Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, October 21, 2013

சிவகாசி என்றால், கந்தக பூமி


இதுவும் கடந்து போகுமோ?


ள்ளிக்குச் செல்லும் குழந்தை, பள்ளிப் பேருந்தின் ஓட்டை வழியே கீழே விழுந்து மரணிப்பதாகட்டும்; அரசு மருத்துவமனையில் இறந்த குழந்தையின் முகம் எலி கடித்துச் சிதைந்துபோவதாகட்டும்... கற்பனையே செய்து பார்க்க முடியாத சம்பவங்கள் தமிழகத்தில்தான் சாத்தியம். நமக்கு எதுவும் சர்வசாதாரணம். ஊடகங்கள் ஒரு நாள் பரபரப்பாக்கும், உடனே அரசு இயந்திரங்களும் பரபரப்பாகும். அடுத்து ஒரு பரபரப்புச் சம்பவம் நடந்து முடிந்ததும் எல்லாவற்றையும் நாம் மறந்து கடந்துவிடுகிறோம். ஆனால், அரசு நடத்தும் திடீர் சோதனைகள் - கைதுகள், ஆலோசனைக் கூட்டங்கள் - பரிந்துரைகள், புதிய விதிகள் - சட்டதிட்டங்கள்... இவை எல்லாம் எந்த அளவுக்கு அமல்படுத்தப்படுகின்றன? சூழல் எந்த அளவுக்கு மாறி இருக்கிறது? வாரம் ஒரு கள நிலவரத்தைப் பட்டியலிடுவோம்... முதல் வாரம் பட்டாசு ஆலைகள்!
சிவகாசி என்றால், கந்தக பூமி என்று சொல்லிவிட்டு எளிமையாக நாம் கடந்துவிடுகிறோம். இந்தியாவின் 90 சதவிகித வெடிபொருட்கள் சிவகாசியில்தான் தயாரிக்கப்படுகின்றன; 80 சதவிகித தீப்பெட்டி உற்பத்தி சிவகாசியில்தான் நடக்கிறது; தவிர, 60 சதவிகித அச்சுப் பணிகள் இங்கே நடக்கின்றன.  5,000 கோடி புழங்கும் ஒரு நகரம்தான் அடிப்படைக் கட்டுமான வசதிகள் ஏதும் இன்றி, பணிப் பாதுகாப்பு என்றால் என்ன என்று கேள்வி கேட்கும் நிலையில், எப்போதுமே வெடிக்கத் தயாராக இருக்கும் வெடி குண்டாகக் காட்சி அளிக்கிறது.
எத்தனை ஆலைகள் கடவுளுக்குத்தான் வெளிச்சம்!
மாவட்ட நிர்வாகம், வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை, தீயணைப்புத் துறை, காவல் துறை, தொழிலாளர் நலத் துறை, கலால் துறை, வணிக வரித் துறை, உள்ளாட்சி அமைப்புகள்... இப்படிப் பல துறைகளின் ஆசி இருந்தால்தான் ஒரு பட்டாசு ஆலையை இயக்க முடியும். அரசுக் கணக்குபடி சிவகாசியில் உள்ள ஆலைகளின் எண்ணிக்கை 791. ஆனால், இந்தக் கணக்கை உள்ளூரில் உள்ள சின்ன குழந்தைகூட நம்பாது. சிவகாசியைச் சுற்றியுள்ள பல கிராமங்களில் ஒவ்வொரு வீடுமே ஓர் ஆலைதான். எப்படி? லஞ்சம்... லஞ்சம்... லஞ்சம்!
'விதி’யும் விதியும்!
பட்டாசுத் தயாரிப்பு விதிகளில் நிறைய கூடாதுகள் உண்டு. முக்கியமாக அபாயகரமான செந்தூரம் மருந்தைப் பயன்படுத்தக் கூடாது. ஆனால், வெறும் காகிதத்திலும் அதிகாரிகள் லஞ்சம் கேட்டு மிரட்டவுமே இந்த விதிகள் பயன்படுகின்றன. விதிகள் எந்த அளவுக்கு இங்கு பின்பற்றப்படுகின்றன என்பதற்கு உதாரணம்... சமீபத்தில் விபத்து நடந்த முதலிப்பட்டி ஆலையில் மட்டும் 40 விதிமீறல்கள் நடந்ததாகக் கூறினார் வெடிபொருள் கட்டுப்பாட்டு அலுவலர். கடந்த ஆண்டு சாத்தூரில் ஒரு பட்டாசு ஆலையில் விபத்து ஏற்பட்டு, 5 பேர் உயிரிழந்தனர். ஆனால், அடுத்த மூன்று மாதங்களுக்குள் மீண்டும் உரிமம் பெற்று உற்பத்தியைத் தொடங்கி மறுபடியும் இன்னொரு விபத்தைச் சந்தித்தது அந்த ஆலை. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 178 பட்டாசு ஆலைகள் வெடி விபத்துகள் மூலம், 240 பேர் உயிர் இழந்திருக்கின்றனர்; 171 பேர் பலத்த காயம் அடைந்திருக்கின்றனர்.
