Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, October 22, 2013

வாரிக் கொடுக்குது தேக்கு!

வருங்கால வளர்ப்பு நிதி ...வாரிக் கொடுக்குது தேக்கு!

அடிமைப்பட்டுக் கிடக்கும் இந்தியாவில் குதிரை களின் காலடி சப்தம் கேட்கிறது. எங்கு சென்றாலும் தேக்கு விதை மூட்டைகளோடு பயணம் செய்வதையே வழக்கமாக வைத்தி ருக்கும் வெள்ளையர்கள், குதிரை மீதமர்ந்தபடி விதைகளை வீசிக்கொண்டே செல்கின் றார்கள். 'இனி, இந்தியா நம் கையில்தான். இந்த தேக்கு விதைகள்தான் நம்முடைய எதிர்கால பொக்கிஷம்' என்றபடியே முடிந்த இடங்களிலெல்லாம் விதைக் கிறார்கள்.

-இது 1947-ம் ஆண்டுக்கு முந்தைய காட்சி!
நம்நாட்டில் காலகாலமாக விளைந்திருந்த, தேக்கு மரங்களைக் கண்டு பிரமித்துப்போன வெள்ளையர்கள், தங்கள் நாட்டு அரண்மனைகளையும், பங்களாக்களையும் தேக்கு மரங்களால் அலங்கரித்தனர். இங்கிருந்து கணக்கு வழக்கில்லாமல் வெட்டியும் சென்றனர். அதே சமயம், 'எதிர்காலத்துக்கு தேவைப்படும்' என்று சுயநலத் தோடு விதைகளைத் தூவிக் கொண்டிருந்தனர்.
காவிரிப்படுகையில் கைகொடுத்த தேக்கு!
மாபெரும் பொக்கிஷம், ஆட்சிக்கு ஆதாரம் என்றெல் லாம் நினைத்து அன்றைக்கு வெள்ளையர்களால் விதைக்கப்பட்ட தேக்கு, இன்றைக்கும் கூட அரசுக்கு பெரும் வருவாயைக் கொடுத்தபடியேதான் இருக்கிறது. அரசு கஜானாவை நிரப்புவதில், தேக்கு மரங்களும் முக்கிய பங்காற்றி வருகின்றன. இதுவரை இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு (2006-07), கல்லணையில் இருந்து பூம்புகார் வரையிலான காவிரிப்படுகையில் மட்டுமே தேக்கு அறுவடை மூலமாக 11 கோடியே 26 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்திருக்கிறது. முதிர்ந்த மரங்களை வெட்டி ஏலம் விட்டதில் கிடைத்த வருமானம் இது.
''காவிரிப்படுகையில அரசு மட்டுமல்ல... ஒவ்வொரு தனி மனிதனும் கூட தேக்கு வளர்ப்பில் இறங்கினால், நல்ல லாபம் ஈட்டமுடியும். அதற்கு உதாரணம் நானே தான்'' என்று சொல்கிறார் காவிரிப்படுகையிலிருக்கும் வலங்கைமான், தில்லையம்பூரைச் சேர்ந்த கிருஷ்ணசாமி (தொலைபேசி: 0435-2444215). இவருடைய குடும்பத்துக்கும், தேக்கு மரங்களுக்குமான உறவு, தலைமுறைகளாகத் தொடர்கிறது.
நூற்றாண்டு பந்தம்!
தேக்கு பற்றி கேட்டறிய வீடு தேடி போனபோது, தன் வீட்டுக்கு எதிரில் பாழடைந்த நிலையில் பூட்டிக் கிடந்த வீட்டைக்காட்டி, '‘வாங்க, அந்த வீட்ல உட்கார்ந்து பேசுவோம்'’ என அழைத்துச் சென்ற கிருஷ்ணசாமி,
‘‘120 வருஷத்துக்கு முன்னாடி எங்க தாத்தா கட்டின வீடு இது. முழுக்க தேக்கு மரத்தால கட்டின வீடு. சிதிலமடைஞ்சி போனாலும், தேக்கு மரத்தலான சட்டங்களெல்லாம் இன்னிக்கும் பளபளப்பா இருக்கு. இதுக்கெல்லாம் பெயின்ட் அடிச்சதே இல்லை. இத்தனை வருஷம் ஆகியும் கரையான் அரிக்கல; தேக்கு மரத்தை மட்டும் கரையானால ஒண்ணுமே செய்ய முடியாது. தேக்கோட அடர்த்தி அதிகம். மரம் அறுக்கற இடத் துக்கு கொண்டு போனா, மற்ற மரத்துக்கெல்லாம் ஒரு கன அடிக்கு 8 ரூபாய்தான் அறுவை கூலி. ஆனா, தேக்குக்கு 30 ரூபாய். அந்தளவுக்கு வலிமை. 20 நிமிஷத்துக்கு ஒரு தடவை ரம்பத்தை சாணை பிடிச் சாதான் இதை அறுக்க முடியும். தொடர்ச்சியா அறுத்தா ரம்பத்தோட பல்லு போயிடும்’’ என பேசிக் கொண்டே அருகிலிருந்த மாட்டு வண்டியின் சக்கரத்தைத் தட்டினார். 'நங்'கென்று கருங்கல் போல சத்தம் வந்தது.
''சும்மாவா, தேக்குல செஞ்சதாச்சே!'' என்றபடியே தொடர்ந்தவர்,
