Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, November 11, 2013

வீடு தேடி வந்த சிட்டுக்குருவிகள்!


சென்னையின் ஒரு வழிப் பாதைகள் பல நேரம் தலைசுற்ற வைக்கும் என்றாலும், அவை சில நேரம் ஆச்சரியமளிக்கும் அபூர்வ அனுபவங்களையும் தரக்கூடும். எங்களுக்கு ஏற்பட்ட அனுபவம், அப்படி ஆச்சரியமளிக்கும் ஒன்றுதான்.
அலுவலகம் செல்வதற்குச் சென்னை எழும்பூர் அருகிலுள்ள சிந்தாதிரிப்பேட்டையை அன்றைக்குக் கடக்க வேண்டியிருந்தது. சிந்தாதிரிப்பேட்டையின் முதன்மைச் சாலை ஒரு வழிப் பாதையாக மாற்றப்பட்டுவிட்ட நிலையில், மாற்று வழியில் வண்டியைத் திருப்பினோம். அங்கு எங்களுக்கு ஒர் ஆச்சரியம் காத்திருந்தது.

மங்காபதி தெரு வழியாக வந்தபோது, ஒரு வீட்டின் முன்னால் ஏதோ ஒரு படரும் கொடி மூன்று மாடிகளுக்கு உயர்ந்து அடர்த்தியாக நிறைந்திருந்தது. அதில் 50க்கும் மேற்பட்ட சிறு பறவைகள் "ஷில்லவுட்" ஆகத் தெரிந்தன. அந்தப் புதர் அருகே நெருங்கி வந்தபோது, அங்கு அமர்ந்திருந்த பறவைகளை அடையாளம் காண முடிந்தது. அவை, சிட்டுக்குருவிகள்!
சிட்டுக்குருவிகளா? எங்களால் நம்ப முடியவில்லை. ஆச்சரியம் விலகாமலேயே, அடுத்த 2 மணி நேரத்தை அங்கே செலவழித்தோம். பெருமளவு காய்ந்துவிட்ட அந்தக் கொடியில் கிட்டத்தட்ட 50-70 சிட்டுக்குருவிகள் கூட்டமாக வந்து அமர்வதும், பிறகு எதிர்வீட்டு மாடி கட்டைச் சுவருக்குப் பறப்பதுமாக இருந்தன.
கடந்த 2-3 ஆண்டுகளாக அந்தச் சிட்டுக்குருவிகள் இந்தப் பகுதியில் வசித்துவருகின்றனவாம். ஒரே வீட்டில் இத்தனை சிட்டுக்குருவிகள் வாழ்ந்து வருவது, பறவை ஆர்வலர்களுக்கு நிச்சயம் புதிய செய்திதான். இவ்வளவு நாள் இந்த இடம் யார் கண்களிலும் எப்படிப் படாமல் இருந்தது?
கடந்த 2-3 ஆண்டுகளாக அந்தச் சிட்டுக்குருவிகள் இந்தப் பகுதியில் வசித்துவருகின்றனவாம். ஒரே வீட்டில் இத்தனை சிட்டுக்குருவிகள் வாழ்ந்து வருவது, பறவை ஆர்வலர்களுக்கு நிச்சயம் புதிய செய்திதான். இவ்வளவு நாள் இந்த இடம் யார் கண்களிலும் எப்படிப் படாமல் இருந்தது?
சிட்டுக்குருவிகள் அழிவின் விளிம்புக்குச் சென்றுவிட்டன. குறிப்பாக, சென்னை போன்ற நகர்ப்புறங்களைவிட்டு அவை வெளியேறி ஆண்டுகள் பலவாகிவிட்டதாக செய்திகளைப் படித்திருக்கிறோம். அப்படியானால், இந்தச் சிட்டுக்குருவிகள் இங்கே கூட்டமாக வாழ்வது எப்படிச் சாத்தியமானது?
இதைச் சாத்தியப்படுத்தியதில் அந்த முல்லைக்கொடிப் புதருக்கும், அந்தப் புதரைப் பராமரித்துவரும் விஜயலட்சுமி-பூபாலன் தம்பதியினருக்கும் நிறைய பங்கு இருக்கிறது.
"இந்தச் சிட்டுக்குருவிகள், எங்கள் குழந்தை மாதிரி" என்கிறார்கள் வீட்டின் உரிமையாளர்களான அந்தத் தம்பதி. அரசு மருத்துவமனைக்குக் காய்கறி விநியோகம் செய்யும் ஏஜெண்டாக இருக்கும் பூபாலன் குடும்பத்தினர், 10 ஆண்டுகளுக்கு முன் இந்த வீட்டைக் கட்டி குடி வந்துள்ளனர். அப்போது வளர்க்க ஆரம்பித்த முல்லைக்கொடியை, மாடிக்கு ஏற்றி விட்டுள்ளனர். அந்தக் கொடி கடின மரம் போலாகி மிகப் பெரிய புதர் போல இப்போது வளர்ந்திருக்கிறது. அது பூக்கும் நிலையில் இல்லையென்றாலும், சீசன் நேரத்தில் மீண்டும் பூக்க ஆரம்பித்துவிடுமாம். அதை ஆதாரமாகக்கொண்டு இந்தச் சிட்டுக்குருவிகள் வாழ்ந்து வருகின்றன.
"அந்தக் கொடி அடர்த்தியாகிக்கொண்டே போவதைத் தடுக்க, பக்கவாட்டில் வெட்டிவட்டு மாடியில் பந்தல் போட்டுப் படரவிட இருந்தோம். ஆனால், 2-3 ஆண்டுகளுக்கு முன் சிட்டுக்குருவிகள் வந்து அதில் அடைய ஆரம்பித்தவுடன், அப்படிச் செய்யும் முடிவைக் கைவிட்டோம்.
