Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, October 29, 2013

நாளைய இந்தியா-2 நேற்றும் இன்றும்


இந்தியா, ஆங்கிலேயர்களிடம் இருந்து 1947ம் ஆண்டு அரசியல் சுதந்தரம் பெற்றது. ஆனால் சுதந்தரத்துக்குப் பிறகும் பொருளா-தார மற்றும் தனிநபர் சுதந்தரங்கள் மறுக்கப்பட்டே வந்தன. அவற்றைப் பெறுவதற்கு இந்தியா 2014-ம் ஆண்டுவரை காத்திருக்க வேண்டியிருந்தது. இந்தியாவின் பொருளாதார விடுதலை (தாராளமயமாக்கல்) வரலாற்றியலாளர்களால் பல நூற்றாண்டுகளுக்குக் கட்டியம் கூறப்படும் கதையாக ஆகிப்போனது.
1947க்கு பிறகு இந்தியாவின் அரசியல் சுதந்தரம் தார்மிக அளவில் உண்மையாக இருந்தாலும், நடைமுறையில் அப்படி இல்லை. மக்கள்தொகையின் பெருவாரியான பகுதிக்கு பொருளாதாரச் சுதந்தரம் மறுக்கப்படும்போது, அது அவர்களை பொருளாதார ரீதியாக ஏழைமைப் படுத்துகிறது. பொருளற்ற வறுமையில் உள்ள மக்கள் பொதுநல விநியோகங்களைப் பெற்றுக் காலத்தைத் தள்ளுவது, சுதந்தரம் என்ற வார்த்தைக்கு அர்த்தமே இல்லாமல் செய்துவிடுகிறது.
தங்கள் வாக்குகளைப் பயன்படுத்துவதற்கான அரசியல் சுதந்தரத்தைப் பெற்றிருந்தாலும், பொருளாதாரத் தேவைகளுக்காகத் தங்களுக்கு இலவசம் அளிப்பதாக வாக்குறுதி கொடுப்பவர்களுக்கு அடிபணிந்து வாழவேண்டிய நிர்பந்தத்தில் கட்டுண்டு இருந்தனர்.


உரிமையும் சுதந்திரமும்:

மனித உரிமைகளுக்கும் பொருளாதாரச் சுதந்தரத்துக்கும் இடையேயான உறவு, பிரிக்க முடியாத ஒன்று. பொருளாதாரச் சுதந்தரம் மனித உரிமைகளில் இருந்தே ஊற்றெடுக்கிறது. சொத்துரிமை, விரும்பிச் செய்யும் பரிவர்த்தனை, பொருளாதார ரீதியாகப் போட்டியிடுவதற்கான உரிமை, பிறருடன் சுதந்தரமாகக் கூட்டுறவில் ஈடுபடுவது போன்ற உரிமைகளே அவற்றின் சில உதாரணங்கள். மனித உரிமைகள் மட்டுமே விரும்பத்தக்க ஒரு முடிவான நோக்கம் என்றாலும், கூடவே அது பொருளாதார வளமைக்கும் இட்டுச் செல்லக் கூடியது. ஏனென்றால் மனித உரிமைகள் என்பது பொருளாதார சுதந்தரத்தோடு இயைந்த ஒன்று.

ஆங்கிலேயக் காலனி ஆதிக்கத்தின்போது இந்தியர்களுக்கு ஏன் பொருளாதாரச் சுதந்தரம் மறுக்கப்பட்டது என்பதைப் புரிந்துகொள்வது சுலபமே. ஆனால் சுதந்தரம் அடைந்த பிறகும் ஏன் பொருளாதாரச் சுதந்தரம் இந்தியர்களுக்கு வாய்க்கவில்லை என்பதுதான் யோசிக்கவேண்டிய விஷயம்.

ஏழ்மை தொடர காரணம்:

அரசாங்கங்களின் தவறான திட்டத் தேர்வுகளே இந்தியா தொடர்ந்து ஏழைமையுடன் இருந்ததன் காரணம். திட்டக் கோளாறுகள் வெறும் கருத்தளவிளான சாராம்சங்கள் அல்ல. அவை நிஜ உலகில் பல தாக்கங்களை உள்ளடக்கியவை. அந்தத் தவறுகள் உண்டாக்கிய அளவற்ற அவலங்களை ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள். இந்தியாவில் பிறந்த பல கோடி மக்கள் ஒரு கண்ணியமான மனித வாழ்க்கை கிடைக்காதவர்களாகவே இருந்து வந்தனர்.

