Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, October 26, 2013

மதுரைஅப்துல் ரஜாக்கின் அதிர வைக்கும் கண்டுபிடிப்புகள்!


மதுரையில் பீபீகுளம் பகுதியில் வசிக்கும் நாற்பத்தியோரு வயதாகும் அப்துல் ரஜாக், ஏழாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். தினசரி கூலி வேலைக்குச் செல்லும் வறியவர். அதே நேரத்தில் இராணுவத்தினருக்கான சூடான உடை, 2-இன் - ஒன் குக்கர், இரு பக்கம் காற்றினைத் தரும் டேபிள் ஃபேன், துளை விழாத டயர், வயரில்லாத ஃபோன் சார்ஜர் உட்பட 20 க்கும் மேற்பட்ட நூதன கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரர்.



சாதாரண எலக்ட்ரீஷியனாக நிலையில்லாமல் கிடைக்கும் இடங்களில் அங்கும் இங்கும் அலைந்து வேலை செய்து காலத்தை ஓட்டிக் கொண்டு வரும் அப்துல் ரஜாக், தான் வசிக்கும் பகுதியில் வாகனங்களில் டயர்கள் அதிக அளவில் திருட்டு போவதை அறிந்தார். அதனைத் தொடர்ந்து இத் திருட்டுக்களைத் தடுக்க "சேஃப்டி லாக்' ஒன்றை கண்டுபிடித்துள்ளார். இந்த சாதனத்தைத் தயாரிக்க இவருக்கு செலவான தொகை வெறும் இருநூறு ரூபாய் மட்டுமே.
இதைக் குறித்து அப்துல் ரஜாக் செய்தியாளர்களிடம் பேசுகையில் "மோட்டார் பைக், கார் சக்கரத்தில் உள்ள நட்டுகள் எவரும் கழற்றும் விதத்தில் வடிவமைக்கப் பட்டு இருப்பதால்தான் டயர்கள் திருடு போகின்றன. எனது கண்டுபிடிப்பான இந்த "சேப்டி லாக்' நட்டுகள் பகுதியை முற்றிலும் மறைக்கும். அத்துடன் பார்வைக்கும் அழகாக இருக்கும். அத்துடன், டியூபிலிருந்து எவரும் காற்றை வெளியேற்றி விட முடியாது. உரிமையாளர் தவிர வேறு எவரும் இப்பகுதியை திறக்க முடியாதவாறு இந்த சாதனம் வடிவமைத்துள்ளேன்" என்றார்.

மேலும் பேசுகையில் "எனது இந்த கண்டுபிடிப்பிற்கான அரசுபூர்வமான காப்புரிமை (Patent) பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் என்னை அணுகினால் மாதிரி செய்முறை (Demo) காண்பிக்க தயாராக உள்ளேன்" என்றார்.

போலீஸ் கமிஷனர் பாலசுப்பிரமணியன், நுண்ணறிவுப் பிரிவு உதவி கமிஷனர் குமாரவேல் ஆகியோர் அப்துல் ரஜாக்கின் கண்டுபிடிப்புகளை வரவேற்று பாராட்டுதல்களைத் தெரிவித்துள்ளனர்.

இந்த சாதனைக்காக சென்ற ஆண்டு தேசிய விருது கிடைத்ததும், இந்திய ராணுவ வீரர்களுக்காக பிரத்யேகமாக தயாரித்துள்ள "வார்ம் ஜாக்கெட்" என்று பெயரிட்டுள்ள சூடான உடையினைத் தயாரித்துள்ள அப்துல் ரஜாக்கை பாதுகாப்பு அமைச்சகம் / Ministry of Defence (MoD) டெல்லிக்கு அழைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இத்தனை அமளிகளுக்குப் பிறகும் தினசரி பிழைப்பிற்கோ, குடும்பம் நடத்துவதற்கோ வழியின்றி ஏழ்மைச் சூழலிலேயே காலம் தள்ளுகிறார் அப்துல் ரஜாக். பாதுகாப்பு அமைச்சகத்தின் அழைப்பின் காரணமாக டெல்லி செல்வதற்கான செலவுத் தொகை ரூ.3000 கூட கையில் இல்லாத வருத்தம் அவர் கண்களில் தெரிந்தது.

பட்டப் படிப்புகள் முடித்தப் பின்னரும், உயர்ந்த நிறுவத்தில் வேலை வாய்த்தால் தான் போவேன் என்ற வறட்டு பிடிவாதத்துடன் வேலை வெட்டி எதுவும் செய்யாமல் வெறுமனே சுற்றி வரும் இளைஞர்களிடையே, பள்ளிக் கல்வியைக் கூட முடிக்காத அப்துல் ரஜாக் சிறந்த முன் மாதிரியாகத் திகழ்கிறார்.
ஏழை தானே என்று அலட்சியப் படுத்தி விடாமல், அப்துல் ரஜாக் போன்ற கண்டுபிடிப்பாளர்களை தமிழக அரசு தாமதமின்றிக் கவனித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே நம் கோரிக்கையாகும்.

No comments:

Post a Comment