பேருதான் பெத்த பேரு!
இவ்வளவு பெரிய தொழில் நகரத்தில், மிக அபாயகரமான வேலையில் இருக்கும் தொழிலா ளர்கள் எவ்வளவு சம்பளம் வாங்குவார்கள் என்று நினைக்கிறீர்கள்?
பெரிய பட்டாசு ஆலைகளில் ஒரு நாளைக்கு ஆண் தொழிலாளர்களுக்கு 250-500; பெண் தொழிலா ளர்களுக்கு 130-400. ஆனால், இந்தச் சம்பளத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் எண்ணிக்கை சொற்பம். பல்லாயிரக்கணக்கானோர் இங்கு கூலிகள்தான். புஸ்வாணத்துக்குள் மருந்து நிரப்பி, அடிபாகத்தில் மண் பூசும் வேலை பார்ப்பவர் களைச் சட்டி தட்டுபவர்கள் என்பார்கள். ஒரு புஸ்வாணத்தில் இப்படி மருந்து நிரப்பி, மண் பூசி அனுப்ப கூலி எவ்வளவு தெரியுமா? 10 பைசா!
உயிர் கொல்லும் ரசாயனம்!
சிவகாசி வெடிகளின் மூலாதார மாக இரு மூலப் பொருட்களைக் குறிப்பிடலாம். கரி மருந்து, மணி மருந்து. நாள் முழுவதும் ரசாயனங்களோடு புழங்குவதால், கொஞ்சம் கொஞ்சமாக ரசாயனம் தொழிலா ளர்கள் உடலுக்குள் செல்வது சாபக்கேடு. ''தொடக்கத்தில் உடல் சூடு, கண், தோல், வயிறு சம்பந்தமான நோய்கள், காச நோய் என்று ஆரம்பிக்கும் உடல்நலக் குறைபாடுகள், கடைசியில் புற்றுநோய் வரை கொண்டுபோய்விடக் கூடியவை இந்த ரசாயனங்கள்!'' என்கிறார் மருத்துவர் புகழேந்தி. ''இப்படி மோசமான சூழலில், ஒரே வேலையைத் திரும்பத் திரும்பச் செய்பவர்களிடம் முதலில் அலுப்பும் களைப்பும் உண்டாகும். பின்னர் இப்படித்தான் கழியுமா என் வாழ்க்கை என்ற கேள்வி அவர்களை விரக்தியை நோக்கித் தள்ளும். ஆனால், குடும்பச் சூழல் தொழிலைவிட்டு அவர்களை வெளியேறவிடாது. விளைவு அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மனநோயாளி ஆவார்கள்'' என்கிறார் மனநல மருத்துவர் சீதா. இவ்வளவு மோசமான பணிச் சூழலை எதிர்கொள்ளும் தொழிலா ளர்களிடம் ஆலை முதலாளிகள் காட்டும் கரிசனம் என்ன தெரியுமா? வாழைப் பழம்! ''அதுவும்கூட பெரிய நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்குத்தான் கிடைக்கும்'' என்கிறார்கள் தொழிலாளர்கள். பெரும்பாலான பட்டாசு ஆலைகளில் தொழிலாளர்களுக்கு வருகைப் பதிவேடுகூடக் கிடையாது. ஒப்பந்த முறைத் தொழிலா ளர்கள் என்பதால், இவர்களுக்குத் தொழிலாளர் ஈட்டுறுதிக் காப்பீடு, வருங்கால வைப்பு நிதி இப்படி எந்தப் பணிப் பாதுகாப்பும் கிடையாது.
கொழிக்கும் கறுப்புப் பணம்!
கண்காணிப்பின்மையால் அரசுக்கு வருவாய் இழப்பும் ஏற்படுகிறது. ''பட்டாசு நிறுவனங்களின் வரி ஏய்ப்பு பல நூறு கோடிகளைத் தாண்டும். ஒரு ஆயிரம்வாலா பட்டாசின் விலை 1,000 எனக் குறிப் பிடப்பட்டு இருக்கும். ஆனால், அதன் தொழிற்சாலை மதிப்பு தெரியுமா?  உள்ளூரில் எவ்வளவு தெரியுமா? வெறும் 150. பெரும்பாலும் ஐந்தில் ஒரு பங்கு தொகைக்குத்தான் ரசீது போடுவார்கள். கணக்கு போட்டுப் பாருங்கள்; வரி ஏய்ப்புக் கணக்கு எத்தனை கோடிகள் என்பது புரியும்'' என்கிறார் பெயர் வெளியிட விரும்பாத சிவகாசிவாசி ஒருவர்.
அரசாங்கம் செய்தது என்ன?
