Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, May 21, 2012

தூத்துக்குடி மாவட்டத்தின் முக்கிய இடங்கள்

தூத்துக்குடி மாவட்டத்தின் முக்கிய இடங்கள்

துறைமுகம்
மன்னார் வளைகுடா அருகே இது அமைந்துள்ள தூத்துக்குடி துறைமுகம் ஒரு இயற்கைத் துறைமுகம். இப்பகுதி புயல் கிளம்ப முடியாத பூகோள அமைப்பைக் கொண்டுள்ளது. இங்கு தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்தும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளிலிருந்தும் வரக்கூடிய கப்பல்களுக்கு இந்தியாவின் நுழைவு வாயிலாக விளங்குகிறது. 600 அடி முகத்துவாரத்தோடும், ஆறுபக்கவாட்டுத் தளங்களோடும் திகழும் இத்துறைமுகம் சரக்குகள் ஏற்றுமதி இறக்குமதி வசதிக்காக 23 கிரேன்களும், 18 போர்க்லிப்ட் கருவிகளும், 4 பிரும்மாண்டமான சரக்கு லாரிகளும், 4 ரயில் என்ஜின்களும், சுமார் 50 ஆயிரம் டன்கள் சரக்குகள் வைப்பதற்குரிய பாதுகாப்புக் கிட்டங்கிகளும் கொண்டுள்ளது.

1974 ஆம் ஆண்டு இந்நகரிலுள்ள ஸ்பிக் உரத் தொழிற்சாலையின் அத்தியாவசியத் தேவைகளை இறக்குமதி செய்ய 125 இலட்ச ரூபாய் செலவில் எண்ணெய்த் துறை ஒன்று தனியாக இங்கே ஏற்படுத்தப்பட்டது. 1இங்கு 6 கப்பல்கள் தங்குவதற்கான தளங்கள் கட்டப்பட்டுள்ளன. தமிழ்நாடு மின்சார வாரியத்தால் அமைக்கப்பட்டுள்ள தூத்துக்குடி அனல் மின் நிலையத்திற்கு தேவையான நிலக்கரியை இறக்குமதி செய்வதற்கென்று தனியாக நிலக்கரி துறையும், மணிக்கு 2000 டன் நிலக்கரி இறக்குமதி வசதியுடைய தானியங்கியும் 1983 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இங்கு மணிக்கு 700 லிட்டர் பெட்ரோலிய எண்ணெப் பொருள்களை இறக்குமதி செய்யத் தேவையான சிறப்புக் கருவிகள் இத்துறைமுகத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

திருச்செந்தூர்

தூத்துக்குடியிலிருந்து 32கீ.மீ தொலைவில் அமைந்துள்ளது திருச்செந்தூர்.அறுபடை வீடுகளில் ஒன்றாகவும் கோவிலின் அருகே கடற்கறையை கொண்டுள்ள ஓரே முருகன் கோவில் என்னும் சிறப்புக்குரியது.இங்கு வருவோர் தங்குவதற்கு வசதியாக கோவிலின் அருகே விடுதிகள் குறைந்த கட்டணத்தில் அமைந்துள்ளது.சூரபத்மனைப் போரில் வென்று செந்தில் நின்று சிரிக்கும் கோயில் இதுதான். ஐப்பசி மாதம் இங்கு நடக்கும் சூரசம்காரம் திருவிழா பிரபலமானது.


பாரதியார் நினைவு மண்டபம்
தூத்துக்குடியிலிருந்து சுமார் 35கீ.மீ தொலைவில் மகாகவி பாரதியார் பிறந்த இடமான எட்டயபுரம் உள்ளது.அவரது நினைவை போற்றும் விதமாக கட்டப்பட்டது பாரதியார் நினைவு மண்டபம் மிக எழிலுடன் காட்சியளிக்கின்றது. 1945 ஆம் ஆண்டு பிரபல எழுத்தாளர் கல்கியால் கட்டப்பட்டது.1981இல் பாரதியின் நூற்றாண்டு விழாவின்போது தமிழக அரசு இந்த நினைவிடத்தைத் தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டது.

