Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday, October 27, 2013

இணையத்தில் கண்காணிப்பது யார்?

இணையத்தில் கண்காணிப்பது யார்?- அடையாளம் காட்டும் லைட்பீம்!


கண்காணிக்கப்படுவதும், கவனிக்கப்படுவதும்தான் இப்போதைய இணைய யதார்த்தம். தேடியந்திரங்களில் துவங்கி மின்வணிக தளங்கள் வரை எல்லா விதமான தளங்களும் இணையவாசிகளின் ஒவ்வொரு அடியையும் கவனித்து குறிப்பெடுக்கின்றன. அதாவது டிராக் செய்கின்றன. பொருத்தமான விளம்பரத்தை அளிக்கவும், பயனாளியின் எதிர்பார்ப்பை புரிந்துகொண்டு செயல்படவும் இவ்வாறு செய்யப்படுவதாக சொல்லப்படுகிறது. இன்னொரு பக்கம் அரசுகள் இமெயில் வாசகங்களையும் தேடல் பதங்களையும் கண்காணித்து வருவதாக சொல்லப்படுகிறது.

இணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம் என்பதை புரிந்துகொள்ள வேண்டுமா? அதற்கான எளிய வழியை மொசில்லா (Mozilla) முன் வைத்துள்ளது. பிரபலமான இணைய உலாவியான பயர்பாக்ஸ் பின்னே இருக்கும் மொசில்லா அமைப்பு இதற்காக 'லைட்பீம்' (Light Beam) எனும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.
பயர்பாக்ஸ் உலாவிக்கான சேர்க்கையாக (add on) அறிமுகமாகியுள்ள இந்த சேவையை பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் இணையத்தில் உலாவும்போது எப்படி எல்லாம் உங்களைப்பற்றிய விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன என்பதை தெரிந்து கொள்ளலாம். இந்த கண்காணிப்பின் விவரங்களை இந்த சேவை காட்சிரீதியாக தோன்றச் செய்கிறது.
லைட்பீம் சேவையை உலாவியில் இயக்கியதும், இணையதளத்திற்கு செல்லும் போதெல்லாம் அந்த தளத்தில் இருந்து உங்களைப் பற்றிய விவரங்கள் எப்படி சேகரிக்கப்படுகின்றன என்பது வரைபட சித்திரமாக காட்டப்படுகிறது. எந்த தளங்கள் எல்லாம் தகவல்களை சேகரிக்கின்றன என்பதை இந்த வரைபடம் உணர்த்தும். முதல் தளத்தில் இருந்து அடுத்த தளத்திற்கு செல்லும் போது அந்த தளத்தில் எப்படி விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன என்பதும், இந்த தளங்களிடையே உள்ள பரஸ்பர தொடர்பையும் தெரிந்து கொள்ளலாம்.
குறிப்பிட்ட பகுதியில் கிளிக் செய்தால் கண்காணிப்பின் இயல்பு பற்றிய மேலதிக விவரங்களை தெரிந்து கொள்ளலாம். இந்த வரைபடத் தோற்றம் தவிர, கடந்த 24 மணி நேரத்தில் எந்த தளங்கள் விவரங்களை சேகரித்தன என்பதையும் தெரிந்து கொள்ளும் வசதி இருக்கிறது.
இணையத்தில் கண்காணிப்பு எப்படி செயல்படுகிறது, நீங்கள் உலாவும் தளங்கள் எப்படி மற்ற தளங்களுடன் உங்கள் இணைய நடவடிக்கை விவரங்களை பகிர்ந்து கொள்கின்றன போன்ற விஷயங்களை இதன் மூலம் நீங்கள் புரிந்து கொள்ளலாம். கண்காணிப்பை அடையாளம் காட்டும் இந்த சேவை மூலமான தகவல்கள் எதுவுமே சேகரிக்கப்படுவதில்லை என்கிறது மொசில்லா. ஆனால் நீங்கள் விரும்பினால் இந்த விவரங்களை பகிர்ந்து கொள்ள முன் வரலாம். கண்காணிப்பு விவரங்களை புரிந்து கொள்வதற்கான பொது கையேட்டிற்கு இதன் மூலம் பங்களிக்கலாம் என்கிறது மொசில்லா.
கடந்த 2011-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட கொல்யூஷன் எனும் வசதியின் நீட்சியாக இந்த லைட்பீம் உருவாகி இருக்கிறது.
லைட்பீமை தரவிறக்கம் செய்ய https://addons.mozilla.org/en-US/firefox/addon/lightbeam/?src=search

 

No comments:

Post a Comment