Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, December 14, 2013

உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் எலுமிச்சை!



நோய் வராமல் தடுத்து, உடல் நலத்தை காக்கக்கூடிய பல சத்துக்கள் எலுமிச்சம் பழத்தில் அடங்கியுள்ளது. எலுமிச்சம் பழம் புளிப்பு சுவை கொண்டது.

புளிப்பு சுவையுள்ளவை ஜீரணத்தை தூண்டி உணவை நன்கு செரிக்க செய்யும். உடல் கழிவுகளை எளிதாக வெளியேற்றும் தன்மையும், புளிப்பு சுவைக்கு உண்டு. எலுமிச்சை புளிப்பு சுவையுடையதாக இருந்தாலும், இதில் காரத்தன்மையும் இருக்கிறது. அதனால் ரத்தத்தை தூய்மை செய்யும் சிறப்பு இதில் இருக்கிறது.


எலுமிச்சை பழத்தில் உள்ள "சிட்ரிக் அமிலம்" நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்ததாக இருப்பதால் சளி, இருமல், தொண்டை வலி போன்றவைகளுக்கு நல்ல மருந்தாகிறது. எலுமிச்சை சாறுக்கு பித்தநீரை சுரக்கும் தன்மை உண்டு. அதனால் காமாலை நோய்களுக்கும் இது மருந்தாக பயன்படுகிறது.

ரத்தப் போக்கை தடுத்து நிறுத்தும் சக்தி எலுமிச்சை சாறுக்கு உள்ளதால் மூக்கில் ரத்தம் வடிதல், மூலநோயில் உண்டாகும் ரத்தக் கசிவு போன்ற நிலைகளில் இது பலனளிக்கிறது.

உடலில் காற்றை சீராக்கி இயக்கும் தன்மை எலுமிச்சைக்கு உண்டு. இதனால் எலுமிச்சை சாறு பருகினால் இதயம், நுரையீரல் போன்றவை நன்றாக இயங்கும். மலை ஏற்றம் செல்பவர்கள், எலுமிச்சம் சாற்றை நீரில் கலந்து குடித்தால் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்படும், களைப்பு நீங்கும். இது ரத்த ஓட்டத்தை சீராக்குவதால் அதிக ரத்த அழுத்தம் மற்றும் இதய படபடப்பை நீக்கும். அதனால் உயர் ரத்த அழுத்தம் கொண்டவர்களும், மன பதட்டம் கொண்டவர்களும் எலுமிச்சை சாறில் நீர் கலந்து பருகலாம்.

எலுமிச்சை கழிவுகளை வெளியேற்றும் தன்மை வாய்ந்ததால் முக பருவால் துன்பப்படும் இளம் பருவத்தினர், ஒரு டம்ளர் இளம் சூடான நீரில் 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, 2 சிட்டிகை மிளகு தூள், 2 தேக்கரண்டி தேன் கலந்து பருக வேண்டும். இதனால் ரத்தத்தில் காரத் தன்மை அதிகரிக்கும். அதை தொடர்ந்து கழிவுகள் வெளியேறி, ரத்த ஓட்டம் சீர்படும். முகப்பரு போன்றவைகளும் மறையும்.

மலச்சிக்கல் உள்ளவர்கள் காலை எழுந்தவுடன் இளம் சுடுநீரில் எலுமிச்சை சாறு கலந்து பருகி வந்தால் மலச் சிக்கல் நீங்கும். உடல் புத்துணர்ச்சி பெறும்.

சிறிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி அத்துடன் எலுமிச்சை சாறு, உப்பு, மிளகுதூள் அல்லது பச்சை மிளகாய் கலந்து சாலட் ஆக சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இந்த சாலட்டை நீரிழிவு நோயாளிகள் தினமும் 1 கப் அளவிற்கு சாப்பிட்டு வருவது உடலுக்கு மிக நல்லது.

நோய் வாய்ப்பட்டு படுக்கையில் இருக்கும் நோயாளிகள் மற்றும் அறுவை சிகிச்சை மேற்கொண்டு ஓய்வு எடுப்பவர்கள் பருகும் நீரில், 1 கப்புக்கு 1 தேக்கரண்டி என்ற அளவில் எலுமிச்சை சாறு கலந்து அடிக்கடி குடித்து வந்தால், ரத்தத்தின் காரத்தன்மை அதிகரித்து நோய் பாதிப்பு விரைவில் சீராகும். உடலுக்கு புத்துணர்ச்சியும் மனதிற்கு தெளிவும் கிடைக்கும்.

கோடை காலத்தில் ஏற்படும் வியர்க்குரு, சொறி, சிரங்கு, கரப்பான் போன்ற தோல் நோய்களிலிருந்து விடுபட எலுமிச்சை சாற்றை உடலில் தேய்த்து சூரிய ஒளியில் சிறிது நேரம் நின்றிருந்துவிட்டு பின்பு குளிக்கவேண்டும். கோடை காலத்தில் உடல் புத்துணர்ச்சி பெற குளிக்கும் நீரில் ஒரு எலுமிச்சம் பழத்தை பிழிந்து விட்டு, குளிக்க வேண்டும்.

எலுமிச்சையை மழை, கோடை, பனி போன்ற எல்லா காலங்களிலும் உபயோகிக்கலாம். எலுமிச்சை சாறை காய்கறிகளில் கலந்து சாலட் ஆக செய்யும் பொழுது, அந்த காய்கறிகளின் சத்து அதிகரிக்கிறது.

No comments:

Post a Comment