''எங்க தாத்தா கோபால அய்யங் கார் விதைச்ச தேக்கு மரங்கள், எங்க அப்பாவுக்கு உதவியா இருந் துச்சு. அவருக்கு பல தடவை பண நெருக்கடி வந்த போதெல்லாம் தேக்குதான் கைகொடுத்துச்சு. அப்பா வளர்த்த தேக்கு, இப்ப எனக்கும் துணையா இருக்கு.
இந்தப் பகுதியில ஒரு தேக்கு மரம் அதிகபட்சம் 8 அடி சுற்றளவுக்கும் 32 அடி உயரத்துக்கும் வளரும்; 50 வயதை கடந்த பிறகுதான் இந்தளவுக்கு வளர்ச்சியை அடையும். ஆனா, அதுவரைக்கும் பொறுமையா இருக்க வேண்டியதில்ல. போன வருஷம், ஒரே மரத்தை 20 ஆயிரம் ரூபாய்க்கு கொடுத்தேன். அது 30 வருஷத்து மரம்; 20 கன அடி இருந்துச்சு. கட்டுமரத்து மேல உட்கார்ந்து, மீன்பிடிக்க, தேக்குமர பலகையத்தான் பயன்படுத் துறாங்க. இதுக்காகவே அதிராம்பட்டினத்துல இருந்து என்கிட்ட அஞ்சி தேக்கு மரங்களை வாங்கிக்கிட்டுப் போனாங்க. 72 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செஞ்சேன்'’ என்று சொன்ன கிருஷ்ணசாமி, தேக்குகள் நிறைந்த தன்னுடைய தோட்டத்துக்கு அழைத்துச் சென்றார்.
இடைவெளியில் கவனம்!
அருகில் ஆறு சலசலத்து ஓடிக்கொண்டிருக்க... பசுமைப்போர்த்தி தலையாட்டியபடி நின்றிருந்தன தேக்கு மரங்கள். ''நீர்நிலைகளுக்குப் பக்கத்துல நிலம் இருந்தா தேக்கு செழிப்பா வளரும். அப்படி இல்லையானாலும் தேக்கு வளர்க்கலாம். என்ன... வளர்ச்சி குறைவா இருக்கும். மழைநீரை மட்டும் நம்பி, வறட்சியான பகுதிகள்ல கூட தேக்கு போட்டு வெச்சிருக்காங்க. அதுல அதிக லாபமி ருக்காது. பொதுவா, தேக்குக்கு தண்ணி தேங்கி நிக்கக்கூடாது. மேட்டுநிலமா இருந்தா நல்லது. என்னோட நிலம், களிமண்ணும் மணலும் கலந்த இருமண்பாடு. செம்மண், வண்டல் மண்லயும் தேக்கு வளரும். வெயில் காலத்தைத் தவிர மத்த மாசங்கள்ல கன்னு நடலாம். தென்னந்தோப்புல ஊடுபயிரா தேக்கு போடுறது ரொம்ப சிறப்பான விஷயம்.
குறைபாடு இல்லாத, வளைவுகள் இல்லாத ஒரே நேர்க்கோட்டுல வளர்ந்திருக்கற மரங்களுக்குத்தான் மவுசு அதிகம். அப்படி வளர்க்கறதுக்கு அடிப் படையான சில விஷயங்களைத் தெரிஞ்சு வெச்சிக் கணும். தென்னந்தோப்புல தேக்கு போட்டா... தென்னைக்கும் தேக்குக்கும் நடுவுல 10 அடி இடைவெளி இருக்கணும். ரெண்டு தேக்குக்கு நடுவுல 12 அடி இடைவெளி அவசியம்'' என்றவர், தேக்கு கன்றுகள் தயாரிப்பில் ஆரம்பித்து மரம் வளர்த்தெடுப்பது வரை பாடமாகப் படித்தார்.
கன்றுகள் தயாரிப்பு
'ஐம்பது வயதுக்கு மேற்பட்ட தேக்கு மரங்கள், தானாக உதிர்க்கும் விதைகளை எடுத்து வந்து வெயிலில் ஒரு மாதம் காய வைக்கவேண்டும். பிறகு மண்ணை நன்கு புழுதியாக்கி, ஒரு அடி ஆழத்துக்கு குழி தோண்டி... எரு, மணல் கலந்து குழியை முழுவதுமாக மூடிவிடவேண்டும். பின்பு 4 விரல்கிடை ஆழம் வரை மண்ணை லேசாகக் கிளறி, விதையைப் போட்டு மூடவேண்டும். விதையானது நான்கு விரல்கிடை ஆழத்தில் இருக்க வேண்டும் என்பது முக்கியம். உடனே பூவாளியால் தண்ணீர் பாய்ச்சவேண்டும். தொடர்ந்து 3 மாதம் வரை, இரண்டு நாட்களுக்கு ஒரு தடவை பூவாளி கொண்டு தண்ணீர் பாய்ச்ச வேண்டும். சிறிதாக துளிர் விடும்வரை இது தொடரவேண்டும். துளிர் வந்ததும் கன்றை அகற்றி வேறு இடத்தில் நடலாம். இல்லையென்றால் 1:1:1 என்ற விகிதத்தில் மண்; மணல்; எரு கலந்து, சிறிய பாலித்தீன் பைகளில் போட்டு, அவற்றில் கன்றை நட்டு மூன்று மாதம் வரை தினமும் ஒரு வேளை தண்ணீர் விட்டு பாதுகாக்கலாம். ஒரு கன்று 5 ரூபாயிலிருந்து 10 ரூபாய் வரை விலை போகிறது.

