Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, December 18, 2014

அமர்க்களப்படும் ஆன்லைன் ஷாப்பிங்!


 அமர்க்களப்படும் ஆன்லைன் ஷாப்பிங்!
                   
கடந்த ஆறு மாதங்களாக மின் வணிக நிறுவனங்கள் (ஆன்லைன் / இ-காமார்ஸ்) தேசிய நாளிதழ்களில் தலைப்புச் செய்தியாக இடம் பெறாத நாளே இல்லை என்று சொல்லலாம்.
`பிக் பில்லியன் டே’, `கூகுள் ஆன்லைன் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் (GOSF)’, ஸ்நாப் டீலின் `9am to 9pm சேல்’ என ஒவ்வொரு மின்வணிக நிறுவனங்களும் நுகர்வோர்களைத் தம் வசம் இழுக்க போட்டி போட்டுக் கொண்டிருப்பதோடு நுகர்வோர்களின் ஆர்டர்களை பூர்த்தி செய்வதில் அவ்வப்போது தொழில்நுட்ப பிரச்சனைகளையும் சந்தித்து வருகின்றன. இதனால் ஆன்லைன் ஷாப்பிங் மோகம் மக்களிடம் குறையுமா, இனி வரும் நாட்களில் அதன் வளர்ச்சி எப்படியிருக்கும் என்பதை அறியும் பொருட்டு சமீபத்தில் 50 நகரங்களில் `ஃபாரஸ்டர் கன்சல்ட்டிங்கும், கூகுள் இந்தியாவும் கூட்டாகச் சேர்ந்து நுகர்வோர்களிடையே ஒரு ஆய்வு செய்திருக்கிறார்கள்.
இந்த ஆய்வு இரண்டு கட்டங்களாக மார்ச்-ஏப்ரல் மற்றும் ஜூலை மாதம் ஆன்லைன் வழியாகவும், தொலைபேசி மூலமாகவும் நடத்தப்பட்டது. இதில் பங்கு கொண்ட நுகர்வோர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 6800 பேர். இதில் இருபாலரும் அடக்கம். 15 வயதிலிருந்து 54 வயது வரையிலானவர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
இனி, இந்த ஆய்வின் சுவராசியமான முடிவுகளில் சில;
  • 2012ல் ஆன்லைன் ஷாப்பர்களின் எண்ணிக்கை 8 மில்லியனாக இருந்தது, 2014ல் 35 மில்லியனுக்கு உயர்ந்தது, 2016ல் கிட்டத்தட்ட 100 மில்லியன் மக்கள் ஆன்லைனில் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்குவார்கள் என மதிப்பிடப்பட்டிருக்கிறது
  • 2016 ஆம் ஆண்டு ஆன்லைன் வர்த்தகம் கிட்டத்தட்ட 10 பில்லியன் டாலர்களைத் தொடக்கூடும். (அதாவது ரூ 60,000 கோடி)
  • 2016 ஆம் ஆண்டு ஆன்லைனில் ஷாப்பிங் செய்ய இருப்பவர்களில் பெண்களின் எண்ணிக்கை
    சுமார் 40 சதவிகிதமாக இருக்கும்
  • ஆய்வில் பங்கெடுத்துக் கொண்ட சிறு நகரவாசிகளில் தற்சமயம் ஆன்லைன் ஷாப்பிங் செய்யாதவர்களில் 71 சதவிகிதப் பேர் இனி வரும் 12 மாதங்களில் ஆன்லைனில் ஷாப்பிங் செய்ய விருப்பம் தெரிவித்திருக்கின்றனர்.
  • மொபைல் ஃபோன் உபயோகித்து ஆன்லைன் ஷாப்பிங் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது
  • பெண் நுகர்வோர்களில் நான்கில் ஒருவர் மொபைல் மூலம் ஆன்லைன் ஷாப்பிங் செய்கிறார்
  • பொருட்களை ஆன்லைனில் வாங்குவதற்கு முன்பு அப்பொருட்கள் பற்றி அறிந்து கொள்வதற்கு மூன்றில் ஒரு நுகர்வோர் மொபைல் ஃபோன் உபயோகிக்கிறார்
  • இ-காமர்ஸ் போல எம்-காமர்ஸ் (மொபைல் ஃபோன் மூலம் ஆன்லைன் பரிவர்த்தனை) நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வருகிறது
  • ஆன்லைன் மூலம் ஷாப்பிங் செய்வதற்கான காரணங்கள்: செளகரியம், பலவகைப் பொருட்கள் (வெரைட்டி), சமூக அந்தஸ்து.
  • அடுத்த 12 மாதங்களில் வாங்கவிருக்கும் பொருட்கள்; எலக்ட்ரானிக்ஸ், மொபைல் ஃபோன், துணிகள்/காலணிகள், புத்தகங்கள்.
சரி ஆன்லைன் நிறுவனங்கள் எதிர் கொள்ளும் சவால்கள் என்னென்ன?
  1. கிட்டத்தட்ட 62 சதவிகிதம் பேருக்கு கடைசியாக செய்த பரிவர்த்தனை அவ்வளவு திருப்திகரமாக இல்லை. இது சிறு நகரவாசிகளிடையே அதிகம்.
  2. குறைபாடுள்ள பொருட்களை திருப்பிக் கொடுப்பது சம்பந்தமான செயல்பாட்டில் சிக்கல்
  3. மிகவும் மோசமான தொலைத்தொடர்பு இணைப்பு (இந்தியாவுடன் ஒப்பிடும் போது சீனாவின் இணைப்பு வேகம் 8 மடங்கு அதிகம்)
இந்த ஆய்விலிருந்து ஆன்லைன் நிறுவனங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது; சிறந்த வாடிக்கையாளர் சேவையளித்து அவர்களைத் தக்க வைத்துக் கொள்வது (புதிய வாடிக்கையாளர்களைப் பெறுவதற்கான செலவு ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக் கொள்வதற்கு ஆகும் செலவை மூன்று மடங்கு அதிகம்.
எனவே வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும்), செளகரியம் மற்றும் பல்வேறு வகைப்பட்ட பொருட்களை வாங்கக்கூடிய வசதி, ஆன்லைன் வர்த்தக வருமானத்தில் முக்கியமான பங்களிப்பு, சந்தேகமில்லாமல் பெண்கள் தான் (ஆண்களை விட அதிக முறை ஆன்லைன் ஷாப்பிங் செய்வது பெண்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது)
முதலீட்டாளார்கள் ஏன் கண்ணை மூடிக்கொண்டு ஆன்லைன் நிறுவனங்களில் முதலீடு செய்கிறார்களென்று இப்போது புரிந்திருக்கும். ஸ்மார்ட் ஃபோனின் விற்பனை அதிகரிக்க, அதிகரிக்க இ-காமர்ஸ், எம்-காமர்ஸ் விற்பனையும் அதிகரிக்கும்.
ஒரு `க்ளிக்’கில் அல்லது ஒரு `மென்மையான தொடுதலில்’ (touch screen phones) பொருட்கள் உங்கள் இல்லம் தேடி வரும் போது `கால்’ கடுக்க `மால்’களின் பில்லிங் கவுண்டர் வரிசையில் ஏன் நிற்க வேண்டும்? கடைக்குச் சென்று பொருட்கள் வாங்க ஆகும் நேரத்தை வீட்டில் குடும்பத்துடன் செலவிடவும் ஆன்லைன் வர்த்தகம் உதவுகிறது.

No comments:

Post a Comment