Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, October 29, 2013

உயிர் காக்கும் ஆயுர்வேதம்


நான்கு வகையான குடலமைப்பை மனிதர்கள் கொண்டவர்களாக இருப்பதாக ஆயுர்வேதம் கூறுகிறது. தாயின் கருப்பையின் ஒரு அங்கமாக விளங்கும் முட்டையினுள்ளும், தந்தையின் விந்தணுக்களிலும் பொதிந்துள்ள வாத-பித்த-கப தோஷங்களின் ஆதிக்கத்தால், பிறக்கும் குழந்தையின் குடலமைப்பு தீர்மானிக்கப்படுவதாக கூறப்படுகிறது.


இவர்கள் இருவருக்கும் வாத தோஷத்தின் ஆதிக்கமிருந்தால் பிறக்கும் குழந்தைக்கும் குடலில்வாதத்தின் அளவு அதிகமிருக்கும். பிறந்து வளர்ந்தாலும் நீடித்த மலச்சிக்கலாலும், பசியின் தன்மையானது சில நேரத்தில் சீராகவும், சில நேரத்தில் ஏற்றக் குறைவாகவும் காணும். வாயுவின் வறட்சியான தன்மையால், குடலிலுள்ள ஈரப்பசை அதிக அளவில் உறிஞ்சப்படுவதால், குடலின் அசைவுகள் சீராக இல்லாமலிருக்கும்.

இயற்கையான அசைவுகள் மந்தமாக இருப்பதால், மலக்குடல் இறுகி கடும் மலச்சிக்கலை ஏற்படுத்தும். சிறிதும் எண்ணெய்ப்பசை வாததோஷத்தில் இல்லாத காரணத்தினால், குடல் வறட்சி அதிகமாக இருக்கும். நகரும் தன்மையுடைய வாதத்தினால், பசித்தீ எனும் ஜுவாலையானது சில சமயம் தீவிரமாகவும், சில சமயம் மந்தமாகவும் இருப்பதால், இவர்களுக்கு பசியானது தாறுமாறாக இருக்கும்.

வயிற்று உப்புசம், மலச்சிக்கல், பெரும் ஏப்பம், பொது இடங்களில் கட்டுப்படாத பெரும் சத்தத்துடன் கீழ்க்காற்று வெளியேறுதல், குடலில் கொட கொடவென்று வாயு உருண்டோடுதல், சரிந்து படுத்தால் வயிற்றில் லேசான வலி போன்றவை காணும்.

உருளைக் கிழங்கு, வாழைக்காய், கொத்தவரங்காய், பருப்பு சாம்பார், வேர்க்கடலை, கொண்டக்கடலை சுண்டல், மொச்சக்கொட்டை போன்ற உணவு வகைகளால் இந்த உபாதைகள் மேலும் மேலும் அதிகரித்துக் காணும். இது போன்ற குடலமைப்பைக் கொண்டவர்களுக்கு, விளக்கெண்ணெய் அருமருந்தாகும்.

சூடான கிளாஸ் பாலுடன், ஒன்றிரண்டு டீஸ்பூன் விளக் கெண்ணெய்யைக் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் வாரமிருமுறை மட்டுமே பருகினால், வயிற்றில் அதிக அளவில் ஓடி நடக்கும் வாயுவானது, மலத்துடன் கீழ்நோக்கி இறங்கி, ஆஸனவாய் வழியாக சுகமாகக் கழிந்து வெளியேறும்.

அப்பாடா! என்ன ஒரு நிம்மதி! என்ற ஒரு மனத் தெளிவையும் ஏற்படுத்தும். ஒன்றிரண்டு மலைவாழைப்பழத்தை உருக்கிய பசு நெய்யில் தோய்த்துச் சாப்பிட்டு, அதன்மேல் கிளாஸ் சூடான பால் பருகினாலும், குடல் வாயு, மலத்துடன் எளிதாக வெளியேறிவிடும்.

