Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday, November 3, 2013

கோடைக்கேற்ற உணவு...


கோடையின் பாதிப்பால் எளிதாக சில நோய்களும் வந்து விடுகின்றன. கோடைக்கேற்ற உணவு வகைகளை சாப்பிட்டால் அந்த நோய் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்.

கோடைக்காலத்தில் நீர்ச்சத்து அதிக அளவில் தேவைப்படும். காய்கறிகளில் நீர்ச்சத்து அதிகம் காணப்படுகிறது. காய்கறிகளை முடிந்தவரை பச்சையாகவோ அல்லது லேசாக வேக வைத்தோ உட்கொண்டால்தான் அதிக அளவிலான நீர்ச்சத்தை நாம் பெற முடியும். காய்கறிகளைப் போன்று பழங்களிலும் நிறைய நீர்ச்சத்து உள்ளது.


காய்கறிகளையும், பழங்களையும் இந்த கோடையில் எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக உட்கொள்கிறோமோ அந்த அளவுக்கு நல்லது. கோடை வெயிலில் சிறிது தூரம் நடந்தாலே வியர்த்துக் கொட்டிவிடும். அப்புறம் என்ன... அரிப்பு தான்! வெங்காயத்தை உணவில் அதிக அளவில் சேர்த்துக் கொண்டால் வெப்பத்தால் ஏற்படக்கூடிய அரிப்பு வராது. வெங்காயத்தில் உள்ள 'குவர்சடின்' என்று வேதிப்பொருள் அதற்கு உதவுகிறது.

இப்போது தர்பூசணி பழங்கள் நிறைய கிடைக்கும். அந்த பழத்தில் இருப்பது 90 சதவீதம் தண்ணீ­ர் தான். தர்பூசணி போன்று வெள்ளரிக்காயிலும் நிறைய நீர்ச்சத்து உள்ளது. அதனால், இவற்றை அதிக அளவில் சாப்பிடுங்கள்.

காய்கறிகளைக் கொண்டு 'சூப்' தயார் செய்து, அதை குளிர வைத்து உட்கொள்வதும் சிறந்தது என்கிறார்கள், அமெரிக்க டாக்டர்கள். வாழைப்பழம் நிறைய சாப்பிடுவதும் கோடைகாலத்தில் நல்ல உடல்நலத்தை தக்கவைக்கும். வெயிலின் தாக்கம் தாங்காமல் நாம், குளிராக எது கிடைத்தாலும் குடிப்போம், சாப்பிடுவோம். நம்முடைய பலவீனத்தைத் தெரிந்து கொண்டுதான் கலர், கலரான குளிர்பானங்களை எல்லாக் கடைகளிலும் விற்கிறார்கள். தாகம் அடங்க வேண்டும் என்பதற்காக, அவற்றை அதிக விலை கொடுத்து வாங்கி உபயோகிக்கிறோம்

இந்த கலரான குளிர்பானங்களால் உடலில் தேவையற்ற கலோரி தான் சேருமே தவிர, வேறு எந்தவித பலன்களும் கிடையாது என்கிறார்கள் டாக்டர்கள். இப்போதெல்லாம் ஐஸ் காபி, ஐஸ் டீ ஆகியவையும் அமோகமாக விற்பனையாகின்றன. ஆரோக்கியம் கருதி இவற்றை தவிர்ப்பது நல்லது. எண்ணெயில் பொரித்து எடுக்கும் சைவ மற்றும் அசைவ உணவு வகைகளை இந்த கோடையில் முடிந்தவரை தவிர்ப்பது இன்னொரு ஆரோக்கிய ரகசியம்.

வெளியில் வெயிலில் வெளியே செல்ல நேரிட்டால் சுத்தமான குடிநீரை கையோடு கொண்டு செல்லுங்கள். இல்லையென்றால், இயற்கை பானமான இளநீரை வாங்கி குடியுங்கள்.

மோர், எலுமிச்சை பழச்சாறு ஆகியவையும் நல்லதுதான். அதேநேரம், அவற்றில் சேர்க்கப்படும் தண்­ணீர் சுத்தமானதாக இருக்க வேண்டும். முடிந்தவரை, அவற்றை நீங்களே வீட்டில் தயார் செய்து உட்கொள்வதுதான் சிறந்தது.

தினமும் 2 டம்ளர் மோர் குடித்து வாருங்கள். வறண்ட சருமம் நீங்கி தோல் பொலிவு பெறும். தோல் நீக்கிய ஆப்பிள் பழத்தை நன்றாக மசித்து, அதனுடன் சிறிது தேன், ஓட்ஸ் பவுடர் ஆகியவற்றை கலந்து, அந்த கலவையை முகத்தில் பூசி சுமார் அரை மணி நேரம் ஊறவிட்டு, முகத்தை கழுவவும். வெயிலின் தாக்கத்தால் பாதிப்புக்குள்ளான உங்கள் வறண்ட சருமம் பொலிவு பெறும்.

தினமும் காலை, மாலை இருவேளை குளியுங்கள். காலைக்குளியலின் போது மட்டும் தலை மற்றும் உடல் முழுவதும் தேங்காய் எண்ணெய் தேய்த்து, நன்றாக ஊறவிட்டு, அதன்பின் குளிப்பது நல்லது. இப்படிச் செய்வதால் உடல்சூடு குறையும். மாலையில் எண்ணைக்குளியல் ஆகவே ஆகாது.

கோடையில் கண்கள் எளிதில் சோர்ந்து போய்விடுவதால் எரிச்சல் கொடுக்க ஆரம்பித்துவிடும். அதைப் போக்க, இரவில் தூங்கும்முன் கண்களை சுற்றி விளக்கெண்ணெயை தடவி விடுங்கள். கண்கள் குளிர்ச்சி பெறும்.

No comments:

Post a Comment