Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, December 30, 2013

வசீகரிக்கும் வால்பாறை

வால்பாறையை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மேடு பள்ளங்களாக அந்த மலைப்பகுதியில் எங்கு நோக்கினும் பச்சை பசேலென்று கம்பளி போர்த்தப்பட்டது போல தேயிலைத் தோட்டங்கள்.

அதிகாலையில் பனி மூட்டம் மூடியிருக்கும் வேளையிலும் மழைக்காலங்களில் மேகங்கள் உருவாகி தேயிலைத் தோட்டங்களைத் தழுவிச் செல்லும் காட்சி கண்ணுக்கு விருந்து நெஞ்சிற்கு சுகம், கற்பனைக்கு ஊற்று.கோவை மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் முக்கியமானது வால்பாறை. கோவையில் இருந்து 100 கி.மீ. தூரத்திலும், பொள்ளாச்சியில் இருந்து 60 கி.மீ. தூரத்திலும் உள்ளது.
தேயிலை தோட்டங்கள், அடர் வனப்பகுதிகள் என ரம்மியமான இடம். இங்கு சுற்றிப் பார்க்க ஏராளமான இடங்கள் உள்ளன.
பாலாஜி கோயில் பூங்கா
வால்பாறையில் இருந்து கருமலை வரை வாகனத்தில் சென்று, அங்கிருந்து அரை கி.மீ. நடந்து சென்றால் பாலாஜி கோயில்.
கோயிலை சுற்றி பூத்து குலுங்கும் மலர்கள் கண்களை கவரும். சிறுவர் பூங்கா ரம்மியமானது.
அக்காமலை புல்வெளி
akkamalai_001
பாலாஜி கோயிலில் இருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ளது. பச்சை பட்டாடை உடுத்தியதுபோன்ற அழகிய புல்வெளி.
வெள்ளமலை குகை
கருமலையில் இருந்து 5 கி.மீ. தொலைவில் சிறுகுன்றா சாலையில் அமைந்துள்ளது.
சின்னக்கல்லார் அணையில் இருந்து மலையை குடைந்து 4 கி.மீ. தூரம் அமைக்கப்பட்ட குகை, கால்வாய் ஆகியவற்றை காணலாம்.
சின்னக்கல்லார் நீர் வீழ்ச்சி
chinnakallr_001
சின்னக்கல்லார் அணையில் இருந்து 2 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. மர தொங்கு பாலம் வழியாக செல்ல வேண்டும்.
தென்னிந்தியாவின் சிரபுஞ்சி என பெயர் பெற்றது. அருவிக்கு செல்ல கட்டணம் ஒரு நபருக்கு ரூ.115.
வில்லோனி பள்ளத்தாக்கு
வால்பாறையில் இருந்து 5 கி.மீ. தூரத்தில் உருளிக்கல் ரோட்டில் உள்ளது.
ஆங்கிலேயர்கள் வால்பாறைக்கும் வில்லோனிக்கும் இடையில் விஞ்ச் அமைத்து பயணித்துள்ளனர். வில்லோனியில் விஞ்ச் அமைத்ததற்கான தடயங்கள் இப்போதும் உள்ளன.
இங்கிருந்து வால்பாறைக்கு செல்லும் வில்லோனி குதிரைப்பாதை காணலாம்.
சோலையார் அணை
solaiyar_dam_001
மானாம்பள்ளி மின் உற்பத்தி நிலையத்தில் இருந்து 20 கி.மீ. தூரம். ஆக்டோபஸை போல் 75 கி.மீ. சுற்றளவில் அமைந்துள்ள அணை.
தமிழகத்திலேயே உயரமானது (345 அடி). அணையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் ஆற்று பள்ளத்தாக்கு ரம்மியமானது.
இங்கு மீன் சாப்பாடு பிரசித்தம். அதிரப்பள்ளி அருவி: சோலையார் அணையில் இருந்து சாலக்குடி செல்லும் ரோட்டில் 50 கி.மீ. தூரத்தில் உள்ளது. புன்னகை மன்னன் படத்தில் இடம் பெற்ற அருவி.
அருவியும், அருவிக்கு முன்பாக நீண்ட சமவெளி ஆறும் பிரமிக்க வைப்பவை.
நல்லமுடி பூஞ்சோலை
சோலையார் அணையில் இருந்து 15 கி.மீ. தொலைவில் முடீஸ் ரோட்டில் உள்ளது.
இயற்கை எழில் சூழ்ந்த இந்தழு பூஞ்சோலையில் யானைகள், காட்டெருமைகளை காணலாம்.
கவர்க்கல்
வால்பாறை மற்றும் பொள்ளாச்சி மலைப்பாதையில் உயர்வான பகுதி.
வால்பாறையில் இருந்து 13 கி.மீ. தொலைவில் உள்ளது. இப்பகுதி பெரும்பாலும் அடர்த்தியாக பனி சூழ்ந்திருக்கும். வாகனத்தில் விளக்கை எரிய விட்டு பாதுகாப்பாக ஓட்டிச் செல்ல வேண்டும். யானைகள் கடக்கும் பகுதி.
வாட்டர்பால்ஸ்
waterfalls_001
வால்பாறை மற்றும் பொள்ளாச்சி மலைப்பாதையில் 20 கி.மீ. தொலைவில் உள்ளது.
இங்கு நறுமணம் மிக்க ஜகருண்டா வகை மலர்கள் பூத்துக்குலுங்கும். ஒரிஜினல் டீ கிடைக்கும்.
மங்கி பால்ஸ்
வால்பாறை மற்றும் பொள்ளாச்சி மலைப்பாதையில் 40 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது.
இந்த மங்கி பால்ஸ் செல்லும் சுற்றுலாப்பயணிகளை எப்போதும் குரங்குகள் வரவேற்ற வண்ணம் உள்ளன. திரும்பி போக வேண்டாம் என்ற எண்ணத்தை நமக்கு ஏற்படுத்தும்.
ஆழியார் அணை
வால்பாறை மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. 120 அடி உயரமுள்ள அணை. ஆண்டு முழுவதும் 100 அடிக்கு குறையாமல் நீர் இருக்கும்.
அணைக்கட்டில் பூங்கா உள்ளது. படகு சவாரியும் செய்யலாம். சுடச்சுட பொரித்த மீனை இங்கு சுவைக்கலாம்.
டாப்சிலிப்
பொள்ளாச்சியில் இருந்து 15 கி.மீ. சமதளத்திலும், 13 கி.மீ. மலைப்பாதையிலும் சென்றால் டாப்சிலிப்பை அடையலாம்.
கடல்மட்டத்துக்கு மேல் சுமார் 450 மீட்டர் உயரத்தில் உள்ளது. டாப்சிலிப்பில் யானை சவாரி செல்லலாம். இங்கு மூலிகை பண்ணையும் உள்ளது.
பரம்பிக்குளம் அணை
பரம்பிக்குளம் அணை கேரளாவில் இருந்தாலும், அணை நிர்வாகம் தமிழக பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. சோலையார் அணையில் இருந்து வரும் நீர் இங்கு தேக்கமாகிறது.
டாப்சிலிப்பில் இருந்து 20 கி.மீ. தூரத்தில் உள்ளது. கேரள எல்லையில் இருந்து கேரள வனத்துறை வாகனத்தில் பரம்பிக்குளம் அணை வரை வன உலா செல்லலாம்.

No comments:

Post a Comment