ஏற்கெனவே நாய், பச்சைக்கிளி, புறா, முயல் போன்றவற்றை வளர்த்திருக்கிறோம் என்பதால், இந்தச் சிட்டுக்குருவிகளின் வரவு எங்களுக்கு மகிழ்ச்சியே தந்தது. காலை 11 மணி, மாலை 4 மணி என இரண்டு முறை இந்தச் சிட்டுக்குருவிகளுக்குச் சாப்பாடும் வைப்போம். பொரி கடலை, சாதம் போன்றவற்றை வைப்போம். அந்த நேரத்தில் நாங்கள் எங்காவது வெளியே போய்விட்டால் சத்தம் போட்டுக் கத்தித் தீர்த்துவிடும். சில நேரம் பால்கனியிலும், இந்த மரத்திலும் கூடு வைக்கும்" என்கிறார் விஜயலட்சுமி.
சென்னையில் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை தொடர்பாகக் கடந்த ஆண்டு கணக்கெடுப்பு நடத்திய இ.எம்.ஏ.ஐ. (The Trust for Environment Monitoring and Action Initiating) நிறுவனத்தின் திட்ட இயக்குநர் த.முருகவேளிடம் இது பற்றி விசாரித்தோம்.
"தென்சென்னையுடன் ஒப்பிடும்போது வடசென்னையில் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை, குறிப்பிடத்தக்க அளவு அதிகமாகவே உள்ளது. ராயபுரம் (451), ராஜாகடை (484), மண்ணடி (193), திருவொற்றியூர், புது வண்ணாரப்பேட்டை (தலா 130) சிட்டுக்குருவிகள் இருப்பது பதிவு செய்யப்பட்டுள்ளது. சிந்தாதிரிப்பேட்டையில் கடந்த ஆண்டு நாங்கள் கணக்கெடுப்பு நடத்தியபோது சிங்கண்ணா தெரு, ஆதிகேசவலு தெரு, குருவப்பா தெரு, அருணாசலம் தெருவில் 20 சிட்டுக்குருவிகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.
வடசென்னையில் மின்சார மீட்டர் பாக்ஸ், ஷட்டரின் மேற்பகுதி, விளக்குக் கம்பங்களின் மேற்பகுதி, சுவர்ஓட்டைகளில் சிட்டுக்குருவிகள் கூடு கட்டி குஞ்சு பொரிக்கின்றன. அதேநேரம், சிட்டுக்குருவிகள் பகலில் தங்கி ஓய்வெடுப்பதற்கு (roosting) அடர்த்தியான தாவரங்களையே நாடும். சாதாரணமாகப் போகன்வில்லா புதர், இல்லையென்றால் பூவரசு மரம், சில இடங்களில் வேப்ப மரத்தில் தங்கும்.
தங்கி ஓய்வெடுக்கவே இந்த முல்லைக்கொடிக்கு அவை வந்திருக்க வேண்டும். இப்படி ஒரே புதரில் இத்தனை சிட்டுக்குருவிகள் இருந்தும், எங்களைப் போன்ற பறவை ஆர்வலர்களின் கண்ணில் இதுவரை படாமல் இருந்தது ஆச்சரியம்தான்" என்கிறார் த.முருகவேள்.
இந்த இடத்தில் சிட்டுக்குருவிகளின் அழிவுக்கான முக்கியக் காரணங்களைப் பற்றி யோசிக்க வேண்டும். பூச்சிக்கொல்லி தெளிப்பு, அயல் தாவரங்களின் பெருக்கத்தால் குஞ்சுகளுக்குப் புழுவும், ஞெகிழிப் (பிளாஸ்டிக்) பைகளில் அடைக்கப்பட்டு விற்கப்படுவதால் தானியங்களும் கிடைக்காமல் போவது, நவீன கட்டடங்களில் கூடு கட்ட இடமில்லாமல் போவது ஆகியவற்றுடன் ஓய்வெடுப்பதற்குப் புதர்ச் செடிகள் இல்லாமல் இருப்பது போன்றவைதான் சிட்டுக்குருவிகளின் அழிவுக்கு முக்கியக் காரணம். இதற்கு மாறாகச் சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் சிட்டுக்குருவிகள் பிழைத்திருப்பதற்கான வாய்ப்புகள் எஞ்சியிருப்பதை, இந்தச் சிட்டுக்குருவிகள் கூட்டம் அடையாளப்படுத்துகிறது.
விஜயலட்சுமி, பூபாலன் தம்பதியைப் போலச் சிட்டுக்குருவிகள் உள்பட நம்மைச் சுற்றி வாழும் உயிரினங்களுக்கு ஆதரவளித்தால், அவை நிச்சயம் பல்கிப் பெருகும். அவை நமது மனதுக்கு ஆசுவாசம் தருவதுடன், நம் வாழ்க்கைக்குப் புது வண்ணமும் சேர்க்கும்.

No comments:

Post a Comment