Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, November 11, 2013

உயரப் பறக்கும் கூகுள் ப்ளஸ்


இணைய தளம் வழியே சமூக சேவைகளை வழங்குவதில், கூகுள் நிறுவனத்தை அடித்துக் கொள்ள வேறு எந்த நிறுவனத்தாலும் முடியவில்லை. புயல் வேகத்தில் தன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையைப் பெருக்கிக் கொண்டு, இந்த பூமியில், அனைவரின் வாழ்க்கை தடங்களைப் பதிவு செய்திடும் ஓர் தளமாக, கூகுள் தளம் இயங்கி வருகிறது. இதில் கடந்த சில மாதங்களில், கூகுள் ப்ளஸ் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவதாக, இணையப் பயன்பாட்டை ஆய்வு செய்திடும் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 

சென்ற 2011 ஆம் ஆண்டு, ஜூன் மாதம் கூகுள் ப்ளஸ் சேவை, பயனாளர்கள் தரும் அழைப்பின் பேரில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டது. தொடக்கத்திலிருந்து, தன் சேவைகள் , ஜிமெயில், யு ட்யூப் மற்றும் கூகுள் டாக்ஸ், ஆகியவற்றை ஒருங்கிணைத்து இயக்கும் வகையில், கூகுள் ப்ளஸ் தொடங்கப்பட்டது. 
ஆனால், பயனாளர்களுக்கு இந்த கட்டமைப்பின் மீது நம்பிக்கை கொள்ள சிறிது காலம் தேவைப்பட்டது. இக்காலத்தில், பேஸ்புக் மற்றும் ட்விட்டர் சமூக இணைய தளங்கள் பால் மக்கள் அதிக ஆர்வம் கொண்டு பயன்படுத்தி வந்தனர். ஆனால், தொடர்ந்த காலத்தில், பயனாளர்கள் கூகுள் ப்ளஸ் பக்கம் தங்களை இணைத்துக் கொண்டு, அதன் சேவைகளைப் பயன்படுத்த தொடங்கினார்கள். தற்போது மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கையில், ட்விட்டர் தளத்தினை கூகுள் ப்ளஸ் மிஞ்சிவிட்டது. 
இருப்பினும் ட்விட்டர் மற்றும் கூகுள் ப்ளஸ் இணைந்த எண்ணிக்கை, பேஸ்புக் எண்ணிக்கையை எட்ட இயலவில்லை. ட்விட்டரிடம் 23 கோடி பயனாளர்கள் உள்ளனர். கூகுள் ப்ளஸ், தன்னிடம் 30 கோடி பதிவாளர்களைக் கொண்டுள்ளது. பேஸ்புக் 
பயன்படுத்துவோர் எண்ணிக்கை 100 கோடியைத் தாண்டிவிட்டது.
கூகுள் ப்ளஸ் தளத்தின் அதீத வளர்ச்சி, சென்ற மே மாதத்திற்குப் பின்னரே ஏற்பட்டது. மே மாதம் இதன் வாடிக்கையாளர்கள் 20 கோடியாக இருந்தனர். (பார்க்க: usatoday.com) கூகுள் நிறுவனத்தைப் பொறுத்தவரை, அதன் நோக்கம், பேஸ்புக் தளத்தினை 
வாடிக்கையாளர் எண்ணிக்கையில் வெற்றி கொள்வதல்ல. கூகுள் நிறுவனம் இயக்கும் தளங்கள் வழியாக, அதன் அனைத்து சேவைகளையும் தொடர்ந்து மேம்படுத்தவே கூகுள் திட்டமிடுகிறது. மிக எளிய சேவைகளை வழங்குவதிலிருந்து, மக்களின் வாழ்க்கைச் சிறப்புகளைப் பதிவு செய்திடும் தளங்களாக, கூகுள் தன் தளங்களை அமைக்க விரும்புகிறது. இதற்காகக் கீழ்க்காணும் இலக்குகளை நிர்ணயித்துள்ளது.
* புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி, அவற்றின் மூலம் தேடுதலை எளிமையாகவும் விரைவாகவும் மேற்கொள்ள உதவுதல்.
* சமூக இணைய தளங்களில் அப்லோட் செய்யப்படும் படங்களை மேம்படுத்தி பதித்து வைத்திட வசதி செய்து கொடுத்தல். பயனாளர்கள் தங்கள் தகவல்கள் மற்றும் படங்களைத் தங்களுக்குள் பகிர்ந்து கொள்ள வசதி செய்து கொடுத்தல்.
* வீடியோ பயன்பாட்டிலும் புதிய வசதிகள் கிடைத்து வருகின்றன. அண்மையில், கூகுள் Auto Awesome Movie என்னும் டூலை வழங்கி உள்ளது. இதன் மூலம் கூகுள் ப்ளஸ் தளத்திற்கு அப்லோட் செய்யப்பட்ட வீடியோ கிளிப் பைல்களைக் கொண்டு, ஒருவர் தன் கற்பனைத் திறனுக்கேற்ப வீடியோ படங்களைத் தயாரிக்க முடியும்.
மேலே கூறப்பட்ட தகவல்கள் வெளியான சில நாட்களிலேயே, கூகுள் நிறுவனத்தின் பங்குகள் விலை வேகமாக உயர்ந்து 1000 டாலர் என்ற இலக்கை எட்டியது, மக்கள் இந்நிறுவனத்தின் திட்டங்கள் மீது கொண்டுள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது.

No comments:

Post a Comment