Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, October 21, 2013

நீங்களே தயாரிக்கலாம் மினரல் வாட்டர்!


சல்லிக்காசு செலவில்லாமல்.....
நீங்களே தயாரிக்கலாம் மினரல் வாட்டர்!
குடிநீருக்காக பாட்டில் நீர், சுத்திகரிப்பு இயந்திரம் என எதையும் தேடி அலைய வேண்டாம்.

சோடிஸ்ங்கிற இந்த முறையில 60 டிகிரி அளவுக்குதான் தண்ணி சூடாகும்.
"கிராமப்புற மக்களுக்கு 100% சுத்தமான குடிநீரை உறுதிப்படுத்துவதே எங்கள் லட்சியம்" என்று முழக்கமிட்டபடி நாடு முழுக்கவே பல்வேறு கிராமங்களில் உள்ளாட்சி அமைப்பு மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது.
'இதோ... எங்கள் தண்ணீர்தான் 100% யு.வி. முறையில் சுத்திகரிக்கப்பட்டது' என்றபடி பல்வேறு நிறுவனங்களும் பிளாஸ்டிக் பாட்டில் மற்றும் கேன்களில் தண்ணீரை அடைத்து விற்பனை செய்து லாபம் பார்த்துக் கொண்டிருக்கின்றன.
ஆனால், இப்படி வழங்கப்படும் தண்ணீர் எல்லாம் 100% சுத்தமானதுதானா... என்றால் பெரும்பாலும் 'இல்லை' என்பதே பதிலாக இருக்கமுடியும்.
அரசாங்கம் கொடுக்கும் குடிநீரில் கிருமிகள் கலந்து வந்து அவ்வப்போது காலரா உள்ளிட்ட நோய்களைப் பரப்பி மக்களை அலற விடுகின்றன.
'மினரல் வாட்டர்', 'பேக்கேஜுடு டிரிங்கிங் வாட்டர்' என்று சொல்லி சில தனியார் நிறுவனங்கள் கொடுக்கும் தண்ணீரில் இறந்துபோன கரப்பான் பூச்சி, தவளை, சாக்லேட் பேப்பர் என்று கண்டது... கடையதெல்லாம் வந்து பயமுறுத்துகின்றன.
இத்தகையச் சூழலில், 'குடிநீருக்காக பாட்டில் நீர், சுத்திகரிப்பு இயந்திரம் என எதையும் தேடி அலைய வேண்டாம். ஒவ்வொரு வீட்டுக்கும் தேவையான சுகாதாரமான குடிநீரை பைசா செலவில்லாமல் அவர்களே தங்கள் வீட்டில் உருவாக்கிக் கொள்ள முடியும்' என்றபடி 'சோடிஸ்' எனும் ஒரு தொழில்நுட்பத்தை தமிழகத்தில் பரப்பிக் கொண்டிருக்கிறது 'லீட்' என்ற தொண்டு நிறுவனம்.
இதன் இயக்குநர் ராதா நம்மிடம் பேசியபோது, "இது, சூரிய ஓளியைப் பயன்படுத்தி தண்ணீரைச் சுத்தப்படுத்துற முறை. 'சோலார் வாட்டர் டிஸ்இன்ஃபெக்ஷன்' (Solar Water Disinfection) அப்படிங்கறதோட சுருக்கம்தான் 'சோடிஸ்' (Sodis). அதாவது, ஒளி ஊடுருவக்கூடிய 'பெட் பாட்டில்'கள்ல தண்ணியை அடைச்சி, சூரிய வெப்பத்தைப் பயன்படுத்தி நீரில் உள்ள கிருமிகளை ஒழிச்சிடலாம்.
தண்ணீர் பத்தின ஒரு செமினாருக்காக பங்களாதேஷ் நாட்டுக்குப் போயிருந்தப்ப இந்த விஷயத்தைத் தெரிஞ்சிக்கிட்டேன். பங்களாதேஷ், மேற்கு வங்காளத்துல சில பகுதி மக்கள் 'சோடிஸ்' முறையில தண்ணியைச் சுத்திகரிச்சிப் பயன்படுத்துறாங்க.
