தேனீ வளர்ப்பு பகுதி-2தமிழ் நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக வேளாண் இணைய தளம் தரும் விபரங்களை கீழே காண்க!


தேனீக்களைத் தாக்கும் பூச்சிகள் மற்றும் நோய்கள்
தேனீக்களின் எதிரிகள்:
1.மெழுகு அந்திப் பூச்சி:
தேனீக்களின் மிக முக்கியமான எதிரிப் பூச்சி மெழுகு அந்திப் பூச்சியாகும். இப்பூச்சியின் தாக்குதல் இந்தியத் தேனீ இனங்களில் சமவெளிப் பகுதிகளில் கோடை காலங்களிலும் மழை காலங்களிலும் அதிகம் காணப்படுகின்றது. மலைப் பகுதிகளில் இதன் தாக்குதல் குறைவு. இதன் தாக்குதல் வலுக் குன்றிய கூட்டங்களிலும் பழைய அடைகளிலும் கூடுதலாகக் காணப்படும். புழு அடைகள் அதிகம் தாக்கப்படுகின்றன. சில நேரங்களில் சேமிக்கப்பட்டுள்ள அடைகளிலும் இதன் தாக்குதல் காணப்படும். உணவு வரத்து குறைவுபடும் பொழுது இதன் தாக்குதல் தலை தூக்கும். ராணியில்லாத கூட்டம் செயல்திறன் குறைவான அல்லது வயதான ராணி தலைமை தாங்கும் கூட்டம், நோயுற்று ஓடிய கூட்டம், பூச்சிக் கொல்லியினால் பாதிக்கப்பட்ட கூட்டம் ஆகியவற்றில் இப்புழுவினால் பெருத்த சேதம் ஏற்படுகின்றது.
Wax moth