குலசேகரபட்டிணம்

அழகிய கடற்கரை கிராமமான குலசேகரப்பட்டினம் குலசை என அழைக்கப்படும் குலசேகரப்பட்டினம் திருச்செந்தூரிலிருந்து 12 கிமி தொலைவிலும் உள்ளது.இயற்கை எழில் கொஞ்சும் கடலோர கிராமமான குலசேகரப்பட்டினத்தில் இந்தியாவிலேயே மைசூருக்கு அடுத்தப்படியாக நவராத்திரி பண்டிகை படு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இது ஒரு சரித்திர புகழ் வாய்ந்த பழமையான ஊர். தற்போது இங்கு தான் உடன்குடி அனல் மின் நிலையம் தொடங்க, ஆயத்த வேலைகள் நடந்து வருகிறது.முன்பு இது ஒரு பெரிய துறைமுக பட்டணமாக விளங்கியது. இன்றும் அதற்கான ஆதாரங்கள் பலவும் சிதைந்த நிலையில் இங்கு காணப்படுகின்றன.


மணப்பாடு

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கடற்கரைக் கிராமமாகும். இது மணவை என்றும் சுருக்கமாக அழைக்கப்படுகிறது.கடற்கரை. பக்கத்திலேயே கடல் மணலால் அமைந்த சிறு மலை போன்ற மேடு. உச்சத்தில், ஒரு தேவாலயம். பின்னால், கலங்கரை விளக்கம். இடத்தின் அமைப்பைப்போல, இடத்தின் வரலாறும் ஆச்சரியப்படுத்தும்.இங்கு ஒரு குகையும், நாழிக்கிணறும் திருச்செந்தூரில் உள்ளது போல் இருக்கிறது. மணல்மேடு முழுவதும் நிறைய சிலுவைகள்.


அய்யனார் சுனை

திருச்செந்தூரில் இருந்து 10 கி.மீ. தூரத்தில் உள்ளது. பாலைவனம் போன்ற இப்பகுதியில் அய்யனார் கோயிலும் அருகில் ஊற்று ஒன்றும் உள்ளன. இதனை அய்யன் சுனை என்று அழைக்கிறார்கள்.இங்கு செல்பவர்கள் தங்குவதற்கு விடுதிகளும் உள்ளது.சுனைக்கு செல்லும் வழியில் அழகான பாரஸ்ட் ஓன்றும் அமைந்துள்ளது

ஸ்ரீவைகுண்டம்
திருநெல்வேலியில் இருந்து 30 கி.மீ. தொலைவில் இருக்கும் இங்குதான் கண்ணபிரான் கோயில் அமைந்துள்ளது.இக்கோயிலின் மாபெரும் கோபுரமும் பெயர் பெற்றது. திருவேங்கட முதலியார் என்பவரால் கட்டப்பட்ட மண்டபத்தில், யாளிகள், யானைகள், வீரர்கள் போன்ற அழகிய சிற்ப வேலைப்பாடுகள் அமைந்துள்ளன. வீரபாண்டிய கட்டபொம்மன் காலத்தைச் சேர்ந்த 6 கல்வெட்டுகளும் இங்கு உள்ளன.பார்க்க வேண்டிய இடங்கள் வைகுண்ட பெருமாள் திருக்கோயில்,சிவன் கோயில்,முதவிலுள் ஹயிரத் மசூதி,புனித சந்தியாகப்பர் ஆலயம்,நாராயணப் பெருமாள் கோயில் ஆகியவை இங்கு காணவேண்டிய இடங்கள்...இங்குள்ள சிலைகள் அனைத்தும் மிக துல்லியமாக செதுக்கப்பட்டுள்ளது.

வ.உ.சி நினைவில்லம்
செக்கிழுத்த செம்மல் வ.உ.சி பிறந்த ஊர்தான் ஒட்டப்பிடாரம். வெள்ளையருக்கு எதிராகச் சொந்தமாக சுதேசிக் கப்பல் வாங்கி ஓட்டிய மாபெரும் தியாகச் செம்மல். வ.உ.சி வாழ்ந்த இல்லம் நினைவகமாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. 167.12 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இந்நினைவிடத்தில், அவரது திருவுருவச்சிலை, அரிய புகைப்படங்கள், வாழ்க்கை வரலாறு போன்றவை இடம் பெற்றுள்ளன. முகவரி: 2/119, வ.உ.சி தெரு, ஒட்டப்பிடாரம்.அவர் சிறையில் இருந்த போது அவர் இழுத்த செக்கு சென்னையில் பாதுகாக்கப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது

