Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, November 17, 2014

கேன்சல் செய்யாத கிரெடிட் கார்டு...பிரச்னைகளையே உண்டாக்கும்!

‘ஏழு, எட்டு ஆண்டுகளுக்கு முன்பு கிரெடிட் கார்டு வைத்திருக்காதவர்களே இல்லை. இன்றைக்கு கிரெடிட் கார்டு பயன் படுத்துகிறவர்களின் எண்ணிக்கைக் குறைந்துவிட்டது. காரணம், கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் தேவை இல்லாமல் அதிக செலவு செய்து கையைக் கடித்துக்கொண்டதுதான். இந்தக் கசப்பான அனுபவத்துக்குப்பின் பலரும் கிரெடிட் கார்டை தூக்கி எறிந்துவிட்டனர். ஆனால், இப்படி செய்வது கூடவே கூடாது. அதை முறைப்படி கேன்சல் செய்ய வேண்டும். அப்படி செய்யவில்லை எனில் எதிர்காலத்தில் பல பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்’’ என்கிறார்கள் அனுபவசாலிகள்.

கிரெடிட் கார்டினை முறையாக கேன்சல் செய்யாமல்விட்டால் ஏற்படும் விளைவுகள் குறித்து திஷா நிதி ஆலோசனை மையத்தின் முதன்மை ஆலோசகர் எஸ்.கோபால கிருஷ்ணனிடம் பேசினோம். அவர் கொடுத்த விரிவான விளக்கம் இங்கே...
“நான் கிரெடிட் கார்டு பயன்படுத்துவதை நிறுத்தி பல மாதங்கள் ஆகிறது. ஆனால், வங்கியில் இருந்து பணம் செலுத்தச் சொல்லி தபால் மட்டும் வந்துகொண்டே இருக்கிறது என்று பலபேர் எங்களது ஆலோசனை மையத்தை அணுகி சொல்கிறார்கள். இவர்கள் இப்படி ஒரு பிரச்னையைச் சந்திக்கக்  காரணம், கிரெடிட் கார்டுகளை முறையாக கேன்சல் செய்யாமல் விட்டதுதான்.
 கேன்சல் செய்யாததால் ஏற்பட்ட விபரீதம்!
ஒருநாள் கணேசன் என்பவர் எங்கள் மையத்தை தேடி வந்தார். இவர் வேலை செய்த நிறுவனம், வேலை விஷயமாக இவரை அமெரிக்காவுக்கு அனுப்பி இருக்கிறது. ஓராண்டு அங்கேயே தங்கி பணிபுரிய வேண்டும் என்பதால், இங்கே பயன்படுத்திவந்த தனியார் வங்கியின் கிரெடிட் கார்டு ஒன்றை அலட்சியமாகத் தூக்கிக் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டுப் போய்விட்டார்.  அவர் தூக்கியெறிந்த கிரெடிட் கார்டை யாரோ ஒருவர் பயன்படுத்த  ஆரம்பித்திருக்கிறார்.  கணேசன்  அமெரிக்காவில் இருந்ததால், இந்த விஷயம் அவருக்கு தெரியவே இல்லை.
ஓராண்டு கழித்து நாடு திரும்பியபோது தான் அவர் கார்டினை யாரோ பயன் படுத்தியதும், அதற்கு அவர் அசலும் வட்டியுமாக பல ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டியிருந்ததும் தெரியவந்தது. இந்த நிலையில்தான் மிகுந்த மன உளைச் சலுடன் எங்களைச் சந்தித்தார் அவர்.
 கிரெடிட் கார்டை  முறையாக கேன்சல் செய்யாமல் விட்டதால் ஏற்பட்ட வினை இது என்று அவருக்குப்  புரியவைத்தோம். அந்தக் கடனை சுமூகமாக அடைக்க வங்கியோடு பேசவும், அந்த கார்டினை முறைப்படி கேன்சல் செய்யவும் நாங்கள் அவருக்கு உதவினோம்.
 நட்பால் வந்த நஷ்டம்!
ஸ்ரீதரன் என்பவர் தான் பயன்படுத்தி வந்த கிரெடிட் கார்டை கேன்சல் செய்யாமல்,  தனது நண்பரிடம் தந்திருக் கிறார். அதை அவர் தனது வண்டியின் சாவிக்குக் கீ-செயினாகப் பயன்படுத்தி வந்திருக்கிறார். ஒருசமயம்  வண்டியின் சாவியுடன், கிரெடிட் கார்டு தொலைந்து போக வண்டிக்கு புதிய சாவியை வாங்கிப் பயன்படுத்த ஆரம்பித்திருக் கிறார். தரனும் தன் நண்பருக்குத் தந்த கிரெடிட் கார்டினை சுத்தமாக மறந்து விட்டார்.
சில நாட்களுக்குப் பிறகு தனது கிரெடிட் கார்டை யாரோ பயன்படுத்தி இருப்பதும், அதிலிருந்து குறிப்பிட்ட தொகைக்கு ஷாப்பிங் செய்திருப்பதும் ஸ்ரீதரனின் மொபைலுக்கு குறுஞ்செய்தியாக வந்தது. அதன்பிறகே தன் தவறை உணர்ந்தவர் நண்பருடன் வங்கிக்குச் சென்று நடந்ததை விசாரித்துத் தெரிந்து கொண்டிருக்கிறார். வேறு வழியில்லாததால், வங்கிக்குச் செலுத்த வேண்டிய பணத்தைச் செலுத்தி, அதை கேன்சல் செய்துவிட்டு, வீட்டுக்குத் திரும்பியிருக்கிறார்.
 எப்படி கேன்சல் செய்வது?
கிரெடிட் கார்டினை இனி பயன்படுத்த வேண்டாம் என்று நினைப்பவர்கள் அஜாக்கிரதையாக அதை விட்டுவைக்காமல், கேன்சல் செய்துவிடுவதே நல்லது. இதற்கு, கிரெடிட் கார்டு வழங்கிய வங்கியை அணுகி தனது முடிவை அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும். அதனுடன் தான் அதுவரை பயன்படுத்தி வந்த கிரெடிட் கார்டை இரண்டு துண்டாக உடைத்து அவர்களிடமே கொடுத்துவிட்டு, அதற்குண்டான உறுதிக் கடிதத்தை  வாங்கிக்கொள்ள வேண்டும்.
அல்லது கிரெடிட் கார்டு ரத்து செய்யும் விவரத்தை கடிதம் மூலமாகவோ  போன் மூலமாகவோ தெரிவித்துவிட்டு, துண்டிக்கப்பட்ட கிரெடிட் கார்டை கூரியர் மூலம் வங்கிக்கு அணுப்பலாம். எனினும், இப்படி செய்வதைவிட வங்கிக்கு நேரடியாகச் சென்று கிரெடிட் கார்டினை கேன்சல் செய்வதே சிறந்தது’’ என்றார் கோபாலகிருஷ்ணன்.

கிரெடிட் கார்டு வேண்டாம் என்கிறவர்கள் முறையாக அதை கேன்சல் செய்துவிடுவதே நல்லது!

No comments:

Post a Comment