பல கோடி குழந்தைகள் எடைக்குறைவாகப் பிறந்தனர். சில கோடி பேர் பாலகர்களாகவே இறந்து போனார்கள். பெற்றோர்களின் மனவேதனையை நினைத்துப் பாருங்கள். பல கோடி குழந்தைகள் சத்தான உணவுகளைச் சாப்பிடாமல், வளர்ச்சி குன்றியவர்களாக வளர்ந்தனர். பல கோடி குழந்தைகள் பள்ளிக்கூடங்களைப் பார்த்து அறியாதவர்கள். நவீன உலகத்தின் பல வியப்புகளைக் காண அவர்களுக்கு எப்போதுமே வாய்ப்பு இருக்கவில்லை. அவலமான, கீழ்த்தரமான, மிருகத்தனமான ஒரு சிறிய வாழ்க்கைகுப் பிறகு இந்தப் பூவுலகில் இருந்து அண்டப் பெருவெளியில் மறைந்து போனார்கள்.

2010-ல் சத்துணவுக்கு வழியற்ற, எடை குறைவான, படிப்பறிவில்லாத குழந்தைகளின் எண்ணிக்கை சுமார் பத்து கோடி என்று மதிப்பிடப்பட்டிருந்தது. ஒருவேளை, இந்த நிலையை மீறி வளர்ந்து பெரியவர்களாக ஆனாலும், சமூகத்தின் நலனை அதிகரிக்கும் திறன் கொண்ட உறுப்பினர்களாக அவர்களால் வளர முடியவில்லை. பத்து கோடி என்ற எண்ணிக்கையைச் சற்று யோசித்துப் பாருங்கள். பத்து கோடி என்ற எண்ணை கருத்தில் கொள்ளும்போது, அது பல பெரிய நாடுகளின் இன்றைய மக்கள்தொகையைவிட அதிகம்.

அரசியல் சுதந்திரம்:

ஒரு நாடு, தன்னுடைய குடிமக்களின் பொருள் தேவைகளை நிவர்த்தி செய்யத் தேவையான உற்பத்தியைச் செய்யாமல், மிகக் குறைவான உற்பத்திகளைக் கொண்டிருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அங்கே உடலையும், உயிரையும் ஒன்றாக வைத்துக்கொள்ள மக்கள் படும்பாடு மற்ற அனைத்துத் தேவைகளையும் பின்னுக்குத் தள்ளுகிறது. பசியால் வாடும் மக்களுக்கு அரசியல் சுதந்தரம் என்பது ஒரு கருத்து அளவிலான விஷயமே. பொருளாதாரச் சுதந்தரம் பெற்றபிறகு இந்தியாவில் ஏற்பட்ட பொருளாதார முன்னேற்றம்தான் அரசியல் சுதந்தரத்தை உண்மையானதாக ஆக்கியது. இந்தியா 2014-ல் பெற்ற பொருளாதாரச் சுதந்தரமே, பெயரளவில் மட்டும் இருந்த மக்களின் அரசியல் சுதந்தரத்தை அர்த்தமுள்ளதாக்கியது. நடைமுறையில் பயனுள்ளதாகவும் மாற்றியது.

அவ்வாறு நடந்த பிறகு இந்தியாவில் தனிநபர் சுதந்தரமும் விரைவாகப் பின் தொடர்ந்தது. தனிநபர் சுதந்தரம் என்பது உங்கள் வாழ்க்கையை நீங்கள் விரும்பும்படி அமைத்து கொள்வதற்கானது. தனிப்பட்ட உரிமை என்பது யாருடன் இணைந்து இருக்கலாம் என்பதைத் தீர்மானிக்கும் உரிமை. யாரை மணந்து கொள்ளலாம், எங்கு வாழலாம், என்ன வேலைகளில் ஈடுபடலாம் என்பதற்கான உரிமை என்பன போன்ற பல விஷயங்களை உள்ளடக்கியது. அதன் அர்த்தம், உலக விஷயங்களில், வெளியிடப்படும் கருத்துகளில் எதைக் கேட்பது, எதைப் பார்ப்பது, எதைப் படிப்பது என்பனவற்றை அரசாங்கத்தில் இருக்கும் யாரோ ஒருவர் முடிவு செய்யாமல், மக்களாகிய நீங்கள் முடிவு செய்வதற்கான உரிமை.