சுவிட்சர்லாந்து நாட்டுலதான் இந்த முறையைக் கண்டுபிடிச்சி அறிமுகப்படுத்தியிருக்காங்க. பிறகு, உலக சுகாதார நிறுவனத்தோட பார்வைக்கு கொண்டு போயிருக்காங்க. அவங்க, பல தரப்பட்ட ஆய்வுகளை நடத்திப் பார்த்துட்டு, 'சோடிஸ் முறையில் சுத்திகரிக்கப்பட்ட நீரில் கிருமிகள் இல்லை'ங்கிறத உறுதிப்படுத்தியிருக்காங்க. பிறகுதான் உலக அளவுல இது பரவ ஆரம்பிச்சிருக்கு. தமிழக மக்கள் மத்தியிலயும் இதைக் கொண்டு போய் சேர்த்தா, பலனுள்ளதா இருக்குமேனுதான் இங்கே அறிமுகப்படுத்தியிருக்கோம்.
தமிழகத்துல இயற்கையில் கிடைக்கிற தண்ணியில பாக்டீரியா, வைரஸ்னு ஏகப்பட்ட கிருமிகள் இருக்கு. நீர்நிலைகளை நாம கையாள்ற விதங்களாலயும் இத்தகையக் கிருமிகள் பெருகிடுது. அதனாலதான் கொதிக்க வெச்சி, ஆற வெச்ச தண்ணியைக் குடிநீரா பயன்படுத்தச் சொல்லி டாக்டருங்க சிபாரிசு செய்றாங்க. ஏழு முதல் பத்து நிமிஷம் வரைக்கும் கொதிக்க வெச்ச நீரை உபயோகப்படுத்தினா நோய்கள் பரவாதுனு சொல்றாங்க. இதுக்காக 100 டிகிரி சென்டிகிரேடு வரைக்கும் தண்ணியைக் கொதிக்க வைக்கிறோம். இதனால 100% கிருமிகள் நீக்கப்படுதுங்கறது உண்மை. அதேசமயம், அந்தத் தண்ணியில இயற்கையா இருக்கற வாயுக்கள், தாதுஉப்புக்களும்கூட நீக்கப்படுது. அதனாலதான் கொதிக்க வெச்ச தண்ணியைக் குடிச்சா சுவை குறைச்சலா இருக்கு. இயற்கையா நம்ம உடம்புக்குக் கிடைக்க வேண்டிய தாதுஉப்புக்களும் இல்லாம போயிடுது.
ஆக, தண்ணியைக் கொதிக்க வைக்கிறதால ஏதோ ஒரு வகையில நமக்கு இழப்பு ஏற்படுது. விறகு, மண்ணெண்ணெய், கேஸ் மாதிரியான எரிபொருள் செலவு வேற. ஆனா, இயற்கையா கிடைக்கும் சூரிய சக்தியைப் பயன்படுத்தும்போது ஒரு பைசா செலவு கூட ஆகாது. சோடிஸ்ங்கிற இந்த முறையில 60 டிகிரி அளவுக்குதான் தண்ணி சூடாகும். அதேநேரத்துல புற ஊதாக்கதிர் ஊடுருவலும் நடக்கும். இதன்மூலம் தண்ணியில இருக்கிற 'ஈகோலி' வைரஸ் மற்றும் பாக்டீரியாவெல்லாம் கொல்லப்படுது.
கொதிக்க வெச்ச தண்ணி 100% பாதுகாப்பானதுனு சொன்னா... சோடிஸ் முறையில சுத்திகரிக்கப்பட்ட தண்ணி 99% பாதுகாப்பானது. அதேசமயம், சுவை மாறாம... இயற்கையான தாதுஉப்புக்களும் காணாப் போகாம இருக்கறதால... சோடிஸ் முறையில சுத்திகரிக்கற தண்ணிதான் உடம்புக்கு நல்லது. 'ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ்'ங்கற முறையில சுத்திகரிக்கப்படுற தண்ணிக்கு இணையான தரத்துல இந்தத் தண்ணியும் இருக்கும்" என்று விரிவாகச் சொன்னார்.
சோடிஸ் முறையில் தண்ணீரை எப்படிச் சுத்திகரிப்பது? மிக எளிமையான அந்தத் தொழில்நுட்பத்தை 'லீட்' நிறுவனத்தின் திட்ட தொடர்பாளர் கார்த்திகேயன் நம்மிடம் விளக்கினார்.
