Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, January 2, 2014

2013 டாப் 10 பிரச்னைகள் - தண்ணீர்... தண்ணீர்...


2013-ம் ஆண்டு தமிழகத்தை ஆட்டிப்படைத்த 10 தலையாயப் பிரச்னைகளைப் பற்றி
பல்வேறு துறை சார்ந்த நிபுணர்கள் அலசுகிறார்கள்...
"2013 -ம் ஆண்டின் தொடக்கத்தில் பசுமைத் தீர்ப்பாயத்தின் நடவடிக்கையைத் தொடர்ந்து, சென்னையில் விதிமுறைகளைப் பின்பற்றாத சுமார் 103 குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள் அரசால் அதிரடியாக இழுத்து மூடப்பட்டன. உடனே சென்னைவாசிகள் குடிநீர்ப் பற்றாக்குறையில் தவித்தார்கள். 

குடிநீர் வணிகர்கள், அரசை மிரட்டினார்கள். பணிந்துபோவதைத் தவிர வேறு வழி இல்லாத அரசு, உடனடியாக மூடப்பட்ட நிறுவனங்களைத் திறந்துகொள்ள அனுமதித்தது. விளைவு... பிடி தங்கள் கையில் இருப்பதைத் தெரிந்துகொண்ட புட்டித் தண்ணீர் தயாரிப்பு நிறுவனங்கள், வேலைநிறுத்தத்துக்குப் பிறகு 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை விலையை ஏற்றிவிட்டார்கள். ஆக, குடிநீர் நிறுவனங்கள் பெரும் கொள்ளையில் ஈடுபடுவதுடன், இப்போது சமூகத்தை மிரட்டும் நிலைக்கு வந்துவிட்டன. பொதுமக்களும் தாங்கள் காசு கொடுத்து வாங்கிக் குடித்த தண்ணீர் தரமானது அல்ல என்று தெரியவந்தபோதும், அதற்கு எதிராகக் கொந்தளிக்காமல், 'அந்தத் தண்ணீரை தடையின்றி கொடுங்கள்’ என்றுதான் கேட்டார்கள். அப்படி ஓர் இக்கட்டில் மக்களைக் கொண்டுவந்து நிறுத்தியுள்ளது அரசு. கொடுமையிலும் கொடுமையாக, அரசாங்கமே 10 ரூபாய்க்கு பாட்டில் நீர் விற்கிறது. இந்த நிலையை மீட்க, மூன்று கட்டங்களில் நாம் செயலாற்ற வேண்டும்.
முதல் நிலையில் செயல்பட வேண்டியது, மக்களாகிய நாம்தான். ஒவ்வொரு முறை தண்ணீரை விலைகொடுத்து வாங்கும்போதும், 'தண்ணீர் நமது அடிப்படை உரிமை’ என்பதை நமக்கு நாமே மறுத்துக் கொள்கிறோம் என்பதை முதலில் உணர வேண்டும். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் பாட்டில் மற்றும் கேன் தண்ணீர் மிக அதிகம் விற்பனையாகின்றன. இந்தியாவில் உள்ள பாட்டில் நீர் ஆலைகளில் பாதி தமிழ்நாட்டில் உள்ளன. இது பெருமை தரும் செய்தி அல்ல. தமிழ்நாட்டைவிட குறைந்த நீர் ஆதாரமும் மழைவளமும் கொண்ட பல பகுதிகள் இந்தியாவில் இருந்தும், அங்கெல்லாம் இந்த அளவுக்கு நீர் வணிகம் நடக்கவில்லை. எனில், இந்த வணிகத்தை வளர்ப்பதில் தமிழக மக்களின் பங்கு முதன்மையானதாக இருக்கிறது. அயல்நாட்டு மக்களின் நுகர்வுக்காக இங்கே பொருள்கள் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுவதை பொருளாதார வளர்ச்சியின் பெருமையாகப் பேசும் நாம், அந்தப் பொருள்களுக்குள் நமக்குச் சொந்தமான 'விலையில்லா நீரும்’ ஒளிந்துகொண்டு ஏற்றுமதியாகிறது என்பதை எப்போது உணரப்போகிறோம்?
