஸ்ஆஸ்மோசிஸ் எனப்படும் சவ்வூடு பரவல் முறையில், தண்ணீர் மிக அதிக அழுத்தத்தில் செலுத்தப்பட்டு வெளிவரும்போது மிகத் தூய்மையானதாக, குடிக்கத் தகுந்ததாக கிடைக்கும். இந்தத் தண்ணீரில் அல்ட்ரா வயலட் கதிர் செலுத்தி 100 சதவிகிதம் சுத்தமான குடிநீராக மாற்றப்பட்டு கேன்களில் நிரப்பப்பட்டு, மக்களுக்குக் குடிக்க அளிக்கப்படுகிறது. பெரும்பான்மையான
நிறுவனங்கள் இந்த சுத்திகரிப்பு முறையைப் பயன்படுத்துகின்றன. இந்தச் சுத்திகரிப்பு அனைத்தையும் முறையாக செய்தாலே தண்ணீர் பாதுகாப்பானதாக இருக்கும்.
இதன்பிறகு, மைக்ரோபயாலஜிஸ்ட், கெமிஸ்ட் ஆகியோர் இந்த நீரைப் பரிசோதனைகளைச் செய்வர். மைக்ரோபயாலஜியில் ஆறு விதமான பரிசோதனைகள் செய்து, அந்தத் தண்ணீர் பாதுகாப்பானதுதானா என்பதை உறுதிப்படுத்துவோம். கெமிஸ்ட்கள் தண்ணீரில் குறிப்பிட்ட அளவு தாது உப்புக்கள் உள்ளதா என்பதை ஆறு - ஏழு வகையான பரிசோதனைகள் செய்து உறுதிப்படுத்துவார்கள். அதன் பிறகே கேனில் நிரப்பப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இந்தப் பரிசோதனைகளை எங்கள் ஆய்வகத்தில் மட்டும் செய்வதில்லை; மாதத்துக்கு ஒரு முறை அரசு அங்கீகாரம் பெற்ற ஆய்வகத்தில் கொடுத்து உறுதிப்படுத்திக்கொள்வோம்'' என்றார்.
'சுத்திகரிப்பு முறைகள் என்னதான் துல்லியமாக இருந்தாலும், தண்ணீர் அடைக்கப்படும் கேனும், அது வைக்கப்படும் கிடங்குகளும் பாதுகாப்பானதாக இல்லை எனில் அந்தத் தண்ணீர் கெட்டுவிடும்'' என்கிறார் தண்ணீர் சுத்திகரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் சி.பி.ராஜா.
'சுத்திகரிக்கப்பட்ட நீரை ஒரு மாதம் வரை பயன்படுத்தலாம். தேவை அதிகமாக இருப்பதால் ஒன்று அல்லது இரண்டு நாட்களில் விற்பனையாகி விடுகிறது. தண்ணீர் கேன்களை சுத்தமான, சூரிய ஒளி நேரடியாகப் படாத இடத்தில் வைக்கவேண்டும். சுத்திகரிக்கப்பட்ட நீரானது எளிதில் மற்ற பொருட்களின் மணத்தைக் கவரும் தன்மை கொண்டது. எனவே, அதன் அருகில் இறைச்சி, ரசாயனங்கள் என எதையும் வைக்கக்கூடாது' என்றார்.
பாதுகாக்கப்பட்ட குடிநீர் குறித்து டாக்டர் புகழேந்தி கூறுகையில், 'தண்ணீர் வியாபாரத்தில் அதிகப்படியான வருவாய் கிடைப்பதால் அது தனிநபர் சொத்தாக மாறிவிட்டது. தனியார் நிறுவனங்கள் பெருமளவில் நீரை உறிஞ்சி விற்பனை செய்கின்றன. தண்ணீரில் பாக்டீரியா உள்ளிட்ட கிருமிகள் இருக்கக் கூடாது. குறிப்பிட்ட அளவுக்கு தாது உப்புக்கள் இருக்க வேண்டும். இதை உறுதிப்படுத்த, தண்ணீர் நிறுவனங்கள் பரிசோதனை செய்யும். இந்தப் பரிசோதனை எந்த அளவுக்கு உண்மையானது என்பது மக்களுக்கு எப்படித் தெரியும்? இதை அவ்வப்போது வெளிப்படையாக மக்கள் முன்னிலையில் செய்வதன் மூலம் தான் அது பாதுகாப்பான குடிநீரா என்பது தெரியவரும்.
உலகில் 23 சதவிகித நோய்கள் நீர் மூலம் ஏற்படுவதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. வயிற்றுப்போக்கு ஆரம்பித்து, ஹெபாடைடிஸ் வரையிலும் பல நோய்கள் ஏற்படுகிறது. பாதுகாப்பாக ஸ்டோரேஜ் செய்யவில்லை எனில் எலிக் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது. மேலும், பல நிறுவனங்கள் சுத்திகரிப்பு ஏதும் செய்யாமல் நேரடியாக கேன்களில் நீரைப் பிடித்து விற்பதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன. பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டியது அரசின் கடமை' என்றார்.
- பா.பிரவீன் குமார்
படம்: ஆர்.நரேந்திரன்
 எப்படி கண்டறிவது?
பாட்டில் தண்ணீர் பாதுகாப்பானதுதானா என்பதை ஆய்வகங்களில் மட்டுமே கண்டறிய முடியும். நீங்கள் வாங்கும் கேன் தண்ணீரின் நிறம் கலங்கலாக இருந்தாலோ, சுவையில் மாறுபாடு இருந்தாலோ அது சுத்திகரிக்கப்பட்ட நீராக இருக்காது. இதுபற்றி உடனே பி.ஐ.எஸ்.-ல் (Bureau of Indian Standards-BIS)புகார் தெரிவிக்கலாம்.
உலக அளவில் குடிநீர் விற்பனை செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 9-வது இடத்தில் உள்ளது. விரைவில் 'இது முதல் இடத்துக்கு வந்துவிடும்’ என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனால், மனித வள மேம்பாட்டுக் குறியீட்டில் இந்தியா 128-வது இடத்தில் உள்ளது.
சென்னை 'மெட்ரோ வாட்டர்’ நீரின் தரம்பற்றி ஆங்கில நாளிதழ் ஒன்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி கேள்விகள் கேட்டது. இதற்கு சென்னை மாநகராட்சி அளித்த பதில், '2007-ம் ஆண்டு முதல் தோராயமாக மேற்கொள்ளப்பட்ட 440 பரிசோதனைகளிலும் அந்த நீர் 'குடிக்க தகுதியற்றது’ எனத் தெரியவந்தது' என்பதாகும்.

No comments:

Post a Comment