இன்றைய முதலிப்பட்டி விபத்தைவிட மோசமான விபத்து அது. ஒட்டுமொத்த இந்தியாவையும் உறையவைத்த விபத்து. 1990-ல் சிவகாசி, நாராயணபுரம் சாலை பகுதியில் நடந்தது. 40 பேர் உயிரிழந்தார்கள். இப்போதுபோலவே அப்போதும் அரசாங்கம் ஏராளமான வாக்குறுதிகளை அள்ளி இறைத்தது. ஆனால், அரசாங்கம் அப்போது என்ன சொன்னது என்பதுகூட இன்றைக்கு யாருக்கும் தெரியாது.
''பெரிய தொழில் நகரம் என்று பெயருக்குத்தான் சொல்ல வேண்டும். எங்கள் ஊரில் நல்ல சாலைகள் கூடக் கிடையாது தெரியுமா? வெம்பகோட்டை, ஆமத்தூர், தளிச்சேரி, மல்லி ஆகிய இடங்களில் தீயணைப்பு நிலையங்கள் வேண்டும். நல்ல தீ சிகிச்சை மருத்துவமனை வேண்டும். தொழிலாளர் மருத்துவமனையை மருத்துவக் கல்லூரியாக்க வேண்டும். இப்படி எவ்வளவோ கோரிக்கைகள். அட, வெப்பநிலை திடீரென உயர்ந்து எத்தனையோ முறை விபத்துகளைச் சந்தித்து இருக்கிறோம். ஒரு சமுதாய வானொலி நிலையம் அமையுங்கள்; வெப்பநிலை உயரும்போது அறிவிப்பு கொடுங்கள் என்று கேட்கிறோம். அரசு என்ன செய்து இருக்கிறது?'' என்கிறார் தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர் சங்க முன்னாள் தலைவர் ஏ.பி.செல்வ ராஜன்.
விருதுநகர் முன்னாள் மாவட்ட ஆட்சியர் பாலாஜி, அரசுக்கு ஓர் அறிக்கை அனுப்பினார். கூடுதல் தீயணைப்பு நிலையங்கள், ஆம்புலன்ஸ் வேன்கள் போன்ற அத்தியாவசியத் தேவைகளில் தொடங்கி ஆலைகள் கண்காணிப்பு வரை தேவைகளைச் சுட்டிக்காட்டியது அந்த அறிக்கை. முக்கியமாக, ''சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உள்ள தீவிர தீக்காயச் சிறப்புப் பிரிவுபோல், 4.5 கோடியில் சிவகாசி மருத்துவமனையில் ஒரு சிறப்புப் பிரிவு தேவை'' என்றார். முதல்வரும் கோரிக்கையை ஏற்று அறிவித்தார். ஆனால், சிவகாசி போன்ற ஒரு சாதாரண நகரத்துக்கு இவ்வளவு வசதிமிக்க ஒரு மருத்துவமனை தேவை இல்லை என்று சொல்லி நிராகரித் தனர் நிதித் துறை அதிகாரிகள். ''உண்மை யில் அரசுக்கே சரியான புரிதலோ, அக்கறையோ இல்லை. முதலிப்பட்டி விபத்தைத் தொடர்ந்து எல்லா ஆலைகளி லும் ஆய்வு செய்து 15 நாட்களுக்குள் அறிக்கை அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு அனுமதி பெற்று நடத்தப்படும் ஆலைகளை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்வோம். 791 ஆலைகளை ஆய்வு செய்ய 15 நாட்கள் எப்படிப் போதும்? நம்முடைய அக்கறை எவ்வளவு பெயர் அளவுக்கு இருக்கிறது என்பதற்கு சின்ன உதாரணம் இது'' என்கிறார் மனித உரிமைச் செயல்பாட்டாளரான 'எவிடென்ஸ்’ கதிர்.
''வெளிநாடுகளிலும் பட்டாசு ஆலைகள் இருக்கின்றன. ஆனால், அங்கெல்லாம் இப்படி நடப்பது இல்லையே... ஏன்? அங்கு விபத்துகள் நேரிட்டால், தடுப்ப தற்குத் தானியங்கி இயந்திரங்கள் ஆலைகளில் பொருத்தப்பட்டு உள்ளன. அறையின் வெப்ப நிலை ஏறினாலே தண்ணீரைப் பொழியும் ஷவர்கள் அறைக்கு அறை உண்டு. நாம் இன்னமும் கையுறை, முகமூடி போன்ற அடிப்படை வசதிகளுக்கே போராடிக்கிடக்கிறோம்; நவீன வசதிகளை எல்லாம் இங்கே எப்போது நினைத்துப்பார்ப்பது?'' என்கிறார் ஆவணப்பட இயக்குநரான பாரதி கிருஷ்ணகுமார்.
ஆமாம்... எப்போது நினைத்துப்பார்ப்பது?

Thanks to AnanthaVikatan-

No comments:

Post a Comment