இரண்டாம் நிலைச் செயல்பாடு, ஊடகங்களின் பொறுப்பு. லண்டன் மாநகரின் உணவகங்களில், குடிக்கத் தண்ணீர் வேண்டும் எனில் பாட்டில் நீர் மட்டுமே ஒரே வாய்ப்பு என்ற நிலை ஏற்பட்டபோது, 'ஈவினிங் ஸ்டாண்டர்ட்’ என்கிற நாளிதழ் அந்தப் பிரச்னையை கையில் எடுத்தது. உணவகங்களில் பொதுநீர் வசதி வேண்டும் என்பதை மையமாக வைத்து பரப்புரை செய்தது. இதற்கு மக்களின் ஏகோபித்த ஆதரவு பெருகவே, வேறு வழியின்றி உணவகங்கள் பொதுக் குடிநீர் வசதியை உருவாக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டன. அந்த ஆண்டில் பாட்டில் தண்ணீர் வணிகம் 9 சதவிகிதம் அளவுக்குக் குறைந்தது.
இத்தகைய பொறுப்புமிகுந்த செயல்பாடுகளில் நம் ஊர் ஊடகங்கள் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். ஏனெனில், தமிழகத்திலும் பல ஷாப்பிங் மால் உணவகங்கள் மற்றும் சங்கிலித் தொடர் உணவகங்களில் பொதுக் குடிநீர் வழங்கப்படுவது இல்லை. தவித்த வாய்க்குத் தண்ணீர் மறுப்பதை பெரும் பாவமாகக் கருதும் மரபு நம்முடையது. ஆனால், ஊரின் மையத்தில் ஒரு கடையைத் திறந்துவைத்துக்கொண்டு 'தண்ணீர் வேண்டுமா? பணம் கொடு’ என்று கேட்கிறார்கள். இதைத் தட்டிக்கேட்க வேண்டும். அதோடு, 'பாட்டில் குடிநீர்தான் உயர்ந்தது. குழாய் நீர் தரமற்றது’ என்ற மனப்பாங்கையும் மாற்ற வேண்டும்.
மூன்றாவதும் தலையாயதும், அரசின் செயல்பாடுதான். உலகப் புகழ்பெற்ற சுற்றுச்சூழல் ஆய்வு நிறுவனமான பசிபிக் இன்ஸ்டிட்யூட் வெளியிட்ட 'உலகத் தண்ணீர் அறிக்கை’யில் 'உலகின் பல பாகங்களில் அரசு, பொதுநீரை வழங்கத் தவறியதுதான், தனியார் தண்ணீர் வணிகம் பெருக அடிப்படை காரணம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டுக்கும் பொருந்தும். தாமிரபரணி, பவானி, வைகை... என நமது பாரம்பரிய நீர்வளங்கள் தனியாருக்குத் திறந்துவிடப்பட்டுள்ளன. மறுபுறம் பொதுக் குடிநீர் மிக மோசமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்த வீழ்ச்சியும், தனியார் தண்ணீரின் எழுச்சியும் எதேச்சையானதா? இல்லை! இரண்டுமே திட்டமிடப்பட்டது என்பதுடன், இரண்டுக்கும் நேரடித் தொடர்பு உள்ளது. பொதுக் குடிநீரின் வீழ்ச்சியில்தான் பாட்டில் தண்ணீர் எழுச்சி பெறுகிறது. குழாயில் நல்ல தண்ணீர் வந்தால், நீங்கள் எதற்கு பாட்டில் தண்ணீரைக் காசு கொடுத்து வாங்கப்போகிறீர்கள்?''
விகடன்

No comments:

Post a Comment