அறிகுறிகள்:
 • தேனீக்கள் இல்லாத அல்லது முற்றிலும் சூழப்படாத அடைகளில் தாக்குதல் துவங்கும்
 • தாக்குதலின் துவக்கத்தில் ஒரு சில அடை அறைகள் வெள்ளை நிறப்பட்டு நூலால் மூடப்பட்டு இருக்கும் (படம் 36)
 • அடைப்பரப்பின் மேல் மெல்லிய பட்டு நூலினால் ஆன நூலாம் படை போன்ற வலைப் பின்னல் குறுக்கிலும் நெடுக்கிலும் காணப்படும்
 • அடைப்பரப்பில் புழுவின் கருப்பு நிறக் கழிவுத் துகள்கள் காணப்படும்
 • தாக்கப்பட்ட அடைகளில் ராணித் தேனீ முட்டையிடாது
 • தாக்கப்பட்ட அடைகள் ஒன்றோடு ஒன்று பிணைக்கப்பட்டு இருக்கும்
 • தேனீக்கள் சூழப்படாத அடைகள் புழுவின் தாக்குதலால் முற்றிலுமாக அழியும்
 • சில சமயங்களில் கூட்டுபு்புழு உள்ள அடை அறைகளின் மெழுகு மூடிகள் நீக்கப்பட்டு இருக்கும். அத்தகைய கூட்டுப் புழுக்களை எடுத்துப் பார்த்தால் அவற்றின் வயிற்றில் மெழுகுப் புழுவின் கருப்பு நிறக் கழிவுத் துகல்கள் காணப்படும்
 • சில நேரங்களில் திறந்த புழு அறைகளில் முழு வளர்ச்சியடையாத தேனீக்கள் பட்டுப் பின்னலுக்குள் சிக்குண்டு வெளிவர இயலாது இறந்து இருக்கும்
 • முற்றிலும் நாசம் செய்யப்பட்ட அடையில் பட்டுப் பின்னலும் புழுக் கழிவும் மட்டுமே எஞ்சி இருக்கும் (படம் 37)
 • சிதைக்கப்பட்ட அடைகளிலிருந்து ஒரு விதக் கெட்ட நாற்றம் வெளிப்படும்
 • அடைச் சட்டங்களிளோ பெட்டியின் உட்சுவரிலோ அல்லது உள் மூடியினுள்ளோ கூட்டம் கூட்டமாகக் கூட்டுப் புழுக்கள் பட்டுக் கூட்டினுள் இருக்கும்
 • தேனீக்கள் காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் சுறுசுறுப்பின்றி இருக்கும்
 • பெட்டியின் ஏதாவது ஒரு மூலையில் பணித் தேனீக்கள் கூட்டமாகக் காணப்படும்
 • இறுதியில் தேனீக் கூட்டங்கள் பெட்டியை விட்டு ஓடிவிடும்
வாழ்க்கை ரகசியம்:
ஆண் அந்திப் பூச்சிகள் அளவில் சிறியவை அவற்றின் மேல் இறக்கைகளின் வெளி ஓரங்கள் சற்று உள்நோக்கி வளைந்து இருக்கும். பெண் அந்திப் பூச்சிகள் அளவில் பெரியவை. அவற்றின் மேல் இறக்கைகளின் வெளி ஓரங்கள் உள் நோக்கி வளைந்து இருக்காது. பறக்காத ஓரங்களில் இறக்கைகள் அந்திப் பூச்சியின் உடலைக் கூரை போல் மூடி இருக்கும் (படம் 38)
பெண் அந்திப் பூச்சிகள் பகல் நேரத்தில் பெட்டியினுள் மறவைான இடங்களில் பதுங்கி இருக்கும். அந்திப் பூச்சிகள் அந்திப் பொழுதிலும், இரவு நேரங்களிலும் சுறுசுறுப்பாக இயங்கி இறக்கைகளை அடித்துக் கொண்டு முட்டையிடும். முட்டைகளைச் சிறு குவியல்களாக மறைவாகக் காண இயலாத இடங்களிலும் தேனீக்களால் எடுத்து எறிய இயலாத இடங்களிலும் இடும். குறிப்பாகப் பெட்டிப் பகுதிகளுக்கு இடையிலும் பலகை இடுக்குகளிலும், வெடிப்புகளிலும், சட்டங்களின் மூலைகளிலும் முட்டைகளை இடும் (படம் 39). இதனால் ரோந்துப் பணி செய்யும் தேனீக்களால் இம்முட்டைகளை நீக்க இயலாது.
புதிதாகப் பொரிந்து வந்த புழுக்கள் ஒரு மி.மீ நீளம் இருக்கும். புழுக்களின் முதல் உணவு மதுரம், தேன் மற்றும் மகரந்தம் ஆகும். இளம் புழுக்கள் அடிப்பலகையில் விழும் மெழுகு மற்றும் மகரந்தத் தூளை உண்டு வாழும். பழைய அடை அறைகளில் இருக்கும் புழு மற்றும் விரும்பி உண்ணும். தோல்கள் மற்றும் எஞ்சிய கழிவுகளைப் புழுக்கள் விரும்பி உண்ணும். தேன் மற்றும் மகரந்தம் கிடைக்காத பொழுது மெழுகுப் புழுக்கள் தேனீக்களின் வளர்ச்சி நிலைகளையும் உண்ணும். பின்னர் தேனீக்கள் குறைவாக உள்ள அடைகளின் ஓரப் பகுதியைத் தாக்க ஆரம்பிக்கும் புழுக்கள் குறிப்பாக அடை அறைகளின் நடுசு் சுவரைத் துளைத்துச் சென்று அடையின் மையப் பகுதியை நூலால் ஆன கூட்டை அமைத்துக் கொள்வதால் தேனீக்களின் தாக்குதலிலிருந்தும் கொட்டிலிருந்தும் தப்பித்துக் கொள்கின்றன. ஒரு மாதத்தில் முழு வளர்ச்சி அடைந்த புழுக்கள் உருளை வடிவில் பருமனாகவும் 25 மி.மீ நீளமுடனும் இருக்கும். இவை சட்டங்களைச் சிறிது சுரண்டிப் பின்னர் சுரண்டப்பட்ட இடங்களில் கூட்டம் கூட்டமாகப் பட்டுக் கூடுகளை, உறுதியாக அனைத்து கூட்டுப்புழுவாக மாறும் (படம் 40). இது போன்ற பட்டுக் கூடுகளின் தொகுதிகள் தேனீப் பெட்டியின் உட்சுவர்களிலோ உள் மூடியிலோ சட்டங்களிலோ அல்லது அடிப் பலகையிலோ காணப்படும். கூட்டுப் புழுக்கள் ஒரு வாரத்தில் முழு வளர்ச்சியடைந்த அந்திப் பூச்சிகளாக மாறும்.
வெற்றி கொள்ளும் வழி முறைகள்:
தேனீ வளர்ப்போர் முற்றிலுமாக மெழுகு அந்திப் பூச்சியை வெற்றி கொள்ள இயலாது. ஆனால் அதே சமயத்தில் தேனீக்கள் பாடுபட்டுக் கட்டிய அடைகளை மெழுகு அந்திப் பூச்சியின் தாக்குதலிலிருந்து அவசியம் கீழ்க்கண்ட முறைகளைப் பின்பற்றிக் காக்கலாம்
 • கூட்டங்களை வலுவான நிலையில் வைத்து இருப்பது அவசியம். வலுவான கூட்டங்கள் மெழுகு அந்திப் பூச்சியின் புழுக்களைப் பெருக விடாது தடுத்துக் கட்டுக்குள் வைக்கின்றன
 • தேனீக்களால் சூழப்படாத அதிகப்படியான காலி அடைகளை எடுத்துவிட்டுத் தடுப்பு பலகையைக் கொண்டு தேனீக்களைக் குறுகிய பகுதியில் கட்டுப்படுத்த வேண்டும்
 • தேனீப் பெட்டிகளைச் சந்துகள், இடுக்குகள், இல்லாமல் உரிய அளவு தேனீ இடைவெளி கொடுத்து முறையாக வடிவமைக்க வேண்டும்
 • தேனீப் பெட்டியில் உள்ள சிறுசிறு பிளவுகளை மக்கு கொண்டு அமைத்து விட வேண்டும்
 • அடிப்பலகையை வாரம் ஒரு முறையாவது சுத்தம் செய்ய வேண்டும். அடிப்பலகை மற்றும் பெட்டியின் பிற பகுதிகளில் காணப்படும் முட்டைக் குவியல் இளம் புழுக்கள் ஆகியவற்றை தேடி அழிக்க வேண்டும்
 • உதிரி அடைகளை அவ்வப்பொழுது நீக்கி விட வேண்டும்
 • தாக்கப்பட்ட அடைகளைத் தேனீக்களை நீக்கியபின்னர் சிறிது நேரம் இளம் வெய்யிலில் வைப்பதால் வெளியேறும் புழுக்களை நசுக்கிக் கொன்று விடலாம். அதிக நேரம் அடைகளை வெய்யிலில் வைத்தால் அடைகள் உருகி விடும்
 • புழு தாக்கிய அடைகளை ஒரு வலுவான கூட்டததிற்குள் கொடுத்தால் தேனீக்கள் அந்திப்பூச்சியின் புழுக்களை நீக்கி அடைகளைச் சுத்தம் செய்து விடும்
 • புழுக்களால் அதிகம் சேதப்படுத்தப்பட்ட அடைகளைத் தூக்கி வெளியில் எறிவது தடையற்ற புழுப் பெருக்கத்திற்கு வழி வகுக்கும். எனவே இத்தகைய பயனற்ற அடைகளை உருக்கி மெழுகு காய்ச்சி விட வேண்டும் அல்லது குழி தோண்டிப் புதைத்து விட வேண்டும்
 • காலித் தேன் அடைகளை ஒரு பெரிய பாலித்தீன் பைக்குள் காற்றுப் புகாதவாறு சேமித்து வைக்கலாம்
 • காலித் தேன் அடைகளைப் போதிய வெளிச்சம் மற்றும் காற்றோட்டம் உள்ள எலித்தொந்தரவு இல்லாத இடத்தில் தேன் அறைகளில் திறந்த நிலையில் தொங்க விட்டு சேமிக்கலாம்
2. எறும்புகள்:
கோடை காலங்களிலும் மழைக் காலங்களிலும் எறும்புகளின் தாக்குதல் சமவெளிப் பகுதியில் கூடுதலாகத் தென்படும். இவை தேனீக்களைப் போல சமூதாய வாழ்க்கை நடத்துகின்றன. தேனீக்களுக்கு அதிகம் தொல்லை கொடுக்கும் எறும்பு இனங்கள் கட்டெறும்பு, சிகப்பு எறும்பு மற்றும் சுளுக்கை எனப்படும் கொட்டும் எறும்புகளாகும்.
Ant infestation in the hive
கட்டெறும்புகள்: கட்டெறும்புகள் உருவில் பெரியவை. கருப்பு நிறத்தில் இருக்கும். இவற்றின் தாடைகள் வலுவானவை இவை நிலத்தின் அடியில் சிறு புற்றுகளில் வாழும்.
