Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, November 2, 2013

நாளைய இந்தியா-6 சில புள்ளிவிவரங்கள்


உலகளவில் ஒன்றுக்கொன்று பிணைக்கப்பட்டுள்ள பொருளாதாரங்களைக் கொண்டு வளர்ந்து வரும் உலகில் இந்தியாவின் நிலை கல்வி அமைப்பைப் பொறுத்தே இருக்கிறது. அதிலும், தன்னுடைய கல்வி அமைப்பில் நிலவும் கடுமையான குறைபாடுகளை எவ்வளவு வெற்றிகரமாக கடந்து வரமுடியும் என்பதைப் பொறுத்தே அதுவும் அமையப்போகிறது.
ஒரு வலுவான கல்வி அமைப்பே நீடித்த வளர்ச்சிக்கான அடித்தளம். இருப்பினும், நல்ல பொருளாதார விதிகளை உருவாக்குவதில் இந்தியா அடைந்த தோல்விகளில், அதன் கல்வி அமைப்பு அடைந்த தோல்வியைப் போல் வேறங்கும் காண இயலாது. இந்தியாவின் படிப்பறிவு சதவிகிதமான சுமார் 60%, அதனை உகாண்டா, ருவாண்டா, மளாவி, சூடான், புருண்டி மற்றும் கானா போன்ற பிற பின்தங்கிய நாடுகளின் பட்டியலில் சேர்க்கிறது.

மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கான, சுமார் 36 கோடி குடிமக்கள் பள்ளிசெல்லும் வயதில் இருக்கும் நிலையில், ஒரு மாபெரும் பொருளாதார வல்லரசாக உருவாகும் தன்னிகரற்ற ஆற்றல் இந்தியாவிடம் உள்ளது. இந்தியாவிடம் அதன் எதிர்காலத்தை வடிவமைக்கும் வாய்ப்பு மட்டுமன்றி, உலகின் எதிர்காலத்தைப் பெருமளவில் உருவாக்கும் வாய்ப்பும் இருக்கிறது. தன்னுடைய ஆற்றலை உணர அது சந்திக்கும் சவால்கள் ஏராளம் என்றாலும், அதில் உள்ள வல்லமை வாய்ந்த சவால்கள் அனைத்தும் அதனால் சுயமாக ஏற்படுத்திக் கொள்ளப்பட்டவையே.

கல்வி மீது கட்டுப்பாடு:

இந்தியாவின் எதிர்காலத்தை நோக்கிய பாதையில் மிகப்பெரும் தடையாக இருப்பது, கல்வி அமைப்பின் மீது அரசாங்கம் கொண்டுள்ள ஏகபோக கட்டுப்பாடு ஆகும்.

கல்வித்துறை சம்பந்தப்பட்ட எண்களை ஆய்வு செய்யும்போது, அதில் உள்ள சவால்களையும், வாய்ப்புகளையும் அது வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. சிறார் பள்ளி முதல் 12ம் வகுப்பு வரை பள்ளியில் இருக்க வேண்டிய 36 கோடி சிறுவர்களில் சுமார் 14 கோடி சிறுவர்கள் பள்ளிக்குச் செல்லாமல் உள்ளனர். இது ஏதோ தனிநபர் நஷ்டம் அல்ல. அவர்கள் உலகப் பொருளாதாரத்தில் முழுமையாகப் பங்குபெறுவதற்கான வாய்ப்பைப் பெறப்போவதில்லை. ஆகவே, அது சமுதாயத்துக்கே பெரும் நஷ்டம். அதன் விளைவாக, அவர்கள் எப்போதுமே சமூகப் பங்களிப்பில் முழுமையாக ஈடுபட முடியாதவர்களாக ஆகிறார்கள்.

எனினும், நம் நாட்டில் கல்விக்காக செய்யப்படும் செலவு மிகப் பெரியது. இந்திய அரசாங்கம் 2009 நிதியாண்டில் கல்விக்கு சுமார் 860 கோடி நிதி ஒதுக்கியது; 12ம் வகுப்பு வரையிலான பள்ளிக் கல்விக்கு மக்கள் சொந்தமாகச் செய்யும் செலவு சுமார் 2000 கோடி; தனிப்பயிற்சி செலவுகள் ஒரு 500 கோடி; தனியார் தொழில்சார் கல்விக்கு மக்கள் சொந்தமாகச் செய்யும் செலவு ஒரு 700 கோடி. 2009 நிதியாண்டில் மொத்தம் சுமார் 4000 கோடியாக இருந்த கல்வித்துறை செலவு, 2012ம் ஆண்டுவாக்கில் 7000 கோடியாக வளர்ச்சி பெற உள்ளது. 16வது திட்டத்தில் மின்சாரம், தொலைத்தொடர்பு மற்றும் போக்குவரத்து ஆகியவற்றுக்கு செலவு செய்யப்பட்ட 4500 கோடியோடு இதனை ஒப்பிட்டுப் பாருங்கள்.

