Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday, October 20, 2013

நவீன தொழில்நுட்பங்கள்


தொழிற்சாலை கழிவுநீர்: பல்வேறு தொழிற்சாலைகளிலிருந்து ஏராளமான அளவில் கழிவுநீர் வெளியேறுகிறது. இந்தியாவிலுள்ள தோல் பதனிடும் தொழிலகங்களில் 60 சதம் தமிழகத்தில் உள்ளது. இவற்றில் ஒரு கிலோ பதப்படுத்தப்பட்ட தோல் பெறுவதற்கு சுமார் 35 லிட்டர் நீர் பயன்படுத்தப்படுகிறது. இதனால் ஏறக்குறைய 30 முதல் 32 லிட்டர் வரை கழிவு நீராக வெளியேறுகிறது. இந்தியாவில் ஒரு நாளைக்கு சுமார் 640 மில்லியன் லிட்டர் கழிவுநீர் இந்த தொழிற்சாலை கழிவிலிருந்து வெளியேற்றப்படுகிறது.

இந்தியாவில் 579 சர்க்கரை ஆலைகளும், 285க்கும் மேற்பட்ட வடிப்பாலைகளும் உள்ளன. தற்போது வடிப்பாலைகளின் மூலம் மட்டும் ஆண்டொன்றிற்கு சுமார் 40.7 மில்லியன் கனமீட்டர் அளவிலான வடிப்பாலை கழிவுநீர் உற்பத்தியாகிறது. தமிழகத்திலுள்ள பத்தொன்பதுக்கும் அதிகமான வடிப்பாலைகளின் மூலம் ஆண்டுக்கு 3178.5 மில்லியன் லிட்டர் கழிவுநீர் வெளியேற்றப்படுகிறது.
நம் நாட்டில் 700க்கும் மேற்பட்ட காகித ஆலைகள் இயங்கி வருகின்றன. ஒரு டன் காகிதம் தயாரிக்க சுமார் 2,50,000முதல் 4,00,000 லிட்டர் நீர் தேவைப்படுகிறது. ஆண்டொன்றுக்கு சுமார் 696 மில்லியன் கனமீட்டர் கழிவுநீர் உற்பத்தியாகிறது.
திருப்பூர் பகுதிகளில் இயங்கும் சாயப்பட்டறை கழிவிலிருந்து தினந்தோறும் சுமார் 75 முதல் 100 மில்லியன் லிட்டர் கழிவுநீர் வெளியேற்றப்படுகிறது.
இத்தகைய தொழிலக கழிவுநீர் பெரும்பாலும் நிலத்திலும், ஆறு குளங்களிலும் விடப்பட்டு நிலத்தையும் நிலத்தடி நீரையும் மாசுபடுத்துகிறது. இதனால் வேளாண் விளைநிலங்களின் மண்வளம் குன்றி பயிர்விளைச்சல் பெரிதும் பாதிக்கப்படுகிறது.
கழிவுநீரைத் தூய்மைப்படுத்துதல்: வேளாண்மைப் பல்கலைக்கழகம் சமீப ஆய்வில் கோயம்புத்தூரில் உள்ள 12 குளங்களில் தொழிற்சாலை நகரக் கழிவுகளில் உள்ள காரீயம், குரோமியம், தாமிரம், கேட்மியம், இரும்பு, நிக்கல், துத்தநாகம் போன்ற கன உலோகங்களால் பெரிதும் பாதிக்கப்பட்டுளளன என்பது கண்டறியப்பட்டுள்ளது.
தோல் பதனிடும் தொழிலாளர்கள் நிறைந்த வேலூர் மாவட்டம் ஏறக்குறைய 85 சதவீதத்திற்கு மேல் நிலத்தடி நீர் குரோமியம் என்னும் நச்சு உலோகத்தால் மாசுபட்டுள்ளன.
திருப்பூர், ஈரோடு, கரூர், கோயம்புத்தூர் மாவட்டங்களிலும் சாயப்பட்டறை கழிவு நீரால் ஆயிரக்கணக்கில் கிணறுகள் மாசுபட்டு, அக்கிணற்றுநீர் குடிப்பதற்கும் பாசனத்திற்கும் பயன்படாத வண்ணம் காணப்படுகிறது. நொய்யல்ஆறு இன்று மாசுபட்டு தொழிலகக் கழிவுநீரையே பெரும்பாலும் கொண்டு செல்கிறது.
தொழிலகக் கழிவுநீரை தூய்மையாக்க பல்வேறு உயரிய ரசாயன தொழில்நுட்பங்கள் உள்ளன. தாவரப்படுக்கை முறையில் கழிவுநீர் தூய்மையாக்கும் தொழில்நுட்பம் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. எளிதாகக் கிடைக்கும் சரளை, மணல், மண் போன்ற பொருட்களுடன் "வெர்மிகுனைட்' என்னும் கனிமம் அல்லது பயோசார் என்னும் உயரிய கரிமத்துகள்களை ஒருங்கிணைத்து நாணற்புற்கள் கொண்டு தாவரப்படுகை அமைத்து கழிவுநீரை தூய்மையாக்கலாம். இந்தமுறையில் கன உல÷ாகங்கள், சோடியம் போன்ற உப்புக்களைக் கழிவு நீரிலிருந்து நீக்குவதோடு கழிவுநீரில் உயிரிய ஆக்சிஜன் தேவை, ரசாயன ஆக்சிஜன் தேவை போன்றவை 85 முதல் 90 சதம் வரை குறைக்க இயலும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
ஆகாயத்தாமரை போன்ற தாவரங்கள் மாசுபட்ட நீர் நிலைகளிலிருந்து அதிகளவில் கன உலோகங்களையும் பாஸ்பரஸ், நைட்ரேட் உப்புக்களையும் உறிஞ்சி எடுத்துக் கொள்ளக்கூடியவை. சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கேற்ற கழிவுநீரை தூய்மைப்படுத்தும் முறைகளைப் பயன்படுத்தி கழிவுநீரை தூய்மைப்படுத்துதல் மூலம் சுற்றுச்சூழல் மாசுபடுவது தவிர்க்கப்படுவதோடு தூய்மைப்படுத்தப்பட்ட கழிவுநீரை பாசனத்திற்கு திறம்பட பயன்படுத்த முடியும். (தகவல்: முனைவர் கு.ராமசாமி, துணைவேந்தர், த.வே.பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-641 003)
-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.

No comments:

Post a Comment