Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, October 21, 2013

முத்துப்பேட்டை அலையாத்திக் காடு

முத்துப்பேட்டைக் காத்துக்கு,காசு கொடுக்கும் சுவிட்சர்லாந்து!"
காட்டு வாழ்க்கை பேசும் ஜனநாதன்
'சினிமா' என்கிற பலமான ஊடகத்தை 'சமூகப் பார்வை' என்கிற கண்ணாடி கொண்டு பார்ப்பவர்கள் மிகமிகக் குறைவு. அருகிக் கிடக்கும் அத்தகையக் கூட்டத்தில், எளிதில் அடையாளம் கண்டுகொள்ளப்படக் கூடியவர் ஜனநாதன். 'இயற்கை' மற்றும் 'ஈ' என்று இரண்டு படங்களை இதுவரை இயக்கியிருக்கும் ஜனநாதனின் சமூக அக்கறையை 'ஈ' படத்தின் வாயிலாக நன்றாகவே உணர முடியும். கதைகளுக்காக வித்தியாசமான களங்களைத் தேடித் திரிவதில் ஆர்வம் கொண்ட ஜனநாதன், 'பேராண்மை' என்கிற படத்தை தற்போது இயக்கிக் கொண்டிருக்கிறார். இப்படத்தின் களம் (பேக்டிராப்).... காடு! இதற்காக தென்னகத்தின் பல்வேறு காடுகளை வலம் வந்ததினால், கிட்டத்தட்ட காடுகளின் காதலனாகவே மாறிப் போயிருக்கிறார் மனிதர்.
பொதுவாக சினிமாக்காரர்களிடம் பேச்சுக் கொடுத்தால், தான் எடுத்துக் கொண்டி ருக்கும் படங்களைப் பற்றித்தான் அதிகம் பிரஸ்தாபிப்பார்கள்... ஜனநாதனோ தன்னு டைய கதைக் களமான காடுகளைப் பற்றியே மணிக்கணக்கில் நம்மிடம் கதைத்தார்.
''சினிமானாலே... ஹீரோவோட வீடு, ஹீரோயினோட பிரமாண்ட வீடு, பிட்சா கார்னர், பீச், ரயில்வே ஸ்டேஷன்... இப்படி பல இடங்கள்ல படமாக்க வேண்டி வரும். ஆனா, அதுல எனக்கு விருப்பமில்லை. ஒரே மாதிரியான இடத்துலயே காட்சிகளைப் படமாக்குற சூழ்நிலையைத் தவிர்க்கணும்னு நினைச்சேன். அதுக்குப் பொருத்தமா 'பேராண்மை' படத்தோட களம், காடுனு ஆகிப் போச்சி. அதனால வித்தியாசமான காடுகளைத் தேடிப் போக வேண்டியதாயிடுச்சி. அப்பதான்... 'காட்டை விட்டு நாம எவ்வளவு தூரம் விலகி வந்துட்டோம்'ங்கிறது பொட்டுல அடிச்ச மாதிரி உறைச்சுது. மூங்கில் காடு, மேங்கோவ் காடு, ஃபைன் மரக் காடு, சமவெளி, ஏரி, ஆறுனு ஒவ்வொரு நாளும் வித்தியாசமான அனுபவம்தான்'' என்று சொன்ன ஜனநாதன், காடுகளைப் பற்றிய அற்புதமான விஷயங்களைப் பட்டியலிட்டார்.
''கேரளாவுல 400 ஆண்டுகள் பழமையான தேக்கு மரம் இருக்கு. அந்த இடத்துல படப்பிடிப்பைத் தொடங்கலாம்னு நெனைச்சேன். அந்த சந்தர்ப்பத்துல, 'திருநெல்வேலி மாவட்டம் ஆத்தூர்ல இருந்து திருச்செந்தூர் போற வழியில கொற்கைங்கற இடத்துல ரெண்டா யிரம் ஆண்டு பழமையான வன்னி மரம் இருக்கு'னு ஒரு தகவல் கிடைச்சிது. அந்த மரம் இருக்கும், தாமிரபரணி ஆற்றுப்படுகையில 'சொரிமுத்து அய்யனார்' கோயில்லதான் படத்தைத் தொடங்கினோம்.
திருப்பதி பக்கத்துல 60 கிலோ மீட்டர் தொலைவுல 'தலக்கோணம்'னு ஒரு இடம். அங்க 300 வருஷத்து திம்ம மரம் இருக்கு. அதோட வேர், 5 கிலோ மீட்டர் தூரம் வரைக்கும் பரவிக் கிடக்குது. இதையெல்லாம் பார்த்த பிறகு, இயற்கை மேல இருந்த பிரமிப்பு இன்னும் கூடிப்போச்சி.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை கடற்கரையோர சதுப்பு நிலத்துல அலையாத்திக் காடு பரவிக்கிடக்கு. இதுக்குள்ள ஆயிரமாயிரம் அற்புதங்கள் புதைஞ்சி கிடக்கு. கிட்டத்தட்ட ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வெளவால்கள் அங்க இருக்கு. அப்பப்பா... 'குபீர்'னு அதெல்லாம் பறந்து போறத பார்க்கறதே ரொம்ப திகிலான அனுபவம். இந்த இடத்துல இதுவரைக்கும் யாரும் படப்பிடிப்பு நடத்தினதில்ல. நாங்கதான் முதல் ஆள்.
