Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, November 16, 2013

எந்த நேரத்தில்? என்ன உணவு?



நம் சுற்றுச்சூழலும், வாழ்க்கை முறையும் 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைப் போல இப்போது இல்லை. நிறையவே மாறிவிட்டது. பெண்களில் நிறைய பேர் வேலைக்குச் செல்கின்றனர். இரவு ஷிப்ட் முதல் பல பணிகளைப் பார்க்க வேண்டிய சூழ்நிலை. சங்யான நேரத்திற்கு உணவு உண்ண முடியாமல் போகும் போது, உடல்நிலை பாதிக்கப் படுகிறது.



அதையும் கவனிக்க நேரமில்லை. இது நல்லதா? எந்தெந்த நேரத்தில் உணவு உண்ண வேண்டும்?

உணவை உண்பதற்கு மணிக் கணக்கைப் பின்பற்றுவது தவறு. உணவு அருந்துவதற்குச் சரியான நேரத்தைக் குறிக்கும் வகையில் உடலில் நமக்குச் சில அறிகுறிகள் தோன்றும். இவற்றில் முக்கியமான அறிகுறி பசி. வயிற்றில் பசி தோன்றும் நேரத்தில் அதற்குத் தீவனம் போட வேண்டியது அவசியம். பசி எடுக்காமல் உணவு அருந்துவது உடலுக்கு மிகக் கொடிய விளைவுகளை ஏற்படுத்தும்.

உண்ட உணவு வயிற்றில் ஜீரணமாகி விட்டதா என்பதை நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும். ஏற்கனவே உண்ட உணவு செரிக்கும் முன் வேறு உணவை உட்கொள்ளலாகாது. வயிற்றில் உணவு ஜீரணமாகாத நிலையில் இருக்கும்போது மீண்டும் உணவு உட் காண்டால் முன் உண்ட உணவின் ஜீரணமாகாத அன்ன ரசம், பின்பு உண்ட உணவின் ரசத்துடன் கலந்து விரைவில் எல்லா தோஷங்களையும் சீற்றமடையச் செய்து விடும்.

உணவு ஜீரணமடையாத நிலையில் உருவாகும் ஏப்பம் உணவின் சுவை, மணம் இவற்றுடன் வெளிவரும். ஏப்பம், சுவை இல்லாமல் சுத்தமாக வந்த பின்பு உணவை உட்கொள்ள வேண்டும். உட்கொள்ளும் வேளையில் இருதயம், உடல் துவாரங்கள், முகம், கண்கள் இவை தெளிவுற்றிருக்க வேண்டும். வாதம், பித்தம், கபம் இவை மூன்றும் தமது இருப்பிடங்களிலிருந்து சரியாக இயங்க வேண்டும். உடல் கழிவு வெளியேறிய பிறகு, வயிற்றில் பசியும், தாகமும் தோன்றி ஜீரண சக்தி நன்கு வளர்ந்திருக்க வேண்டும். உடல் லேசாக இருக்க வேண்டும். இப்படி இருக்கையில் உணவு உட்கொண்டால், பாதிப்பு ஏதும் ஏற்படாமல், ஆயுள், பலம், நிறம் இவற்றை வளர்க்கிறது. இது தான் உண்பதற்கு உகந்த காலம்.

எண்ணெய் பசை உள்ளதும், எளிதில் ஜீரணமாகக் கூடியதும், சூடாகவும் உள்ள உணவு வகைகளை எப்போதும் உட்கொள்ள வேண்டும். "இந்த உணவு எனக்குப் பொருந்தும், இது எனக்குப் பொருந்தாது" என்று நம்மை நன்கு கவனித்துக் கொண்டு உணவை உண்ண வேண்டும்.

மிகவும் கால தாமதமாகவோ, அளவுக்கு மீறியோ, குறைந்த அளவிலோ உணவை உட்கொள்வது கூடாது. ஜீரணத்துக்கு ஏற்ற வகையில் முதலில் கடின உணவையும், இனிப்புகளும், எண்ணெய்ப் பசையுமுள்ள உணவை உண்ண வேண்டும். புளிப்பு, உப்புச் சுவை கொண்ட உணவுகளை இடையிலும் (சாம்பார், ரசம்), காய்ந்த, திரவமான, காரம், கசப்பு, துவர்ப்புச் சுவையுள்ள உணவுகளை இறுதியிலும் (மோர்) உட்கொள்ள வேண்டும். ஜீரண சக்தி குறைந்தவர்கள் முதலில் சூடான திரவப் பொருட்களை அருந்துவது மிகவும் பயனளிக்கும்.

மிகத் தாமதமாகவும், மிக விரைவாகவும், பேசிக் கொண்டும், சிரித்துக் கொண்டும், மனதை வேறிடத்தில் செலுத்தியபடியும் உணவு உண்டால், வயிற்றில் ஜீரணம் சரியாக நடைபெறாது.

எண்ணெய்ப் பசையுள்ள உணவு புலன்களை உறுதிப்படுத்துகிறது. உடலை வளர்க்கிறது. கிழத் தன்மையைப் போக்குகிறது. உடலுக்கு வலிமை ஊட்டுகிறது. நிறத் தெளிவைத் தோற்றுவிக்கிறது. தோஷங்களைச் சீற்றமடையச் செய்யாமல் ஜீரணமடைகிறது. சூடான உணவு சுவையூட்டுகிறது. கபத்தை வளர்ப்பதில்லை. இரவில் உண்ட உணவு ஜீரணமாகாமலேயே மறுநாள் காலையில் உணவு உண்டால், கெட்டுப் போன பாலுடன் கலந்த நல்ல பாலும் கெடுவது போன்று பாதிப்பு ஏற்படும்.

வயிற்றில் இரண்டு பங்கு உணவும், ஒரு பங்கு நீரும், ஒரு பங்கு காலியாகவும் இருக்கும் வகையில் உணவு உண்ண வேண்டும்.

No comments:

Post a Comment