கிளைகளில் கண் வையுங்கள்!

ஒரு அடி சுற்றளவு, இரண்டு அடி ஆழத்துக்கு குழிதோண்டி, எருவும் மணலும் கலந்து குழியை மூடவேண்டும். குழியில் உள்ள மணல் இறுக்கமாக இல்லாமல் தளர்வாகவும் லேசான ஈரப்பதத்துடனும் இருக்கவேண்டும். இரண்டு அங்குலத்துக்கு நுனி வெளியில் தெரிவது போல் கன்று நடவேண்டும். மறுநாள் தண்ணீர் ஊற்றவேண்டும். பிறகு வாரம் ஒரு தண்ணீர் ஊற்றினால் போதும். வெயில் காலங்களில் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் ஊற்றுவது அவசியம்.
ஒரு மாதத்தில் துளிர் வளர்ச்சி அடையும். 8 மாதத்தில் ஒன்றரை அடி உயரத்துக்கு கன்று வளர்ந்தி ருக்கும். ஒரு வருடத்துக்குப் பிறகு, வெயில் காலத்தில் மட்டும் பத்து நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விடவேண்டும். முதல் வருடம் இரண்டு முறை களையெடுப்பு; இரண்டாவது வருடமும் இருமுறை களையெடுத்தால் சிறப்பாக இருக்கும். இரண்டு வருடங்களுக்குப் பிறகு தேக்கு மரங்களுக் காக மட்டும் தனியாக தண்ணீர் பாய்ச்ச வேண்டி யதில்லை. வாய்ப்பிருந்தால் ஒவ்வொரு மாதமும் மூன்று முறை தண்ணீர் பாய்ச்சினால், மரம் அடர்த்தியாக வளரும்.
கிளைகள் வெடிக்கும் பொழுது அதிக கவனம் தேவை. சிறிய குச்சிகளாக உருவெடுக்கும்போதே உடைத்து விடுவது நல்லது. பெரிதாக வளரவிட்டால், மரங்கள் ஒரே நேர்கோட்டில் வளராமல் வளைந்து நெளிந்து வளரும். கிளைகள் வளர்ந்து விட்டாலும் கூட, மரத்தில் பள்ளம் விழாதவாறு கிளைகளை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும். மரத்தில் பள்ளம் விழுந்தால், மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி, மரத்தின் உட்புறம் ஊடுருவும். இதனால் உட்புறத்தில் அதிக வெற்றிடம் உருவாகும். வெள்ளைத் தன்மையும் அதிகமாகி, மரத்தில் வைரம் பாய்வது குறையும். சில சமயங்களில் வைரமே பாயாமலும் போய்விடும் வாய்ப்புள்ளது. இவை அனைத்துமே மரத்துக்குக் கிடைக்கும் விலையைக் குறைத்து விடும்.