வாயுவின் வெளியேற்றத்தால், இடுப்பு வலி, கால் குடைச்சல், நரம்பு வலி போன்ற உபாதைகளிலிருந்து விடுபடலாம். பித்த தோஷத்தின் ஆதிக்கத்தால் குடல் அமையும் தருவாயில், பிறந்தது முதல் மரணம் வரை குடல் பகுதி சூடாகவே இருக்கும். ஒரு சிறிய மலமிளக்கும் உணவுப் பொருள் சாப்பிட்டால் கூட, பேதியாகும்.

உதாரணமாக, பால், கோதுமையினால் தயாரிக்கப்பட்ட சப்பாத்தி, கோதுமை ரவை உப்புமா, உலர் திராட்சை போன்றவற்றைக் குறிப்பிடலாம். மேலும் இவர்களுடைய பசியின் தன்மையானது மிகவும் தீவிரமாக இருக்கும். எத்தனை சாப்பிட்டாலும் விரைவில் செரித்து பசி எடுக்கும்.

உணவில் காரம் புளி உப்புச் சுவை அதிகம் சேர்த்தால், முன் குறிப்பிட்ட பேதியாகுதல், பசி கூடுதல் போன்றவை மேலும் தீவிரமடையும். அதனால் பித்தக்குடல் அமைப்பைக் கொண்டவர்கள் உணவில் அதிகம் இனிப்பு, கசப்பு, துவர்ப்புச் சுவை கொண்ட சர்க்கரை, கல்கண்டு, நெய் போன்ற இனிப்பும், பாகற்காய், மணத்தக்காளி விதை மற்றும் கீரை, அகத்திக்கீரை போன்ற கசப்புச்சுவையும், வாழைப்பூ, சுண்டைக்காய் போன்ற துவர்ப்புச் சுவையும் அதிகம் சேர்த்துக் குடலை குளிர்ச்சியாக வைத்திருத்தல் நலம்.

கபதோஷத்தின் ஆதிக்கத்தால் குடலின் நிலையானது நடுநிலையாக இருக்கும். பசியின் தன்மையானது மிகவும் மந்தமாக இருக்கும். அதாவது கொஞ்சம் சாப்பிட்டாலே, போதும் என்றும் தோணும். செரிமானமும் மந்தமாகவே இருக்கும்.

அதனால் பசியைத் தூண்டிவிடும் வகையில், பெருங்காயம், சுக்கு, மிளகு, தனியா, மிளகாய், பட்டை, சோம்பு, கரம் மசாலா, சீரகம், ஓமம், கடுகு போன்றவற்றை உணவில் சற்று தூக்கலாக சேர்த்துக் கொள்வது நலம். மூவகை தோஷங்களின் சமமான நிலையில் குடலமைப்பைக் கொண்டவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள்.

காலையில் எழுந்ததும் சரியான முறையில் மலப் பிரவர்த்தி ஏற்படுவதும், குறிப்பிட்ட சமயத்தில் பசி எடுப்பதும் இதன் சிறப்பு. இதனால் இவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பார்கள்.

ஆறு வகையான இனிப்பு, புளிப்பு, உப்பு, கசப்பு, காரம் மற்றும் துவர்ப்புச் சுவைகளை இவர்களுடைய குடல் நன்றாக உள்வாங்கிக் கொண்டு, அவற்றின் சத்தான பகுதியை உடல் அணுக்கள் நிறைவாகப் பெரும் அளவில் வகை செய்வதால்தான் நீடித்த நிலைத்த இன்பத்துடன் இவர்களால் வாழ முடிகிறது.

இந்தக் கட்டுரையின் மூலமாக நாம் அறிந்து கொண்டது என்னவென்றால் மனிதக் குடல் வாதம், பித்தம், கபம், அவற்றின் சமமான சேர்க்கையினால் நடுத்தரம் என்றும், பசியானது வாதத்தினால் சீராக அல்லாமலும், பித்தத்தால் தீவிரமாகவும், கபத்தினால் மந்தமாகவும், தோஷங்களின் சீரான சேர்க்கையினால் நடுநிலையாகவும் இருப்பதையே காட்டுகிறது.

No comments:

Post a Comment