சிகப்பு எறும்புகள்: சிகப்பு எறும்புகள் மரக் கிளைகளில் இலைகளை ஒன்று சேர்த்துக் கூடு கட்டி வாழும், இவ்விருவகை எறும்புகளும் வலுக்குன்றிய கூட்டங்களிலிருந்து முட்டை, புழு, கூட்டுப்புழு, தேனீக்கள் (படம் 41) மகரந்தம் மற்றும் தேனை எடுத்துச் செல்கின்றன. எறும்புகளின் தொல்லை அதிகரிக்கும் பொழுது தேனீக்கள் கூட்டை விட்டு ஓடி விடுகின்றன. மேலும் புதிதாகப் பிடித்து வைத்த கூட்டங்களை எறும்புகளிடமிருந்து காக்கத் தவறினாலும் அவை ஓடி விடும்.
தடுப்பு முறைகள்:
 • எறும்புப் புற்றுகளைத் தேடிக் கண்டுபிடித்து அதனுள் பூச்சி மருந்துக் கரைசலை ஊற்றி அழிக்க வேண்டும்
 • எறும்புப் புற்றுகள் அதிகம் இல்லாத இடங்களில் தேனீப் பெட்டிகளை வைத்தல் வேண்டும்
 • தேனீப் பெட்டிகள் வைத்துள்ள தாங்கியபின் கால்கள் ஒவ்வொன்றையும் ஒரு கிண்ணத்தில் வைத்து நீர் அல்லது பயன்படுத்தப்பட்ட இன்ஜின் எண்ணெயை ஊற்றி வைப்பதால் எறும்புகள் ஏற விடாமல் தடுக்கலாம்
 • தாங்கியின் கால்களின் மேல் கிரீஸ் அல்லது கழிவு எண்ணெய் தடவி வைத்தல் வேண்டும்
 • சர்க்கரைப்பாகு கொடுக்கும் சமயங்களில் பாகு கீழே சிந்துவதை தவிர்ப்பதன் மூலம் எறும்புகள் ஈர்க்கப்படுவதைக் குறைக்கலாம்
 1. குளவிகள்:
குளவிகளின் உடலில் ரோமங்கள் இருக்காது. இரு விதமான குளவிகள் தேனீக்களைத் தாக்குகின்றன.
தேனீ பிடிக்கும் குளவி:
பொதுவாக உருவில் சற்று பெரிய தேனீ பிடிக்கும் குளவி மலைரக இந்தியத் தேனீக்களைத் தாக்குகின்றது. மற்றொரு தேனீ பிடிக்கும் குளவி இனம் உருவில் சற்று சிறியது. இவற்றின் உடல் கருப்பு நிறத்தில் மஞ்சள் நிறக் கோடுகளுடன் இருக்கும். இதனை ஈப்புலி என்றும் அழைப்பர். ஒவ்வொரு குளவியும் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு நாள் ஒன்றுக்கு 20 தேனீக்களைப் பிடித்துச் செல்கின்றது. குளவிகளின் தாக்குதலுக்கு இலக்கான கூட்டங்கள் தங்களின் நேரத்தைத் தற்காப்பிற்காக அதிகம் செலவிடுவதால் அவைகளின் செயல் திறன் மிகவும் குறைகின்றது. தேனீக்களை இக்குளவி தன் கொடுக்கால் கொட்டி செயல் இழக்கச் செய்கின்றது. நிலத்தின் அடியில் இடப்பட்ட துளைகளில் ஒவ்வொரு துளைகளிலும் 4 அல்லது 5 தேனீக்களை சேர்த்து வைத்து ஒரு முட்டையிடுகின்றது. முட்டையிலிருந்து வெளிவரும் குளவியின் புழுக்கள் தேனீக்களை உணவாக உட்கொண்டு வளர்ந்து கூட்டுப் புழுக்களாக மாறிய பின்னர் குளவியாக உருமாற்றம் அடைகின்றன.
கடந்தை அல்லது மஞ்சள் பட்டைக் குளவி:
உருவில் பெரிய பல்வேறு இனங்களைச் சேர்ந்த இக்குளவிகள் கூடி வாழும் இயல்பு உடையவை. இவை காகித்தாலான கூடுகளை மரக்கிளைகளிலோ (படம் 42), சுவர் மீதோ, நிலப் பிளவுகளிலோ அல்லது மரப் பொந்துகளிலோ கட்டுகின்றன. கடந்தையின் வயிற்றுப் பகுதி கரிய நிறத்தில், மஞ்சள் நிறப்பட்டையுடன் காணப்படும். இவை தற்காப்பிற்காகக் கொட்டும் குணம் படைத்தவை. இவை வலுக் குறைந்த கூட்டமுள்ள பெட்டியினுள் நுழைந்து சென்றோ அல்லது பெட்டியின் நுழைவாயில் அருகே அமர்ந்து கொண்டோ, அல்லது பெட்டியைச் சுற்றிப் பறந்து கொண்டோ கூட்டிற்கு உணவு தேடிக் கொண்டு வரும் தேனீக்களைப் பிடிக்கின்றன. இவ்வாறு பிடித்த தேனழுக்களின் தலை, கால்கள், இறக்கைகள் மற்றும் வயிற்றுப் பகுதியைக் கடித்து நீக்கி விட்டு, சதைப் பிடிப்புடன் கூடிய மார்புப் பகுதியை மட்டும் கூட்டிற்கு கொண்டு வந்து வளரும் புழுக்களுக்கு உணவாகத் தருகின்றன. வலுக்குன்றிய கூட்டங்கள் அதிகமாகக் குளவியின் தாக்குதலுக்கு இலக்காகின்றன. வலிமை மிக்க ஒரு இந்தியத் தேனீ கூட்டத்தினுள் ஒரு குளவி நுழைய முற்பட்டால் அச்சமயம் காவல் பணியில் ஈடுபட்டுள்ள பணித் தேனீக்கள் எதிரியின் வரவைக் கூட்டினுள் இருக்கும் பிற பணித் தேனீக்களுக்கு அறிவித்து அவைகளையும் உதவிக்கு அழைக்கின்றன. இதனால் அக்குளவியை 200 முதல் 300 பணித் தேனீக்கள் அரைமணி நேரத்திற்கு பந்து போலச் சுற்றிச் சூழ்ந்து கொள்கின்றன. இதனால் ஏற்படுத்தப்படும் அதிக சூட்டினால் குளவி கொல்லப்படுகின்றன.
Pest and Disease
கட்டுப்படுத்தும் முறைகள்:
 • குளவிக் கூடுகளைத் தேடிக் கண்டு பிடித்து மாலை நேரங்களில் தீப்பந்தம் கொண்டோ அல்லது பூச்சி மருந்து தெளித்தோ அழிக்கலாம்
 • நுழைவு வழியை ஒரு தேனீ மட்டும் வந்து செல்லும் அளவிற்குக் குறைக்க வேண்டும்
 • நுழைவு வழிக்கு அருகே அமர்ந்து குளவிகள் தேனீக்களைப் பிடிக்க இயலாவண்ணம் அடிப்பலகையை மாற்றி அமைக்க வேண்டும்
 • தேனீப் பெட்டி அருகே பறந்து வரும் குளவிகளை அடித்துக் கொள்ளலாம்
 • குளவிப் பொறியினுள் நச்சுணவு வைத்துக் குளவிகளைப் பிடிக்கலாம்
Pest and Disease
 1. வரோவா’ செவ்வுண்ணி:
உண்ணிகள் உருவில் சிறியவை. இவற்றின் உடல் உருண்டையாகக் குண்டூசியின் தலை அளவு இருக்கும். வளர்ந்த செல்வுண்ணிகள் தேனீக்களின் வயிற்றுப் பகுதியின் மேல் இருந்து கொண்டு ரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கின்றன. இளம் பருவத்தில் இவ்வுண்ணிகள், வளர்ச்சியடைந்த புழு மற்றும் கூட்டுப்புழுக்களைத் தாக்கி அவற்றின் ரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கின்றன. இவை இந்தியத் தேனீக்களின் ஆண் தேனீக்களின் புழுக்களை மட்டுமே தாக்குகின்றன. இதனால் கூட்டுப் புழுக்கள் இறக்க நேரிடும் அல்லது தேனீக்கள் வளர்ச்சி குன்றி உருவில் சிறுத்து சிதைவுற்ற இறக்கைகளுடன் பிறக்கும். அடிப்பலகையில் இறந்த உண்ணிகளைக் காணலாம். இவ்வகை செவ்வுண்ணிகளைப் புழு வளர்ப்பு அறைச் சட்டங்களின் மேல் நன்கு பொடி செய்யப்பட்ட கந்தகத் தூளை தூவுவதால் கட்டுபு்படுத்தலாம்.
 1. பல்லி:
பல்லிகள் மேல் மூடியினுள் பதுங்கி இருக்கும். சில நேரங்களில் நுழைவு வழிக்கு அருகில் வந்த தேனீக்களைப் பிடித்து உண்ணும் பல்லிகளைக் காணும் நேரங்களில் அடித்துக் கொல்ல வேண்டும்.
 1. ஓணான்:
ஓணான் நுழைவாயிலிற்கு அருகே மறைந்து இருந்து கொண்டு அருகே வரும் தேனீக்களைப் பிடித்து உண்கின்றன. இவைகளையும் காணும் பொழுதெல்லாம் அடித்துக் கொன்று விட வேண்டும்.
 1. பறவைகள்:
தேனீக்கள் இரு வகைப் பறவைகளால் சில இடங்களில் சில சமயங்களில் மிகவும் பாதிக்கப்படுகின்றன. கோடை மற்றும் பருவ மழை காலங்களில் இவை மிகுதியாகக் காணப்படுகின்றன. தாக்கப்பட்ட கூட்டங்கள் வலுக்குன்றி ஓடி விடுகின்றன.
தேனீ உண்ணும் பச்சைக் குருவி:
இது பச்சை தந்திக் கம்பக் குருவி என்றும் அழைக்கப்படுகின்றது. பறந்து வரும் குருவிகள் அமர்ந்து கொள்ள வசதி உள்ள தேனீப் பண்ணைகளில் இவற்றின் தாக்குதல் கூடுதலாகக் காணப்படும. இவை தந்திக் கம்பிகள் மீது வரிசையாக சிறு சிறு கூட்டமாக அமர்ந்து இருக்கும். பறந்து செல்லும் தேனீக்களை இவை பிடித்து விழுங்குகின்றன. சில நேரங்களில் புணர்ச்சிப் பறப்பிற்காக வெளியில் வரும் ராணித் தேனீக்களைக் கூட இவை பிடித்து விழுங்கி விடுகின்றன.
கருங்குருவி:
இப்பறவை கரிய நிறத்தில் சற்று நீண்ட இறக்கைகளுடன் இருக்கும். இவை மிகவும் சுறுசுறுப்பாகச் செயல்பட்டுப் பறந்து செல்லும் தேனீக்களைப் பிடித்து உண்கின்றன. இவை மிகத் திறமையாகப் பறக்கவல்லவை. பறவைகளை ஓசையெழுப்பித் துரத்தலாம். பறவைத் தொந்தரவு அதிகமாக இருக்கும் காலங்களில் ராணித் தேனீ வளர்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.
 1. கரடி:
கரடிகள் மலைப் பகுதிகளில் தேனீப் பெட்டியைச் சேதப்படுத்தி தேன் அடைகளையும் புழு அடைகளையும் உண்டு அழித்துவிடுகின்றன. இதனால் தேனீக்கூட்டங்கள் அழிய நேரிடும். மின்வேலி அமைப்பதன் மூலமும் தேனீப் பெட்டிகளை மொட்டை மாடியில் வைப்பதன் மூலமும் கரடியினால் ஏற்படும் சேதத்தைத் தவிர்க்கலாம்.
தேனீக்களின் நோய்கள்:
வைரஸ் நோய்:
அந்நியத் தேனீக்களை ஒரு வித நச்சுயிரி (வைரஸ்) நோய் (படம் 43) பெரிதும் பாதிக்கின்றது. இயற்கையாக உள்ள தேனீக் கூட்டங்களிலும் மலை ரக இந்தியத் தேனீக்களிலும் இந்த நோய் தாக்குதல் சற்று குறைவாகக் காணப்படுகின்றது. இந்த நோய் முதன் முதலில் 1976 ஆம் ஆண்டு தாய்லாந்து நாட்டில் காணப்பட்டது. எனவே இந்த நோய் அந்நாட்டுப் பெயரில் ‘தாய்’ சாக்குப் புழு வைரஸ் நோய் என அழைக்கப்படுகின்றது. இந்த நோய் 1991-92 ஆம் ஆண்டுகளில் தென் மாநிலங்களான கேரளா, கர்நாடகா, மற்றும் தமிழ்நாட்டிற்குப் பரவியது. தமிழ்நாட்டில் அச்சமயத்தில் மட்டும் இந்நோயால் இரண்டு இலட்சம் தேனீக் கூட்டங்கள் அழிந்தன. இதனால் தேன் உற்பத்தி பாதியாகக் குறைந்தது. தற்சமயம் இந்த நோய் ஆங்காங்கே காணப்பட்டாலும் நோயின் தீவிரம் பெரிதும் குறைந்துள்ளது. நோயுற்ற கூட்டங்களில் தேன் சேகரிக்கும் திறன் குறைவுபட்டாலும் அவை ஓடுவதில்லை.
அறிகுறிகள்:
 • அடைகளில் புழுக்களின் வளர்ச்சி ஒரே சீராக இருக்காது
 • மெழுகு மூடிகள் சற்று உட்குழிந்து ஓரிரு துளைகளுடன் இருக்கும் (படம் 44)
 • நோயுற்ற புழுக்கள் அடை அறைகளில் கொக்கி போல் வளைந்து இருக்காமல் நிமிர்ந்த நிலையில் இருக்கும் (படம் 45)
 • பொதுவாக நோயுற்று இறந்த புழுக்கள் ஒரு பையினுள் திரவத்தால் சூப்பட்டு இருக்கும். ஆனால் இத்தகைய அறிகுறி எல்லா இடங்களிலும் காணப்படுவதில்லை
 • இறந்த புழுக்களின் உடலிலிருந்து பொதுவாக எவ்விதக் கெட்ட நாற்றமும் வெளிப்படுவதில்லை
 • இறந்த புழுக்களின் தலைப்பகுதி கருப்பாக இருக்கும் (படம் 46)
 • நோய் தீவரமாகும் பொழுது இறந்த புழுக்கள் அடிப்பலகையில் கிடைக்கும்
 • இறந்த புழுக்களின் உடல் உருகத் தொடங்கும் (படம் 46)
 • இறந்த புழுக்களின் உடம்பு பின்னர் வற்றிப் புழுக்கள் முற்றிலுமாக காய்ந்து செதிள்களாக மாறும்
 • இச்செதில்கள் அகலமாகவும், தட்டையாகவும், அறையின் அடியிலோ அல்லது உள் ஓரங்களிலோ ஒட்டிக் கொண்டு இருக்கும் (படம் 45)
 • இச்செதில்களை எளிதாக நீக்கி விட இயலும்
 • புழுக்களின் இறப்பால் தேனீக்களின் பெருக்கம் குறையும்
 • கூட்டத்தின் வலு படிப்படியாக குறையும்
 • பணித் தேனீக்களின் எண்ணிக்கை குறையும். இதனால் அடைப்பகுதிகளை தேனீகு்களால் முற்றிலுமாக மூட இயலாது. இதனால் அடைகள் காயத் தொடங்கும்
 • ராணித் தேனீ சரிவர முட்டையிடாது அல்லது முற்றிலுமாக முட்டையிடுவதை நிறுத்திவிடும்
 • பணித் தேனீக்கள் சுறுசுறுப்பின்றி உள் இருப்பு வேலை நிறுத்தம் மேற்கொள்ளும் இதனால் உணவு சேகரிக்கும் பணி குறைவாகவே நடக்கும்
 • ஓடும் நிலையில் உள்ள கூட்டத்திற்கு புழு அடை கொடுப்பதால் ஓடும் தாபம் மாறுவதில்லை. மாறாகக் கொடுக்கப்பட்ட அடையில் உள்ள புழுக்களும் நோய் தாக்குதலுக்கு இலக்காகும்
 • நோய் தாக்குதல் தீவிரமடையும் பொழுது கூட்டங்கள் போதிய உணவு இருப்பு கூட்டில் உள்ள பொழுதும் கூட்டை விட்டு ஓடி விடுகின்றன. இவ்வாறு ஓடிய கூட்டங்களின் அடைகள் மெழுகுஅந்திப் பூச்சியினால் சேதப்படுத்துகின்றன
 • நோயுற்ற கூட்டத்தில் சில சுபாவ மாற்றங்கள் ஏற்படும். சில கூட்டங்களில் தேனீக்கள் கூடுதலாகக் கொட்டும். அடை ஆய்வு செய்யும் போது அடையில் தேனீக்கள் தங்கள் பணியைச் சரிவரச் செய்யாமல் அங்குமிங்கும் ஓடும் தேனீக்கள் அடையில் புழு வளர்ப்பு நடைபெறும் மையப் பகுதிகளில் தேன் சேமிப்பை மேற்கொள்ளும். தேனீக்கள் மகரந்த சேகரிப்பில் ஆர்வம் காட்டாது சர்க்கரைப் பாகு கொடுத்தாலும் தேனீக்கள் உணவு திரட்டும் பணியில் முனைப்புடன் ஈடுபடாது
நோய் சுழற்சி:
இந்த நோய் குறிப்பாக வளர்ந்த பணித் தேனீக்களின் புழுக்களையே தாக்குகின்றது. இதனால் வளர்ந்த புழுக்களில் இறுதித் தோல் உரிப்பு நடைபெறுவதில்லை. இத்தோல் புழுவைச் சுற்றிலும் ஒரு பை போல அமைகின்றது. இப்பையினுள் தோலுரிக்கும் பொழுது சுரக்கப்படும் தோலுரிப்புத் திரவம் நிறைந்து இருக்கும். இத்திரவம் நிறைந்த பையினுள் புழு இருக்கும். இப்புழுவால் கூட்டுப் புழுவாக உருமாற இயலாது. இத்தகைய புழுக்கள் இறந்துவிடும். இறந்த புழுக்களைப் பணித் தேனீக்கள் வெளியேற்றும் பின்னர் அடை அறைகளைத் தாதித் தேனீக்கள் தூய்மைப்படுத்தும். அப்பொழுது வைரஸ் கிருமிகள் தாதித் தேனீக்களின் உடலினுள் செல்கின்றன. இக்கிருமிகள் அரசக்கூழ் சுரப்பியில் பெருக்கமடைகின்றன. பின்னர் இத்தகைய தாதித் தேனீக்கள் உணவு ஊட்டும் பணியை மேற்கொள்ளும் பொழுது நோயுற்ற புழுக்களிலும் இந்த நோய் பரவுகின்றது. இந்நோய் ஒரு கூட்டத்திலிருந்து பிற கூட்டங்களுக்கு கூடு பரவுகின்றது. இந்நோய் ஒரு கூட்டத்திலிருந்து பிற கூட்டங்களுக்கு கூடு மாறிச் செல்லும் தேனீக்களாலும் கூட்டம் பிரிவதாலும் அடை பரிமாற்றம் செய்வதாலும் நோயுற்ற கூட்டங்களைத் தேன் சேகரிப்பதற்காகப் பிற இடங்களுக்கு எடுத்துச் செல்வதாலும் தேன் திருட்டாலும் பரவுகின்றது. மேலும் இந்நோய் தேன், தேன் எடுக்கும் கருவி, தேன் அறை பரிமாற்றம், மெழுகு மூடி சீவும் கத்தி மூலமாகவும் நோயுற்று ஓடிய தேனீப் பெட்டியில் மீண்டும் கூட்டங்களைப் பிடித்து வைப்பதாலும் பரவுகின்றது.
கட்டுப்படுத்தும் முறைகள்:
 • நோயுற்ற கூட்டங்களைத் தீயிட்டு அழித்து விட வேண்டும்
 • நோய் தாக்கிய கூட்டங்களை பிற இடங்களுக்கு எடுத்துச் செல்லக் கூடாது
 • அடை பரிமாற்றம் செய்தல் கூடாது
 • தேனீப் பெட்டிகளையும் சட்டங்களையும் கொதிக்கும் நீரிலிட்டுத் தூய்மை செய்து பின்னர் வெய்யிலில் காய வைக்க வேண்டும்
 • நோயுற்ற கூட்டத்தின் ராணியைச் சில நாட்கள் ராணிக் கூண்டில் அடைத்து வைப்பதன் மூலமும் ஓரளவு நோய் விரைந்து பரவுவதைத் தடுக்க இயலும்
 • நோய் காணப்படும் இடங்களில் ஒரு சில கூட்டங்களில் மட்டும் இந்நோய் தாக்குதல் காணப்படுவதில்லை. சில கூட்டங்களில் துப்புறவுத் திறன் நோயுற்ற புழுக்களை ஆரம்ப நிலையிலே கண்டறிந்து விரைவாக அவற்றை நீக்க உதவுகின்றது. இத்தகைய கூட்டங்கள் நோயை எதிர்க்கும் அல்லது தாங்கும் வல்லமை உடையவை. எனவே இத்தகைய கூட்டங்களைப் பெருக்கி வளர்க்கலாம்
 • நோயுற்ற இயற்கைக் கூட்டங்களைப் பிடிக்கக் கூடாது
 • முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நோய் தோன்றும் முன்னரே தேனீக் கூட்டங்களுக்கு சர்க்கரைப் பாகுடன் விரலி மஞ்சள் தூள் (5-10 கிராம் மஞ்சள் தூள், 100 கிராம் சர்க்கரை, 100 மில்லி தண்ணீர்) கலந்து கொடுப்பதால் ஓரளவிற்கு நோய் வராது தடுக்கலாம்
Chalk brood disease