தனிமனித சுதந்தரம்:

தனிமனித சுதந்தரம் என்பது உங்களின் சொந்தக் கருத்துகளை வெளிப்படுத்தவும், பிறரின் கருத்துகளை அறியவும் தேவையான உரிமைகளை கட்டாயம் உள்ளடக்கியிருக்க வேண்டும். ஆங்கிலேயக் காலனி ஆதிக்கத்தின்போதுகூட இந்தியாவிடம் பத்திரிகை சுதந்தரம் (குறிப்பாக, அச்சு வடிவில்) இருந்தது. அது சுதந்தரத்துக்குப் பின்னரும் தொடர்ந்தது. சுவாரசியமாக, 1947ல் சுதந்தரம் பெற்ற பிறகுகூட, வானொலி வாயிலாகச் செய்திகளைத் தனியார் ஒலிபரப்புவது தடை செய்யப்பட்டு, அரசாங்கம் அதைத் தன்னுடைய முழுக்கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.

பத்திரிகைச் சுதந்தரம் மட்டும் இருக்க ஏன் வானொலி சுதந்தரம் இருக்கவில்லை என்பதற்கான ஒரு விளக்கம் இது. கடந்த நூற்றாண்டின் மத்தியப்பகுதிவரை இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் படிப்பறிவற்றவர்கள். எழுதப்படிக்கத் தெரியாத மக்களுக்குப் பத்திரிகைச் சுதந்தரம் என்பது கருத்தளவிலான விஷயம் மட்டுமே. நடைமுறை வாழ்க்கைக்கு எந்தவிதமான உபயோகமோ, உண்மையான அர்த்தமோ இல்லாதது. அதனால், என்னதான் உண்மையைப் பிரசுரித்தாலும், பத்திரிகை சுதந்தரம் படிப்பறிவற்ற மக்களைக் கிளர்ச்சியடைய வைக்கப்போவதில்லை என்பதால் அரசாங்கம் அந்த விஷயத்தில் அசட்டையாக இருந்தது. ஆனால், பேசப்படும் வார்த்தைகளை படிப்பறிவற்றவர்கள் புரிந்துகொள்ள முடியும். வானொலி ஒலிபரப்பின் மூலம் நாட்டின் உண்மையான நடப்புகளை அவர்கள் எளிதாகத் தெரிந்துகொள்ள முடியும். அதனால் (தனியார்) வானொலி ஒலிபரப்பு சினிமா பாட்டுகள் மற்றும் வெட்டி அரட்டை தவிர வேறெந்த உபயோகத்துக்கும் அனுமதிக்கப்படவில்லை.

இன்று நீங்கள் அனைத்து தனிநபர் உரிமைகளையும் அனுபவிக்கிறீர்கள். ஆனால், உங்களுக்கு முந்தைய தலைமுறைகள் அந்த உரிமைகளைப் பெற்றிருக்கவில்லை. முதிர்ச்சி பெறாத, பொறுப்பற்ற குழந்தைகளைப் போலவே அரசாங்கத்தால் அவர்கள் நடத்தப்பட்டார்கள். அரசாங்கம் அடிக்கடி புத்தகங்களையும், திரைப்படங்களையும் தடை செய்து வந்தது. மக்கள் அவர்களாகவே எதையும் முடிவு செய்ய தகுதியற்றவர்கள் என்பதைக் குறிப்பதாகவே அது அமைந்தது.

பொதுமக்கள் தங்களுடைய தனி வாழ்க்கை தொடர்பான விஷயங்களைக்கூடத் தேர்வு செய்ய முடியாத அளவுக்கு உரிமைகள் மறுக்கப்பட்டு வந்தனர். சட்டங்கள், காலத்துக்கு ஒவ்வாததாக, காரணப்பூர்வமாக இல்லாமல் இருந்தன. பெரும்பாலான சட்டங்கள் ஆங்கிலேய ஆட்சியின்போது ஏற்படுத்தப்பட்டவை. ஆனால் அவை ஆங்கிலேய ஆட்சியின் இரண்டாம் பாகமாகத் தொடர்ந்த இந்திய அரசாங்கங்களிலும் முழுவீச்சில் தொடர்ந்து வந்தன. அந்தச் சட்டங்கள் மக்களுக்கு எதிராகவும், அரசாங்கத்துக்குச் சாதகமாகவும் பாரபட்சத்துடன் இருந்தன. சட்டங்கள் அப்படி உருவாக்கப்பட்டதன் காரணத்தை இன்னும் சற்று நேரத்தில் காண்போம்.

No comments:

Post a Comment