"கண்ணாடிபோல ஒளிபுகும் 'பெட் பாட்டில்'களாக இருக்கவேண்டும். அதன் மீது ஸ்டிக்கர், பேப்பர் போன்றவை ஒட்டியிருக்கக்கூடாது. வண்ணமயமான பாட்டில்களை உபயோகப்படுத்தக் கூடாது. அடிப்பகுதியில் முக்கோண வடிவ குறியும் றிணிஜி என்ற ஆங்கில வார்த்தையும் இருக்க வேண்டும். அப்படி இருந்தால், அது தரச் சான்று பெற்ற பெட் பாட்டில்.
பாட்டிலைச் சுத்தப்படுத்தி, வழக்கமாக குடிப்பதற்குப் பயன்படுத்தும் தண்ணீர், அதாவது கலங்கலாக இல்லாத தண்ணீரை முக்கால் பாகம் அளவுக்கு அதில் நிரப்பி, நன்றாக மூடி 20 வினாடிகளுக்கு குலுக்க வேண்டும். பிறகு, மீதி இருக்கும் இடத்துக்கும் தண்ணீரை நிரப்பவேண்டும். அடுத்து... பாட்டிலின் மீது நேரடியாக வெயில்படும்படி வெட்டவெளியில், படுக்கை வசத்தில் பாட்டிலை வைக்க வேண்டும். வீட்டின் மேல்கூரை, மொட்டை மாடி போன்ற இடங்களில் வைக்கலாம். தொடர்ந்து ஆறுமணி நேரம் இப்படி இருக்கவேண்டும். அத்தகைய இடமாகத் தேர்ந்தெடுக்கவேண்டும். நிழலான இடங்களில் வைக்கக் கூடாது.
ஆறு மணிநேரம் கழிந்ததும் அந்தத் தண்ணீரை அப்படியே குடிநீராக உபயோகப்படுத்தலாம். பாட்டிலில் உள்ள நீரை வேறு பாத்திரங்களுக்கு மாற்றாமல்... அப்படியே பயன்படுத்தவேண்டும். அதிகபட்சம் இரண்டு நாள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
மழைக் காலத்தில் இந்த முறை பயன் அளிக்காது. ஆனால், தமிழகத்தில் பெரும்பாலான நாட்கள் வெயில் வீசிக்கொண்டுதான் இருக்கிறது. மிஞ்சிப்போனால் ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்குதான் வெயில் கிடைக்காமல் இருக்கும். எனவே, இந்த முறையை ஓர் ஆண்டின் 90% நாட்களுக்குப் பயன்படுத்தி பலனடைய முடியும். மீதமுள்ள காலங்களுக்கு கொதிக்க வைத்து பயன்படுத்திக் கொள்ள வேண்டியதுதான்" என்று சொன்னார்.
'லீட்' அமைப்பின் ஏற்பாட்டில் சென்னை, ஈரோடு, திண்டுக்கல் மாவட்டங்களின் சில பகுதி மக்கள் இந்த முறையைப் பயன்படுத்தி வருகிறார்கள். திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை பகுதியில் உள்ள கன்னிமேய்க்கன்பட்டி கிராமத்தில் உள்ள மகளிர் குழுவின் தலைவி சுமதி, "எங்க குழுவைச் சேர்ந்தவங்க நாலு வருசமா இந்த முறையிலதான் தண்ணீரைச் சுத்தப்படுத்தி குடிக்கிறோம். வீட்டுல இருக்குற ஆளுகளை கணக்குப் பண்ணி, தலைக்கு ரெண்டு பாட்டில்னு வெயில்ல வெச்சு உபயோகப்படுத்துறோம். பக்கத்து ஊருகள்ல காலரா மாதிரியான நோய்ங்க வர்றப்பகூட, எங்களுக்கும் குழந்தைங்களுக்கும் வர்றதில்லை" என்று சொன்னார்.
ம்... இயற்கையை மிஞ்சி எதுவுமே இல்லை என்பதற்கு இன்னொரு உதாரணம்!