50 சதவிகித படிப்பறிவற்றவர்கள்:

இத்தனைச் செலவுகளுக்குப் பிறகும் 50 சதவிகித படிப்பறிவற்றவர்களைக் கொண்ட நாடாக இருக்கிறது இந்தியா. ஆனால் உலக மக்கள்தொகையில், 17 சதவிகித மக்கள் மட்டுமே இந்தியாவில் உள்ளனர். இந்திய ஆரம்பநிலைக் கல்வியின் தோல்வி, எதிர்பார்த்தபடியே உயர்கல்வி அளவில் பிரதிபலிக்கிறது: உயர்கல்வியின் (பட்டப்படிப்புகளுக்கான) சேர்க்கை வெறும் 6 சதவிகிதம் மட்டுமே. மேலும், இந்தியக் கல்லூரி பட்டதாரிகளின் தரம் மோசமாக உள்ளதால், அவர்களில் நான்கில் ஒரு பகுதியினரே வேலைவாய்ப்புக்குத் தகுதியானவர்களாக உள்ளனர்.

தற்போதைய விதிமுறைகள் லாப நோக்கமற்ற அறக்கட்டளைகள் மட்டுமே கல்வி நிறுவனங்களை நடத்த அனுமதி அளிக்கின்றன. அதன் முடிவு ஏமாற்றம் தருவதாகவும், தோல்வியுற்ற பொதுக்கல்வி அமைப்பை கைக்காட்டுவதுமாகவும் உள்ளது. பொதுத்துறை பள்ளிகளை விட தனியார்துறை பள்ளிகள் தரமான கல்வியை வழங்குவதோடு, அதனை அதிகத் திறனோடும் செய்கின்றன. 12ம் வகுப்பு வரையிலான 10 லட்சம் பள்ளிகளில், தனியார் பள்ளிகள் 7 சதவிகிதம் மட்டுமே. ஆனால், மொத்த சேர்க்கையில் தனியார் பள்ளிகளே சுமார் 40 சதவிகிதம் மாணவர்களுக்கு இடமளிப்பதாக இருக்கின்றன. ஆசிரியர் வராமை, அடிப்படை உள்கட்டமைப்பு வசதி இல்லாமை மற்றும் மோசமான செயல்பாடு ஆகியவற்றை அரசாங்கப் பள்ளிகள் பெருமளவில் கொண்டிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தரமான தனியார் பள்ளிகளின் பற்றாக்குறையை இந்தியா உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும்.

வேலைவாய்ப்பு தகுதி:

உயர்கல்வி (பட்டப்படிப்பு) நிலையும் அவ்வளவு சிறப்பாக இல்லை. பிரசுரிக்கப்பட்ட புள்ளிவிவரங்களின் படி, ஆண்டுதோறும் இந்தியா 3,50,000 பொறியியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களை உருவாக்குகிறது. இதே துறையில் சீனா 6,00,000 பேரையும், அமெரிக்கா 1,30,000 பேரையும் உருவாக்குகின்றன. இந்தியாவின் எண்ணிக்கை ஓரளவுக்கு நியாயமாகத் தோன்றினாலும், நான்கில் ஒரு பகுதியே வேலைவாய்ப்புக்குத் தகுதியானவர்கள் என்பதை வைத்துப் பார்க்கும்போது, அது பயனற்றதாக ஆகிறது. ஒரு பக்கம் பல வேலையில்லா பொறியியல் பட்டதாரிகளையும், மறுபக்கம் திறமையான பட்டதாரிகளுக்கு ஏங்கும் நிறுவனங்களையும் கொண்ட முரண்பாடான நிலைமையை இது உருவாக்குகிறது.

மற்றொரு பெரிய வளரும் நாடான சீனாவுடன் கல்வித்துறையை ஒப்பிடுவது விஷயங்களை நன்கு உணர்த்துகிறது. 2005ம் ஆண்டுவாக்கில், சீனா சுமார் 12,000 பிஹெச்டிகளை உருவாக்கியது. பத்து ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கியதைக் காட்டிலும் இது சுமார் ஏழு மடங்கு அதிகம். அதே காலகட்டத்தில், இந்தியா ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 700 பிஹெச்டிகளை மட்டுமே உருவாக்கி வந்துள்ளது.