தேன் மற்றும் சார்ந்தப் பொருட்களை அறுவடை செய்தல் மற்றும் பதப்படுத்துதல்:
தேனீக்கள் மதுரத்திலிருந்து தேனை உருவாக்குகின்றன. வயல் வெளித் தேனீக்கள் மதுரச் சுரப்பிகளிலிருந்து கசியும் தேனைத் தங்களின் நாக்கினால் நக்கி, உறிஞ்சி அத்துடன் உமிழ் நீரையும் கலந்து தங்களின் தேன் இரைப்பையில் சேர்த்து வைக்கின்றன. உமிழ்நீரில் உள்ள ‘இன்வர்டேஸ்’ என்ற நொதிப் பொருள் மதுரத்தில் உள்ள கரும்புச் சர்க்கரையைத் திராட்சை சர்க்கரையாகவும் பழச் சர்க்கரையாகவும் மாற்றத் தொடங்கின்றது. வயல் வெளித் தேனீக்கள் கூட்டிற்கு வந்ததும் உமிழ்நீர் கலந்த மதுரத்தை இரைப்பையிலிருந்து வாய்வழியே கக்குகின்றன. இதனைக் கூட்டில் உள்ள வீட்டுத் தேனீக்கள் பெற்றுக் கொண்டு பலமுறை தங்களுக்குள் வாய் வழியே பரிமாற்றம் செய்து கொள்கின்றன. இப்பரிமாற்றம் தேனீல் உள்ள நீர் அளவைக் குறைக்க உதவுகின்றது. மேலும் இத்தருணத்தில் கூடுதலாக ‘இன்வர்டேஸ்’ நொதி தேனுடன் சேர்க்கப்படுகின்றது. இறுதியாகத் தேன், தேன் அறைகளில் சேமிக்கப்படுகின்றது. இத்தேன் முதிராத தேன் எனப்படும் (படம் 17). இறக்கைகள் கொண்டு விசிறுதல் மூலமும் தேனில் உள்ள நீர் அளவு மேலும் குறைக்கப்படுகின்றது. இவ்வாறு தேன் இயற்கையாகப் பக்குவப்படுத்தப்பட்டு கெட்டிப்படுத்தப்பட்ட பின்னர் தேன் அறைகள் மெழுகு மூடிகளால் மூடப்படுகின்றன. இத்தகைய மூடப்பட்ட அறைகளில் இருக்கும் தேன் முதிர்ந்த தேன் எனப்படும் (படம் 18).
வகைகள்:
 • தேன் பிரித்து எடுக்கும் கருவி கொண்டு தேன் அடைகளுக்குச் சேதம் ஏற்படாமல் எடுக்கப்படும் தேன் பிரித்தெடுக்கப்படும் தேன் ஆகும்
 • மலைத் தேன்களின் அடைகளைப் பழிந்து கிடைக்கும் தேன் பிழிந்து எடுக்கப்படும் தேன் ஆகும்
 • ஒரே இன மலர்களிலிருந்து எடுக்கப்படும் தேன் ஒரு மலர்த்தேன் ஆகும்
 • பல இன மலர்களிலிருந்து எடுக்கப்படும் தேன் பல மலர்த்தேன் ஆகும்
தேனின் தன்மைகள்:
 • தேனின் நிறம், மணம், கெட்டிம் தன்மை, ருசி மற்றும் அதில் அடங்கியுள்ள பல்வேறு பொருட்களின் அளவு மதுரத்தின் தன்மைக்கு ஏற்ப மாறுபடும்
 • சூரியகாந்தித் தேன் தங்க மஞ்சள் நிறத்தில் இருக்கும் ரப்பர் தேன் அதிகம் கெட்டியாக இருக்காது. வேப்பம் பூத் தேன் சிறிது கசப்புச் சுவையுடன் இருக்கும்
 • தேன் எளிதில் காற்றில் உள்ள ஈரத்தைக் கிரிகித்துக் கொண்டுவிடும். தேனில் உள்ள மகரந்தத்தின் தன்மையைக் கொண்டு தேன் எம்மலரிலிருந்து சேகரிக்கப்பட்டது என அறிய இயலும்
தேனில் உள்ள பொருட்கள்:
வ.எண் பொருள் சதம்
1. நீர் 20.0
2. கரும்புச் சர்க்கரை 5.0
3. பழச் சர்க்கரை 37.0
4. திராட்சைச் சர்க்கரை 34.0
5. தாது உப்புகள் 0.2
6. அங்கக அமிலங்கள் 0.2
7. புரதம் மற்றும் அமினோ அமிலங்கள் 1.5
8. பிற பொருட்கள் 2.0
 • தேனில் நுண் கிருமிகள் வளர இயலாது. தேன் ஒரு சிறந்த பாக்டீரியாக் கொல்லி, தேனில் அதிக அளவு சர்க்கரை இருப்பதாலும் அமிலத்தன்மையுடையதாலும் குளுக்கோஸ் ஆக்சிடேஸ் மற்றும் ஹைட்ரஜன் பெர் ஆக்ஸைடு (இன்ஹபைன்) என்ற இரு நொதிகள் இருப்பதாலும் நுண்ணுயிர்கள் வளர்வதில்லை
தேன் எடுத்தல்:
 • புழு அறையில் உள்ள தேன் அடைகளிலிருந்து தேன் எடுக்கக் கூடாது
 • தேனீக்களுக்குத் தேவையான அளவு தேன் இருப்பு வைத்து விட்டுத்தான் தேன் எடுக்க வேண்டும்
 • கூடுமானவரை தேன் அறைகள் முற்றிலும் மூடப்பட்ட பின்னரே தேன் அடைகளை எடுக்க வேண்டும். அவ்வாறு இயலாத பொழுது குறைந்தது 75 சதம் தேன் அறைகளாவது மெழுகு மூடியிடப்பட்ட பின்னர் தேன் அடைகளை எடுக்கலாம்
 • தேனீக்கள் சுறுசுறுப்பாக இயங்கும் பொழுது குறைவான தேனீக்களே பெட்டியில் இருக்கும். எனவே தேனடைகளைக் காலை நேரம் எடுத்து வருவது நல்லது
 • தேன் அறையில் உள்ள தேனீக்களைத் தேனீ புருசு கொண்டோ, பணித் தேனீ நீக்கும் பலகை கொண்டோ அல்லது அளவாகப் புகையை பயன்படுத்திய பின்னர் அடைகளை லாவகமாக உதறியோ விரட்டலாம்
 • தேன் அறையின் மீது ஒரு மெல்லிய துணி அல்லது கொசு வலைத் துணியை விரித்து வைத்து சட்டங்களுக்கு இடையே காற்றை வாயினால் வேகமாக ஊதியும் தேன் அறையில் உள்ள தேனீக்களைப் புழு அறைக்குள் புகச் செய்யலாம்
 • கூடிய வரை ஒரு கூடப்பட்ட தனி அறையில் தேனைப் பிரித்து எடுப்பதால் தேனை நாடித் தேனீக்கள் வருவதைத் தவிர்க்கலாம்
 • மூடப்பட்ட தேனீ அறைகளின் மெழுகு மூடிகளை ஒரு பதமான எவர்சில்வர் கத்தி கொண்டு நீக்க வேண்டும் (படம் 47)
 • தேன் எடுக்கும் கருவி தூய்மையாக இருக்க வேண்டும். எவர்சில்வராலான தேன் எடுக்கும் கருவியைப் பயன்படுத்துவதன் மூலம் தரமான தேனைப் பெறலாம் (படம் 48)
 • வெள்ளை நிறத்தில் உள்ள புதிய தேன் அடைகளைத் தேன் எடுக்கும் கருவியினுள் வைத்துச் சுற்றும் பொழுது அடைகள் எளிதில் பிய்ந்து விடும். இதனைத் தடுக்கப்பட்டையான வாழை நார் கொண்டு சட்டத்தையும் அடையையும் கட்டிப் பின்னர் கருவியின் கைப்பிடியை மெதுவாகச் சுற்றித் தேன் எடுகு்க வேண்டும்
 • ஏறத்தாழ சம எடை உள்ள அடைகளை ஜோடியாக வைக்க வேண்டும். அப்பொழுதுதான் கருவியின் கைப்பிடியைச் சீராகச் சுற்ற இயலும்
 • தேன் பிரிக்கும் கருவியில் வைத்துத் தேன் அடைகளைச் சுற்றும் பொழுது முதலில் மெதுவாகவும் பின்னர் வேகமாகவும் சுற்ற வேண்டும்
 • எடுக்கப்பட்ட தேனை வடிகட்டுதல் அவசியம் இதன் மூலம் மெழுகுத் துகள்கள், தூசி, மெழுகு அந்திப் பூச்சியின் புழுக்கள், மகரந்தத் துகள்கள் ஆகியவற்றை நீக்கலாம். சன்னமான நைலான் வலை அல்லது இரண்டு மடிப்புடன் கூடிய மஸ்லின் துணி அல்லது பாலியஸ்டர் வேஷ்டித் துணி கொண்டு தேனை வடி கட்ட வேண்டும்.
தரமான தேன் பெற
தேன் முதிர்ந்த பின் அறுவடை
arrow
தூய கத்தி கொண்டு மூடி நீக்கம்
arrow
தூய கருவி கொண்டு பிரிதல்
arrow
வடிகட்டுதல்
arrow
அளவான சூட்டில் பதப்படுத்துதல்
arrow
தூய கொள்கலனில் சேமிப்பு
arrow
காற்று புகாத மூடி கொண்டு மூடுதல்
arrow
கைபடாமல் பயன்படுத்துதல்
தேனைப் பதப்படுத்துதல்:
 • முற்றிலும் மூடப்படாத அறைகளிலிருந்து தேனை எடுக்கும் பொழுது தேனை அவசியம் பதப்படுத்த வேண்டும்
 • தேனை நேரடியாகச் சூடுபடுத்துவது தவறு. அதுபோல் தேனை நீண்ட நேரம் சூடுபடுத்தக் கூடாது. அவ்வாறு செய்தால் தேனீன் நிறம், சுவை, மணம் ஆகியவை குன்றும். நொதிகளின் தன்மை கெட்டு விடும். தேனின் மருத்துவ குணம் பெரிதும் பாதிக்கப்படும். தேனில் உள்ள சிதைவுற்று ஹைடிராலி மிதைல் புர்ஃபியூரால் என்ற ஒரு பொருள் உருவாகும். இப்பொளின் அளவு ஒரு கிலோ தேனிற்கு 40 மில்லி கிராமிற்குக் கூடுதலாக இருந்தால் அத்தேனை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இயலாது
 • தேன் உள்ள உயரமான எவர்சில்வர் பாத்திரத்தை மற்றொரு நீருள்ள அகலமான பித்தளைப் பாத்திரத்தில் வைத்துக் காஸ் அடுப்பில் வைத்து மறைமுகமாகத்தான் சூடேற்ற வேண்டும்
 • தேன் உள்ள பாத்திரம் நீருள்ள பாத்திரத்தின் அடியைத் தொடாத வண்ணம் ஓர் இரும்பு வளையம் அல்லது மூன்று கற்களின் மேல் இருக்குமாறு வைக்க வேண்டும்
 • தேன் பாத்திரத்தில் உள்ள தேன் அளவும் நீருள்ள பாத்திரத்தில் உள்ள நீர் அளவும் ஒரே மட்டத்தில் இருக்க வேண்டும்
 • தேனுள்ள பாத்திரத்தை மூடக் கூடாது
 • தண்ணீர் சற்று கொதிக்கத் தொடங்கியவுடன் அடுப்பு எரிவதைக் குறைத்து அளவாக எரிய விட வேண்டும்
 • தேனை 600 செல்சியஸ் சூட்டில் 20 நிமிடங்களுக்கு சூடுபடுத்த வேண்டும். இதனால் தேன் சுண்டித் தேனீல் உள்ள நீர் அளவு குறைக்கப்படும். தேனைப் புளிக்கச் செய்யும் ஈஸ்ட் செல்கள் கொல்லப்படும். மேலும் தேன் கற்கண்டாவது தாமதப்படுத்தப்படும்
சூரிய ஒளியில் சூடுபடுத்துதல்:
 • தேனை ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் ஊற்றி பாத்திரத்தின் வாயை ஒரு மெல்லிய தூய்மையான துணியினால் மூடிக் கட்டி சூரிய ஒளியில் வைத்தும் பதப்படுத்தலாம். இவ்வாறு பதப்படுத்தப்பட்ட தேனை வடிகட்டி ஆறவைத்த பின்னர் சேமித்து வைக்கலாம்
தேன் சேமிப்பு:
 • சூடு நன்கு ஆறிய பின்னர் நுரை நீக்கப்பட்ட தேனை சுத்தமான உலர்ந்த கண்ணாடி பாட்டில்கள் அல்லது தரமான உணவு சேமிப்பிற்கு ஏற்ற பிளாஸ்டிக் கொள்கலன்களில் மட்டுமே தேனைச் சேமித்து வைக்க வேண்டும்
 • தேன் உள்ள கொள்கலன்களைக் காற்று மற்றும் ஈரம் புகாத வண்ணம் இறுக்கமாக மூடி வைக்க வேண்டும். இல்லையென்றால் காற்றில் உள்ள ஈரத்தைத் தேன் ஈர்த்துக் கொண்டு விடும். இதனால் நீர் அளவு கூடித் தேன் புளித்து விடும்
 • தேனைக் கைபடாமல் எடுக்க வேண்டும். அதுபோல் தண்ணீர் பட்டாலும் தேன் புளிக்க நேரிடும் இதனால் தேனின் மேற்புறத்தில் நுரை தோன்றிக் கெட்டுவிடும்
தேன் புளித்துப் போகுதல்:
தேனில் நீர் அளவு 20 சதத்திற்குக் குடுதலாக இருந்தால் தேனில் உள்ள ‘ஈஸ்ட்’ செல்கள் பல்கிப் பெருகித் தேனைப் புளித்துப் போகச் செய்கின்றன. ஒரே சீராகப் படிகமாகாத தேனும் இவ்வாறு புளிக்க நேரிடும். ஏனெனில் படிகமாக உறைந்த பகுதியின் மேல் இருக்கும் திரவத்தேனில் சர்க்கரை அளவு குறைவாகவும் நீர் அளவு கூடுதலாகவும் இருக்கும். தேனில் உள்ள சரக்கரைப் பொருட்கள் ‘ஈஸ்ட்’ செல்களால் உருவாக்கப்படும் நொதிகளால் வேதியல் மாற்றம் அமைந்து ஆல்கஹால் உருவாகின்றது. இது மேலும் சிதைவுற்று அசிட்டிக் அமிலமும் நீரும் உருவாகின்றன. இதனால் தேனில் அமில அளவு கூடித் தேனிற்குப் புளிப்பு ருசி வந்து வருகின்றது.
தேன் படிகமாகுதல்:
 • தேனைச் சேமித்து வைக்கும் பொழுது சில நேரங்களில் தேன் உறைந்து கற்கண்டாகி விடும். இது தேனின் இயற்கையான குணமாகும். தேனில் திராட்சைச் சர்க்கரை அளவு கூடுதலாக இருப்பதும் மகரந்தத் தூள்கள், தூசி, மெழுகுத் துகள்கள் மற்றும் காற்றும் குமிழ்கள் இருப்பதும் தேன் படிகமாவதைத் தூண்டுகின்றன. சீராகக் கற்கண்டாகத் தேன் நாளடைவில் புளித்துவிடும்
 • படிகமாகிய தேன் கலப்படம் செய்யப்பட்ட தேன் என்ற கருத்து நுகர்வோரிடம் பரவலாக உள்ளது. இது தவறு படிகமாகி உறைந்த தேனை மீண்டும் உருக வைக்க தேன் பாட்டில்களை சூரிய ஒளியிலோ அல்லது சுடுநீரிலோ வைக்கலாம். தேனை 600 செல்சியஸ் வெப்ப நிலையில் ஐந்து நிமிடங்களுக்கு சூடு படுத்தினால் தேன் மீண்டும் திரவமாகிவிடும். இத்தகையத் தேனை விரைவாகப் பயன்படுத்திட வேண்டும். இல்லையென்றால் மீண்டும் இத்தேன் கற்கண்டாகிவிடும்
 • தேனைக் குளுிர்சாதனப் பெட்டியில் வைத்தல் கூடாது. அவ்வாறு வைத்தால் தேனில் நீர் அளவு கூடிக் கெட்டு விடும். சில சமயங்களில் தேன் விரைந்து கற்கண்டாகிவிடும்
எது தரமான தேன்?
மிகக் குறைவான அளவு கரும்புச் சர்க்கரை
உண்ணும் பொழுது தொண்டடையில் கரகரப்பு
மட்டுமே நீரில் கரையும் தன்மை
தேனின் தரம் அறிதல்:
எளிய சோதனைகள்:
 • ஒரு நருள்ள கண்ணாடி டம்ளரில் சிறிதளவு தேனை ஊற்றும் பொழுது தேனானது உடனே கரையாமல் விழுது போல் டம்ளரின் அடியில் இறங்கினால் அது நல்ல தேன் அவ்வாறு ஊற்றும் பொழுது தேன் உடனே கரைந்து நீர் கலங்கினால் அது கலப்படத் தேன். தேனில் உள்ள நீர் அளவு கூடுதலாக இருந்தாலும் ஊற்றப்பட்ட தேன் டம்ளரின் அடியில் சென்று சேரும் முன்னரே கரையும்
 • சுத்தமான தேனைச் சாப்பிடும் பொழுது தொண்டையில் ஒருவிதமான கமறல் தோன்றும்
வேதியில் சோதனைகள்:
 • ஒரு சோதனைக் குழாயில் பத்து கிராம் தேனுடன் சோடியம் பை சல்பேட் என்ற உப்பு சிறிது கலந்து கூடுபடுத்தி அத்துடன் பேரியத்தைச் சேர்க்கும் பொழுது ஒரு வெள்ளை நிற வீழ் படிவு (பேரியம் சல்பேட்) உண்டானால் தேனுடன் நாட்டுச் சர்க்கரை கலக்கப்பட்டுள்ளது என அறியலாம்
 • தேனுடன் சிறிதளவு நீர் சேர்க்கவும். பின்னர் நீர்த்த தேனுடன் சில துளிகள் அயோடின் கரைசலை (நீர் : அயோடின் 1:3) விடவும் தேன் தூயதாக இருந்தால் எவ்வித நிற மாற்றமும் ஏற்படாது. தேன் கலப்படத் தேனாக இருந்தால் சிறிது நேரம் கழித்து சிவப்பு அல்லது கத்திரிப்பூ நிறம் தோன்றும்
 • தேனுடன் சிறிதளவு ஒரு சத சோடியம் கரைசலைச் சேர்க்கவும். இத்துடன் சில துளிகள் 5 சத சில்வர் நைட்ரேட் கரைசலை விடும் பொழுது தேன் தூயதாக இருந்தால் சிவப்பு அல்லது ஆரஞ்சு நிறமாகும்
 • ஒரு சோதனைக் குழாயில் சிறிதளவு தேனுடன் சம அளவு மெத்தைல் ஆல்கஹால் சேர்த்து நன்கு குலுக்கவும். தேன் அடியில் தங்கினால் அது தூய தேன். அவ்வாறு இல்லாமல் பால் போன்ற வெண்மை நிறமாகி அடியில தங்கினால் அது கலப்படத் தேன்

தேனீ வளர்ப்பு தொழில் மற்றும் சந்தைப்படுத்தும் முறை:
தமிழகத்தில் தேனீ வளர்ப்பை ஊக்குவிப்பதில் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம் தொன்று தொட்டு ஈடுபட்டு வந்துள்ளது. தமிழ்நாட்டில் தேனீ வளர்ப்புத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக இவ்வாரியத்தை மைய அரசு தெரிவு செய்திருந்தது. தமிழ்நாடு 1991-1992 ஆம் ஆண்டில் தேன் உற்பத்தியில் முதலிடம் வகித்தது. அதன் பின்னர் தேனீக் கூட்டங்களைத் தாக்கிய ஒரு வைரஸ் நோயால் தேனீ வளர்ப்பு பெரிதும் நலிவுற்றது. குமரி மாவட்டத்தில் இந்நோயால் பாதிக்கப்பட்ட 1000 தேனீ வளர்ப்பாளர்களுக்கு பத்து இலட்சம் ரூபாயை இவ்வாரியம் இழப்புத் தொகையாக வழங்கியது.
 • குறிப்பாக குமரி மாவட்டத்தில் தேனீ வளர்ப்பு விரிவாக்கத்தில் தேனீ வயலர்கள் முக்கிய பங்கு ஆற்றுகின்றனர்
 • பேட்டை மற்றும் திருப்பூரில் இவ்வாரியத்தின் கீழ் செயல்படும் கொல்லு பட்டறைகளில் செய்யப்பட்டு தேனீ வளர்ப்பவர்களுக்கு விற்கப்படுகின்றன
 • மலைப் பகுதி மேம்பாட்டுத் திட்டம், மேற்குத் தொடர்ச்சி மலை மேம்பாட்டுத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் 45 லட்ச ரூபாய் மதிப்புள்ள தேனீப் பெட்டிகள் மற்றும் தேனீ வளர்ப்பு சாதனங்களை இவ்வாரியம் கடந்த ஐந்து ஆண்டுகளில் இலவசமாக பழங்குடியினருக்கு வழங்கியுள்ளது
 • அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளுடன் இணைந்து தேனீ வளர்ப்புக்காக நிதி உதவி செய்கின்றது
 • தேனீ வளர்ப்போர் கூட்டுறவு சங்கங்கள் துவங்குவதற்கு இவ்வாரியம் நிதி உதவி அளிக்கின்றது. மேலும் இச்சங்க உறுப்பினர்கள் உற்பத்தி செய்த தேனை விற்பனை செய்வதிலும் உதவுகின்றது
 • அம்சி என்ற இடத்தில் சமீபத்தில் தொடங்கப்பட்டுள்ள தேன் பதனிடும் தொழிற்சாலை குறைந்த அளவு நீர் உள்ள அதிகத் தரமான தேன் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது
 • தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்துடன் இணைந்து அறிமுக தேனீ வளர்ப்பு பயிற்சிகள் மற்றும் தேன் காட்சி நடத்தி தேனீ வளர்ப்புக்கு உதவியுள்ளது
 • தேன் பற்றி மக்களிடம் ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தேன் விற்பனையை ஊக்குவிக்கவும் ஒவ்வொரு ஆண்டும் முக்கிய நகரங்களில் தேன் திருவிழா நடக்கின்றது
 • சென்னையில் இவ்வாரியத்தின் தலைமையகத்தில் உள்ள தேன் ஆய்வு நிலையம் தேனின் தரத்தை ஆய்வு செய்து அறிவதில் பெரும் பங்கு வகிக்கின்றது
 • கடந்த ஐந்து ஆண்டுகளில் (1997-2002) 2.48 கோடி ரூபாய் மதிப்புள்ள தேனை தேனீ வளர்ப்பவர்களிடமிருந்து வாங்கி 3.43 கோடி ரூபாய்க்கு விற்றுள்ளது
 • இவ்வாரியத்தின் கீழ் செயல்படும் மார்த்தாண்டம் தேனீ வளர்ப்போர் கூட்டுறவு சங்கம் இந்தியாவிலுள்ள மிகப் பெரிய தேனீ வளர்ப்போர் சங்கங்களில் ஒன்றாகும்

இதையும் பார்க்க

தேனீ வளர்ப்புhttp://tawp.in/r/1m3c

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Beekeeping, tacuinum sanitatiscasanatensis (14ஆம் நூற்றாண்டு)
Honey seeker depicted on 8000 year old cave painting near Valencia, Spain[1]
மனிதர்கள் தேனீக்களின் சமூகத்தை, செயற்கையாக தயாரிக்கப்படும் கூடுகளில் வளர்த்து, அவற்றைப் பராமரிக்கும் செயற்பாட்டையே தேனீ வளர்ப்பு என்று குறிப்பிடுகிறோம். விவசாயிகள், தமது கூடுதல் வருமானத்திற்கு, விவசாயம் சார்ந்த தேனீ வளர்ப்பைக் கையாளலாம்.
கூட்டில் வளர்க்கப்படும் தேனீக்கள், தாமாகவே வெளியே சென்று, மலர்த்தேனை சேகரித்து, தேனாக மாற்றி, அதை தேன் கூட்டில் சேமிக்கும். கூட்டில் வளர்க்காமலே தேனை காட்டிலிருந்து சேகரிக்கும் வழக்கம் நீண்ட காலமாக உண்டு. தேனின் மருத்துவ அனுகூலங்கள், மற்றும் அதைச் சார்ந்த பொருட்களின் பயன்பாடுகள் அதிகரித்து வருவதால், தேனீ வளர்ப்பு ஒரு தொழிலாக முக்கியமடைந்துள்ளது. தேனீ வளர்ப்பில், தேன் மற்றும் மெழுகு, முக்கியமான வெளியீட்டுப் பொருட்கள் ஆகும்.

[தொகு]இராணித் தேனீ

இது உருவத்தில் பெரியது. தேனீக்கள் கூட்டத்திற்குத் தலைவி. இதற்கு முட்டையிடுதலே பணி. இந்த இராணித் தேனீ அடையின் கீழ்புறம் கட்டப்படும் சிற்றறைகளில் வளர்க்கப்படும். இராணித் தேனீ இடும் முட்டைகளிலிருந்து வெளிவரும் புழுவிற்குத் தொடர்ந்து 16 நாட்கள் அரசப்பசை எனும் இராயல் ஜெல்லி என்னும் அரசப்பசையை உணவாகக் கொடுத்தால் அவை இராணித் தேனீக்களாக வளர்கின்றன.

[தொகு]ஆண் தேனீ

இது கூட்டின் சூட்டைப் பராமரித்தல், இராணித் தேனீயைக் கருவுறச் செய்தல் போன்ற முக்கியப் பணிகளை செய்கிறது. இவை அதிக அளவில் ரீங்காரமிடும். அளவில் பெரிய அறுங்கோண அறைகளில் இடப்படும் முட்டைகளிலிருந்து பொரிக்கும் புழுக்கள் முதல் 3 நாட்கள் அரசப்பசை எனும் இராயல் ஜெல்லி என்னும் அரசப்பசை உணவும் கடைசி 4 நாட்கள் மகரந்த உணவும் கொடுக்கப்பட்டு 24 நாட்களில் முழு வளர்ச்சி அடையும். இதன் ஆயுட்காலம் 60 நாட்கள்.

[தொகு]பணித் தேனீ

பணித் தேனீக்கள் முழு வளர்ச்சி பெறாத தேனீக்கள். இவைகளால் சினைப் பைகள் வளர்ச்சி பெறாததால் இவை முட்டையிடும் தகுதியடைவதில்லை. பணித் தேனீக்கள் அளவில் சிறிய அறைகளில் இடப்படும் முட்டைகளிலிருந்து உருவாகின்றன. முதல் ஒரு நாள் அரசப்பசை எனும் இராயல் ஜெல்லியும், இறுதியில் 3 நாட்கள் மகரந்த உணவும் கொடுக்கப்பட்டு 21 நாட்களில் வளர்கின்றன. இதன் ஆயுட்காலம் 42 நாட்கள். இவைகள்தான் அடைகளைக் கூட்டுதல், பராமரித்தல், தேன் இருக்குமிடம் ஆறுதல், தேன் சேகரித்தல் அவைகளை அடைகளில் பதனம் செய்தல், புழுக்களுக்கு உணவு கொடுத்தல், கூட்டினுள் காற்றோட்டம் ஏற்படுத்துதல், கூட்டினைப் பாதுகாத்தல் போன்ற பல பணிகளைச் செய்கின்றன. இவைகளுக்கு தேன் சேகரிக்கவும், மெழுகைச் சுரக்கவும், அரசப்பசையைச் சுரக்கவும், மகரந்தத்தினை எடுத்து வர, பொருட்களைப் பற்றி வர என பல பணிகளுக்கான உறுப்புகள் உள்ளன.

[தொகு]இனப் பாகுபாடு

தேனீ சமுதாயத்தில் இனப்பாகுபாடு பணி பங்கீட்டின் அடிப்படையில் உருவாக்கப்படுகிறது.
ஆண் தேனீ கருவுற்ற முட்டைகளிலிருந்து பெண் தேனீக்களையும், கருவுறாத முட்டைகளிலிருந்து ஆண் தேனீக்களையும் உண்டாக்குகின்றது. அரசப்பசையை மட்டும் உணவாகப் பெறும், தனியே வளர்க்கப்படும் பெண் தேனீ, இராணித் தேனீயாக மாறுகிறது. குறைந்த அளவு அரசப்பசையைக் கொடுத்து வளர்க்கப்படும் தேனீக்கள் முறையே ஆண், பெண் தேனீக்களாக மாறுகின்றன. மற்ற பெண் தேனீக்கள் இராணித் தேனீயின் தாடைப் பகுதியில் சுரக்கப்படும் ஒரு சுரப்பிப் பொருள் உணவாகக் கொடுக்கப்படுவதால் மலட்டுத்தன்மை அடைந்து பணித் தேனீக்களாக மாறுகின்றன.