கடல் அலையை ஆற்றுப் படுத்துறதாலதான் அந்தக் காட்டுக்கே அலையாத்தி காடுனு பேரு. சுனாமி தாக்குதல் நடந்தப்பகூட முத்துப்பேட்டை பாதிப்பு அடையல. அதுக்குக் காரணமே இந்த காடுங்க தான். இதைப் பாதுகாக்க, சுவிட்சர்லாந்து நாட்டுல இருந்து நிதி உதவி வருது. முத்துப்பேட்டைக்கும் சுவிட்சர்லாந்துக்கும் என்ன சம்பந்தம்? இந்தக் காட்டுல உற்பத்தியாகிற ஆக்ஸிஜன், பூமியோட சுழற்சி காரணமா அந்த நாட்டு காற்று மண்ட லத்துல கிடைக்குதாம். மிகப்பெரிய ஆக்ஸிஜன் தொழிற்சாலையா செயல்பட்டு தங்களோட நாட்டுக்கு உதவறதால... இந்த காடுகளைகாப் பாத்தறதுல சுவிட்சர்லாந்து அக்கறை காட்டுது. ஆனா, உள்ளூர்ல அந்தக்காத்தை சுவாசிச்சிக் கிட்டிருக்க எத்தனை பேருக்கு இதுல அக்கறை இருக்கு?'' என்று விரக்தி கேள்வி எழுப்பியவர்,
''இயற்கை அதன் போக்குல அநேக ரகசியங் களை ஒளிச்சி வெச்சிருக்கு. அதைப் பத்தியெல் லாம் தெரிஞ்சிக்க முயற்சிக்கறதை விட்டுட்டு, இயற்கையை அழிக்கறதுலயும் அதை எதிர்த்துப் போராடுறதுலயுமே காலத்தைக் கழிக்கிறான் மனிதன். நாமளே இயற்கையின் படைப்பு. அப்படி இருக்கும்போது இயற்கைக்கு எதிரா போராடுறது, நுனி மரத்துல உட்கார்ந்துகிட்டு அடி மரத்தை வெட்டுற கதையாத்தான் இருக்கும்.
இவ்வளவு அறிவியல் முன்னேற்றம் அடைஞ்சும் காடுகளோட அருமையை நாம புரிஞ்சுக்கல. ஆனா, அந்தக் காலத்துலயே நம்ம சித்தர்கள் காடுகளைப் பத்தி ரொம்ப நல்லாவே புரிஞ்சி வெச்சிருந்தாங்க. காடுகள்ல இருக்கற மூலிகைகளை பயன்படுத்தி மருத்துவம் மட்டும் இல்லாம, வேறு பல காரியங்களையும் செஞ்சிருக்காங்க. இதையெல்லாம் வெள்ளைக்காரங்க நல்லாவே தெரிஞ்சி வெச்சிருக்காங்க. நூறு வருஷத்துக்கு முன்ன அயர்லாந்து நாட்டு எழுத்தாளர் பிராம் ஸ்டாக்கர் எழுதின ட்ராகுலா (Dracula) நாவல்ல, 'நீ என்ன தமிழ் சித்தர் மாதிரி பேசற'னு ஒரு உரையாடல் வர்றதுல இருந்தே இதைப் புரிஞ்சிக்கலாம்.
உரம், பூச்சிக்கொல்லி எதையும் பார்க்காத கன்னித் தன்மை நிறைஞ்ச காடுங்க (Virgin forest) நிறையவே இருக்கு. விலங்கெல்லாம் தன் போக்குல வாழுற பூமி அது. அங்க நிறைஞ்சிருக்கற பொக்கிஷங் களைப் புரிஞ்சக்கவே கோடி, கோடி வருஷம் தேவைப்படும். அங்க இருக்கற ஒருவித மூலிகையை உடம்புல தடவிக்கிட்டு, அந்த இடத்துல கண்ணாடியால கீறினா.. சின்னக் கீறல் கூட விழாது. அந்த அளவுக்கு அற்புத மூலிகை அது. 'கம்யூனிச இலை'னு ஒண்ணு இருக்கு. அதை ஷு மேல தேய்ச்சிக்கிட்டு நடந்து போனா... அட்டைப்பூச்சி, பூரான் மாதிரியான எந்த பூச்சியும் கடிக்காது. அந்த மூலிகையை தடவிக் கிட்டுதான் படப்பிடிப்பையே நடத்தினோம். 'திராவிடச்செடி'னு ஒரு செடிக்கு பேர் சொல்றாங்க. அழிக்க அழிக்க வளர்ந்துகிட்டே இருக்கறதால இப்படியரு பேர்!'' என்றெல்லாம் நெகிழ்ச்சியின் உச்சக்கட்டத்தில் விவரித்த ஜனநாதன்,