படம்: என்.ஜி. மணிகண்டன்
பாட்டில்கள் ஜாக்கிரதை!
மினரல் வாட்டர் பாட்டில்கள், கொஞ்சம் தடிமனான குளிர்பான பாட்டில்கள், கடைகளில் விற்கும் பெட் பாட்டில்களை போன்றவற்றையும் உபயோகப்படுத்தலாம். எந்தப் பாட்டிலாக இருந்தாலும் வெப்பம் காரணமாக நாளடைவில் அதன் உருவம் மாறத் தொடங்கிவிட்டால் பயன்படுத்தக் கூடாது. பாட்டிலினுள் உப்புக்கள் படிய ஆரம்பித்தாலும், பாட்டிலை மாற்றவேண்டும். மினரல் வாட்டர் பாட்டில்களை இரண்டு மாதங்கள் வரையும், குளிர்பான பாட்டில்களை நான்கு மாதங்கள் வரையும், கொஞ்சம் தடிமனான பாட்டில்களை ஐந்து மாதங்கள் வரையும் அதிகபட்சமாகப் பயன்படுத்தலாம்.
கொள்ளளவு அதிகமாக உள்ள கலன்களில் புற ஊதாக்கதிர்கள் வேகமாக ஊடுருவ முடிவதில்லை. எனவே பாட்டிலின் அளவு 2 லிட்டருக்கு மிகாமல் இருக்கவேண்டும். கண்ணாடி பாட்டில்களில் புற ஊதாக்கதிர்கள் வேகமாக ஊடுருவாது என்பதால் அவை ஏற்றதல்ல.
'மினரல் வாட்டர் பாட்டில்களை ஒரு தடவை உபயோகப்படுத்தியபின் உடைத்துவிட வேண்டும்’ என்பார்கள். போலிகளைத் தவிர்ப்பதற்காக சொல்லப்படும் விஷயம்தான். அந்தப் பாட்டில்கள் மறுபயன்பாட்டுக்கு ஏற்றவை என்பது பரிசோதனைகளில் உறுதியாகியிருக்கிறது.
முழுமையான வெயில் அல்லது 50% மேக மூட்டமான சூழல் நிலவினாலும் தண்ணீர் நிரப்பப்பட்ட பாட்டிலை திறந்தவெளியில் 6 மணி நேரம் வைத்திருந்தாலே தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டுவிடும். 100% மேக மூட்டம் இருக்கும்பட்சத்தில் இரண்டு நாட்களுக்கு வைத்திருக்கவேண்டும். முழுமையாக மழை கொட்டித் தீர்க்கும் காலங்களில் இதைப் பயன்படுத்த முடியாது. அத்தகைய காலங்களில் கொதிக்க வைத்த நீரைப் பயன்படுத்தலாம். அல்லது மழைநீரை நேரடியாக சுத்தமான பாத்திரங்களில் பிடித்தும் பயன்படுத்தலாம்.

மேக மூட்டத்திலும் சுத்தமாகும்!
சோடிஸ் முறையைப் பயன்படுத்துவதன் மூலம் முக்கியமாக காலராவுக்கு காரணமான பாத்தோஜெனிக் பாக்டீரியா அழிந்துவிடும். உலகின் பல நாடுகளில் பெரிய அச்சுறுத்தலாக இருப்பதே... இந்த காலரா வியாதிதான். ஆண்டுதோறும் உலக அளவில் லட்சக்கணக்கில் மக்களை காவு கொண்டுவிடுகிறது இந்தக் காலரா. இது அதிகமாக தாக்கும் நாடுகளில் 'சோடிஸ்' முறை அறிமுகப்படுத்தப்பட்டு, ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அங்கே 20 முதல் 50% அளவுக்கு காலரா தாக்குதல் குறைந்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சோடிஸ் முறையானது தண்ணீரில் உள்ள கிருமிகளை அழிக்கக்கூடியது. அதேசமயம், வேதியியல் பொருட்கள் கலந்திருந்தால், சுத்திரிகரிக்க முடியாது.

Thanks to Vikatan group

No comments:

Post a Comment