பாஞ்சாலங்குறிச்சி

ஓட்டபிடாரத்திற்கு அருகிலுல்ல பாஞ்சாலங்குறிச்சி தான் ஆங்கில சகாப்தியத்தை எதிர்த்து முதலில் வாளெடுத்துப் போர்புரிந்த மாவீரன் கட்ட பொம்மன் பிறந்தது ஊர். அவர் வீற்றிருந்த கோட்டை அழிவுற்றதால் 1974 ஆம் ஆண்டு அரசினால் இவர் நினைவாக கட்டப்பட்ட நினைவிடம் இங்குள்ளது.இது அரசினால் பராமரிக்கப்பட்டு வருகிறது கட்டபொம்மன் தனது தெய்வமாகக் கருதி வழிபட்ட ஜக்கம்மா கோயிலும் இங்கு உள்ளது. பார்வையாளர் நேரம்: காலை 8-1 மாலை 2-6 மணி வரை. கட்டணம் பெரியோர் ரூ1. சிறுவர்கள் 0.50 பைசா.


ஆதிச்சநல்லூர்

சீனிக் கல் பாறைகள் நிரம்பிய மேட்டு நிலம் ஆகும் இப்பறம்பு அமைந்துள்ள இடத்தைத் தொட்டடுத்து ஆதிச்சநல்லூர் என்ற சிற்றூர் அமைந்திருப்பதால் இது ஆதிச்சநல்லூர்ப் பறம்பு என வழங்கப்படுகிறது. தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள மிகத் தொன்மையான ஊர். சுடுமண் பாத்திரங்களும், முதுமக்கள் தாழிகளும் தொல்பொருள் ஆய்வுத் துறையால் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த ஊர் தற்போது தொல்லியல் துறையின் மேற்பார்வையில் உள்ளது.


வாஞ்சி மணியாச்சி

ஆங்கிலேயர் காலத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷ்துரையை, வாஞ்சி நாதன் இந்த இரயில் நிலையத்தில்தான் சுட்டான். அத்தோடு தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்தான். இந்தத் தியாகத்தைப் போற்றும் வகையில்தான், இந்த ஊரை வாஞ்சி மணியாச்சி என்று அழைக்கும் பழக்கம் வந்தது.


கொற்கை துறைமுகம்
தற்போது இது ஒரு சாதாரண கடற்கறை கிராமம்தான். ஆனால், 12 ஆம் நூற்றாண்டில், சங்ககாலப் பாண்டிய மன்னர்கள் காலத்தில் பரபரப்பான துறைமுகம் இருந்தது. திருச்செந்தூரிலிருந்து 29கி.மீ.தொலைவில் இருக்கும் இந்தத் தொன்மைச் சிறப்பு வாய்ந்த ஊரின் வரலாற்றை மேலும் கண்டறிய அகழ்வாராய்வுகள் நடந்தவண்ணம் உள்ளன.

தெய்வச் செயல்புரம்
தூத்துக்குடியிலிருந்து 25கீ.மீ தொலைவில் உள்ள இவ்டத்தில் 78அடி உயரமுள்ள ஆஞ்சநேயர் ஆலயம் நிறுவப்பட்டுள்ளது.
இது மிக உயரமான சிலை என கருதப்படுகிறது.

திருக்கோலூர்
ஆழ்வார்த்திருநகர் மற்றும் தென் திருப்பேரைக்கு இடையில் திருக்கோலூர் உள்ளது. இங்கு செல்ல பரல்குளம் பேருந்து நிலையத்தில் இறங்கி 1 கி.மீ. தூரம் செல்ல வேண்டும்.

கயத்தாறு

இவ்வூரில் உள்ள புளிய மரத்தில்தான் 16.10.1799 அன்று மாவீரன் கட்டபொம்மனை ஆங்கிலேய அரசு தூக்கிலிட்டுக் கொன்றது.
இணையத்திலிருந்து திரட்டியவை
Engr.Sulthan

2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. thank for the updation of the these places... Many people know don't about these places..

    ReplyDelete