நுழைவுத் தேர்வு நிலை:

கல்வி அமைப்பு, கல்வி வழங்கும் பக்கத்தில் பற்றாக்குறையைக் கொண்டுள்ளது. உதாரணத்துக்கு, ஐஐடிகளில் உள்ள வெறும் 10,000 இடங்களுக்கு சேர்வதற்கான கூட்டு நுழைவுத்தேர்வில், ஆண்டுதோறும் சுமார் 4,00,000 பேர் போட்டியிடுகின்றனர். மேலும், 2,40,000 பேர் ஐஐஎம்முக்கான நுழைவுத் தேர்வை ஆண்டுதோறும் எழுதுகின்றனர். 1200 தனியார் மற்றும் 400 அரசாங்க தொழில்சார் கல்வி நிறுவனங்களில் உள்ள இடங்களுக்கு, மொத்தம் 20 லட்சம் மாணவர்கள் போட்டியிடுகின்றனர். இந்த நுழைவுத் தேர்வுகளுக்கு பயிற்சி அளிப்பதற்கான சந்தை மிகப் பெரிதாக வளர்ந்துள்ளது. ஆனால் இறுதியில், நுழைவுத் தேர்வுகளுக்குச் செய்யப்படும் செலவு ஆக்கவளம் அற்றதாகவே உள்ளது. தேவையோடு ஒப்பிடும்போது குறைவாக இருக்கும் கல்லூரி இடங்களை, ரேஷன் முறையில் வழங்குவதற்கான ஒரு முறையாக மட்டுமே நுழைவுத் தேர்வுகள் உள்ளன.

உள்நாட்டில் தேவையான அளவு கல்வி வாய்ப்பு கிடைக்க இயலாததால், ஆண்டுதோறும் உயர்கல்விக்காக சுமார் 5000 கோடியை இந்தியர்கள் வெளிநாடுகளில் செலவு செய்கின்றனர். ஒருவேளை கல்வித்துறை மீதுள்ள அரசாங்கக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டால், அதாவது லாப நோக்கில் கல்வி தருவதற்கு உள்நாட்டு மற்றும் அயல்நாட்டு நிறுவனங்கள் நுழைய அனுமதி கிடைத்தால், பிறகு இந்தப் பற்றாக்குறைகள் நீக்கப்படும் என்ற கூற்றுக்கு, செலவு செய்யப்படும் இந்தத் தொகை வலு சேர்க்கிறது. அதற்குமேல், கல்விச் சந்தையில் அதிக கல்வி நிறுவனங்கள் இருக்கும்போது அந்த நிறுவனங்களுக்கு இடையே ஏற்படும் போட்டி கல்வியின் தரம் உயர்வதையும் உறுதிப்படுத்தும்.

கல்வி வியாபாரம்:

கல்வித்துறையில் முழுமையாகப் பங்குகொள்ள தனியார் துறைக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. கல்வியை வியாபாரமாக்குவதற்கு இருக்கும் எதிர்ப்பு, மதப்பற்றுக்கு இணையான அளவில் இருக்கிறது. கல்வியிலிருந்து லாபம் என்பது இந்தியத் திட்டவியலாளர்களுக்கு சாபக்கேடான விஷயமாக இருக்கிறது. இந்தியாவின் உச்சநீதிமன்றம் 1993ம் ஆண்டு ஒரு தீர்ப்பில், காலம்காலமாக இந்த நாட்டில் கல்வி எப்போதும் ஒரு வர்த்தகமாக அல்லது வியாபாரமாக பாவிக்கப்பட்டது கிடையாது. அது ஒரு சமயக் கடமையாக, ஒரு தொண்டு காரியமாகவே கருதப்பட்டு வந்துள்ளது; ஆனால் எப்போதும் வர்த்தகமாகவோ அல்லது வியாபாரமாகவோ அல்ல... இந்த உன்னிகிருஷ்ணன் வழக்கு தீர்ப்பு, தனியார் பள்ளிகள் இருக்கக் கூடாது என்பதைக் குறிக்கவில்லை, அவை 'கல்வியை வியாபாரமாக்கக்' கூடாது, கல்வி வழங்குதல் அதிலிருந்து லாபம் அடைவதற்காக இருக்கக்கூடாது என்பையே குறிக்கின்றன.' என்று எழுதியது.

கல்வியை வியாபாரமாக்கக் கூடாது என்று பாரம்பரியமாகக் கடைப்பிடிப்பது நல்ல விஷயமே. ஆனால், மாறுபட்ட கடந்த காலத்தில் மாறுபட்ட தேவைகளைப் பூர்த்தி செய்த ஒரு புனித பாரம்பரியம், இன்று நம்மை ஒரு முட்டுச்சந்துக்கு இட்டுச் செல்வதாக இருக்கும்போது, அதை இன்னும் பிடிவாதமாகக் கட்டிக் கொண்டு இருப்பது புத்திசாலித்தனமான செயலாக இருக்குமா? காலங்களும் சூழ்நிலைகளும் மாறிவிட்டன என்பதை உணர வேண்டும்.

No comments:

Post a Comment