இலைகளே உணவாக!

தேக்கு மரங்களுக்கு உரம் வைக்க வேண்டிய அவசியம் இல்லை; அதனுடைய இலைகளே கீழே உதிர்ந்து, மண்ணோடு மக்கி, உணவாக மாறிவிடும்; மண்ணின் ஈரப்பதத்தையும், தேக்கு இலைகளே பல நாட்களுக்குப் பாதுகாக்கும்; பூச்சித் தாக்குதலை தடுக்க, 50 கிராம் குருணை மருந்தை மணலில் கலந்து, தேக்கு மரத்தைச் சுற்றிலும் உள்ள மண்ணை நன்கு கொத்திவிட்டு, அதில் கலந்துவிட வேண்டும்; உடனே தண்ணீர் பாய்ச்சுவது அவசியம். இவ்வாறு செய்தால் நீண்ட காலத்துக்கு தேக்கு மரங்கள் வலுவாக இருக்கும். தானாகக் கீழே சாயாது. மரத்திலும் துளைகள் விழாது. மண்ணின் தன்மையைப் பொறுத்து தான் மரத்தின் வளர்ச்சி இருக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்'
பாடத்தை முடித்த கிருஷ்ணசாமி, ''தேக்கைப் பொறுத்தவரை பெரிசா செலவே கிடையாது. இரண்டு வருஷம் வரைக்கும் கொஞ்சம் போல கவனமெடுத்துக்கிட்டா... அதுக்குப்பிறகு தன்னால வளர்ந்துக்கும். செலவும் பெரிசா கிடையாது. இப்பவே ஒரு கன அடி தேக்கு 1,000 ரூபாய் விலை போகுது. ஒவ்வொரு வருஷமும் 10% விலை ஏறிக்கிட்டேதான் இருக்கு. இந்தக் கணக்குப்படி பார்த்தா இன்னும் 20 வருஷம் கழிச்சி, ஒரு கன அடி தேக்கு, மூவாயிரம் ரூபாய்க்கு மேல போகும். இதைவிட அதிகரிக்கவும் வாய்ப்பிருக்கு. இப்பவே நூறு தேக்கு கன்னுகளை நட்டு வெச்சா 20 வருஷம் கழிச்சி ஒவ்வொரு தேக்கு மரமும் 30 ஆயிரம் ரூபாய்க்கு விலைபோகும். 100 மரங்களுக்கு 30 லட்ச ரூபாய் கட்டாயம் கிடைக்கும்.
அந்த இன்ஷ¨ரன்ஸ்... இந்த இன்ஷ¨ரன்ஸுனு சொல்றாங்களே... அதையெல்லாம் மிஞ்சிடும் தேக்கு மரம் தரப்போற சிக்கலில்லாத இன்ஷ¨ரன்ஸ்’’ என விவசாயிகளின் எதிர்கால காப்பீட்டுக்கு வழி காட்டினார்.
தேக்கு மரங்களின் தரம் மற்றும் விலை நிலவரம் குறித்து மரம் அறுவை ஆலை உரிமையாளர்கள் சிலரிடம் கேட்டபோது, ''பணம் இருந்தா தங்கத்தைக் கூட வாங்கிடலாம்; யாருடைய அனுமதியும் வேண்டியதில்ல. ஆனா, தேக்கு மரங்களை வெட்டி விற்கவும், வாங்கவும் வனத்துறையோட அனுமதி தேவை. தேக்கு மரத்தோட குறைந்தபட்ச கொள்முதல் விலையே, ஒரு கன அடி 950 ரூபாய்; அதிகபட்சம் 1,500 ரூபாய். வயசு ஆக ஆக மரத்துல வைரம் ஏறிக்கிட்டே இருக்கும். விலையும் கூடிக்கிட்டே இருக்கும். கருஞ்சிகப்பு நிறத்துல ரேகைகள் இருக்கறதைத்தான் வைரம்னு சொல்றோம். வெள்ளையா இருந்தா, தரம் குறைச்சல்னு அர்த்தம்.
இப்போதைக்கு 15 முதல் 20 வயசுள்ள மரம்னா... ஒரு கன அடி தேக்கு 950 ரூபாய். 20 முதல் 30 வயசிருந்தா 1,000 ரூபாயில இருந்து 1,200 ரூபாய். 30 முதல் 40 வயசுக்கு மேற்பட்டதா இருந்தா 1,500 ரூபாய் வரை விலை போகும். தரத்துக்குத் தக்கபடி விலை'' என்று கண்சிமிட்டினார்கள்.
எல்லாமே இலவசம்!
தேக்கு மர வளர்ப்புக்காக அரசு மிகுந்த முயற்சி எடுத்து வருகிறது. அதைப்பற்றி பேசிய தஞ்சை மாவட்ட வன அலுவலர் துரைசாமி, ''மரச்சாமான்கள் செய்றதுக்கான டிம்பர் மரங்களுக்கு 1980-களில் கடுமையான தட்டுப்பாடு வந்தது; தரமான மரங்கள் கிடைக்காமல், மக்கள் ரொம்பவே திண்டாடினாங்க. அப்பதான் காவிரிப்படுகையில் இருந்த மரங்களை வெட்டி, அரசு விற்பனை செய்தது; தேக்கு மரங்களுக்கு, மக்கள்கிட்ட அமோக வரவேற்பு இருந்ததால் தொடர்ந்து அரசு விற்பனையில் இறங்கியிருக்கு.

சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காகவும், அரசின் எதிர்கால வருவாய்க்காகவும், 2003-ம் வருஷம், 'படுகை தேக்கு வளர்ப்பு திட்டம்' என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டு, வெற்றிகரமாக செயல்பட்டு வருது. 5 வருடத்துக்குள்ள 5 லட்சத்து 25 ஆயிரம் தேக்கு கன்றுகளை நடுவதுதான் இலக்கு.
விவசாயிகள் விரும்பினால், அவர்களது நிலத்தில் ஊடுபயிரா தேக்கு நட்டுக் கொடுத்து, ரெண்டு முறை களையெடுத்து தரவும் வனத்துறை தயாரா இருக்கு. எல்லாமே இலவசம். ஆனா, தனிப்பயிராக தேக்கு நடவு செய்றதுக்கு இந்த சலுகை கிடையாது. தனிப்பயிரா நடவு செய்தா, நாட்டோட உணவு உற்பத்தி பாதிக்கப்படும்ங்கறதால அதை ஊக்குவிக்கறதில்ல.

ஒரு ஏக்கருக்கு 160 தேக்கு கன்னுகளை ஊடுபயிராக நட்டு, களையெடுத்து தருவோம். தனி ஒரு விவசாயிக்கு அதிகபட்சம் ஒரு ஹெக்டேர் கணக்குபடி 400 தேக்கு நட்டு, களையெடுத்து தருவோம். தரிசு நிலமா இருந்தா, தனிப்பயிராகவே ஒரு ஹெக்டேருக்கு 400 கன்னுகளை நட்டு, களையெடுத்து தருவோம். ஆர்வமுள்ள விவசாயிங்க எங்களைத் தொடர்பு கொள்ளலாம்'' என்று அழைத்தார்.

எச்சரிக்கை!
தேக்கு வளர்க்க நினைப்பவர்கள், சொந்த முயற்சியோடு, சொந்த பராமரிப்பில் செய்தால்தான் இந்தக் கணக்கைப் போட்டு லாபத்தை எதிர்பார்க்க முடியும். அதோடு, உங்கள் நிலம் இருக்கும் பகுதியையும் பொறுத்தே மகசூல் அமையும். அதைவிடுத்து, 'உங்கள் பெயரில் நாங்கள் தேக்கு வளர்க்கிறோம்... பாக்கு வளர்க்கிறோம்' என்று வண்டி வண்டியாக கதையளந்து கடைசியில் உங்கள் பணத்தை 'அனுபவி'த்துவிட்டு ஓட்டம் எடுக்கும் சில தனியார் நிறுவனங்களை நம்பினால் ஆபத்துதான். அவர்களிடம் போய் ஏமாந்த 'அனுபவம்' தமிழகத்தில் நிறைய பேருக்கு உண்டு என்பதை மறந்துவிடவேண்டாம்... ஜாக்கிரதை!