''கேரளாவுல இரானிங்கற வனப்பகுதியில படப்பிடிப்பு நடத்தினது மறக்க முடியாத அனுபவம். அந்தப் பகுதி வனத்துறை அதிகாரி ராதாகிருஷ்ணன் நிறைய உதவி செஞ்சார். நம்ம நாட்டோட வனச் செல்வங்களைப் பாதுக்காக்கணும்கிற உணர்வோட நிறைய விஷயங்களை எங்களுக்கு புரியவெச்சார். அங்கதான் மனுஷனுக்கும் விலங்குகளுக்குமான தோழமையைப் புரிஞ்சிக்கிட்டோம். அங்க கிட்டத்தட்ட 50 புலிகள் வாழ்ந்துகிட்டிருக்கு. ஆனாலும், அந்த மக்கள் தினமும் காட்டுக்குள்ள போய் வந்துக்கிட்டுதான் இருக்காங்க. அவங்களால புலிக்கோ... புலிகளால அவங்களுக்கோ எந்தப் பிரச்னையும் இல்ல. வன வாழ்க்கையில் மனிதனுக்கும் விலங்குகளுக்கும் தோழமையான சூழல் இருக்கறது எங்கள சிலிர்க்க வெச்சிடுச்சி. இந்த உணர்வை உலகம் பூராவுமே வளர்த்தெடுக்க வேண்டிய கட்டாயத்தை நவீன வாழ்க்கை உருவாக்கிடுச்சி. நாமெல்லாம் காடுகளை நேசிக்க ஆரம்பிக்கணும்கிறது காலத்தின் கட்டாயம்'' என்று புள்ளி வைத்து முடித்தார்.
என்ன ஒரு அழகான நாடு!
தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் 'பேராண்மை' படத்தைப் பற்றி கேட்டபோது, ''தமிழில் காப்பு செய்யுள் (இறை வணக்கப் பாடல்) பாடறது மாதிரிதான் முதல் படத்துக்கு 'இயற்கை'னு பேரை வெச்சேன். அது எந்த மாதிரியான கதைக்கும் பொருந்துற தலைப்புதான்'' என்று சொல்லிச் சிரித்தவர்,
''புறத்தை வெல்வது மட்டுமல்ல, அகத்தையும் வெல் வதுதான் பேராண்மை. அதைத்தான் இப்ப எடுத்துக் கிட்டிருக்கற படத்துக்கு தலைப்பா வெச்சிருக்கேன். தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களோட வாழ்க்கை ரொம்ப ரொம்ப பரிதாபம். அப்படியரு தொழிலாளியான மலையக பழங்குடியின் மகனா பிறந்து, வனத்துறை அதிகாரியா வேலை பார்க்கற மண்ணின் மைந்தன் நடத்துற போரட்டம்தான் 'பேராண்மை'.
கதாநாயகனா நடிக்கும் 'ஜெயம்' ரவி, உடம்பில் கொழுப்பே இல்லாத மலைப்பகுதி இளைஞன் தோற்றத்துக்கு வரணும்கிறதுக்காக ஒரு வருஷமா அரிசிச் சோறே சாப்பிடலை.
இதுல 'மிஸ்டர் யுனிவர்ஸ்' ரோலண்டு கிக்கிங்கர், வில்லனா நடிக்கிறார். ஹாலிவுட் நடிகரான அவர், நம்ம காட்டோட அழகைப் பார்த்து பிரமிச்சிப் போயி, 'என்ன ஒரு அழகான நாடு?'னு சொல்லி கண் கலங்கிட்டார்'' என்று துளித்துளியாக சில செய்தி களை சிதறவிட்டார் ஜனநாதன்.
இவருடைய பூர்வீகம் தஞ்சாவூர் மாவட்டம், வடசேரி. ஆனால், பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னையில்தான். இன்னமும் வாடகை வீட்டில் வசித்துவரும் இவர், கார்ல் மார்க்ஸ் மற்றும் தன் தாயார் பார்வதி ஆகியோரின் படங்களை மட்டுமே வீட்டில் மாட்டி வைத்திருக்கிறார். எடிட்டர் பி.லெனின் பட்டறையில் பல ஆண்டுகள் பணிபுரிந்திருக்கும் ஜனநாதன், திரைப்பட இயக்குநராக வேண்டும் என்றெல்லாம் ஒரு நாளும் நினைத்ததில்லை என்கிறார்.
"சின்ன வயசுலயே அப்பாவை இழந்தாச்சி. அம்மாதான் வளர்த்தாங்க. மயிலாப்பூர்ல பட்டாணிக் கடை. அப்புத் தெருவுல வீடு. அண்ணன், தம்பி 5 பேர்... ஒரு அக்கா ஒரு தங்கை. எல்லாருக்கும் திருமணம் முடிஞ்சி, என்னோட ரவுண்ட் வர லேட்டாயிடுச்சி. அதனால கல்யாணம் பண்ணிக்க வாய்ப்பில்லாம போயிடுச்சி. மத்தபடி திருமணத்துல வெறுப்பெல்லாம் கிடையாது" என்கிறார் படுஇயல்பாக.


Thanks to Vikatan-2009

No comments:

Post a Comment