[தொகு]குணங்கள்

தேன் கூட்டின் மணம் கூட்டிற்குக் கூடு மாறுபடுகிறது. இதனால் ஒரு கூட்டில் உள்ள தேனீக்கள் மற்றொரு கூட்டில் நுழைவது இல்லை. தேனீ கொட்டும் போது ஏற்படும் விஷத்துடன் கூடிய ஒரு வேதிப்பொருள் மற்றைய தேனீக்களை எதிரியைத் தாக்கத் தூண்டுகின்றன. தேனீக்களின் சங்கேத மொழியாக நடனமொழி ஒன்று உள்ளது. இதன் மூலம் தேன் கிடைக்கும் தூரம், திசை, உணவின் தனமை போன்றவற்றைத் தெரிவிக்கின்றன.

[தொகு]தேனீ வளர்ப்புப் பெட்டிகள்

இந்தியத் தேனீக்கள் 7 சட்டங்கள் கொண்ட நியூட்டன் பெட்டியிலும், 8 சட்டங்கள் கொண்ட இந்திய தரக்கட்டுப்பாட்டுப் பெட்டியிலும் வளர்க்கப்படுகின்றன. இத்தாலியத் தேனீக்கள் 10 சட்டங்கள் கொண்ட லாங்ஸ்ட்ராத் பெட்டிகளிலும் வளர்க்கப்படுகின்றன.

[தொகு]பயிற்சி

தேனீ வளர்ப்பிற்கு சில அரசு அமைப்புகளும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் பயிற்சி அளிக்கின்றன. தேனீ வளர்ப்பதற்கு ஒரு நாள் பயிற்சியே போதுமானது. இதன் தொழில்நுட்பங்கள், விற்பனை போன்றவற்றிற்கு சிறிது கூடுதல் காலம் தேவைப்படும்.

[தொகு]தேனீ வளர்ப்புக்கு ஏற்ற இடங்கள்

தேனீ வளர்ப்புக்கு
 • போக்குவரத்து அதிகமில்லாத இடமாக இருத்தல் நல்லது.
 • பள்ளி,கல்லூரி மற்றும் அதிகக் கூட்டம் கூடும் இடங்கள்
 • புகை மிகுதியாக வரும் இடம்
 • மருந்துப் பொருட்களின் வாசனை உள்ள இடங்கள்
போன்றவை ஏற்றதல்ல. இவை இல்லாத நிழலான இடங்களில் வளர்க்கலாம். தேனீ வளர்ப்புப் பெட்டிகளை எறும்பு, பூச்சிகள் ஏறாத இடங்களாக சிறிது உயரத்தில் வைக்க வேண்டும்.

[தொகு]தேனீக் கூட்டங்கள் பெறுதல்

இயற்கையாக காடுகளிலும், பொந்துகளிலும், இடுக்குகளிலும் இருப்பவைகளைப் பிடித்தும் அல்லது தேனீ வளர்த்து வருபவர்களிடம் பெற்றும் தேனீக்களைக் கூட்டமாகப் பெற்றும் வளர்க்கலாம். தேனீக்கள் இடம் மாற்றம் செய்வதில் இரவு நேரங்களையேப் பயன்படுத்த வேண்டும்.

[தொகு]தேன் எடுத்தல்

தேனீ வளர்ப்புப் பெட்டிகளில் தினமும் ஈக்கள் வந்து செல்வதைக் கவனிக்க வேண்டும். அவைகளில் தேன் சேர்ந்து உள்ளதைக் கவனித்து அடைகள் அனைத்தும் அல்லது 80 சதவிகிதம் மூடிய பின்பு தேன் எடுக்க வேண்டும். தேன், அறைகளில் பதனமாகும் முன்னர் எடுத்தால் அத்தேன் விரைவில் கெட்டு வ்டும். அடைகளில் உள்ள அடைப்புகளை அதற்கான உள்ள கத்திகளைக் கொண்டு எடுத்துவிட்டு தேன் எடுக்கும் இயந்திரத்தினைக் கொண்டு சுழற்றுவதன் மூலம் தேனை எடுக்கலாம். தேன் பூச்சிகளை மயக்கநிலை அடைய புகையை அதிக அளவில் உபயோகிக்கக் கூடாது.

[தொகு]பாதுகாப்பு

தேன் பெட்டிகளை மிகுந்த பாதுகாப்புடன் வைக்க வேண்டும்,.
 • வனம், மலைப்பகுதிகளில் தேனீ வளர்ப்பவர்கள் கரடியிடமிருந்து பாதுகாக்க வேண்டும்.
 • எறும்புகள், பூச்சிகள் தேனீ வளர்ப்புப் பெட்டிகளுக்கு வந்து விடாமல் பெட்டியைச் சுற்றிலும் பூச்சி மருந்துகளைத் தடவி வைக்க வேண்டும்.
 • தேன் கிடைக்காத காலங்களில் சர்க்கரையைக் காய்ச்சி சிரட்டைகளில் ஊற்றிப் பெட்டியினுள் வைக்க வேண்டும்.(இது குறித்து தகுந்த வல்லுனர்களிடம் பயிற்சி பெறுதல் நல்லது)

[தொகு]தேனீ வளர்ப்பின் பயன்கள்

 • தேன் கிடைக்கிறது.
 • கூடுகளிலுள்ள அடைகளை உருக்கி தேன் மெழுகாக சேர்க்கலாம்.
 • தேன் பெட்டியின் வாயிலில் மகரந்தப் பொறியை (Polon Catch Divice) வைத்து மகரந்தம் எடுக்கலாம். ஒரு பெட்டிக்கு ஆண்டு ஒன்றுக்கு 300 முதல் 500 கிராம் வரை கிடைக்கும்.
 • அரசப்பசை எனும் இராயல் ஜெல்லி 500 கிராம் வரை கிடைக்கிறது.

[தொகு]சிறப்பம்சங்கள்

வருமானம் ஈட்டும் செயலான தேனீ வளர்ப்பின், சிறப்பம்சங்களாவன
 • தேனீ வளர்ப்பிற்கு, குறைந்த நேரம், பணம் மற்றும் கட்டமைப்பு மூலதனமே தேவைப்படும்.
 • குறைந்த மதிப்புள்ள விவசாய நிலங்களில், தேன் மற்றும் மெழுகினை தயாரிப்பது இலகு.
 • தேனீ வளர்ப்பு, வேறு எந்த விவசாய செயலுக்கான வளங்களூடாகவே கையாளப்படக் கூடியதாக இருக்கும்.
 • தேனீ வளர்ப்பதால் தென்னை, பாக்கு தோப்புகளில் 30 சதவிகிதம் விளைச்சலும், பிற விவசாயங்களில் 20 சதவிகிதம் விளைச்சலும் கூடுதலாகின்றன.

[தொகு]தேனீ வளர்ப்பிற்கான மாதிரி திட்ட அறிக்கை

தேனீ வளர்ப்பிற்கு செய்யப்படும் முதலீடு, அதனால் கிடைக்கும் வருவாய் குறித்த சிறு மாதிரி திட்ட விபர அறிக்கை இந்திய ரூபாயில் இங்கு தரப்பட்டுள்ளது.
முதலீடு
 • தேனீ வளர்ப்புப் பெட்டிகள் 10 எண்ணம் X 2000 வீதம் = 20,000
 • 1 ஆண்டு பராமரிப்புச் செலவு = 2000
 • முதலீட்டுச் செலவு = 22,000
வருமானம்
தேன் 1 ஆண்டில் ஒரு பெட்டிக்கு 20 கிலோ வீதம் 10 பெட்டிக்கு மொத்தம் 200 கிலோ கிடைக்கும்.
 • விற்பனை 200 கிலோ X 100 ரூபாய் = 20,000
மெழுகு 1 ஆண்டில் ஒரு பெட்டிக்கு 2 கிலோ வீதம் 10 பெட்டிக்கு மொத்தம் 20 கிலோ கிடைக்கும்.
 • விற்பனை 20 கிலோ X 100 ரூபாய் = 2,000
புதிய காலனிகள் ஒரு பெட்டிக்கு 4 காலனிகள் வீதம்
 • 1 காலனிக்கு ரூபாய் 500 வீதம் 10 X 4 X 500 = 20,000
 • முதலாம் ஆண்டு மொத்த வருமானம் = 42,000
நிகர வருமானம்
 • முதலாம் ஆண்டு மொத்த வருமானம் = 42,000
 • முதலீட்டுச் செலவு = 22,000
 • முதலாம் ஆண்டு நிகர வருமானம் = 20,000

[தொகு]தேனீக் கூட்டிலிருந்து தேனை அறுவடை செய்யும் படங்கள்

 • தேனீ வளர்ப்பவர் கூட்டிலிருந்து சட்டங்களை அகற்றுகிறார்
 • கூட்டிலுள்ள சட்டங்களில் ஒன்று
 • கூடு புகையூட்டப்படுகிறது
 • காற்றூதியினால் தேனீக்கள் ஊதி அகற்றப்படுகிறது
 • சட்டத்திலிருந்து தேனீக்கலங்களை அகற்றல்
 • தேனீக்கலங்களை அகற்ரும் கருவி
 • தேனீக்கலங்களை அகற்றும் கத்தி மூலம் அவற்றை அகற்றல்
 • தேனைப் பிரித்தெடுத்தல்
 • தேனை வடித்தல்
 • முதிர்ந்த தேனை சாடிகளில் ஊற்றல்
  Engr.Sulthan