அடேங்கப்பா...90 லடசம்!
ஒரு ஏக்கரில் 300 தேக்கு மரங்களை வளர்த்தெடுத் தால், 20 ஆண்டுகளுக்குப் பிறகு, கன அடி 3,000 ரூபாய் விற்கும்பட்சத்தில் கிடைக்கப்போவது ரூ.90 லட்சம். இன்றைய விலையான 1,000 ரூபாய்க்குப் போனால் கூட, 30 லட்சம் நிச்சயம். மொத்த சாகுபடி செலவு ரூ.37,300. இதை வங்கியில் போட்டு வைத்தால் 20 ஆண்டுகளுக்குப் பிறகு, '1,64,115 ரூபாய் கிடைக்கும்' என்பது வங்கிக் கணக்கு. மற்றதை நீங்களே கணக்கு போட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்.
முதல் விதை!
தேக்கு மரத்தின் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் அரசுக்கு வருவாயாக வந்திருக்கும் விஷ யத்தை பெருமையோடு சொல்லும் தஞ்சை மாவட்ட வன அலுவலர் துரைசாமி, பழைய சம்பவம் ஒன்றை நெகிழ்ச்சியோடு நினைவு கூர்கிறார்
‘‘காவிரிப் படுகையில தேக்கு மரங்கள் செழிப்பா வளரும்ங்கற விஷயம் ஆரம்ப காலங்கள்ல யாருக்கும் தெரியாது. 1956-ம் வருஷம், தலைமை வனப்பாதுகாவலரா இருந்த வி.எஸ்.கிருஷ்ணசாமிங்கறவரு நீடாமங்கலம் வந்தி ருக்காரு. அப்ப யதேச்சையா சில தேக்கு மரங்கள பார்த்திருக்காரு. ரொம்ப செழிப்பா இருந்திருக்கு. ஆய்வு செஞ்சி பார்த்தப்ப, அதுல ஒரு மரம், நூறு வயசுள்ள மரமா இருந்திருக்கு. ரொம்ப ஆச்சர்யப்பட்டு போனவர், காவிரிப்படுகையில ஏராளமான தேக்கு மரங்கள வளர்க்கணும்னு தீர்மானிச்சி, அதை செயல் படுத்த ஆரம்பிச்சார். அதுதான் முதல் விதை.''
ஐம்பது ஆண்டுகளுக்கு முன், அன்றைய தலைமை வனப்பாதுகாவலர் கிருஷ்ணசாமியால் அடையாளம் காணப்பட்ட அந்தத் தேக்கு மரம், இப்பொழுதும் நீடாமங்கலத்தில் நின்று கொண்டிருக்கிறது. அன்றைக்கே அது நூறு வயது மரம். தற்போது சுமார் 150 வயதாக விட்ட அந்த மரத்தை கண்ணும் கருத்துமாக வனத்துறை பாதுகாத்து வருகிறது.

வனத்துறை தொல்லை தருகிறதா?
'தேக்கு வளர்க்கலாம். ஆனா, அதை வெட்டி விக்கறதுக்குள்ள வனத்துறைகிட்ட மாட்டிக்கிட்டு முழிக்கவேண்டியிருக்கும்' என்று விவசாயிகளின் மத்தியில் ஒரு கருத்து இருக்கிறது. இதைப்பற்றி தஞ்சை மாவட்ட வன அலுவல் துரைசாமி கூறும்போது, ''இது மிக மிக சாதாரண விஷயம். கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து உங்கள் தேக்கு மற்றும் நிலம் பற்றி ஒரு சான்றிதழ் பெற்று வனத்துறையிடம் கொடுத்தால், அதிகபட்சம் 10 நாட்களுக்குள்ளாக மரம் வெட்டுவதற்கான அனுமதி கொடுக்கப்பட்டுவிடும். நீங்கள் மரம் வெட்டும்போது வனத்துறையினர் மேற்பார்வையிடுவார்கள். மற்றபடி வேறு எதிலும் வனத்துறை தலையிடுவதில்லை'' என்றார்.

No comments:

Post a Comment