Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, January 3, 2014

தமிழ்நாட்டின் 7 புகழ்பெற்ற அரண்மனைகள்

தமிழ்நாட்டை பல்வேறு காலகட்டங்களில் சோழர்களும், பாண்டியர்களும், பல்லவர்களும் ஆண்டு வந்துள்ளனர். இவர்களைத் தவிர ஏராளமான குறுநில மன்னர்களும், ஜமீன்தார்களும் தமிழ்நாட்டின் பல பகுதிகளை ஆண்டுள்ளனர். அவர்கள் வாழ்ந்த காலகட்டத்தில் நாம் வாழவில்லை என்றாலும், அந்த ராஜரீக காலத்தினை நம் கண் முன்னே நிறுத்தும் அவர்களுடைய அரண்மனைகள் பல இன்று நம்மிடையே எஞ்சியுள்ளன. அந்த வகையில் தமிழ்நாட்டில் இன்று காணக்கூடிய அரண்மனைகளில் பிரபலமாக அறியப்படும் 7 அரண்மனைகள் 

செட்டிநாடு அரண்மனை இந்தியாவின் ஏழு அதிசயங்களுள் ஒன்றாகக் கருதப்படும் செட்டிநாடு அரண்மனை காரைக்குடியில் அமைந்துள்ளது. டாக்டர்.அண்ணாமலைச் செட்டியார் இந்த அரண்மனையை வடிவமைத்து, 1912-ம் ஆண்டில் கட்டி முடிக்கச் செய்தார். கிழக்காசிய நாடுகள் மற்றும் ஐரோப்பா ஆகிய நாடுகளிலிருந்து அலங்கார விளக்குகள், தேக்கு மர சாமான்கள், பளிங்குக் கல், கண்ணாடிகள், கம்பளங்கள், மற்றும் ஸ்படிகங்களும் இறக்குமதி செய்யப்பட்டு செட்டிநாடு அரண்மனை கட்டப்பட்டுள்ளது.

பெர்ன்ஹில்ஸ் பேலஸ் 1844-ஆம் ஆண்டு கட்டப்பட்ட பெர்ன்ஹில்ஸ் பேலஸ்

அந்தக் காலங்களில் மைசூர் மகாராஜாவின் கோடைக் கால வசிப்பிடமாக இருந்து வந்தது. ஊட்டியில் அமைந்துள்ள இந்த அரண்மனை தற்போது பச்சை புல்வெளிகள், அடர்ந்த காடுகள், பசுமையான தேயிலைத் தோட்டங்களுக்கு மத்தியில் அழகாக காட்சியளித்துக்கொண்டிருக்கிறது.


பத்மநாபபுரம் அரண்மனை கன்னியாகுமாரி மாவட்டத்தின் தக்கலைக்கு அருகில், நாகர்கோவில் நகரிலிருந்து கேரள தலைநகர் திருவனந்தபுரம் செல்லும் பாதையில் பத்மநாபபுரம் என்னும் சிறிய கிராமத்தில் பத்மநாபபுரம் அரண்மனை அமைந்துள்ளது. இந்த அரண்மனை தமிழ்நாட்டுப் பகுதியில் அமைந்திருந்தாலும், கேரள தொல்பொருள் துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இது கி. பி.1601-ஆம் ஆண்டு திருவிதாங்கூர் சமஸ்தானத்தை ஆண்ட ரவி வர்ம குலசேகர பெருமாள் என்பவரால் கட்டப்பட்டது.

திருமலை நாயக்கர் அரண்மனை மதுரையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான திருமலை நாயக்கர் மஹால் கி.பி. 1636-ஆம் ஆண்டில், மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களில் ஒருவரான திருமலை நாயக்கரால் இந்தோ சராசனிக் பாணியில் கட்டப்பட்டிருக்கிறது. இந்த அரண்மனையில் 58 அடி உயரம் உள்ள 248 தூண்கள் அமையப்பெற்றுள்ளன. இங்கிருந்து மதுரை மீனாட்சி அம்மன் கோயில் 2 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது.

தஞ்சாவூர் அரண்மனை தஞ்சாவூர் அரண்மனையானது தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டது. அவர்களின் வீழ்ச்சிக்கு பிறகு இந்த அரண்மனை மராட்டியர்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. இந்த அரண்மனை வளாகத்துக்குள் தற்போது ராஜா சரபோஜி மெமோரியல், ராயல் பேலஸ் அருங்காட்சியகம், தர்பார் ஹால், சரஸ்வதி மஹால் நூலகம் ஆகியவை காணப்படுகின்றன.


தமுக்கம் அரண்மனை 1670-ல் கட்டப்பட்ட தமுக்கம் அரண்மனை நாயக்க வம்சத்தை சேர்ந்த ராணி மங்கம்மாளின் கோடைக்கால மாளிகையாக பயன்படுத்தப்பட்டது. தமுக்கம் என்றால் கோடைக் காலத்தில் இளைப்பாறும் இடம் என்று பொருள். இந்த அரண்மனை 1959-ல் அருங்காட்சியகமாக மற்றப்பட்டு தற்போது மகாத்மா காந்தி அருங்காட்சியகம் என்ற பெயரில் அறியப்படுகிறது.


சொக்கநாத நாயக்கர் அரண்மனை மதுரை நாயக்கர் மன்னர்கள் காலத்தில் கி.பி. 17-ஆம் நூற்றாண்டின் மத்தியில் கட்டப்பட்ட சொக்கநாத நாயக்கர் அரண்மனை தற்போது ராணி மங்கம்மாள் மஹால் என்று அழைக்கப்படுகிறது. இந்த அரண்மனை திருச்சிராப்பள்ளியில் புகழ்பெற்ற மலைக்கோட்டையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இங்கு தற்போது திருச்சி அரசு அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment