Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, October 22, 2013

பீட்சா... பர்கர்... சாண்ட்விச்... ருசியாக ஒரு பிசினஸ்!


பருப்பும் நெய்யும் சேர்த்து குழந்தைகளுக்கு சோறூட்டிய அம்மாக்கள், இன்று பீட்சாவுக்கும் பர்கருக்கும் மாறிக் கொண்டிருக்கிறார்கள். பள்ளி முடித்து, வீடு திரும்பும் குழந்தைகளுக்கு சுண்டலோ, சாலட்டோ கொடுத்து திருப்திப்படுத்த முடிவதில்லை இன்றைய அம்மாக்களால். அடம் பிடிக்கிற பிள்ளைகளை சமாதானப்படுத்தவும், சாப்பிட வைக்கவும் பீட்சா, பர்கர், சாண்ட்விச், ஃப்ரென்ச் ஃப்ரைஸ், நக்கெட்ஸ், ஹாட் டாக் என நவீன உணவுகளை வாங்கிக் கொடுக்க வேண்டிய கட்டாயம் பலருக்கும். கடைகளில் வாங்கும் உணவுகளில் ஆரோக்கியத்துக்கு உத்தரவாதமில்லை எனத் தெரிந்தாலும், வேறு வழியில்லையே... ‘இதையெல்லாம் வீட்லயா செய்து தர முடியும்?’ எனக் கேட்கும் அம்மாக்களுக்கு, முடியும் என்கிற நம்பிக்கையைத் தருகிறார் சென்னை, வடபழனியைச் சேர்ந்த செல்வமணி.


‘‘லண்டன்ல எம்.பி.ஏ முடிச்சவன் என் மகன். அங்கே இருந்தபோது கத்துக்கிட்ட இந்த உணவுகளை எனக்கு சொல்லிக் கொடுத்தான். முதல்ல வீட்டுத் தேவைக்காக செய்துகிட்டோம். ருசி பார்த்த அக்கம்பக்கத்து ஆளுங்க, தொடர்ந்து கேட்கவே, சின்ன அளவுல பிசினஸா ஆரம்பிச்சோம். அது வாய்வழி விளம்பரமானதுல, சுற்றுவட்டாரத்துல உள்ள ஸ்கூல், காலேஜ் பிள்ளைங்க எல்லாம் ஆர்டர் கொடுக்க ஆரம்பிச்சாங்க. முறையான மெஷின்கள் வச்சுப் பண்ற அளவுக்கு இப்போ பிசினஸ் வளர்ந்திருக்கு. பீட்சா, பர்கர் மாதிரியான உணவுகளைக்கூட வீட்டுச்சுவையிலயும், ஆரோக்கியமாகவும் கொடுக்க முடியும்னு நிரூபிச்சதுதான் எங்க வெற்றிப் பின்னணி...’’ - பெருமையாகச் சொல்கிறார் செல்வமணி.

இது இப்படித்தான்!

மூலப்பொருள்கள் ஓடிஜி எனப்படுகிற அவன்-டோஸ்ட்டர்-கிரில்லர் வசதியுள்ள மெஷின், மைக்ரோவேவ் மெஷின், மாவு பிசையும் வசதியுள்ள கிரைண்டர், ஃப்ரென்ச் ஃப்ரைஸுக்கு உருளைக்கிழங்கு வெட்டும் கட்டர், சாண்ட்விச் டோஸ்ட்டர், பொரிப்பதற்கான வாட் மெஷின், மைதா, ஈஸ்ட், எண்ணெய், வெண்ணெய், சீஸ், சர்க்கரை, மசாலா பொருள்கள், சாஸ், காய்கறிகள் உள்பட தேவையான மளிகைச் சாமான்கள், அட்டைப் பெட்டிகள் மற்றும் கவர்கள்...

எங்கே வாங்கலாம்? முதலீடு?

மெஷின் வகையறாக்களை பெரிய கடைகளில் வாங்கலாம். பீட்சா செய்யத் தேவையான ஆலிவ், மினி தக்காளி, சீஸ், சாஸ், கரம் மசாலா, ஈஸ்ட் போன்றவை டிபார்ட்மென்டல் ஸ்டோர்களில் கிடைக்கும். உருளைக்கிழங்கு, வெங்காயம், குடமிளகாய், தக்காளி போன்ற காய்கறிகளை தரமான மொத்தவிலைக் கடைகளில் வாங்கலாம். அட்டைப்பெட்டிகளையும் கவர்களையும் சென்னை பாரிமுனையில் மொத்த விலையில் வாங்கலாம். ஓடிஜி 2 ஆயிரத்திலிருந்தும், மைக்ரோவேவ் அவன் 8 ஆயிரத்திலிருந்தும் கிடைக்கும். கட்டர் மெஷினின் விலை 650 ரூபாய்.

மாவு பிசையும் மெஷின் தனியே கிடைக்கிறது. டேபிள்டாப் கிரைண்டர்களில், மாவு பிசையும் பிரத்யேக பிளேடுடன் கிடைப்பதால், அதையே உபயோகித்துக் கொள்ளலாம். 6 ஆயிரத்துக்குக் கிடைக்கும். இரண்டுமே வேண்டாம் என்றால் கைகளாலேயே மாவு பிசைந்து கொள்ளலாம். வாட் மெஷின் 11 ஆயிரம் ரூபாய். டோஸ்ட்டரின் விலை 2 ஆயிரம். மற்ற பொருள்களுக்கும் சேர்த்து மொத்த முதலீடு 30 ஆயிரம் ரூபாய்.

எத்தனை வகை?

சைவம், அசைவம் என இரண்டிலும் நிறைய வகைகள் செய்யலாம். சைவம் மட்டுமே வேண்டுவோர் வெஜிடபுள் பீட்சா, சீஸ் பீட்சா, பனீர் பீட்சா, மஷ்ரூம் பீட்சா, விதம் விதமான சாண்ட்விச்சுகள், நக்கெட்ஸ், ஹாட் டாக், பர்கர், யம்மீஸ், ஃப்ரென்ச் ஃப்ரைஸ் என கடைகளில் கிடைக்கிற அனைத்தையும் செய்யலாம். பீட்சாவுக்கு தேவையான பிரத்யேக சாஸ், தக்காளி சாஸ், மேயனைஸ் போன்றவற்றையும் வீட்டிலேயே தயாரித்துக் கொள்ளலாம்.

மார்க்கெட்டிங்?

அக்கம் பக்கத்து வீடுகளுக்கு முதலில் சப்ளை செய்தாலே, வாய்வழி விளம்பரம் மூலம் ஆர்டர் உங்களைத் தேடி வரும். வீடுகளில் நடக்கும் சின்னச் சின்ன விசேஷங்களுக்கு, பிறந்த நாள் பார்ட்டிகளுக்கு ஆர்டர் பிடிக்கலாம். வீட்டின் அருகே உள்ள சின்னக் கடைகளுக்கு சப்ளை செய்யலாம். பெரும்பாலான பெரிய பீட்சா கடைகளிலும், வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே டோர் டெலிவரி செய்கிறார்கள். அந்த டெக்னிக்கை பின்பற்றினால், அதிக ஆர்டர் குவியும்.

மாத வருமானம்?


ஒரு கிலோ மைதாவில் 8 பீட்சா செய்யலாம். ஒரு நாளைக்கு 10 கிலோ வரை சுலபமாகச் செய்ய முடியும். 50 பர்கர், 5 கிலோ ஃப்ரென்ச் ஃப்ரைஸ் எல்லாம் செய்ய முடியும். பீட்சாவின் விலை 60 லிருந்து ஆரம்பம். பர்கர் 40 ரூபாய். ஃப்ரென்ச் ஃப்ரைஸ் 35 ரூபாய். சாண்ட்விச் 15 ரூபாய். 100 சதவிகித லாபம் நிச்சயம்.

பயிற்சி?

3 நாள் பயிற்சியில், ஒரு பீட்சா, ஒரு பர்கர், ஃப்ரென்ச் ஃப்ரைஸ், ஒரு சாண்ட்விச் மற்றும் நக்கெட்ஸ் கற்றுக் கொள்ள 3,500 ரூபாய் கட்டணம். (È9444495949)

(நன்றி குங்குமம் தோழி)

No comments:

Post a Comment